April

April

ஈஸ்டர் திருநாளில் போர் நிறுத்தம் ஏற்படட்டும்: ஜெயலலிதா

jaya.jpgஅன்பும்,  இரக்கமும் உயிர்த்தெழட்டும் என்று, ஜெயலலிதா தனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்தில் கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அன்பின் வடிவமாம் இயேசு பெருமான், சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர் பண்டிகை என்னும் பெயரால் உலகு எங்கும் கொண்டாடப்படும் இந்த வேளையில், கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில், அன்பு உயிர்த்தெழட்டும், உயிர் இரக்கம் உயிர்த்தெழட்டும், அமைதி தவிழட்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படட்டும், அகிலம் முழுவதும் ஆனந்தம் தாண்டவமாடட்டும் என பிரார்த்திப்போம். எனது அன்புக்குரிய கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சிறுவர் கைகளில் புத்தக பைகளையே கொடுப்பேன்; துப்பாக்கிகளை அல்ல ‘சிறுவர் வலியை உணர்ந்தவன் நான்’ – கிழக்கு முதல்வர்

hotal-cm.jpgஒரு சிறுவர் போராளியாக நான் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்ததனால் சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படுவதால் அவர்கள் எதிர்கொள்கின்ற வலிகளை நேரடியாக உணர்ந்தவன் என்ற வகையில் இனி வருகின்ற காலங்களில் எந்தவொரு சிறுவர்களையும் எந்தவொரு அமைப்பிலும் இருப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

திருமலையிலுள்ள வெல்கம் ஹோட்டலில் இடம்பெற்ற கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தலைமையுரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிட்ட முதலமைச்சர்

நான் தற்போது கிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருக்கின்ற இத்தருணத்தில் சிறுவர்கள் நலன் தொடர்பாக அதிக அக்கறை கொள்வதற்குரிய அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன். தமிழ் மக்கள் அரசியல் கட்சியினைப் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் பாதுகாப்புக் காரணம் கருதி சில சிறுவர்கள் இணைந்திருந்தார்களே தவிர, நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் வலுக்காரமாக சிறுவர்களை எமது அமைப்பில் சேர்க்கவில்லை.

எம்முடன் இணைந்திருந்தவர்களில் அனைவருமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஏனைய சில ஆயுதக் குழுக்களில் தற்போதும் சிறுவர் போராளிகள் இருப்பதாக அறிய முடிகின்றது. எனவே அந்தச் சிறுவர்களின் மறுவாழ்வு தொடர்பாக யுனிசெப்புக்கும் பொலிஸாருக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.

எதிர்காலத்தில் சிறுவர்களின் கைகளிலே புத்தகப் பைகளை மாத்திரம் கொடுபேனே தவிர, மாறாக துப்பாக்கிகளை ஏந்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

இக் கருத்தரங்கிற்கு நீதி அமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத், கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சங்கர், திருமலை மாவட்ட பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, யுனிசெப் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டார்கள். இதே கருத்தரங்கு மட்டக்களப்பு கச்சேரியிலும் இடம்பெற்றது. இதிலும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து தமிழ் உண்ணாவிரதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் இளையோர் – தமிழ் மாணவர் அமைப்பினரால் நடாத்தப்படும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட உண்ணாவிரதிகள் நேற்று சனிக்கிழமை 11ம் திகதி 2009 இரவு லண்டன் பொலீசாரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை வீதியோரத்தில் தொடர்வதாக தெரியவந்துள்ளது

இத் தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதாக வெள்ளி மாலை பிபிசி-ஜரிவி என்பனவும் செய்தி வெளியிட்டிருந்தன.

இரண்டு நாள் தற்காலிக யுத்த நிறுத்தம்

mahinda.jpgதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் நாளையும், நாளை மறுநாளும் (13, 14)  இரண்டு நாள் தற்காலிக யுத்த நிறுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சே இன்று (12) அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட  அறிக்கையில்; தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வெளியேறும் வகையில் நாளையும், நாளை மறுநாளும் (திங்கள், செவ்வாய்) புலிகள் மீதான தாக்குதலை ராணுவம் நிறுத்திவைக்கும்.

இந்த கால கட்டத்தில் மக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள்  அனுமதிக்கப்பட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை தமிழ்-சிங்கள புத்தாண்டு வருவதையொட்டி இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் புலிகள் படையினர் மீது தாக்குதல் மேற்கொhண்டால் தவிர பாதுகாப்பு வளையப் பகுதியில் மற்ற தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனப்படுகிறது.

இது தொடர்பாக ஊடகத்துறை  அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பா கூறுகையி்ல் நாளையும், செவ்வாய்க்கிழமையும் இந்தப் போர் நிறுத்தம் செய்யப்படும். பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ள மக்கள தப்பிச் செல்லும் வகையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்றார்.

புலிகள் அமைதி:

ஆனால், அரசின் இந்த அறிவிப்பு குறித்து புலிகள் தரப்பில் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

குடாநாட்டில் சில தினங்கள் தொடர்ந்து மழை பெய்யும்!

lighting.jpgகுடாநாட்டில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் மழை இன்னும் சில தினங்கள் நீடிக்கும் சாத்தியம் அதிகம் உண்டு என்று திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. நேற்றுக்காலை 8.30 மணி வரை 90.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், காலை முதல் பிற்பகல் 5.30 மணி வரை மொத்தம் 83.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலைய வட்டாரங் கள் மேலும் தெரிவித்தன. எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் மழை வீழ்ச்சி குறையலாம் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய மழை பெய்வதனால் பொதுமக்கள் இடிமின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு?

tna-mp-22.jpgபேச்சு வார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசாங்கம் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்து வருவதாக தெரிய வருகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால் கூட்டமைப்பு பிளவை நோக்கி இட்டுச் செல்லப்படுவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை தமிழர்களுக்காக உண்மையான தமிழ் இன உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பு: விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgதிமுக, அதிமுக அணியினர் இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதால், உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கப் போவதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவை. இதனைத் தோலுரித்துக் காட்டுவதே எங்கள் கடமை. உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபடப் போகிறோம். அப்படி அமைகிற அமைப்புகளோடு சேர்ந்து குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, இராமநாதபுரம், சிவகங்கை, மத்திய சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவோம்.

விஜயகாந்த் அந்தத் தொகுதியில் அவரது மைத்துனரை நிறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையாகட்டும், தேர்தல் கூட்ட ணி குறித்த பிரச்னையாகட்டும் அவரைப் போல் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியவர்கள் இல்லை. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளயிருப்பதால் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். அமையும் சூழலைப் பொறுத்து தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் பணி ஆரம்பம் – பெருந்தொகையானோரை தங்கவைக்க செட்டிக்குளத்தில் விரிவான ஏற்பாடு

_mullai_1.jpgபாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை படையினர் ஆரம்பித்துள்ளதையடுத்து பெருமளவிலான மக்கள் அங்கிருந்த வரலாம் எதிர்பார்ப்புடன் அம்மக்களை என்ற தங்க வைப்பதற்காக வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்கள் (டெண்டுகள்) அமைக்கப்படுகின்றன. யூ. என். எச். சீ. ஆர் சுமார் 12,000 தற்காலிக கொட்டில்களை வழங்க முன்வந்துள்ளது. இப்போது சுமார் 9000 கொட்டில்களை அமைக்கும் ஆயத்த நிலையில் உள்ளன. என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

மேலும் இப்பிரதேச செயலகப் பிரிவிலேயே 700 ஏக்கர் பகுதியும் துப்புறவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியிலும் மக்களை தங்கவைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. கொட்டில்களில் மக்களை தங்க வைப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட மலசல கூட வசதிகளையும் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. வவுனியாவில் தங்கியுள்ள ஐ. நா. மனிதாபிமான அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் இதற்கென பெரிதும் உதவி வருவதாகவும் செயலாளர் ஹால்தீன் தெரிவித்தார்.

தற்போது வவுனியாவுக்குள் சுமார் 64,000 பேரளவில் வந்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்கு எதுவாக வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களுள் சுமார் 400 பேர் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலும், மேலும் 1200 பேர் ஒமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1000 பேர்; படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளனர். இவர்கள் இன்று அல்லது நாளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஈழமக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும்: புதிய தமிழகம்

election_ballot_cast.jpgபாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை காப்பாற்ற கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியி கிருஷ்ணசாமி,

பக்கத்து நாடான இலங்கையில் தமிழ் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. 3 லட்சம் தமிழர்கள் 20 கி.மீ. சதுர பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல் துன்பப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை பட்டிக்குள் அடைப்பது போல குறிப்பிட்ட ஒரு எல்லை பகுதிக்குள் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தி, அவர்களை குண்டு வீசி கொலை செய்து வருகின்றனர்.

இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக உலக நாடுகள் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி செய்யவேண்டும். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

எங்களுடன் உள்ள கட்சிகள் மற்றும் எங்களுக்கு ஒத்துழைப்பவர்களுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும். இது குறித்து நாளை அறிவிக்கப்படும்.பாராளுமன்ற தேர்தலில், புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து 13 ந் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்றார்.

இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவு

bus.jpgஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, நேற்று அதிகாலையிலிருந்து தூரச்சேவைகள் உட்பட நாடு முழுவதும் எதுவித தங்குதடையுமின்றி பஸ் சேவைகள் இடம்பெறுவதாக சபையின் பிரதான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான அத்தியட்சகர் என். கே. ஏ. டபிள்யூ. குணவர்தன தெரிவித்தார்.

நேற்று முற்பகல் வரை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு 101 பஸ் வண்டிகள் வந்து சேர்ந்ததாகவும், தூர இடங்களுக்குத் தடங்கலின்றி பஸ் சேவைகள் நடைபெறுவதாகக் கூறிய அத்தியட்சகர், “பஸ் இல்லை” என்ற நிலையை இல்லாமற் செய்யும் அளவுக்கு பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். இ. போ. ச. சாலை ஊழியர்களின் கோரிக்கைகளுக்குச் சாதகமான முடிவைப் பெற்றுத் தந்து சுற்று நிருபத்தை வெளியிட போக்குவரத்து அமைச்சருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் நாடு முழுவதும் இ. போ. ச. பஸ் சேவை வழமைக்குத் திரும்பியது.

புத்தாண்டு முற்பணம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் நண்பகலில் இருந்து திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதனால், பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர். சிலர் பஸ் இல்லாத காரணத்தினால் தனியார் வேன்களுக்கு ஹட்டன் நோக்கிச் செல்ல ஆள் ஒருவருக்கு 500 ரூபா முதல் 1000 ரூபா வரை செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுட்டது. அவ்வாறும் வரமுடியாதவர்கள் பலர் விடுதிகளில் தங்கினர்.

நேற்று (11) அதிகாலை முதல் இரத்தினபுரி பஸ் டிப் போவுக்கு சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட பஸ் வண்டி கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிப்போ அதிகாரியொருவர் தெரிவித்தார். சன நெரிசல் மிக்க இச்சந்தர்ப்பத்தில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என பயணிகள் தெரிவித்தனர்.