வர்த்தக பொருட்கள் மீதான வரி சட்ட மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தாது

sri-lanka-parliament.jpgஅரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விசேட வர்த்தக பொருட்கள் வரி சட்ட மூலமானது மேலும் ஒரு புதிய வரிவிதிப்பையோ பொருட்களின் மீதான புதிய விலையதிகரிப்பையோ ஏற்படுத்தாது என அரச வருமானத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதி இறக்குமதி திருத்தச் சட்டமூலமானது குறிப்பாக சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உள்ளூராட்சி சபை திருத்தச் சட்டமூலம், விசேட வர்த்தகப் பொருட்கள் வரி சட்டமூலம், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிணங்க உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோளம் மற்றும் ஏனைய விவசாய பொருட்களுக்கும் வரிவிதிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது ஆட்சிக் காலத்தில் மக்களிடமிருந்து அறவிடப்பட்ட வரியிலிருந்து தமக்கு வேண்டியவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கி அதற்கான வரிஅறவீட்டையும் மேற்கொள்ளாமல் சலுகை வழங்கினர்.

எமது அரசாங்கம் அத்தகைய நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதில் கவனம் செலுத்தியதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது குறிப்பாக சோளப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஒரு கிலோ சோளத்திற்கு 28.00 ரூபா விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சோளப் பயிர்ச் செய்கையாளர்களின் மேம்பாட்டைக் கருதி அதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இதன்படி எதிர்வரும் காலங்களில் ஒன்றரை இலட்சம் ஏக்கரில் சோளம் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *