March

March

மழை தொடர்கிறது மின்வெட்டு அபாயம் தணிவு

flod-15.jpgநீரேந்து பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து மின்வெட்டு அபாயம் தணிந்துள்ளதாக மின்சார சபை நேற்று தெரிவித்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்த வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீரேந்து பகுதிகளில் மழை பெய்து வருவதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் மின்சார சபை கூறியது. இதன் காரணமாக மின்வெட்டு அபாயம் பெருமளவு தணிந்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சார சபை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை இடியுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் வடக்கு, கிழக்கு நீரேந்து பகுதிகள் மட்டுமன்றி நாட்டின் சகல பாகங்களிலும் மழை வீழ்ச்சியை எதிர்பார் ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. மழைக்கு முன்பாக கடும் காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் அவதான நிலையம் தெரிவித்தது. இம்மாத இறுதிவரை மழை வீழ்ச்சி தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் 1166 சாவடிகளை நிறுவ திணைக்களம் தீர்மானம்

election_ballot_.jpgமேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி மேலதிகமாக 1166 வாக்குச்சாவடிகளை நிறுவ தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணுவதற்கு தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளதையடுத்தே வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்திற்குமான வாக்காளர் தொகை 1500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 2459 வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை 3625 ஆக உயர்த்தப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

பரீட்சார்த்தமாகவே வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணும் பணிகளை மேற்கொள்ள தேர்தல் திணைக்களம் முடிவு செய்ததாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமனசிறி கூறினார்.

இதேவேளை வாக்குச் சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருவதாகவும் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் திணைக்களத்துடன் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையாளர் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு படகுகளை கண்காணிக்க ‘ராடர்’ அமைச்சரவை அனுமதி

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டுப் படகுகளை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து ராடர் ஒன்றை தருவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு நேற்று கூறியது.

ராடர் கொள்வனவு செய்வது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் பேசி வருவதாகவும் கூடிய விரைவில் ராடரை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இலங்கையில் இருந்து 50 கிலோ மீட்டர் வரையான கடற்பரப்புக்குள் வரும் படகுகள் மற்றும் கப்பல்களை அவதானிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது. ராடர் பொருத்தப்படுவதினூடாக இலங்கை மீனவர்களும் நன்மையடைய உள்ளனர்.

பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சக் கட்டம் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வீட்டுக்காவலில்; தடைகளையும் தாண்டி ஊர்வலம்.

n8_2.jpgபாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கும் இந்த நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும், முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீபும், நவாஸ் ஷெரீபின் மகனும் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு வீட்டுக் காவலில் வைப்பதற்கு பொலிஸார் பிடியாணை பெற்றுள்ளனர்.

தமது ஆட்சிக் காலத்தில் பதவியிலிருந்த உச்ச நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும், பஞ்சாப் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை இரத்துச் செய்துவிட்டு மீண்டும் தமது சகோதரரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியினர் இன்று 16ம் திகதி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானின் தெரீக் இன்ஸாப் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நவாஸ் ஷெரீப் கட்சியினர் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.  இதற்கு இம்ரான்கான் கட்சியினரும், நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் செய்யத் யூஸ¤ப் ராஸா கிலானி இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஜனாதிபதிக்கு 24 மணி நேர அவகாசம் வழங்கினார். அந்நாட்டு இராணுவ தளபதி கியானியும் இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியைக் கோரினார்.

இதேநேரம் இந்நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் கூட்டாக சமரசத் திட்டமொன்றை முன்வைத்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கிலாரி கிளிங்டன் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியுடனும், நவாஸ் ஷெரீபுடனும் தொலைபேசி ஊடாகத் தனித் தனியாகத் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாகிஸ்தான் ஜனாதிபதியையும் நவாஸ் ஷெரீபையும் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி சர்தாரி, நவாஸ் ஷெரீப் கட்சியினரின் போராட்டத்திற்குத் தடை விதித்த தோடு, போராட்டத்தையும், ஊர்வலத்தையும் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்திற்கும், பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டுள்ளனர். நேற்று நண்பகல் வரையும் 1200 தொண்டர்களும் 30 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகளும் கைது செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையும் மீறி நவாஸ் ஷெரீப் கட்சி ஆதரவாளர்களும், தொண்டர்களும், சட்டத்தரணிகளும் பல்வேறு நகரங்களிலிருந்து இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளனர். நவாஸ் ஷெரீபின் சகோதரர் தனது ஆதரவாளர்களுடன் ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளார். இம்ரான்கானும் ஏற்கனவே இஸ்லாமாபாத் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்.

இதேநேரம் நவாஸ் ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத் நோக்கி லாஹரிலிருந்து நேற்று ஊர்வலமாகச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் நவாஸ் ஷெரீபை இராணுவத்தினரும், அவரது சகோதரரையும், மகனையும், இம்ரான்கானையும் பொலிஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் சட்டத்தரணிகளும் பல்வேறு நகர்களிலிருந்தும் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லுவதாகவும் அவர்கள் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் இஸ்லாமாபாத் நகருக்குள் எவருமே நுழைய முடியாதபடி சகல வீதிகளிலும் கொள்கலன்கள் குறுக்காக நிறுத்தப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. அவற்றையும் மீறி அனேநகர் நகருக்குள் நுழைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாராளுமன்றத்திற்கு அருகே எவரும் வர முடியாதபடி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருப்பதோடு அங்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

varsa.jpg
திருகோணலையில் 6 வயது சிறுமியை கப்பத்திற்காக கடத்திச்சென்று கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று நண்பகல் 12.05 அளவில் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.
 
பின்னர் இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு பின்னர் அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது. இந்தநிலையில் 10 இலட்சம் ரூபாவை கொடுத்து சிறுமியை மீட்க தாய் தயாரான போது சிறுமி கொலை செய்யப்பட்டார்
 
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் 25 வயதான ரினவுட் என்பவரை இன்று பொலிஸார் வைத்திய பரிசோதனைக்குட்படுத்த அழைத்து சென்ற போது அவர் தமது கைவிலங்கினால்,காவலுக்கு வந்த பொலிஸ்காரரின் கழுத்தை நெரித்துள்ளார். இதன் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேக நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரால் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்படும் பொலிஸ்காரர் திருகோணமலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சிறுமியின் கொலை தொடர்பான வைத்திய பரிசோதனையின் பின் வர்ஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக  பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். சிறுமியின் உடலத்தை கண்டெடுத்த போது அவரது வாய்க்குள் துணிகள் திணிக்கப்பட்டு பிளாஸ்டரால் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை தொடர்பான  முக்கிய சந்தேக நபர், கணனி பயிற்சியாளரும் சிகரம் இணைய வானொலி நடத்துனர் என்பதும் தெரிய வந்த பின்னர் அந்நபரிடமிருந்து சிகரம் பணிப்பாளர் என அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிகரம் இணைய வானொலி மூலம் சிறுவர்களது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளதாகவும், திருகோணமலை சிவன் கோவில் அருகாமையிலேயே இவரது இணைய வானொலி சேவை செயற்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது வானொலியை விரிவுபடுத்துவதற்காகவே தாம் குழந்தையைக் கடத்தி கப்பம் கேட்டதாக அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்படவர்களில் மற்றுமொரு இளைஞர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பெண் பொலிஸ்காரர் ஒருவரின் மகன் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

ஐ.நா.வின் திட்டம் தமிழர்களை வலிந்து சரணடையவைக்கும் யுக்தியே: கஜேந்திரன்

gajenthiran.jpgஇலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசு முகாம்களுக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் திட்டம், கொழும்பின் கொலைகார கரத்திற்கு கையளிக்கவே உதவும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார். முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தி்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடக்கும் பகுதியில் மிகப் பெரிய மனித அவலம் தொடர்கிறது என்று கூறியுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசும் அங்கு தாக்குதல் நிறுத்தம் செய்து அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. .

ஐ.நா.மனித உரிமை ஆணையரின் இந்த கோரிக்கை, தமிழர்களை இனப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசிற்கு உதவுவதாகவே அமையும் என்று கூறியுள்ளார் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், போர் பகுதியில் இருந்து கடல் வழியாகவோ அல்லது நில வழியாகவோ வெளியேற்றும் மக்களை எங்கே கொண்டு செல்வார்கள் என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் குறிப்பிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

போர் நடக்கும் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறிய மக்களை சிறிலங்கா அரசு முட்கம்பி வேலி போட்ட முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. அதேபோன்று போர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்களையும் அப்படிப்பட்ட முகாம்களுக்கு கொண்டு சென்று அடைப்பது அவர்களை சிறிலங்கா அரசிடம் பலவந்தமாக சரணடையச் செய்வதாகும் என்றும், அது ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் கொழும்பின் திட்டத்திற்கு உதவுவதாகவே ஆகும் என்று கூறியுள்ளார்.

போர் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறிய, வெளியேற்றப்பட்ட மக்களை இப்படிப்பட்ட முகாம்களில் அடைத்து வைத்து சிறிலங்கா இராணுவம் சித்திரவதை செய்து வருவதை கண்டுகொள்ளாமல் ஐ.நா. மனித உரிமை ஆணையம் எங்கே சென்றிருந்தது என்றும் கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“போர் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் சம்மதமின்றி, அவர்களை வலிந்து வெளியேற்றுவது, சில சுய நல அரசுகளின் விருப்பத்தி்ன்படி, சிறிலங்கா இனவெறி அரசிற்கு உதவும் ஒரு நடவடிக்கையாகும்” என்று கூறியுள்ள கஜேந்திரன், “ஐ.நா.வும் அதன் மனித உரிமை அமைப்பும் ஈழத்தில் வாழும் அப்பாவி மக்கள் மீது யார் போர் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதையும், யார் போர் குற்றவாளிகள் என்பதையும் நடுநிலையுடன் நின்று நியாயத்தை கூறிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“இலங்கைத் தீவில் நிலவும் அவலத்தை துடைக்க எந்தப் பொறுப்பும் ஏற்காத, போர் பகுதியில் இயங்கி வந்த தனது துணை அமைப்புகளை திரும்பப் பெற்றுக்கொண்ட ஐ.நா. அமைப்பிற்கு, அப்பாவி மக்களை காப்பதற்காக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு எந்த அருகதையும் இல்லை” என்று கூறியுள்ள கஜேந்திரன், ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவையில் விவாதிப்பதில் கூட எப்படிப்பட்ட வஞ்சக வேலைகள் எல்லாம் நடந்து வருகின்றன என்பதை கடந்த சில வாரங்களாகவே கண்ணுற்றுத்தான் வருகிறோம் என்று கூறியுள்ளார் என அந்த இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. .

நவநீதம்பிள்ளைக்கு புலிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒருபோதும் நம்பவில்லை – வெளிவிவகார செயலாளர் கோஹண

Dr Kohonaமனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக அரசாங்கம் ஒருபோதும் நம்பவில்லையெனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண புலிகளுக்கு ஆதரவான சக்திகள் அவரைத் தவறாக வழிநடத்த முற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே வெளிவிவகார செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா.ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனீவா தலைமையகத்திலிருந்து விடுத்திருக்கும் அறிக்கையானது,ஒரு தலைப்பட்சமானதாகவே நோக்கப்படவேண்டியதாகும். ஒரு தரப்பினரின் தகவலை மையமாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் அவர் இலங்கை அரசுடனோ, அல்லது ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியிடமோ கலந்துரையாடியிருக்கலாம்.அவர் அப்படிச் செய்யாமல் பக்கச்சார்பான விதத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதனை வைத்துக்கொண்டு நாம் அவரை புலிகளுக்குச் சார்பானவரென்றோ, புலிகளுடன் தொடர்புள்ளவரென்றோ கூறமுட்படமாட்டோம். புலிகளுடன் தொடர்புடையவர்களும் புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் நவநீதம் பிள்ளையை தவறாக வழிநடத்தியிருப்பதாகவே நோக்குகின்றோம்.

இதன் மூலம் தனது பதவிக்கும், ஐ.நா. மனித உரிமைகள் செலயகத்துக்கும் அபகீர்த்தியை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் எனவும் கலாநிதி பாலித கோஹண தெரிவித்தார்.

437 வன்னி நோயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

vanni-injured.gifமுல்லைத் தீவிலிருந்து ஒரு வார காலத்தின் பின்பு யுத்தத்தில் காயமடைந்தவர்கள்,நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கலாக 10 வது தொகுதியினர் நேற்று சனிக்கிழமை இரவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படடனர்.

18 சிறுவர்கள் உட்பட 437 பேர் இந்த தடவை அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் முல்லைத்தீவிலிருந்து இப்படி அழைத்து வரப்படும் நோயாளர்களை திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் நேரடியாக புல்மோட்டை மற்றும் பதவியா தள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பது என சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தாலும், பதவியா வைத்தியசாலை புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாகவே 10 வது தொகுதியினர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

காலநிலை மாற்றம் மழை தொடரும்

flod-wanni.jpgபருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைநேரங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுமென்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எல்.ஆர்.ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நேற்று முன்தினம் பெய்த மழையை அடுத்து குருபகனே மந்தபுர பகுதியில் கடும் காற்று வீசியதன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த காற்றினால் குருநாகல் மெதிபுர பிரதேச செயலகப் பிரிவில் பண்டுகஸ்துவ, மங்குலாகம, ஷெனிகெதர ஆகிய பகுதிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி -இதுவரை மூவர் கைது

trnco.jpgகடத்தப் பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட 6 வயது மாணவி வர்ஷா யூட் ரெஜியின் இறுதிக்கிரியைகள் எப்போது நடத்தப்படும் என்பது நேற்று சனிக்கிழமை மாலைவரை தீர்மானிக்கப்படவில்லை. சிறுமியின் தந்தை ரெஜி, கட்டாரில் தொழில் செய்கிறார். அவர் நாடுதிரும்புவதைப் பொறுத்து இறுதிக்கிரியை தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சிறுமி படித்துவந்த திருகோணமலை சென். மேரிஸ் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள், அதிபர் அருட் சகோதரி எம்.பவளராணி தலைமையில், சிறுமியின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பாலையூற்றுபூம்புகார் இல்லத்திற்குச் சென்று நேற்று சனிக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையில், இக் கடத்தல், கொலைச் சம்பவம் தொடர்பாக திருகோணமலைப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.