04

04

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம்

obama.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் முக்கிய நிலையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சட்டம் 69 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

sri-lanka-parliment.jpgஇலங்கை மின்சார சட்டம் 69 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இச் சட்டத்திற்கு ஆதரவாக 109 வாக்குகளும், எதிராக 40 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சியினருடன் இணைந்து இ. தொ. கா., ம. ம. மு, ஜா. ஹெ. உ, தே. சு. மு. ஆகியன வாக்களித்தன.

இலங்கை மின்சார சட்டம் மீதான பாராளுமன்ற விவாதம் முடிவுற்றதும் ஜே. வி. பி. யின் அம்பாந்தோட்டை எம். பி. நிஹால் கலப்பதி இச் சட்டத்தை சபையில் நிறைவேற்றுவதற்கு பெயர் குறித்து வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகரைக் கோரினார். அதற்கு ஏற்ப வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இவ் வாக்கெடுப்பின் போது தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் எம். பிக்கள் சபையில் இருக்கவில்லை.இச் சட்டத்திற்கு எதிராக ஐ. தே. க. வும் ஜே. வி. பியும் வாக்களித்தன. இச் சட்டம் திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டன.

என் பார்வையில் Slumdog Millionaire : அஜீவன்

Ajeevanபடம் தொடங்கியதும் ஆரம்ப காட்சிகள் மனதை சற்று நெருடவே செய்தது. மும்பை சென்றவர்களுக்கு அந்த சிலம் மட்டுமல்ல மாடிகளில் தூங்கும் மக்கள், மற்றும் நடைபாதை வாழ்வோர் நிலவரமும் மனதை வதைக்கும். அருவருப்பைத் தரும்.

அதையே படத்தின் ஆரம்பமும் எனக்கு ஏற்படுத்தியது. அதன் உச்ச கட்டமாக பொந்து மலசல கூடமொன்றில் அகப்பட்டு தவிக்கும் குட்டி ஜமால் (நாயகன்) அப்பகுதிக்கு வரும் அமிதாபச்சனை பார்க்க அந்த மலசல குழிக்குள் விழும்போது தியெட்டரே சீ…. என அருவருக்கிறது. அந்த குட்டி ஜமால் அந்த மல சகதியில் மூழ்கி வந்து அமிதாபிடம் ஆட்டோகிராப் பெறுவது உண்மையில் சாத்தியமும் யதார்தமும் இல்லாவிட்டாலும் அவனது நம்பிக்கைக்கான வெற்றியாக மகிழ முடிகிறது. படத்தின் கரு நம்பிக்கைதான் வாழ்கை என்பதுதானே.

இரு சகோதரர்கள் (பட்டேல் + மிட்டால்) மற்றும் கதாநாயகி ( பின்டோ) குறித்த அறிமுகமாகவும் கோடிஸ்வரன் போட்டியோடு ஜமாலின் வாழ்வில் கடந்துபோன வேதனையான பகுதியாகவும் வந்து வந்து செல்லும்போது ஆரம்பத்திலேயே படம் தொய்வாயிடுமோ என எண்ணத் தோன்றினாலும் இறுதிவரை அந்த பெரலல் டெம்போதான் மலர் மாலைக்கு நார் போல படத்துக்கு உயிர் நாடியாகியிருக்கிறது.

குப்பத்திலும்- குப்பை மேட்டிலும் வாழும் குழந்தைகள் எப்படி பிச்சை எடுக்க வைக்கப்படுகிறார்கள். நல்ல குழந்தைகளை எப்படி ஊனமாக்கி மும்பை தாதாக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதிலிருந்து புதுவாழ்வு கிடைத்ததாக தாதாக்களை நம்பிச் செல்லும் குழந்தைகள் எப்படி வன்முறையாளர்களாகிறார்கள் என்பது வரை வசவச என இல்லாமல் பனியில் சறுகிச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு மனதை தளரவிடாமல் திரையிலேயே கண்ணை கட்டி வைக்கிறது.

கோடிஸ்வரன் நிகழ்சியை பார்த்திருப்பீர்கள்? இதன் பின்னணியில் நடப்பதை அனில் கபூர் செய்துள்ள விதம் திரைக்கு முன்னால் நடிப்போர் எல்லாம் திரைக்குப் பின்னால் எப்படியானவர்கள் என்பதை பலருக்கு அதிக பிரசங்கித்தனமில்லாமல் புரியவைக்கிறது.

கோடிஸ்வரன் போன்ற நிகழ்சியில், யார் வெல்வார்கள் என்று மக்கள் நாங்கள் தொலைக் காட்சிக்கு முன்னால் அங்கலாய்க்க யாரை வெல்ல வைப்பதென்பதை முடிவெடிப்போர் (ஏற்கனவே கூட) அதன் நடத்துனர்கள்தான்.

அப்படியான தடையையும் மீறி ஜமால் எப்படி பதில் சொல்கிறான் என அறிய அனில் கபூர் கதாநாயகனை போலீஸ் தாதாக்கள் கையில் கொடுத்து உதைத்து உண்மையை கறக்க வைக்கப் போக அதனூடகவே அவனது வாழ்கையை சொல்ல வைத்திருப்பது நல்லதொரு உத்தி.

சிறுவயதில் தொலைந்து போன காதலியை ஜமால் தேடுவதும், பின்னர் ஜமாலின் காதலியும், சகோதரனும் எதிர்பாராமல் கிடைத்தும் இணைய முடியாமல் போவதும் விதி என நினைக்க வைக்கிறது.

கோடீஸ்வரன் போட்டியில் இறுதிக் கேள்விக்கு விடைதெரியாத ஜமால் தன் சகோதரனின் உதவிக்காக தொலைபேசியில் தொடர்பு கொள்ள அங்கே தன் காதலியின் குரல் கேட்க கோடீஸ்வரன் போட்டியில் இருக்கும் ஜமால் அந்த போட்டியில் கிடைக்கும் மிலியன் என்ன தன் காதலிதான் மிலியன் என எழுந்து செல்வார் என நம்ம நாட்டு திரைப்பட முடிவை எதிர்பார்க்க அட போய்யா அந்த மிலினோட(பணம்) இந்த மிலியனையும் (காதலி) பெறணும் என ஐரோப்பிய கருத்தியல் கொண்ட நம்பிக்கையை உருவாக்கியிருக்கும். இயக்குனர் டெனிபொயிலின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதற்கு கிடைத்த விருதுகள் சான்று பகர்கின்றன.

ரஹ்மானின் பின்னணி இசையும், இசைக் கலவை செய்துள்ள இயன் – ரிச்சர்ட் – பூக்குட்டி ஆகியோரது திறனும் ஒளிப்பதிவாளர் அன்டனி டோட் மென்டலின் ஒளிப்பதிவும் மற்றும் அனைத்து தொழில் நுட்பங்களும் ஒரு பெக் அடிச்சுட்டு ஆழ்கடலில் நீந்துவது போன்ற உணர்வைத் தருகின்றன.

ஏதாவது ஒன்று நல்லாயிருக்கே என்றில்லாமல் எல்லாமே நல்லா வந்திருக்கு என்பதால், சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்ததில் எவருக்கும் வியப்பில்லை. எனவேதான் டைட்டல் பாடலான ஜெய்கோ போகும் போதும் கூட பார்வையாளர்கள் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள்.

படம் எப்படி என சிலரிடம் கேட்டேன். சுப்பர் என்றார்கள்.

சுப்பரா தாம்தூம் என ஆரம்பிச்சு கடைசியில சொதப்புற படங்கள் மத்தியில ஆரம்பத்தில் சீ என அருவருக்க வைத்து சுப்பரா முடிச்சிருப்பதால் ஆரம்ப சீ (மலசலகூட வாசம்) மறந்தே போயிடுது.

அதையும் கூட “அன்னைக்கு அருவருப்பா பார்த்த இடங்கள் இன்னைக்கு உலகத்தின் கண்கள் பார்க்கிற இடமா மாறியிருக்கு” என மும்பை பற்றிய ஒரு வசனத்தை வேற கதாபாத்திரமொன்றுக்கு பேசவைத்து இந்தியாவை காப்பாத்தியிருக்காங்க. குட் டக்டிக். குட் தோட்.

இதே மாதிரியான இந்தி படங்கள் பல ஏற்கனவே வந்திருக்கின்றன. குறிப்பா பரின்தா மற்றும் சலாம் பொம்பே ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றில் ஏதோ ஒன்று அதிகமானதா மேலோங்கியிருக்கும். அது சிலம்டோக் மிலியனரில் இல்லவே இல்லை. அதுதான் வெற்றிக்கு பெருவித்திட்டுள்ளது.

இது இந்திய படமா? ஆங்கில படமா? எனும் கேள்வியோடு பலர் முடியை பிச்சுக்கிட்டதை படிச்சேன்?

இது இந்தியாவின் கதையை ஆங்கிலேயரது பார்வையில் படைத்த ஒரு படம்.

நம்ம டேஸ்டுக்கும், அவங்க டேஸ்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த படத்தை பார்க்கும் அனைவரும் உணரலாம்.

நம்ம ஆக்களுக்கு விளங்கிற மாதிரி சொன்னா – ஊர் வைத்தியர் கையில கிடைச்ச ஏதாவது பாட்டில்ல ஊத்திக் கொடுக்கிற மூலிகை தைலத்துக்கும், அதே தைலத்தை பாட்டில்ல அடைச்சு லேபல் ஒட்டி விளம்பரப்படுத்தி அதில் எண்ண அடக்கம், அதன் பலாபலன் என நாகரீகமா ஆயுர்வேதா ஆயில் என விக்கிற வெள்ளையனுக்கும் உள்ள வித்தியாசமா பார்க்கலாம்.?

பாக். பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே வீரர்களை அனுப்பத் தீர்மானித்தோம்

pak-2nd-test.jpg பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சபையில் கிரிக்கெட் அணியினர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் காமினி லொக்குகே விளக்கமளித்தார்.

இலங்கை வீரர்களின் நிலைகுறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், அநுரகுமார திசாநாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபை முதல்வரிடம் இது தொடர்பாக விளக்கம் கோரினர். இதன்போது சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறுக்கிட்டு, பாகிஸ்தானில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சபையிலிருந்து பிரதமர் வெளியில் சென்றுள்ளார்.

அவர் வந்ததும் முழுமையான விபரங்களைத் தெரிவிக்க முடியும் என்றார். இதனையடுத்து சற்று தாமதமாக சபைக்குள் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, லாகூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு விவகாரம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுக்காலை 9.15 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எமது வீரர்கள் விளையாடுவதற்காக மைதானத்திற்குள் பிரவேசித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றல்ல. பாகிஸ்தான் அரசாங்கம் எமது வீரர்களுக்கான பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே நாம் எமது வீரர்களை அங்கு விளையாட அனுப்பத் தீர்மானித்தோம்.மேற்படி சம்பவம் பற்றி நாம் கேள்விப்பட்ட உடனேயே வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தானுடன் கலந்துரையாடினோம். அதனையடுத்து எமது வீரர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. பல தடவைகள் பல நாடுகளில் இதுபோன்று புலிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதில் குறிப்பிடத்தக்கது. எனினும் எமது வீரர்கள் தயங்காது தமது விளையாட்டுக்களை தொடர்ந்தனர்.

இம்முறை பாகிஸ்தானின் உறுதிமொழியை நாம் நம்பினோம். அத்துடன் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இலங்கைக்கு ஏனைய சர்வதேச அணிகள் விளையாடவர பின்வாங்கியபோது பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளே எமக்குக் கை கொடுத்தன. அந்த உதவிக்குப் பிரதியுபகாரமாகவே இம்முறை பாகிஸ்தானுடன் விளையாட நாம் முன்வந்தோமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, குறுக்கிட்ட அநுரகுமார திசாநாயக்க எம்.பி பாகிஸ்தானுடன் இம்முறை இணைந்து விளையாடவிருந்த அவுஸ்திரேலிய அணி பாதுகாப்புக் காரணங்களுக்காக அத்தீர்மானத்தை மாற்றிக்கொண்டது. இத்தகைய சூழலில் பாதுகாப்பில்லை என்ற நிலையிலும் எமது அணியை அங்கு அனுப்ப முற்பட்டதேன்? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் காமினி லொக்குகே பாகிஸ்தானின் உறுதிமொழியில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோம் என்றார்.