16

16

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த 1424 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

bandula_gunawardena.jpgஇவ்வருட ஆரம்பம் முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மூலம் கூடுதல் விலைக்கு அத்தியவசிய பாவனைப் பொருட்களை விற்பனை செய்த  1424 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் இறுதி வரை 974 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு ஒரு கோடியே ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மட்டும் 450 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது கொழும்பு புறக்கோட்டையில் 180 அரிசி மூடைகளும் கண்டியில் 44 அரிசி மூடைகளும் சவீகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றங்களுக்கான விடுமுறை முடிவுற்றதும் குறிப்பிடப்பட்ட 450 வாத்தகர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

நோர்வே தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

protest_norvey.jpgகொழும்பு, வோர்ட் பிளேசில் உள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. ஒஸ்லோவிலுள்ள இலங்கை தூதரகம் தாக்கி சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தரமுல்ல சீலாரத்ன தேரோ தலைமையில் இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமையைக் கண்டிப்பதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தும் பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கிளிநொச்சிக்கு விஜயம்

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அவருடன் படை உயரதிகாரிகளும்  கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்.

கிளிநொச்சியில் படையினருடன் புத்தாண்டு நிகழ்வுகளில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முப்பது வருடங்களின் பின்பு இலங்கை அரசுத் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தமது விஜயத்தின்போது, கிளிநொச்சியின் நிலைமைகள் குறித்து படையினருடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஎன்டிஎல்எப் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணனைச் சந்தித்தனர் – ஈஎன்டிஎல்எப் செய்தி அறிக்கை

Narayanan_M_Kஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உயர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களை நேற்று திங்கள்கிழமை (13-04-2009) புதுடெல்லியில் சந்தித்து முல்லைத்தீவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தை நிறுத்த இந்தியா உடனடியாக தலையிட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

சுமார் ஒருமணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கை தமிழர் பிரச்சினை தற்போது ஒரு தீவிரமான கட்டத்தை அடைந்துள்ளது என்றும் தமிழர் நீதியானதும் நியாயமானதுமான கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தற்போது இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் எனவும் குழுவினர் வலியுறுத்தினர்.

இந்திய தேசிய பாதகாப்பு ஆலோசகருடன் ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) உயர்மட்டக் குழுவினர் கையளித்த மகஜரில், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள இரண்டு நாள் போர் ஓய்வு பலன் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று சுட்டடிக்காட்டப்பட்டது. விடுதலைப் புலியினர் இந்தக் காலக்கட்டத்தில் போரில் சிக்கியுள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்களை அரசத் தரப்புப் பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்றும், போர்ப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் பொதுமக்கள் கூட அரசத் படையினரின் தடுப்பு முகாம்களுக்குள் செல்ல விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து அரசப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் தமிழர்களை இடமாற்றுவது இந்தக் கட்டத்தில் ஏற்புடையது அல்ல என்றும் மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்திய ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழுவினர் யுத்த நிறுத்தத்தை தொடர்ந்துஇ வன்னியில் போரில் அகப்பட்டுள்ள இரண்டு லடச்சத்து ஐம்பதாயிரத்துக்கும் (250000) மேற்பட்ட பொதுமக்கள் மீள குடியமர்த்தப்பட வேண்டுமெனவும் அதன் பின்னர் அமைதிப் பேச்சுக்கள் ஒருங்கிணைந்த ஈழத் தமிழர் தலைமையுடன் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடத்தப்பட வேண்டுமென இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை கேட்டுக்கொண்டனர்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடியாகவே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) உயர்மட்டக் குழுவினர் பின்வரும் தங்களது ஆலோசனைகளை தமது மகஜரில் தெரிவித்துள்ளனர்.

   (01) இலங்கையின் வடக்கில் நடைபெறும் தற்போதைய யுத்தத்தில் இந்தியாவின் நேரடி தலையீடும், இந்திய அமைதிப்படையினரின் மேற்பார்வையில் நிரந்தர யுத்தநிறுத்தமும் வேண்டும்.

   (02) முல்லைத்தீவில் தற்போது சிக்குண்டுள்ள பொதுமக்கள், முல்லைத்தீவில் அல்லது வடஇலங்கையில் அந்த மக்கள் விரும்பும் இடங்களில் இந்தியாவின் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் மேற்பார்வையில் மீள குடியமர்த்தப்பட வேண்டும்.

   (03) இலங்கை அரசினால் தற்போது வவுனியாவிலும் ஏனைய இடங்களிலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னியிலிருந்து தப்பி வந்த பொதுமக்கள் இந்தியாவின் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் மேற்பார்வையில் அமைக்கப்படும் புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்படுவதுடன் இலங்கை அரசினால் நடத்தப்படும் தற்போதைய முகாம்கள் மூடப்பட வேண்டும்.

   (04) அகதி முகாம்களில் தங்கவைக்கப்படும் தமிழ் பொதுமக்களை இலங்கை இராணுவத்தினரும் பொலிசாரும் அணுகுவதும் அவர்களை கட்டுப்படுத்துவதும் முற்றாக நீக்கப்பட வேண்டும்.

   (05) இலங்கை அரசுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஈழத் தமிழர் தலைமைக்கும் இடையே தமிழர் பிரச்சினையை இறுதியாக முடிவுக்குக் கொண்டுவர குறித்த கால எல்லைக்குள் நடத்தி முடிக்கத்தக்கதான பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற வேண்டும்.

   (06) ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வின் ஒரு அங்கமாக தற்போது போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலியினரை போர் தவிர்ப்பு ஒன்றில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

   (07) வட-கிழக்கில் இதுவரை ஏற்பட்ட யுத்தத்தினால் இடம்பெயர்ந்த எல்லா மக்களும் அவர்கள் முன்னர் குடியிருந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்..எப்.) நிலைப்பாட்டை எடுத்துக் கூறிய உயர்மட்டக் குழுவினர் ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கொண்ட மக்கள் என்பதை எப்போதுமே வலியுறுத்தி வந்திருப்பதாக தெரிவித்தனர்.

இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திம்பு மகாநாட்டில் சகல தமிழ் கட்சிகளும் குழுக்களும் ஒருமித்து ஏற்றுக்கொண்ட திம்பு கோட்பாடுகள் எந்தவொரு இறுதித் தீர்விலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆயினும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் அதே போன்று பல ஈழத் தமிழ் அரசியல் குழுக்களும், நாடு பிரிவினைக்குட்படாத வகையில் திம்பு கோட்பாடுகள் உள்ளடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.

இறுதி தீர்வு ஏற்படுவதற்கு இடைபட்டக் காலக்கட்டத்தில் 1987ஆம் ஆண்டில் இந்திய அரசினால் ஏற்படுத்தபபட்ட“இலங்கை-இந்திய” ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணங்களுக்கு நிர்வாக அலகு ஒன்று ஏற்படுத்தபட வேண்டுமெனவும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் தமது மகஜரில் தெரிவித்தள்ளனர்.

இதுவரை 77 வன்முறைச் சம்பவங்கள் பதிவு இனிவரும் தினங்களில் மேலும் அதிகரிக்கும் நிலை

caffe.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 77 வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தலை கண்காணிப்பதற்கான கபே அமைப்பு தேர்தலுக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

நாம் தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகளை கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் நேற்று புதன்கிழமை 15 ஆம் திகதிவரை பதிந்தும் அவதானித்தும் வருகின்றோம். மொத்தமாக 77 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். இதில் கம்பஹா மாவட்டத்திலே அதிகூடியதான 32 முறைப்பாடுகளை பதிவு செய்த நிலையில் இதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டம் உள்ளது. களுத்துறை மாவட்டத்தில் நாம் 15 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம்.

இந்த 77 முறைப்பாட்டில் தாக்குதல் சம்பவங்கள் 54 ஆகவுள்ளதுடன் அச்சுறுத்தல் தொடர்பில் 3 இனையும் பதிவு செய்துள்ளோம். நாம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகமென அதிகளவான தகவலை பெற்றபோதும் எம்மால் இவ்விரண்டு தொடர்பில் முறையே 10 முறைப்பாடுகளையே எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடிந்தது.

தேர்தல் தொடர்பிலான பெரியளவான வன்முறைகள் 50% மானவைக்கு இரு பிரதான கட்சிகளே காரணமாகும். இந்நிலையில் இரு பிரதான கட்சித் தலைவர்களிடம் தமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வன்முறையில் ஈடுபடாதிருப்பதற்கு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கபே கேட்டுள்ளது.

ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி செயல்படுகிறார்:பழ.நெடுமாறன்

neduma2.jpgஇலங்கை அதிபர் ராஜபட்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்பேரில் தவறான அணுகுமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடிப்பதால் தான் இலங்கைப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது என்று கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கை : “போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபட்ச கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்துவருகிறார்.

ஆனால் கருணாநிதியும், ப.சிதம்பரமும் தங்களது முயற்சியால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த முயற்சி ஒரு நாடகமே என்பது நிரூபணமாகிவிட்டது. ஈழத் தமிழர்களை ராஜபட்ச துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழக தமிழர்களை விரட்டிவிரட்டி அடிக்கிறார். ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதைக் கண்டிக்கிறேன்” என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்றிரவு சந்திப்பு

tna_.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்று புதன்கிழமை இரவு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக புதுடில்லிக்கு நேற்று சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களே எம்.கே.நாராயணனை நேற்றிரவு சந்தித்துப் பேசினர்.

கூட்டமைப்பு எம்.பி.ஆர்.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, இலங்கைப் படையினர் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த இந்தியா அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும் போர்நிறுத்தம் குறித்து இந்திய தரப்பில் உறுதியான பதிலெதுவும் வழங்கப்படவில்லை யெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று வியாழக்கிழமை சிவ்சங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்திய அரசு தரப்பை சந்திக்கக் கூடாதென கூட்டமைப்பு எம்.பி.க்களில் பெரும்பான்மையோர் வலியுறுத்தி வந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு160 மில்லியன் US $ கடனுதவி

asian-development-bank.jpgஇலங்கைக்கு 160 மில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மின்சாரத்தினை வழங்குவதற்கும்,  மின்சார வசதிகளை மேலும் மேம்படுத்தவும் இந்த நிதியை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

British_French_Foreign_Ministersஏப்ரல் 15ல் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் டேவிட் மிலிபான்ட் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் கொச்னர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் எல்ரிரிஈ பயங்கரவாதத்தை புறக்கணிப்பதும் ஆயுதங்களைக் கீழே போடுவதும் நிரந்தரத் தீர்வுக்கு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 12ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இருநாள் தாக்குதல் தவிர்ப்பை வரவேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அது பொது மக்களைப் பாதுகாப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்றும் பாராட்டி உள்ளனர். இத்தாக்குதல் தவிர்ப்பு காலப்பகுதியில் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மோதல் பிரதேசத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் வெளியேறவில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மக்களை வெளியேறவிடாது புலிகள் பலவந்தமாகத் தடுக்கின்றனர் என்பது மிகவும் தெளிவாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்கள் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.

தாக்குதல் தவிர்ப்பிற்கு சற்று முன் தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த வெளியேற முற்பட்டவர்கள் புலிகளால் சுடப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக Under-Secretary-General for Humanitarian Affairs  ஜோன் ஹொல்ம்ஸ் இவ்வறிக்கை வெளிவருவதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 5ல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் தலைவர் பலத்த இழப்புகளின் மத்தியில் காப்பாற்றப்பட்டார். அத்தாக்குதலுக்கு மறுநாள் முதல் புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் பிரான்ஸ் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இப்போராட்டங்கள் இரவு பகலாக பத்து நாட்களுக்கம் மேலாக தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. இந்நிலையிலேயே இவ்விரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மீது காட்டமான கண்டனத்தையும் கடுமையான குற்றச்சாட்டையும் வைத்து உள்ளது. புலிக்கொடி மற்றும் பிரபாகரனின் படங்கள் தாங்கிய போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட பளீர் அறையாகவே இக்கூட்டறிக்கை வெளிவந்து உள்ளது.

ஒரு பயங்கரவாத அமைப்பிலும் பார்க்க ஜனநாயக அரசு பொது மக்களைக் காப்பத்தில் உயர்தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைசர்கள் டேவிட் மில்லிபான்ட் உம் பெர்னாட் கொச்னர் உம் மகிந்த ராஜபக்ச அரசு புதிய தாக்குதல் தவிர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எல்ரிரிஈ மக்கள் பாதுகாப்பைத் தேடி வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். பொது மக்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக் கூடிய அளவிற்கு நீண்டதாக தாக்குதல் தவிர்ப்பு இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் அப்பொது மக்கள் மோதல் பகுதிகளை விட்டு வெளியேறும்பட்சத்தில் அவர்களுக்கு பாகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை யுஎன் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இரு தரப்பும் சர்வதேச விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படத்த வேண்டும் என்ற வழமையான கூற்றுக்களை மீளவும் தெரிவித்துள்ளனர்.

யுஎன் னும் ஏனைய சர்வதேச சமூக உறுப்பினர்களும் இவ்விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் தொடர்ந்து ஆதரவு நல்கும் என்றும் அவ்விரு அமைச்சர்களும் தெரிவித்து உள்ளனர்.

Joint UK and French statement on Sri Lanka (15/04/2009)

The Foreign Secretary, David Miliband, and the Foreign Minister of France, Bernard Kouchner, issued a joint statement on the situation in Sri Lanka on Wednesday 15 April. They said:

‘We welcomed President Rajapakse’s announcement on 12 April of a pause in the Sri Lankan government’s military offensive as a first step towards the protection of civilian life. But we are deeply concerned that there was no large scale movement of civilians away from the conflict area to safety as we had hoped to see, in the short period allowed for the pause. It is clear that the LTTE have been forcefully preventing civilians from leaving the conflict area and we deplore their determination to use civilians as a human shield. We do of course continue to call on the LTTE to renounce terrorism and lay down their arms as a necessary element for a long-term solution.

We urge President Rajapakse to announce a new pause . Democratic governments are rightly held to higher standards for civilian protection than terrorist organisations. We also urge the LTTE to allow civilians to move to safety. It is vital that a pause in the fighting should be long enough to give civilians the opportunity to leave the conflict area, and for the UN to build confidence amongst the population that they will be safe if they leave. Both sides must abide by their obligations under international humanitarian law and do all they can to protect civilians. This includes giving international humanitarian agencies unimpeded access to those affected by the fighting so that they can deliver adequate supplies of assistance. France and Britain, as two members of the Security Council, continue to support the active engagement by the UN and by other members of the international community on this urgent issue.’

._._._._._.

யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்டுள்ள மக்கள் எவ்வாறானதொரு சூழலுக்குள் வாழ்கிறார்கள் என்பதை எந்தவொரு இலங்கைத் தமிழருக்கும் எடுத்து விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மரண வாயிலில் தள்ளப்பட்டுள்ள மக்களை எவ்வாறாயினும் மீட்டெடுக்க வேண்டும் என்பதிலும் பார்க்க அவர்களுடைய இந்நிலைக்கு இலங்கை அரசா அல்லது புலிகளா காரணம் என்ற விவாதமும் அதையொட்டிய போராட்டங்களும் பரவலாக நடைபெறுகிறது. பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டு அப்பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்னி மக்களை இனப்படுகொலை செய்யும் இந்த அரசு தான் இதற்கு முழுப் பொறுப்பும் என்று புலி ஆதரவு அணி புலம்பெயர் நாடுகள் எங்கும் போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது. மறு முனையில் புலிகள் தங்களைப் பாதுகாக்க மக்களை மனிதக் கேடயங்களாக்கி வன்னி மக்களைப் பலியிடுவதால் புலிகளே வன்னி மக்களின் இந்நிலைக்கு முழுப் பொறுப்பும் என அரச அதரவாளர்களும் வாதிடுகின்றனர். இவர்களில் சிலர் அதனையும் தாண்டுகின்றனர். அண்மையில் கொழும்பு சென்ற புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற ஒருவர் தன்னை வானொலி அறிவிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ‘சில ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை புலிகள் அழிக்கப்பட வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இவர்கள் தான் புலம்பெயர் ‘ஜனநாயக்கார்களுக்கு’ ‘மாற்றுக் கருத்தாளர்களுக்கு’ குரல்கொடுப்பவர்கள்.

புலிகளின் தலைவர் உள்ளே – வெளியே என்று உறுதிப்படுத்த முடியாத பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசித்துண்டு நிலத்தை நோக்கி நகர்கின்றனர். புலிகளைப் பொறுத்தவரை இன்று மக்களே அவர்களது மண்மூட்டைகள். இலங்கை அரசு புலிகளை புலிகளின் தலைமையை (அதன் தலைமை அப்பிரதேசத்தில் இருந்தால்) அழிப்பதாக இருந்தால் அந்த மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்தே தனது இலக்கை அடைய முடியும். அதற்கு தாங்கள் தயார் என்பதை அரசு அறிவித்து உள்ளது. செச்சினிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட ஆயிரம் வரையான மாணவர்களை விடுவிக்க ரஸ்ய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை இலங்கை அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது. அந்த இராணுவ நடவடிக்கையில் பணயக் கைதிகள் 300ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவ்வாறான ஒரு நடவடிக்கை 150000 பொது மக்கள் அகப்பட்டுள்ள முல்லைத்திவில் மேற்கொள்ள இலங்கை இராணுவம் முயல்கிறது. ஆனால் இவ்விரு நிலமையும் முற்றிலும் வேறுபட்டது. இலங்கை அரசபடைகளின் ஒரே நோக்கம் புலிகளையும் அதன் தலைமையையும் அழிப்பதே. வன்னி மக்களின் பாதுகாப்பு இரண்டாம் பட்சமானதே. இப்போது புலிகளுக்கு உள்ள கடைசி ஆயுதம் வன்னி மக்களே.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பல்வேறு வகைப்பட்ட போராட்டங்களில் குதித்து உள்ளனர். அவர்களது போராட்ட வடிவங்கள் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் புலிக் கொடியும் பிரபாகரனின் படங்களும் மேலோங்கி நிற்பது இப்போராட்டங்களின் நியாயத்தன்மையை மழுங்கடிக்கின்றன. வன்னி மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தின் மீது சேறடிக்கின்றன. புலிக்கொடியும் வே பிரபாகரனின் படங்களும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை உலகிற்கு வெளிப்படுத்துவனவாக இல்லை. சிங்கக் கொடிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இருக்கும் அதே சமன்பாடு தான் புலிக்கொடிக்கும் வே பிரபாகரனுக்கும் உரியது. இவற்றைக் காவிக்கொண்டு போராட்டம் நடத்த இவையொன்றும் மனிதத்தையும் மனித உரிமையையும் வெளிப்படுத்தவில்லை.

நாங்கள் தீவிரமான தகவல்கள் பரிமாற்ற யுகத்தில் வாழ்கின்றோம். புதினம் படித்து, ஐபிசி கேட்டு, ஜிரிவி பார்த்து விட்டுத்தான் டேவிட் மில்லிபான்ட்டும் பெர்னாட் கொச்னரும் கூட்டறிக்கை விடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

புலிகளின் தலைமைக்கு தமிழ் மக்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை மட்டுமல்ல தங்கள் 25000ற்கும் மேற்பட்ட உறவுகளைப் போராட்டத்திற்காக கொடுத்தனர். புலிகளுடன் தோளோடு தோள் நின்றனர். அப்படி இருந்தும் புலிகளின் தலைமையால் தமிழ் மக்களுடைய எவ்வித உரிமைகளையும் வென்றெடுக்க முடியவில்லை. மாறாக தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் மீது சவாரி செய்தது தான் மிஞ்சியது. இன்று அந்த மக்கள் மிகவும் களைத்து நொந்து போயிருக்க புலிகளின் பெயரில் புலம்பெயர் புலியாதரவுச் சமூகமும் ஒரு தடவை சவாரி செய்ய முனைகிறது.

பாதுகாப்பிற்கு பதுங்கும் குழிகளே புதைகுழிகளாகும் அந்த மண்ணை அவர்களின் பூர்வீக மண் என்று சொல்லி அவர்களுக்கு வாய்கரிசி போட புலம்பெயர் மண்ணில் போராட்டம் அவசியமில்லை. இன்றைய அவசர தேவை அம்மக்களிற்கான உயிர்ப் பாதுகாப்பு.

புலிகளுக்கு தண்ணி காட்டி பொய்சொல்லி பாஸ் எடுத்துவிட்டு பூர்வீக மண்ணைவிட்டு வெளிநாடு வந்தவர்கள் தான் பெரும்பாலான புலம்பெயர்மக்கள். ஆனால் இங்கு வெளிநாடுகளில் இருந்தகொண்டு தாங்கள் விட்டுவந்த பூர்வீக மண்ணை வன்னி மக்களின் தலையில் கட்டும் அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை எப்போதும் முதல் எதிரி ஒடுக்குமுறை அரசு. அந்த அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் மிகப்பெரும் தடையாக உள்ளனர். ஏனைய ஆயுதக் குழுக்கள் அரசுடன் செயற்பட புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக யுத்தம் புரிகின்றனர். ஆனால் அது தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அல்ல. அதனால் புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடித்து உள்ளனர். இன்று புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது. ஆயுதங்கள் மீது அதீத காதல் கொண்ட புலிகள் ஆயுதங்களை வைத்திருப்பதம் கைவிடுவதும் நீண்டகாலத்தில் தமிழ் மக்களின் அரசியல் நலனைப் பாதிக்கும் என்றில்லை.

புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை இணைத்தலைமை நாடுகளால் பெப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியாவும் தற்போது மீண்டும் இணைத்தலைமை நாடுகளில் அங்கம் பெற்ற பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் அக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளன. இந்நாடுகளின் அரசுகள் தங்களுக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டுள்ள அரசுகள். இந்நாடுகளில் பல நேட்டோ அணியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இன்றும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு உள்ளன. இந்நாடுகள் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று கோருவதன் நோக்கம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

அதே சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்வது பொருத்தமாக இருக்கும் என்று தேசம்நெற்ற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அவர் நேபாளில் மாஓ இஸ்ற்றுக்களின் தந்திரோபாயத்தை புலிகளும் பின்பற்றி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரான ரவி சுந்தரலிங்கமும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தார். மக்களின் பெயரால் ஆயுதம் தூக்கியவர்கள் மக்களுக்காக அவற்றை கைவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

புலிகளுடைய ஆயுத பலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பேச்சவார்த்தைகளில் பேரம் பேசுவதற்கு உதவும் என்ற வாதம் பொதுவாக உள்ள ஒன்று. ஆனால் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் புலிகள் பலத்த இராணுவ வெற்றிகளைச் சாதித்திருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கும் சென்றனர். ஆயினும் இந்த இராணுவ பலத்தை அரசியல் வெற்றியாகவோ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் கருவியாகவோ மாற்றுகின்ற அரசியல் வல்லமை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. புலிகளின் கைகளில் இருந்த ஆயுதம் குரங்கின் கையில் இருந்த பூமாலைக்கு ஒப்பானது என்பதனை தற்போதைய வன்னி நிலவரம் நிரூபித்து உள்ளது.

எந்த மக்களைக் காப்பாற்றுவோம் என்று புலிகள் உறுதியளித்தார்களோ இன்று அவர்களே இலங்கை இராணுவத்திற்கு எதிராக புலிகளின் அரணாக மாற்றப்பட்டு உள்ளனர். அரணாக இருக்க மறுத்து தப்பிச் செல்பவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்கையில் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதம் தமிழ் மக்களுக்கோ தமிழ் மக்களின் போராட்டத்திற்கோ உதவபோவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்றைய நிலையில் அந்த ஆயுதங்களைக் கைவிடுவது பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும். நூற்றுக் கணக்காண போராளிகளை வீணாகப் பலிகொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

யுத்தப் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 150000 வரையான மக்களில் பெரும்பாலான இளையவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படத்தப்பட்டு யுத்தத்தின் முன்னரங்க நிலைகளில் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விப் பிரதேசங்களில் உள்ள நாற்பதினாயிரம் வரையான மாணவர்கள் இந்த யுத்த பிராந்தியத்திற்குள் சிக்குண்டு உள்ளனர். மறத்தமிழன் வீரத்தமிழன் அடங்கா மண்ணில் பிறந்த தமிழன் என்று சொல்லி அந்த மாணவ மாணவிகளை விதைக்கின்றோம் என்று சொல்லி முளையிலேயே கருக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும்.

அதற்காக இந்தக் கொல் கருவிகளை தூக்கியெறிவதில் எந்தத் தயக்கமும் அவசியமில்லை.

இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன்- வைகோ

india-election.jpgமதிமுக பொதுச்செயலாளர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியி தான் போட்டியிடும் விருதுநகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘’என்னை தேர்ந்தெடுத்தால் இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து, இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன். இதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை கைது செய்தால் மக்கள் எனக்காக ஓட்டுக்கேட்க வேண்டும். இலங்கை தமிழருக்காக என் மீது தொடங்கப்பட்ட வழக்கு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வைகோ ஆரம்பத்தில் இருந்தே ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது அவர் பேசியதில் தவறில்லை” என்று எனக்காக குரல் கொடுத்துள்ளார். இதுதான் நட்பு; தோழமை. மக்கள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது கோபத்தில் உள்ளனர். அதனால் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனவே வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்று பேசினார்.