முல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் பட்டினியினால் பலர் இறந்துள்ளார்களென முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) டொக்டர் வரதராஜா தெரிவித்த கருத்துக்கள் எந்த வகையான விஞ்ஞான ரீதியான அடிப்டையுமற்றதென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எச். ஏ. பி. கஹந்தலினகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டொக்டர் வரதராஜனால் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சில தினங்களாக பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மரணித்துள்ளனர். இவர்களின் சடலங்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வரதராஜாவுடன் தொடர்பு கொண்டு (04/03/2009) வினவினேன். பட்டினிச்சாவு குறித்துதான் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதியதாக டொக்டர் வரதராஜா ஒப்புக்கொண்டார்.மேற்படி மரணங்கள் எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படையுமற்றதென ஒப்புக்கொண்ட டொக்டர் வரதராஜா, சடலங்களின் பெளதிக ரீதியான தோற்றத்தின் அடிப்படையிலேயேதான் அந்த முடிவை அறிவித்ததாகவும் ஏற்றுக்கொண்டார்.
எந்தவித உயிரியல் ரீதியான (Autopsy) பரிசோதனையும் இல்லாமல் டொக்டர் வரதராஜா எழுந்தமானமாக அறிக்கை விட்டிருக்கிறாரென்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.
புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளை அரசாங்கம் போதியளவு அனுப்பி வருகிறதென்பனை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நோய்வாய்ப்படுபவர்கள் எவ்வித தாமதமும் இன்றி திருமலைக்கும் வவுனியாவுக்கும் அனுப்பபட்டு வருகிறார்கள்.
எனவே, டொக்டர் வரதராஜனால் வெளியிடப்பட்ட கடிதமும், அது தொடர்பான கருத்துக்களும் புலிகளின் அழுத்தங்களினால் செய்யப்பட்டவையாக இருக்கலாம். இது அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஐ.சி.ஆர்.சிக்கும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதற்கான திட்டமிட்ட செயலாகக் கருதவேண்டியுள்ளது.
எப்படியென்றாலும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டொக்டர் எச். ஏ. பி.காஹந்தலியனகே தெரிவித்துள்ளார்.