உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட – ஒடுக்கப்படுகின்ற பெண்களை மையப்படுத்தி வருடா வருடம் பங்குனி 8ல் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் மகளிர் பேரணிகள், எழுச்சிக் கூட்டங்கள், விடுதலை சுலோகங்கள், அறைகூவல்கள். அதேநேரம் எமது நாட்டில் இன்று நிமிடத்திற்கு நிமிடம் குண்டுமழையில் மரணித்துக் கொண்டும், வாழ்வாதாரங்கள் எதுவுமே அற்றும், நிர்க்கதியாக அல்லல்பட்டு அலைந்து திரியும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர் உட்பட்ட சமூகம், இன்று இனச்சுத்திகரிப்பிற்கு பலியாகி வருவது சர்வதேசமே அறிந்த விடயமாகும்.
யுத்த சூழலில் சிக்குண்ட பெண்கள், குழந்தைகளின் நிலையும் மிக மோசமானதாக உள்ளது. பொதுவாக ஒரு சமூகத்தின் பெண் விடுதலையானது, இரட்டைச் சுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதாக உள்ளது. நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொள்வதுமாக அவளுடைய போராட்டம் தொடர வேண்டி இருக்கையில் யுத்த சூழலின் மத்தியில் வாழும் நாடுகளில் பெண்ககள் 3வது சுமையையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக வாழ்வியல் பிரச்சனை என்பது மறுதலையாக ‘பிரச்சனைகளும் – சுமைகளுமே வாழ்வியலாக” மாறிவிட்டது.
இந்த 3வது சுமைகளாக:
1)போர்ச்சூழலில் அல்லது வன்முறைக் கலாச்சாரத்தில் வாழும் சமூகத்தில் – கணவனையோ, அன்றி தந்தையையோ அன்றி சகோதரனையோ இழக்கும் பெண்கள் தனிமரமாக நின்று பொருளாதார நிலையுட்பட்ட அத்தனை குடும்பச் சுமைகளையும் அக்குடும்ப உறுப்பினர்களையும் தானே சுமக்க வேண்டி உட்படுகின்றாள்.
2)பயங்கரவாத சட்டங்கள் அல்லது போர்ச்சூழலால் கைதாக்கப்படும், அல்லது காணாமல் போகும் ஆண் உறவுமுறைகளை தேடியோ, அலைந்தோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தோ அன்றி சட்ட அலுவல்கள் மேற்கொண்டோ சிறிய கிராமங்களிருந்து கூட புறப்பட்டு பெருநகரங்கள் வரை வந்து நீதிக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள், அல்லது தேடி அலைகின்றாள்.
3)சமூகத்தில – கைதாகுதல், காணாமல் போதல், அடையாளம் தெரியாத படுகொலை என்ற பயநிலைப்பாடுகளால் ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் கூட, பெண்கள் சராசரி சுமைகளுடன் வாழ்வியல் ஆதாரமாக எல்லாவற்றிற்குமான குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.
4)தத்தமது குடும்பங்களின் அடிமட்ட வாழ்நிலைக்கோ, அன்றி பொருளாதார மேம்பாட்டிற்கோ மேற்குறிப்பிட்ட அத்தனை சுமைகளுக்கும் அப்பாலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்தோ அன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அந்நிய நாடுகளுக்கு அலைந்தோ உழைக்க வேண்டியுள்ளது.
5)மேலும் இந்த வன்முறைக் கலாச்சாரம், மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டதால் மனித வெடிகுண்டுகளாக சில பெண்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து வயதுப் பெண்களும் கூட பாதுகாப்புநிலை, பரிசோதனை என பல சொல்லோணாத் துனபத்திற்கு ஆளாகின்றாள். இவற்றினூடாக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கூட சட்டங்களால் நியாயப்படுத்தப்பட்டவைகளாகத் தான் கணிக்கப்படுகின்றன.
இப்படியாக போர்ச் சூழலில் வாழும் எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, தமது வயதிற்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மீறிய சுமைகளாக இந்த 3வது சுமை பல வடிவங்களில் பெண்களை மேலும் மேலும் சுமை தாங்கிகளாகத்தான் அழுத்துகின்றன.
இதனூடாக, பல கிராமத்து பெண்கள் உட்பட, வீடே உலகமென – இந்த இரட்டைச் சுமை வாழ்வே தமது தலைவிதியென்று வாழ்ந்து வந்த பெண்கள் இந்த 3வது சுமையை ஏற்க நேரிடும்போது குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும், சமூகக் காரணிகளிலும் தானாகவே முன்வந்து தலைமைப் பொறுப்புக்களை பலவிதத்திலும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்.
‘பல தீமைகளிலும் ஒரு நன்மை” என்பது போல் இந்தப் பலவகை தலைமைப் பண்புகளால் ஒவ்வொரு பெண்ணின் அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆளுமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுமை தொடர்ந்தும் சமூகத்தில் பெண்கள் மீதான பலவித அழுத்தங்களையும், சுமைகளையும் இழப்புக்களையும் மொத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றது.
மேலும், உலகப் புரட்சிகள் உட்பட்ட அனைத்து உலகில் நடக்கும் யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், நாடு பிடிப்புக்கள் அனைத்திலும், காலத்திற்கு காலம் அதிகார வர்க்கங்களாலும் அதுசார்ந்த ராணுவத்தாலும், ஆக்கிரமிப்பாளார்களாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீதோ அன்றி, கைப்பற்றப்படும் பிரதேசங்களிலோ, அன்றி ராணுவ மற்றும் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படுபவர்களில் மிக காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. விசாரணை என்ற பெயரிலோ, மிரட்டல் என்ற வடிவத்திலோ, ஆக்கிரமிப்பு தோரணையிலோ மிக அவமானப்படுத்தப்பட்டு ஒரு பெண் துன்புறுத்தப்படுவது இந்த பாலியல் வன்முறையால்தான்.
ஒரு ஆணிற்கு நடைபெறும் உடல் சார்ந்த சித்திரவதைகள், துன்புறுத்தலைவிட ஒரு பெண்ணிற்கு நடக்கும் உடல் சார்ந்த இந்த பலாத்காரம் என்பது காலாதிகாலத்திற்கும் அப் பெண்ணின் உடல் மனநிலை சார்ந்த பெரும் கொடுமை என்பதை ஒரு பெண்ணாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்.
அன்றிலிருந்து இன்றுவரை – இந்நிமிடம் வரை உலகம் நாகரீக வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தாலும் இந்த பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் என்று வரும்போது பெண்களுக்கெதிரான இந்தக் கொடுமை ஒரே வடிவமைப்பில்தான் நடக்கின்றது.
இயற்கையில் ஒரு பெண்ணாணவள், உடலியல் ரீதியாக உயிரியல் படைப்பின் கருவறையை கொணடவள். இவள் ஒரு சமுதாயத்தின் சங்கிலித்தொடர். ஆனால் இந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வல்லுறவுக் கொடுமையென்பது, அவளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் அவலமாகும். எனவே இப்படியான கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டுவர உடலாலும், மனதாலும் விசேடமாக எம் சமூக அமைப்பாலும் எவ்வளவோ துன்பங்களை கடக்க வேண்டியுள்ளது.
எனவே இந்த சர்வதேச மகளீர் தினநாளில் – உலகில் பல்வேறு நாடுகளில் பலவித பெண் விடுதலைக் கோசங்கள் வைக்கப்பட்டாலும் எம்மவரின் யுத்த பூமியில் அல்லல்படுதலும், அலைந்துதிரிதலும், மரணத்துள் வாழ்வுமாக குண்டுமழையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் எந்த பெண் விடுதலைக் கோசங்களை வைக்க முடியும்.
அடிப்படை வாழ்வியல் உரிமையே அற்றுப் போகும் நிலையில் எந்தெந்த உரிமைகளை நோக்கி சிந்திப்பது? யுத்தத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட எம்மவர் இதுவரை யுத்தத்தில் இழந்த உயிர்களைப் பற்றி சிந்திப்பதா? தமக்கு நடக்கும் உடல், உள ஊனங்கள், தனிமைகள், சுமைகள் விரக்திகள் பற்றி சிந்திப்பதா? தத்தமது உயிர்நிலைகளின் நிரந்தரமற்ற தன்மையை பற்றி சிந்திப்பதா? மொத்த்தில், யுத்தத்தின் வாழ்வு கூடட, பெண்ணை மேலும் மேலும் பாதிக்கப்பட்டவளாக, சுமை தாங்கியாக இருப்பு நிலைகளுக்காகவே அகதி முகாம்களில் எல்லாவற்றிற்கும் கையேந்துபவளாக, பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகளுக்குக்கூட வரிசையில் நின்று தமது திகதிகளை அறைகூறுபவளாக இப்படி எத்தனை விதத்தில் பெண் அங்கு துன்பப்படுகின்றாள்.
மரணத்து வாழ்விலும் பெண்களுக்கேயுரிய உடலியல் மாற்றங்கள் அசௌகரியங்கள்! எத்தனை கர்ப்பிணித் தாய்மாரின் அவசரமான – அவலமான பிரசவங்கள்! அந்த பச்சிலம் பாலகர்கள் யுத்த பூமிக்குள்ளும், தற்காலிக – நிரந்தரமான அகதிக் கொட்டகைகுள்ளுமாக புதிய வரவுகள். இதற்குப் பாலூட்ட இரத்தமே இல்லாத தாய்மார்கள்! எத்தனை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட அரை வயிறு கால் வயிறுடன் பட்டினியான நாட்கள், நலிவுற்ற வயதான ஊனமுற்ற வயோதிபர்! இப்படி எத்தனை எத்தனை அவலங்கள்!
ஓரளவு மனித உரிமையுள்ள, ஓரளவு ஜனநாயகம் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தான் பெண்விடுதலை கோசங்களிற்கு இடமுண்டு ‘ஆனால் எம் இருப்பே எமக்கில்லை” என்ற பிற்பாடு, நாம் எதை ஆதாரமாக்கி – எவற்றை கோசமாக்குவது?
எனவே மொத்தத்தில், சர்வதேச மகளீர் தின கோசங்களாக எதை நாம் முன்னெடுப்பது?
இரு மருங்கிலும் உடன் யுத்தத்தை நிறுத்து!
உடன் சமாதானத்தை விரைவுபடுத்து!
பாதுகாப்பு பிரதேசங்களை விஸ்தரி!
நியாயமான சர்வதேச மத்தியஸ்தத்துடன் எம்மவர்களின் உரிமைகளும், இறைமைகளும் மீளப்பெறப்படல்!
இப்படியான கோசங்களும், அதன் நகர்வுகளும், அதனூடான வேலைத்திட்டங்களுமே அடிப்படை வாழ்வியலை மீட்டுத்தரும். அதனூடே எம்மகளிரின் விடுதலையையும் முன்னெடுக்க முடியும். ஏனெனில் வன்முறைக் கலாச்சாரத்தால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைகள் மறுசீரமைக்கப்படுவதுடன் இணைத்தே எம்மகளீரின் விடுதலையையும் பல தரத்திலும் முன்னெடுக்க முடியும்.