21

21

இலங்கைக்கு இறுதி கெடு விதிக்க கருணாநிதி கோரிக்கை

karunanithi.jpgஇலங் கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி மறுபடியும் ஒரு தந்தி அனுப்பியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார்.

இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…

இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும்படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

வவுனியா தாண்டிக்குளம் ரயில் சேவை நாளை மறுதினம்

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை இருபது வருட இடைவெளிக்குப் பின்னர் முதற்தடவையாக வவுனியாவுக்கு அப்பால் இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக வவுனியாவைக் கடந்து தாண்டிக்குளம் வரை இந்த ரயில் சேவை நடைபெறவுள்ளது.

அதன்படி யாழ்தேவி ரயில் சேவை நாளை மறுதினம் முதல் தாண்டிக்குளம் வரை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவையை வெகுவிரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

புலிகள் 24 மணிநேர காலக்கெடுவை பயன்படுத்தவில்லை – படை நடவடிக்கைகள் தொடர்வதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

army-attack.jpgஎல்.ரீ.ரீ.ஈ. இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.

பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசாங்கம் வழங்கிய இந்த இறுதிச் சந்தர்ப்பத்தையும் புலிகள் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென இராணுவம் அறிவித்துள்ளது.

புதுமாத்தளன் மற்றும் அம்பலவான்பொக்கனை ஆகிய இடங்களில் தமது நிலையைப் பலப்படுத்தியுள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாக அதிகரிப்பு!

civiling_flee_vanni_01.pngபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட  பொது மக்களில் எண்ணிக்கை இப்போது 49058 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. இவர்களில் 41000 பேர்  இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக வந்த ஏனையோரை கடற்படையினர் மீட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தமிழ் மக்கள் அரசியல் உரிமைகள் பெற புலித்தலைமையே தடையாக இருந்தது – அமைச்சர் டக்ளஸ் ஐ.நா. செயலாளருக்கு விளக்கம்

epdp-sec.jpgஇலங்கையில் நெடுங்காலமாக இருந்துவரும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவ்வாறான சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தாது,

அந்த முயற்சிகளுக்குத் தடையாக இருந்து வந்தது புலித்தலமையே என சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன ரீதியாகவும் வறுமை காரணமாகவும் உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கும் முகமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற அமைச்சர் அங்கு ஐ.நா. செயலாளரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

புலிகளின் இத்தகைய செயற்பாடுகளால் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் துயரங்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா இங்கு மேலும் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்ää அவற்றுக்கான மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆரதரவளிக்க வேண்டும் என ஐ.நா. செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியலுரிமைப் பிரச்சினைக்குரிய தீர்வு நோக்கிய முயற்சிகளுக்கு எதிராகக் காணப்படும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படும் பட்சத்தில் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை அழிவுகளிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மனித அழிவுகளும் அவலங்களும் அற்ற ஒரு சமாதான தேசத்தை உருவாக்கவும் அமைதி, அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்பனவற்றை எமது மக்கள் அனுபவித்து மகிழவும் உதவ வேண்டும் என இச்சந்திப்பின்போது ஐ.நா. செயலாளரிடம் அமைச்சர் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலிகளுக்கு சரணடைய வழங்கப்பட்ட காலக்கெடு இன்று நண்பகல் முடிவு -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தகவல்

keheliya_rambukwella.jpgஎல்.ரீ. ரீ.ஈ.  இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் 24 மணி நேர காலக்கெடுவுக்குள் புலிகள் சரணடையத் தவறினால் அவர்களுக்கெதிராக படை வீரர்கள் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என பாதுகாப்பு தொடர்பான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளர்.

புலிகள் சரணடைய வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் தப்பி வரும் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் வருண்காந்தி உறுதிமொழி

india-varun.jpgஉத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பாக போட்டியிடும் வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவரை, இரண்டு வாரம் பரோலில்’ விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.

அப்போது, வன்முறையை ஏற்படுத்தும் வகையில் எந்த அவதூறு கருத்துகளையும் பேச மாட்டேன்’ என உறுதி அளிக்குமாறு வருண் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

அதன்படி, வருண் காந்தி அடைக்கப்பட்டு இருந்த எடா சிறையின் சூப்பிரண்டிடம் ஒரு உறுதி மொழி பத்திரத்தை வழங்கினார். அந்த உறுதி மொழியின் நகலை சுப்ரீம் கோர்ட்டுக்கும் வழங்க வேண்டும். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி மொழி பத்திரத்தை வருண் காந்தி நேற்று அளித்தார்.

அந்த உறுதி மொழியில், மத கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசவோ, எழுதவோ மாட்டேன்’ என அவர் தெரிவித்து இருக்கிறார்.

பரீட்சை பெறுபேறு மீளாய்வு விண்ணப்பம்!

schools_stu.jpgஅண்மை யில் வெளிவந்த 2008 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு பாடத்துக்கு 150.00 ரூபா என்ற அடிப்படையில் மீளாய்வுக் கட்டணம் அறவிடப்படுகிறது. உரிய கட்டணத்தை அஞ்சல் அல்லது உப அஞ்சல் அலுவலகங்களில் செலுத்தி பற்றுச் சீட்டின் மூலப் பிரதியை விண்ணப்பப் படிவத்தின் மறுபுறம் ஒட்டி அனுப்பிவைக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு விண்ணப்பம் வீதம் அனுப்ப வேண்டுமென பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்

Protest_London_20Apr09இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.

ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.

இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார்.  ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.

இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.

புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )

நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.