April

April

இவ்வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் 1000 மினி கோப் சிட்டிகள்!

bandula_gunawardena.jpgஇவ்வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் ஆயிரம் மினி கோப் சிட்டிகள் அமைக்கப்படவுள்ளதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 500 மினி கோப் சிட்டிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் ஏனையவற்றை எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு முன்னர் அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் கூறினார். மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் பாரிய மாற்றங்களையும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் எமது அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மூவாயிரம் இலட்சம் ரூபா செலவில் 104 லக் சதோச, 300 இலட்சம் ரூபா செலவில் 363 கோப் சிட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 1000 மினி கோப் சிட்டிகள் நிறுவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களும்; நிறுவப்பட்டு வருகின்றன.

பருப்பு,  சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்து விற்பனை செய்பவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்; புத்தாண்டு காலங்களில்; லக் சதோச வண்டிகள் மூலம் பொருட்கள்; விற்பனை செய்யும் நடமாடும் சேவையையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுளளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 90 முறைப்பாடுகள்

election_ballot_cast.jpgமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக  இதுவரை  90 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பாக துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தேர்தல் பிரிவுக்குப் பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார். பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சிறு சிறு சம்பவங்கள் தொடர்பாகவே கூடுதல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். இவற்றில் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் என்பனவும் அடங்குகின்றன.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திகதியில் இருந்து கடந்த 5 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் குறைந்தளவு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளே பொலிஸ் தேர்தல் பிரிவுக்கு கிடைத்துள்ளன.

இவை குறித்த துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறைச் சம்பவங்கள் குறைவாகவே இடம்பெற்றிருப்பதால் தேர்தல் தினத்திலும் குறைந்தளவு சம்பவங்களே இடம்பெறும் என எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கூறினார்.

போரை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு!

selvarasa_pathmanathan.jpgஉடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தத்தை அறிவித்து தமிழர்களின் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமாயின் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தாங்கள் தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
 
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்று விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு நிராகரித்துவிட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தீவில் தமிழ் தேசத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதியின் விளைவாகப் பிறந்த வரலாற்றுப் பூர்வமான விடுதலைப் போராட்டத்தையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநியாயங்களுக்கு எதிராகவே தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதம் ஏந்திப் போராடினர்.எங்களுடைய இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான நியாயமான தீர்வை சர்வதேச சமூகம் வழங்குமென்றால் அந்த ஆயுத போராட்டத்திற்கான அவசியம் இருக்காது” என்று அந்த அறிக்கையில் பத்மநாதன் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் அனுபவித்துவரும் மானுட அவலத்திற்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தம் அறிவித்து முற்றுப் புள்ளி வைக்குமானால், அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழர்களின் உரிமையை போராடி பெற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே உள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்

நிரந்தர போர் நிறுத்தத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி, தம்மால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீது ஆரம்பித்துள்ளது. இதன் போது படையினர் நகர்வுகளை தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து படையினர் ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் குண்டுகளையும் ஏவி பல பொதுமக்களை  கொன்றும் ஆயிரக்கணக்கானோரை காயப்படுத்தியும் உள்ளனர்.

தமிழர்களின் அவலத்திற்கு முடிவுகட்ட நாகரீக உலகின் பிரதிநிதிளாக முன்னி்ன்று கொடை நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நோர்வே ஆகியன இந்தியாவுடன் இணைந்து வலியுறுத்தி உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் செய்ய வழிகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பத்மநாதன், போரின் மூலம் இனப் பிரச்சனைக்கு முடிவையோ அல்லது இலங்கையிலும் அல்லது தெற்காசிய மண்டலத்திலும் நிலைத் தன்மையையோ உருவாக்கிட இயலாது என்றும் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெறுகின்ற மக்களின் அவலங்களை சர்வதேசம் அறிந்திருந்தும் அதனை தடுப்பதில் முனைப்புக்காட்டவில்லை எனவும் பத்மநாதன் குற்றம் கூறியுள்ளார்.

ஏ சி சாந்தன் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்து

Santhanபிரித்தானியா தமிழ் அமைப்பின் ஸ்தாபகரும் பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு பொறுப்பானவருமாக கருதப்பட்ட ஏ சி சாந்தன் கிங்ஸ்ரன் கிரவுண் நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார். குண்டு தயாரிக்கும் பொருட்களை புலிகளுக்கு விநியோகித்ததற்காகவும் பயங்கரவாதத்துடன் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்காகவும் சாந்தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2004ல் புலிகளின் பொலிஸ் பிரிவுக்கு கைவிலங்குகளையும் பூட்ஸ்களையும் வாங்கி விநியோகிக்க முற்பட்ட போது பொலிஸாரால் ஏ சி சாந்தன் எச்சரிக்கப்பட்டதாகவும் ஆனாலும் அதனையும் மீறி அவர் இதனை மேற்கொண்டதாகவும் அரச தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஏ சி சாந்தனுடன் குற்றச்சாட்டப்பட்ட முருகேசு ஜெகதீஸ்வரன் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார்.

Related News:

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பிணையில் விடுதலை

பிந்திய செய்தி: விடுதலைப் புலி ஆதரவாளர் மீண்டும் கைது

ஒருபேப்பர்-வாசன் அச்சக கட்டடிம் மீது சோதணை – பிரித்தானிய புலி ஆதரவாளர்கள் மூவர் கைது

சாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா- ஏ.பி.பரதன்

jayalalitha.jpgசென்னையில் நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசுகையில்,

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறான பொருளாதார கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவு தந்தார். அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து எங்களுடன் சேர்ந்து பேராடினார்.

இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் அமைதியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தி, இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றார். இந்த தேர்தல் தமிழகத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் நாட்டு மக்களை காப்பாற்றும்படி இல்லை. எனவே, அந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்றார்.

புலிகளின் இந்தப் பின்னடைவுக்கு நானே பிரதான காரணம் – அமைச்சர் கருணா அம்மான்

karuna_amman.jpgதேசிய இன ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சரான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  இணையத்தளம் ஒன்றிக்கு அவரது அமைச்சில் வைத்து அளித்த பேட்டியினை இங்கு தருகிறோம்.

கேள்வி: புலிகள் அமைப்பிலிருந்து விலகி அரசுடன் இணைவதற்கு முன்னர் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த நீங்கள், அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சரான பின்னர் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளீர்களே.. அத்துடன் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தவுடன் உடனடியாகவே நீங்கள் ஏன் அரசுடன் இணையவில்லை?

பதில்: இல்லை. அது தவறான செய்தி. நாம் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியவுடன் புலிகளால் எமக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் எம்மைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆயுதமேந்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதே உண்மை. இவ்வாறு நாம் தெரிவித்த கருத்தே திரிவுபடுத்தப்பட்டிருந்தது.

புலிகள் அமைப்பிலிருந்து நாம் பிரிந்து அரசுடன் உடனடியாகச் சேர்ந்திருந்தால் எம்மைத் துரோகிகள் என மக்கள் தெரிவித்திருப்பர். அவ்வாறான குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படக் கூடாதென்பதற்காவே நாம் ரிஎம்விபி (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) என்ற அமைப்பை உருவாக்கி புலிகள் அமைப்பிலிருந்து நாம் விலகியமைக்கான காரணங்களையும் பிரபாகரனின் துரோகத்தனங்களையும் மக்களுக்கு விளக்கிக் கூறினோம். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றியமை தொடர்பிலும் நாம் விளக்கமளித்தோம். இதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் மூலம் எமது நோக்கமும் நிறைவேறியது. இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இரு தேர்தல்களின் போதும் மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தனர்.

கேள்வி: நீங்கள் ரீஎம்விபியிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்?

பதில்: இலங்கையைப் பொறுத்த வரையில் 15க்கும் மேற்பட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் தொடர்பிலோ தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பிலோ பெரும்பாலான கட்சிகளிடம் தெளிவான எந்தக் கொள்கையும் திட்டங்களும் இல்லையென்பது ஒரு கசப்பான விடயமாகும். அத்துடன் பிராந்திய ரீதியான கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டே தேசிய ரீதியான அல்லது பிரதேச ரீதியான அபிவிருத்தியை முழுமையாக அடைய முடியுமா என்பதும் கேள்விக்குரிய விடயம். இது கடந்த கால அனுபவத்தின் வெளிப்பாடுமாகும்.

வெறும் விளையாட்டுக் கழகங்கள் போன்று கட்சிகளை வைத்துக் கொள்வதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. தொடர்ந்தும் பிராந்தியக் கட்சிகளுக்கு ஊடாக நாம் அரசியலை நடத்திச் செல்வதால் தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையிலேயே நாம் ரிஎம்விபி கட்சியிலிருந்து வெளியேறி தேசிய அரசியலில் எம்மைச் சங்கமிக்கச் செய்தோம்.

கேள்வி: உங்களை நம்பி உங்கள் பினனால் வந்த போராளிகள் நிலை என்ன?

பதில்: நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்கு முன்னரே எமது அமைப்பைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகளின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தினேன். அவர்களுக்குத் தேவையான தொழில் வாய்ப்புகள், தொழில் பயிற்சிகள், வெளிநாட்டு வேளைவாய்ப்புப் போன்றனவற்றை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

எமது அமைப்பைச் சேர்ந்த ஆயிரம் பேர் இதுவரை இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 300 பேர் தற்போது தொப்பிகலைப் பிரதேசத்தில் கடமையாற்றி வருகின்றனர். மேலும் 1500 பேரை இராணுவத்தில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்துள்ளேன்.

இப்போது கிழக்கு மாகாணத்திலுள்ள எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியலங்களின் பாதுகாப்புக்குக்; கூட நாம் இலங்கைப் பொலிசாரின் உதவியையே கோரியுள்ளோம்.

கேள்வி: நீங்கள் இப்படிக் கூறுகிறீர்கள.; ஆனால் கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்னும் ரீஎம்விபி கட்சியை வழிநடத்தித்தானே செல்கிறார்?

பதில்: அவரின் கட்சியிலிருக்கும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கு மேற்படாது. அவர் தற்போது தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்.

கேள்வி: அவரிடம் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்த்திருக்கலாமே?

பதில்: அவர் அதனை ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டார்.

கேள்வி: நீங்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னரும் பதவியை ஏற்ற பின்னரும் தமிழ் மக்கள் தொடர்பில் ஏதாவது செய்துள்ளீர்களா?

பதில்: ஆம், நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்னர் பல அமைச்சுகளின் இணைப்பாளரகவிருந்து நல்ல பல விடயங்களைச் செய்துள்ளேன். அதுபோன்று இப்போது எனக்குக் கிடைத்துள்ள அமைச்சு மூலம் தேசிய ரீதியிலேயே நல்ல பணிகளைச் செய்ய முடியுமென எதிர்பார்க்கிறேன். இப்போது கிடைத்துள்ள அமைச்சினை நான் மிகவும் விரும்புகிறேன். சுமார் 25 வருடங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட வடக்கினையும் கிழக்கினையும் கட்டியெழுப்பக் கிடைத்துள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.

இந்த அமைச்சின் மூலம் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்து பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்க்கவும் முடியும். தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக் கொள்ளும் வகையில் புதியதொரு திட்டத்தினையும் நான் விரைவில் செயற்படுத்தவுள்ளேன். இந்த இரு இனங்களும் இரு மொழிகளையும் கற்பதன் மூலமும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கலாமென்பதே எனது நம்பிக்கை.

கேள்வி: நான்காவது ஈழப் போர் ஆரம்பித்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் படை பல ரீதியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: புலிகளின் இந்தப் பின்னடைவுக்கு நானே பிரதான காரணம். நானும் பெரும் எண்ணிக்கையிலான போராளிகளும் இந்த அமைப்பிலிருந்து வெளியேறியதன் மூலம் அவர்களின் பலம் குறைக்கப்பட்டு விட்டது.

மேலும் புலிகளின் தரப்பில் இப்போது யுத்தமொன்றுக்குத் தலைமை தாங்கிச் செல்லக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். புலிகள் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். இதற்குப் பின்னர் அவர்களால் யுத்தத்தில் வெல்ல முடியாதென்பது எனது திடமான நம்பிக்கை.

கேள்வி: கடந்த காலங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் சாதமான ஏதாவது விடயத்தை பிரபாகரன் தவற விட்டுள்ளாரா?

பதில்: நிச்சயமாக, இறுதியாக இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில் நானும் கலந்து கொண்டேன். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பெடரல் முறையிலான தீர்வுத் திட்ட ஆலோசனைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான ஆவணங்களிலும் எமது தரப்பில் (புலிகள்) கையொப்பமிடப்பட்டது. அன்ரன் பாலசிங்கம் எனது அழுத்தத்தின் மத்தியில் இதில் கையொப்பமிட்டார்.

கேள்வி: உங்கள் அழுத்தமா?

பதில்: ஆம், இதில் தான் கையொப்பமிட்டால் பிரபாகரனால் தனக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அன்ரன் பாலசிங்கத்திடம் அன்று காணப்பட்டது. இந்த நிலையில் அவரை நான் தைரியப்படுத்தி கையொப்பமிடச் செய்தேன். பின்னர் இலங்கை திரும்பியதும் வன்னி சென்று பிரபாகரனைச் சந்தித்து கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன். அவர் அதனை மகிழ்ச்சியான மனநிலையுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான ஒப்பந்தமொன்றில் அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டமை தொடர்பாக என்னிடம் தனது அதிருப்தியை வெளியிட்டதுடன் அதனைக் கிழித்தெறிந்து விட்டார். இதுவே அவருக்கும் எனக்குமிடையிலான முரண்பாடுகள் ஏற்படக் காரணமுமானது.

அது மட்டுமன்றி தமிழ் மக்கள் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கபட்ட இந்த ஆலோசனையை அவர் நிராகரித்தமை இனப்பிரச்சினை தீர்வில் அவருக்கு அக்கறை இல்லையென்பதனையுமே காட்டியது. பல வருடகால யுதத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்படவேண்டுமென்ற நிலையிலிருந்த போது இவ்வாறு பிரபாகரன் நடந்து கொண்டது முட்டாள்தனமானது.

கேள்வி: நீங்கள் எவ்வாறு தெரிவித்தாலும்; தமிழ் மக்கள் தம்முடன் இருப்பதாகத்தானே புலிகள் கூறுகின்றனர்?

பதில்: தமிழ் மக்கள் அப்படிக் கூறுகின்றனரா இல்லையே?

கேள்வி: எங்களுக்காகத்தான் பிரபாகரன் போராடுகின்றாரென தமிழ் மக்கள் கூறுகிறார்களே?

பதில்: அந்தக் காலம் இப்போதில்லையே. தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய போராட்டமானது தமிழ் மக்களுக்கான போராட்டம் அல்ல. அது பயங்கரவாதத்தின் பக்கம் வழி தவறிச் சென்று விட்டது. புலிகளை முதலில் வெறுத்தவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். மாவட்ட மக்களே. இப்போது அந்த வெறுப்பாப்பானது பரவிக் காணப்படுகிறது.

கேள்வி: அப்படியாயின் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுதான் என்ன?

பதில்: மாகாண சபை ஊடான அதிகாரப் பரவலாக்கலே சிறந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றைக் காணமுடியும்.

கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நீங்கள் முழுமையான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச முடியாது.

பதில்: பொலிஸ் அதிகாரத்தின் மூலம்தான் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏனைய சமூகங்கள் தவறாகக் கணிப்பிடக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என்பதனாலேயே இதனை எதிர்க்கிறேன். அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் எதிர்காலத்தில் தமிழ் மொழி பேசும் பொலிசாரே நியமிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் பொலிஸ் அதிகாரம் தேவை இல்லையென்பதே எனது கருத்து.

கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பூரணமாக வழங்கவில்லையென்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான); பகிரங்கமாகத் தெரிவிக்கிறாரே?

பதில்: எதனை எவ்வாறு கையாள்வதெனத் தெரியாத பிள்ளையான் தனது தரப்பிலுள்ள பிழைகளை மறைப்பதற்காக சுமத்தும் குற்றச்சாட்டுகள்தான் இவை. கிழக்கின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான நிதி திருப்பியனுப்பப்பட்டமைக்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஹில்புல்லாஹ் கிழக்கு மாகாண அமைச்சர்தானே அவரும் அதே மாகாண சபை மூலம் எவ்வளவு சேவைகளைச் செய்து வருகிறார். முதலில் நிர்வாகத் திறமை இருக்க வேண்டும் அது இல்லாமல் தாம் விடும் பிழைகளுக்கெல்லாம் பிறரைக் குற்றம் சொல்வது தவறு.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது யுத்த களமுனையில் உள்ளாரா அல்லது வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருப்பாரா?

பதில்: வன்னிப் பெரும் பரப்பிலுள்ள காடொன்றுக்குள் அவர் ஒழிந்துள்ளாராரென்றே நான் கருதுகிறேன். அவரால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது கடினம். அப்படித் தப்பிச் சென்றாலும் இந்தியா உட்பட பல நாடுகள் அவரை ஏற்றுக் கொள்ளமாட்டாது. இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கை விவகாரம் தொடர்பில் எல்லாம் முடிந்த கதை. அவர்கள் தங்களது கொள்கையிலிருந்து மாறவும் மாட்டார்கள். யாராலும் அவர்களை மாற்றவும் முடியாது.

இலங்கை மாணவர்கள் சிங்கப்பூரில் ஏமாற்றப்படுகின்றனர். – இலங்கைத் தூதுவர்.

jayathri-samarakone.jpg இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு கல்வி கற்பதற்கென கொண்டுவரப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டுள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதுவர் ஜயத்திறி சமரக்கோண் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பத்திரிகைகளுடாக இலகுவாக விளம்பரம் செய்யப்படும் போது ஏராளமான மாணவர்கள் போலி ஏஜன்டுகளை நாடுகின்றனர். அவ்வாறு இவர்களது வலையில் சிக்கும் மாணவர்கள் இலகுவாக சிங்கப்பூரினுள் கொண்டு வரப்படுகின்றனர். சிங்கப்பூரினுள் இலங்கைப் பிரஜைகள் வர வீசா தேவையில்லை என்ற சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரினுள் கொண்டு வரப்படும் மாணவர்கள் முதலில் ஆங்கில கற்கை நெறிகளுக்காக அனுப்பபடுவதுடன் அதே நேரத்தில் பகுதி நேர வேலைகளுக்கும் அமர்த்தப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் வேலை செய்வதானல் அனுமதி வேண்டும். ஆனால் எவ்வித அனுமதியுமில்லாமல் வேலைக்கமர்த்தப்பட்ட பல மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன் அவ்வாறு ஆர்வம் உள்ளவர்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அன்றில் சம்பந்தப்பட்ட கல்லூரியை நேரடியாக தொடர்பு கொள்வது சிறந்தாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் நம்பியார் இன்று ஜனாதிபதியைச் சந்தித்தார்

vijaynambiar.jpg இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூனின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவைச் சந்தித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட விஜய் நம்பியார் நேற்று மாலையே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், வெளிவிவகார அமைச்சரையும் அவர் சந்தித்தார். பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் நிலைமைகள் மற்றும் வவுனியாவிலுள்ள முகாம்களிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் வெளியேற அனுமதிக்கப்படாமை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிடும் : விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgமக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார். கூட்டணி அமைக்க காலங்கடந்து பாஜக முயற்சித்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார். இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது :

அதிமுக கூட்டணிக்காக மற்றவர்களை காத்திருக்க வைத்துவிட்டு காலங்கடந்து கூட்டணி அமைக்க பாஜக பேச்சு நடத்தி வருகிறது. சரத்குமார் பாஜக கூட்டணிக்கு வருமாறு என்னை அழைத்தார். கூட்டணி குறித்து சரத்குமார், கார்த்திக், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பாஜகவுடன் சேர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்துடன் இணைந்துள்ளது. நான் என் பாதையில் தேர்தலை சந்திக்க உள்ளேன்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இன்னும் இரண்டு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்றார் டி. ராஜேந்தர்.

மருத்துவமனையிலும் தொடரும் சாகும்வரையிலான உண்ணாவிரதம்

ampala-vanar.jpgவன்னியில் உடனடிப் போர்நிறுத்தம் அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் புதன்கிழமை காவல்துறையினரால் பலாத்காரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் மருத்துவமனையிலும் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.