இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.
பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.
ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.
இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.
இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.
புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )
நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.