April

April

பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீல் இன்று இலங்கை வருகை

mohamed-kaleel.jpg பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாத்த பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீல் இன்று இலங்கை வருகிறார். தனது குடும்பத்தினரோடு இன்று மாலை இலங்கை வரும் இவருக்கு வரவேற்பளிக்கப்படவிருக்கிறது.

ஒருவாரம் இலங்கையில் தங்கியிருக்கும் இவருக்கு நாளை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கெளரவமளிக்கவுள்ளனர். அன்றைய தினமே விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே இராப்போசன விருந்தளித்துக் கெளரவிக்கவுள்ளார். பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரகமும் இவருக்கு வரவேற்பளிக்கவுள்ளது

இன்று பாலேந்திராவின் தமிழ் நாடகப்பள்ளி 5வது ஆண்டு நிகழ்வுகள்

தமிழ் அவைக்காற்றுக் கழகம்- லண்டன் தமிழ் நாடகப் பள்ளி மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்று இன்று (5.4.2009) ஞாயிறு மாலை கரோவில் நடைபெறவுள்ளது.

தமிழ் நாடகப் பள்ளியின் இவ்ஜந்தாண்டு நிறைவு நிகழ்வுகள் Pinner Village Hall, Chapel Lane, Pinner HA5 1AB என்ற இடத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சிறுவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் ஆற்றுகை; .எமது கடந்த கால சிறுவர் நாடகங்களின் வீடியோ அளிக்கை; இளையவர்களின் “படிக்க ஒரு பாடம்;” – புதிய மேடை நிகழ்வு; கருத்தாடல் என்பன நடைபெறவுள்ளது.

மகனை உருப்படியாக வளர்க்காத மேனகா என்னை விமர்சிப்பதா?: மாயாவதி

mayawati.jpgபெற்றால்தான் தாயா?. அன்னை தெரசா என்ன குழந்தை பெற்றவரா?. அவர் உலக மக்களை தன் பிள்ளைகளாக நினைத்து பாசம் காட்டவில்லையா?. நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்காமல் பிள்ளையை வளர்த்த மேனகா காந்தி என்னைக் குறை கூறிப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

வருண் காந்தியை வைத்து மேனா காந்திக்கும், மாயாவதிக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. வருண் காந்தியை சிறைக்குச் சென்று பார்க்க மேனகா காந்திக்கு உ.பி. அரசு திடீரென தடை விதித்தது. இதனால் கோபமடைந்த மேனகா, மாயாவதி ஒரு குழந்தை பெற்றவராக இருந்திருந்தால் ஒரு தாயின் வலி தெரிந்திருக்கும் என்று கூறியிருந்தார்.

இதற்கு மாயாவதி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டத்தை மீறிச் செயல்படுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. எனது ஆட்சி, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். தாய்ப் பாசம் பற்றிப் பேசும் மேனகா, நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தாய்மார்களின் கவலைகள் குறித்தும் கவலைப்பட வேண்டும்.

மகனுக்கு நல்ல புத்திமதி சொல்வதை விட்டு விட்டு அவரை ஆதரித்துப் பேசும் மேனகாவின் செயல் கண்டனத்துக்குரியது. ஒரு மகனின் வலிக்காக வருத்தப்படுகிறார் மேனகா. நான் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பிள்ளைகளுக்காக கவலைப்படுகிறேன். என்னைப் பற்றி அவர் பேசிய அவமானகரமான பேச்சுக்காக என்னிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மாயாவதி.

க. பொ த. (சா/தர) பரீட்சை முடிவு www.doenets.lk இணையத்தளத்தில்…

exam.jpgக. பொ. த.  சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான பரீட்சை பெறுபேறுகள் நேற்று பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை கிடைக்கக் கூடியதாக பெறுபேறுகள்  நேற்று தபாலில் இடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியினூடாக பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு பெறுபேறுகள் யாவும் இணை யத்தளத்தில் இணைக்கப்பட்டன. புதிய பாடத்திட்டத்தின் படி சுமார் 3 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

பழைய பாடத்திட்டத்திற்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரமே வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் நேற்று பிற்பகலிலேயே நேரடியாக பரீட்சை முடிவுகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

கண்டெய்னர் ஒன்றில் மூச்சுத்திணறி 44 பேர் பலி

containers_.jpgபாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்டெய்னர் ஒன்றில் சுமார் 150 பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்களில் 44 பேர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சட்டத்திற்கு புறம்பாக குடியேற முயன்ற இவர்கள் மூச்சு திணறி இறந்து விட்டதாக பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார். நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் இந்த வாகனம் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இரான் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் 60 ஆக உயர்வு : கபே

caffe.jpgமேல் மாகாண சபைக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஏப்ரல் 02ஆம் திகதி வரையில் 60 வன்முறைச் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான  கபே நிலையம் அறிவித்துள்ளது.

பதியப்பட்டுள்ள சம்பவங்களில் கூடுதலான பாரிய சம்பவங்கள் கடுவெல தேர்தல் தொகுதியிலேயே பதிவாகியுள்ளன. ஏப்ரல் 02ஆம் திகதி வரையான 60 சம்பவங்களில் 20 பாரிய சம்பவங்களும் 40 சிறியளவிலான சம்பவங்களும் அடங்குகின்றன.

தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கும் வேளையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ள தேர்தல் கண்காணிப்புக்கான நிலையம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும், ஐ.தே.கவுக்கு எதிராக 07 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேவேளை, ம.வி.மு. (ஜே.வி.பி.) எதிராக எவ்விதமான முறைப்பாடுகளும் பதியப்படவில்லை. அத்துடன், அடையாளப்படுத்தப்பட முடியாத 39 சம்பவங்களும் பதியப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து மேலும் பலர் புல்மோட்டைக்கு வருகை

taking-to-green-ocean.jpgஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து காயங்களுக்கு இலக்கானோர் நோயாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் உறவினர்கள் உள்ளிட்ட 490 பேர் நேற்று கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டோரில் வயதானவர்களே அதிகமாக உள்ளதாக தள வைத்தியசாலை பகுதியில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

இதே வேளை வெள்ளிகிழமை கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டோரில் இதுவரை மூவர் மரணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் தூக்குமேடை ஏறவும் தயார் – ஜனாதிபதி

mahinda.jpgகடனை மீளச் செலுத்தக்கூடிய ஆற்றல் அரசாங்கத்திடம் இருப்பதாலேயே சர்வதேச கடன்களைப்பெற தீர்மானித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் வெற்றிகரமான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளது. கடனை மீளச் செலுத்தும் உறுதிப்பாடும் எமக்குள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டைப் பாதுகாத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போராட்டத்தில் ஒரு தூக்குமரமல்ல பத்துத் தூக்குமரத்தைச் சந்திக்கவும் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் நிகழ்வு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனாதிபதித் தேர்தலின் போது நான் மக்கள் ஆணையை வேண்டுகின்ற போது இந்தநாட்டு மக்கள் அனைவருமே நாடு துண்டாடப்படுவதைத் தடுத்து நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துமாறு என்னைக் கோரினர்.

இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்த தலைவர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே கூற முடியும். நாட்டைப் பகுதியாகப் பிரித்து புலிகளுக்கு நிர்வாகம் வழங்கியவர் அவர். இன்று வன்னிப் பகுதியில் படையினர் மீட்டெடுக்கும் பாரியளவு ஆயுதங்களை நாம் தொலைக் காட்சி மூலமாகப் பார்க்கிறோம். இது வடக்கையும், கிழக்கையும் பாதுகாக்கவென புலிகள் வைத்திருந்த ஆயுதமென நீங்கள் நினைக்கிர்களா? இன்னும் சில மாதங்கள் தாமதமாகியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். மக்கள் அன்று நாட்டைப்பற்றி சிந்திக்காமல் தவறான தீர்ப்பை தேர்தலில் வழங்கியிருந்தால் புலிகள் கனவுகண்ட தமிழஈழம் சுலபமாகக் கிடைத்திருக்கும். நீர்கொழும்பிலிருந்து பதுளை வரையிலான பகுதிகள் நாட்டிலிருந்து துண்டாடப்பட்டிருக்கும் ஈழம் அமைக்கப்பட்டிருக்கும். புலிகளின் எதிர்பார்ப்பு அதுவே.

தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆதரவும் ஆணையும் எனக்குக் கிடைத்ததால்தான் நாடு பாதுகாக்கப்பட்டது. எமது அர்ப்பணிப்புடனான தீர்மானத்தைக் கண்டே மக்கள் எமக்கு ஆதரவு வழங்கினர். இதற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கவில்லையெனில் தாய் நாட்டைப் பாதுகாக்கும் இப்பயணத்தைத் தொடர்திருக்க முடியாது. அனைத்துப் பிரசாரங்கள் அழுத்தங்களையும் எதிர்கொள்ள மக்கள் ஆதரவே உறுதுணையாகியது.

நாட்டைப் பாதுகாப்பதற்காக நாம் தற்போது கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றோம். யுத்தம் புதிதாக முளைத்ததல்ல. முப்பது வருடகாலம் பழமையானது. ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் புலிகளுக்கு வழங்கியது மட்டுமல்லாமல் உளவுப் பிரிவினரைக் கொல்லவும், பொதுமக்கள் பலியாகவும் காரணமானவர். என தெரிவித்த ஜனாதிபதி சகல சவால்களையும் வெற்றிகொள்ளும் இப்பயணத்தை மேலும் சக்திப்படுத்த மேல் மாகாணத் தேர்தலில் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்து மாமன்ற சமய விவகாரக் குழுவின் தலைவர் இராஜபுவனேஸ்வரன் காலமானார்

rajapuwaneswaran.jpgகொழும்பு விவேகானந்த சபையின் பொதுச் செயலாளரும், அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவரும், இந்து மாமன்ற சமய விவகாரக் குழுவின் தலைவருமான கே. இராஜ புவனேஸ்வரன் காலமானார். யாழ்ப்பாணம் சுதுமலையில் 1942ம் ஆண்டு பிறந்த இவருக்கு இறக்கும் போது வயது 67 ஆகும்.

சிறந்த சமயத் தொண்டரும், தீவிர இறைபக்தியாளருமான சிவஞானச் செல்வர் இராஜ புவனேஸ்வரன், இலங்கை வங்கியில் சிரேஷ்ட முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், இந்நாட்டில் சைவசமய வளர்ச்சிக்காக உழைத்த சிவத்தொண்டராவார். இவர் சிவத்தொண்டர் அணி ஊடாக நாடு முழுவதும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

பாடசாலைகளில் தவக்கால வழிபாடு: கல்வி அமைச்சு சுற்று நிருபம்

பரிசுத்த வாரத்தில் பாடசாலைகளில் தவக்கால வழிபாடுகளை மேற் கொள்ள கல்வியமைச்சு அங்கீகாரமளித்துள்ளது. கத்தோலிக்க மாணவர்கள் 15 பேர் இருப்பார்களானால் அங்கு இவ் வழிபாடுகளை முன்னெடுக்கலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க மக்கள் அனுஷ்டிக்கும் தவக்காலத்தின் பரிசுத்த வாரம் இன்று குருத்தோலை ஞாயிறோடு ஆரம்பமாகிறது. இதனையொட்டி மேற்படி அங்கீகாரத்தை கல்வியமைச்சின் செயலாளர் எம். எம். என். டீ. பண்டார வழங்கியுள்ளார்.

கல்வியமைச்சின் கத்தோலிக்க சமய ஆலோசனைச் சபையின் அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணங்கவே இவ் வங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2009/08 ஆம் இலக்கமுடைய சுற்று நிருபத்தினையும் இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.