ஐ.நா.வின் திட்டம் தமிழர்களை வலிந்து சரணடையவைக்கும் யுக்தியே: கஜேந்திரன்

gajenthiran.jpgஇலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசு முகாம்களுக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் திட்டம், கொழும்பின் கொலைகார கரத்திற்கு கையளிக்கவே உதவும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கூறியுள்ளார். முல்லைத் தீவுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தி்ற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடக்கும் பகுதியில் மிகப் பெரிய மனித அவலம் தொடர்கிறது என்று கூறியுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசும் அங்கு தாக்குதல் நிறுத்தம் செய்து அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. .

ஐ.நா.மனித உரிமை ஆணையரின் இந்த கோரிக்கை, தமிழர்களை இனப் படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசிற்கு உதவுவதாகவே அமையும் என்று கூறியுள்ளார் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், போர் பகுதியில் இருந்து கடல் வழியாகவோ அல்லது நில வழியாகவோ வெளியேற்றும் மக்களை எங்கே கொண்டு செல்வார்கள் என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் குறிப்பிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

போர் நடக்கும் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறிய மக்களை சிறிலங்கா அரசு முட்கம்பி வேலி போட்ட முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. அதேபோன்று போர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்களையும் அப்படிப்பட்ட முகாம்களுக்கு கொண்டு சென்று அடைப்பது அவர்களை சிறிலங்கா அரசிடம் பலவந்தமாக சரணடையச் செய்வதாகும் என்றும், அது ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் கொழும்பின் திட்டத்திற்கு உதவுவதாகவே ஆகும் என்று கூறியுள்ளார்.

போர் பகுதியில் இருந்து இதுவரை வெளியேறிய, வெளியேற்றப்பட்ட மக்களை இப்படிப்பட்ட முகாம்களில் அடைத்து வைத்து சிறிலங்கா இராணுவம் சித்திரவதை செய்து வருவதை கண்டுகொள்ளாமல் ஐ.நா. மனித உரிமை ஆணையம் எங்கே சென்றிருந்தது என்றும் கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“போர் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் சம்மதமின்றி, அவர்களை வலிந்து வெளியேற்றுவது, சில சுய நல அரசுகளின் விருப்பத்தி்ன்படி, சிறிலங்கா இனவெறி அரசிற்கு உதவும் ஒரு நடவடிக்கையாகும்” என்று கூறியுள்ள கஜேந்திரன், “ஐ.நா.வும் அதன் மனித உரிமை அமைப்பும் ஈழத்தில் வாழும் அப்பாவி மக்கள் மீது யார் போர் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதையும், யார் போர் குற்றவாளிகள் என்பதையும் நடுநிலையுடன் நின்று நியாயத்தை கூறிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“இலங்கைத் தீவில் நிலவும் அவலத்தை துடைக்க எந்தப் பொறுப்பும் ஏற்காத, போர் பகுதியில் இயங்கி வந்த தனது துணை அமைப்புகளை திரும்பப் பெற்றுக்கொண்ட ஐ.நா. அமைப்பிற்கு, அப்பாவி மக்களை காப்பதற்காக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு எந்த அருகதையும் இல்லை” என்று கூறியுள்ள கஜேந்திரன், ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவையில் விவாதிப்பதில் கூட எப்படிப்பட்ட வஞ்சக வேலைகள் எல்லாம் நடந்து வருகின்றன என்பதை கடந்த சில வாரங்களாகவே கண்ணுற்றுத்தான் வருகிறோம் என்று கூறியுள்ளார் என அந்த இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • thurai
    thurai

    புலிகளோ ஈழத்தமிழரின் அரசியல் தலைவர்களையும், புத்திஜீவிகளையும் அழித்துவிட்டார்கள். நீங்களோ புலியின் கூண்டுக்குள் வளர்ந்த கூண்டுக்கிளிகள்.

    உங்கள் அறிக்கைகளின் மூலம் வன்னியின் அழிவுகளையும் தடுக்கமுடியாது புலிகளையும் பாதுகாக்க முடியாது. உங்களின் உறவினர்கள் கூடுதலாக வாழும் புலம்பெயர் நாடொன்றில் அகதிகள் அந்தஸ்து கோருவதே ஒரேவழி.

    துரை

    Reply
  • palli
    palli

    வன்னியில் மட்டுமென்ன வடை பாயாசத்துடன் விருந்தா சாப்பிடுகிறார்கள். சர்வதேசம் ஒருநிலைக்கு வந்துதான் மக்களை பொறுப்பு எடுப்பதாக சொல்லும் போது அதை ஏற்றுகொண்டு அதுக்குரிய பாதுகாப்பு நடைமுறை பற்றி சர்வதேசத்திடம் பேசாமல் வர மாட்டேன் வர மாட்டேன்
    புலியை விட்டு வர மாட்டேன் என தாங்கள் சொல்லலாம். ஆனால் மக்களையும் உங்களுக்கு உதவயாக மறிப்பது நல்லாவா இருக்கு.அது சரி ஏப்போதாவது சர்வதேசம் உங்கள் பேச்சை கேட்டுள்ளதா??அல்லது சர்வதேசம் கேக்கும்படி பேசியிருப்பீர்களா??? யானை மாலை போட்டதால் அரசன்
    ஆன கதை படித்துள்ளோம்.ஆனால் புலிபார்வை பட்டதால் ஏதோ ஆன கூத்தமைப்பை பார்த்து பரிதாபபட கூட எமக்கு நேரம் இல்லை.

    Reply
  • santhanam
    santhanam

    நான் அறிந்தவரை இவர் ஒரு அரசியல் சூனியம் பொங்குதமிழ் செய்து எல்லோரையும் வேள்விக்கு அனுப்பிவிட்டு பின்பு பாராளுமன்றம் போய் சிங்களவன்ரை பாஷ்போட்டில் புலம் பெயர்ந்து புலம்பெயர் தமிழரிற்கு பாராளுமன்ற உறுப்பினராக சேவைசெய்கிறார். இவரிடம் உள்ள ஒரே ஒரு தகுதி புலி.

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    புலிகள் வன்னியில் இருந்த பொழுது பாஸ் நடைமுறையை வைத்திராது இருந்தால் புலிகளதும் மக்களதும் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று சொல்வீர்களா? அந்த வன்னிமக்கள் இப்போது எங்கிருந்திருப்பார்கள்? நிட்சயமாக சுதந்திரபுரத்திற்குள்ளும், வவுனியா இடைத்தங்கல் முகாமிலும் இருந்திருக்க மாட்டார்கள் என்பது உண்மைதானே. ஆக புலிகளுக்கும் மக்களுக்குமுள்ள உறவு என்ன? புலிகள் வேறு மக்கள் வேறு.
    வவுனிய முகாம்களில் உள்ளவர்கள் வெளியேறக் கூடாது என்று வைக்கப்பட்ட நிலையைக் கண்டிக்கும் அநேகர் புலிகள் வன்னியில் மக்களைக் கட்டாயத்தடுப்பில் வைத்திருக்கிறார்கள் தப்பியோடும் போது சுடுகிறார்கள் என்று தப்பி வந்த மக்கள் சொல்வதைக் கூட நம்ப மறுக்கும் ஏமாளிகளாக இருக்கிறார்கள்– அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்

    Reply