பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சபையில் கிரிக்கெட் அணியினர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் காமினி லொக்குகே விளக்கமளித்தார்.
இலங்கை வீரர்களின் நிலைகுறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், அநுரகுமார திசாநாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபை முதல்வரிடம் இது தொடர்பாக விளக்கம் கோரினர். இதன்போது சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறுக்கிட்டு, பாகிஸ்தானில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சபையிலிருந்து பிரதமர் வெளியில் சென்றுள்ளார்.
அவர் வந்ததும் முழுமையான விபரங்களைத் தெரிவிக்க முடியும் என்றார். இதனையடுத்து சற்று தாமதமாக சபைக்குள் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, லாகூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு விவகாரம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுக்காலை 9.15 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எமது வீரர்கள் விளையாடுவதற்காக மைதானத்திற்குள் பிரவேசித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றல்ல. பாகிஸ்தான் அரசாங்கம் எமது வீரர்களுக்கான பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே நாம் எமது வீரர்களை அங்கு விளையாட அனுப்பத் தீர்மானித்தோம்.மேற்படி சம்பவம் பற்றி நாம் கேள்விப்பட்ட உடனேயே வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தானுடன் கலந்துரையாடினோம். அதனையடுத்து எமது வீரர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. பல தடவைகள் பல நாடுகளில் இதுபோன்று புலிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதில் குறிப்பிடத்தக்கது. எனினும் எமது வீரர்கள் தயங்காது தமது விளையாட்டுக்களை தொடர்ந்தனர்.
இம்முறை பாகிஸ்தானின் உறுதிமொழியை நாம் நம்பினோம். அத்துடன் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இலங்கைக்கு ஏனைய சர்வதேச அணிகள் விளையாடவர பின்வாங்கியபோது பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளே எமக்குக் கை கொடுத்தன. அந்த உதவிக்குப் பிரதியுபகாரமாகவே இம்முறை பாகிஸ்தானுடன் விளையாட நாம் முன்வந்தோமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, குறுக்கிட்ட அநுரகுமார திசாநாயக்க எம்.பி பாகிஸ்தானுடன் இம்முறை இணைந்து விளையாடவிருந்த அவுஸ்திரேலிய அணி பாதுகாப்புக் காரணங்களுக்காக அத்தீர்மானத்தை மாற்றிக்கொண்டது. இத்தகைய சூழலில் பாதுகாப்பில்லை என்ற நிலையிலும் எமது அணியை அங்கு அனுப்ப முற்பட்டதேன்? எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் காமினி லொக்குகே பாகிஸ்தானின் உறுதிமொழியில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோம் என்றார்.