Multiple Page/Post

முகாம் அகதிகளை உடன் விடுவிக்காவிடின் ஆயிரக்கணக்கில் மரணங்கள் சம்பவிக்கும் – ஐ.தே.க.

flood.jpgஅகதி முகாம்களிலுள்ள 2 இலட்சத்து 70 ஆயிரம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்றும் அவதிப்படும் அந்த மக்களில் சிறுவர்கள், முதியவர்களையாவது உடனடியாக விடுவிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, உலகில் இந்தநிலைமை எங்குமே கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. முகாம் மக்களை உடனடியாக விடுவிக்காவிடின் ஆயிரக்கணக்கில் மரணங்கள் சம்பவிக்கும் நிலைமை இருப்பதாக கண்டி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியல்ல செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.மேலும் கூறியதாவது; யுத்தத்தின் போது பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. அம் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. எனவே, பிள்ளைகள் மற்றும் வயது முதிர்ந்த ஆண்கள், பெண்களை விடுவிக்குமாறு கேட்கின்றேன்.

இவ்வாறான நிலைமை உலகில் எங்கும் கிடையாது. இந்த மக்கள் எமது பிரஜைகளே. அண்மையில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க வன்னியில் 70 சதவீதமான வீடுகள் சிறுசேதத்துக்குள்ளானதால் முகாம்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்துமாறு கோரினார்.  ஐ.நா. மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் 6 மாதத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் இதற்கான உதவிகளை வெளிநாடுகள் அளிக்கவுள்ளதாக கூறியபோதும் மீளக்குடியமத்தல் செயற்பாட்டு முறைமை சம்பந்தமான அறிக்கையை தூதரங்களுக்குச் சமர்ப்பிக்காமையாலேயே இவ்வுதவிகள் கிடைக்கவில்லை. முகாம்களில் குறைபாடுள்ளதை அரசாங்கமே ஏற்றுள்ளது.

பயங்கரவாதிகளைக் கைது செய்து தனியாக வைக்க வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. நாம் எதிர்க்கவில்லை. இந்நிலையில் முகாம்களிலுள்ள 2 இலட்சத்து 70 ஆயிரம் மக்களுடன் அரசு விளையாடக் கூடாது. முகாம்களிலுள்ளவர்களுக்கு நாடெங்கும் அதேபோல் வெளிநாடுகளிலும் உறவினர்கள் உள்ளனர். அவர்கள் தடுக்கப்படாது விட்டால் உறவினர்களின் உதவியைப் பெற்றுத் தமது வாழ்வை அவர்களால் கட்டியெழுப்ப முடியும்.

முகாம்களிலுள்ளவர்களை தடுத்து வைப்பதானது மனித உரிமை மீறல் ஆகும். ஜெனீவாவில் மனித உரிமை ஆணைக்குழுவில் அரசு வெற்றி பெற்றதற்குக் காரணம் எதிர்காலத்தில் மனித உரிமை மீறப்படாதென உறுதியளித்த காரணத்தினாலாகும்.

யுத்த வேளையில் மனித உரிமைகள் சில சமயம் மீறப்பட்டதெனினும் எதிர்காலத்தில் மீறப்படாதென உறுதியளித்ததன் பேரிலேயே வெளிநாடுகள் அதனை ஏற்று மனித உரிமை ஆணைக்குழு விவாதத்தில் ஆதரவளித்தன. சுமார் 3 இலட்சம் மக்களை அடைத்து வைப்பது என்ன நீதியென கேட்கின்றேன்?

இவ்வாறு அடைத்து வைப்பதன் மூலம் நாட்டில் நீதி உள்ளதா இல்லையா என்பது உலகத்திற்குத் தெரியும். முகாம்களுக்குள் எதிர்க்கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லவிடாது தடுக்கப்பட்டுள்ளனர். அரச தரப்பினர் செல்லும் போது எதிர்க்கட்சியினர் அங்கு செல்வதற்கு அனுமதி கேட்கப்படுகின்றது.

யுத்தம் முடிந்துள்ள நிலையில் பொலிஸாரின் அடாவடித்தனம் தலைதூக்கியுள்ளது. பொலிஸில் 90 சதவீதமானவர்கள் நல்லவர்கள் உள்ள நிலையில் மீதியானோரே அரசுக்காக தேவையற்ற வேலைகளை மேற்கொள்கின்றனர். அங்குலான தாக்குதலை மேற்கொண்டது புலிகளா? என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியும் லசந்த மற்றும் ரவிராஜ், மகேஸ்வரன் மீதான தாக்குதலில் திரைமறைவில் யார் இருந்துள்ளது என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.

வடக்கில் யுத்தம் முடிந்துள்ள நிலையில் அது தெற்கிற்குப் பரவியுள்ளது. வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஜோன் பிள்ளையின் வீட்டின்மீது எண்ணெய்யூற்ற அரச தரப்பினரே எடுத்துக் கொடுத்தனர். மற்றவர்களுக்கு நடக்கின்ற போது மௌனம் காத்தால் எமக்கு நடக்கும் போது கதைப்பதற்கு யாரும் இருக்கார்.

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறு பிள்ளைகள், பெற்றோர்கள் கேட்கின்றனர். வடக்கிலும் தெற்கிலும் சாதாரணமாக தேர்தல் இடம்பெற 17 ஆவது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்துமாறு கேட்கின்றனர். அரசு அதனைச் செய்யாது புலிகளை ஒழித்ததாகக் கூறி அரச பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளது. இதனை மக்களால் தாங்க முடியாது.

அரசாங்கம் பயங்கரவாதிகளை அழித்த நிலையில் நாட்டின் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமென்றால் மனித உரிமை பாதுகாக்கப்பட்டு நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை அரசு உணராதுள்ளது. யுத்தம் முடிந்த நிலையில் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்க வேண்டும். ஐ.நா. வின் இலங்கைப் பிரதிநிதியான தயான் ஜயதிலக அரசியல் தீர்வாக 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுமென ஜெனீவாவில் கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் வெற்றி பெறவைத்தார். அவருக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.

முகாம்களிலுள்ள மக்களைத் தடுத்து வைத்திருப்பதானது பௌத்த சமய கலாசாரத்தை அவமதிப்பதாகும். புலிகள் இருப்பின் அவர்களைத் தனித்தனியாக தடுத்து வைக்க வேண்டும். இதை எதிர்க்கவில்லை. முகாம்களில் 3 அடி அளவுக்கு நீர் உள்ளது. இப்படங்கள் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. இவர்களை அரசாங்கம் விடுதலை செய்யாது விடின் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாவர். இதனால் நாட்டுக்கு அவமானம் ஏற்படும். எனவே, இதனை அரசு கவனத்திலெடுக்க வேண்டுமென கேட்கின்றேன் என்றார்.

600 மில்லியன் ரூபா செலவில் மீன்களுக்கென தனி ஆஸ்பத்திரி

26parliament.jpgமீன்களுக் கென பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் தனியான ஆஸ்பத்திரியொன்று அமைக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

இந்த ஆஸ்பத்திரிக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்களுக்கு ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில் இந்த ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டு வருகிறது. நன்னீர் மீன் பிடித்துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில் இந்த ஆஸ்பத்திரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த வருடம் நன்னீர் மீன் பிடித்துறைக்கென நிரந்தர வாவிகள் அமைக்கப்பட்டதோடு இறால் வளர்ப்பிற்கென 281 வாவிகள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் கடந்த வருடம் 43,390 மெற்றிக் தொன் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் நன்னீர் மீன்பிடி மூலம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.

இராக் குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலி

இராக் கின் தலைநகர் பாக்தாதின் மத்திய பகுதியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 400 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாதில் இந்த ஆண்டில் நடந்த மிக மோசமான வன்செயல் இதுவேயாகும்

ஒரு சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆறு குண்டு வெடிப்புகள் இராக்கின் அரசு அமைச்சுகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே நடந்துள்ளது. தலைநகரின் பாதுகாப்பு வலயமான கீரி்ன் சோன் என்ற பகுதிக்கு சற்று வெளியேயுள்ள வெளிநாட்டு அமைச்சுக்கு அருகேதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

பாதுகாப்புச் சூழல் குறித்து இராக்கிய அரசு சமீபத்தில் வெளியிட்டு வரும் நம்பிக்கை அறிக்கைகளை இது கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு முந்தைய தாக்குதல்கள் நகரின் வறுமை மிக்க, பாதுகாப்பு குறைவான பகுதிகளில் நடைபெற்றதாகவும், இந்த வகையில் தற்போது நடைபெற்ற தாக்குதல்கள் அசாதாரணமானவை என்றும் பாக்தாதில் இருக்கும் பி பி சி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

5வது டெஸ்ட் இன்று தொடக்கம் :ஆஷஸ் தொடரை வெல்வது யார்? பிளிண்டொப்புக்கு கடைசி டெஸ்ட்

cri0000.jpgபொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டித் தொடரில் 2வது டெஸ்டில் இங்கிலாந்து 115 ஓட்டங்களிலும் 4வது டெஸ்டில் அவுஸ்திரேலிய இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்களிலும் வெற்றி பெற்றன.

முதல் மற்றும் 3வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஆஷஸ் தொடரை கைப்பற்றும். இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும். ‘டிரா’ ஆனால் தொடர் சமநிலையில் முடியும்.

இங்கிலாந்து சகலதுறை வீரர் பிளிண்டொப் ஏற்கனவே ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதனால் அவர் விளையாடும் கடைசி டெஸ்ட் இதுவாகும். உடல் தகுதி இல்லை என்று கூறி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் ஆடாதது அந்த அணிக்கு தொல்வியை ஏற்படுத்தியது.

ஆஷஸ் தொடரை கைப்பற்றி ஓய்வுபெற வேண்டும் என்பது அவரது இலக்காக உள்ளது. அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

வட மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நட வடிக்கைகளை துரிதப்படு த்துவதற்காக அமெரிக்க அர சாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ விவகார அலுவல் பணி யகத்தினூடாக இந்நிதி, இலங்கையில் கண்ணி வெடி களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு அரச சார்பற்ற அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றுதல் தொடர்பான தமது ஆற்றலை அதிகரிப்பதற்கும் அடுத்துவரும் 12 மாதங்களில் தமது பணியை விஸ்தரிப்பதற்கும் இம் மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்க் கண்ணி வெடி அகற்றும் குழு கண்ணி வெடி நடவடிக்கைகளுக்கான ஸ்விஸ் மன்றம், ஹேலோ நம்பிக்கைப் பொறுப்பு, கண்ணிவெடி மதியுரைக் குழு ணிதிமி) ஆகியன இந்நிதியை தமது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவுள்ளன.

“இலங்கையின் வட பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்நிதி அளிப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது” என்று பிரதித் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மூர் கூறினார்.

ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தின் கண்ணி வெடி அகற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்திருந்தது. அவர்கள் இங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது கண்ணி வெடி அகற்றலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தேவைகள் மற்றும் உதவிகள் குறித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகல முஸ்லிம் அமைப்புகளையும் உள்ளடக்கிய பொதுக் கட்டமைப்பு – உலமா சபை தலைமையக மாநாட்டில் இணக்கப்பாடு

muslim-prayer.jpgஇந்நாட்டில் தஃவா பணியில் ஈடுபட்டுள்ள சகல முஸ்லிம் அமைப்புகளும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படவென பொதுக் கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படவிருக்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இப் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இணக்கப்பாடு தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச் செயலர் அஷ் ஷெய்க் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் கையெழுத்திட்டு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

அண்மையில் பேருவளையில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் தலைமையகத் தில் 2009.08.18 அன்று ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன், தரீக்காக்கள், தஃவா அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தரீக்காக்கள், தஃவா அமைப்புகளுக்கு இந் நாட்டில் பல ஆண்டு கால வரலாறு உண்டு. இவைகளின் பணிகள் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு பயன்களை அடைந்துள்ளனர். அடைந்தும் வருகின்றனர். அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள், சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் அவற்றின் நன்மைகள் அதிகம் என்பதே எல்லோரினதும் கருத்தாகும்.

இந்நிலையில் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு சுமுகமான ஒரு நிலையில் தத்தமது செயற்பாடுகளையும் பணிகளையும் மேற்கொள்வதற்கான ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தரீக்காக்களினதும் தஃவா அமைப்புகளினதும் மற்றும் சில உலமாக்கள் எதிர்கால அமர்வுகளுக்கு அழைக்கப்பட வேண்டுமெனவும் மேற்கொண்டும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அன்புப் பிணைப்புடன் புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியில் ஈடுபடுவதன் அவசியம் பற்றி எல்லோரும் வலியுறுத்திப் பேசியதுடன், எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் சகோதர வாஞ்சையுடனும் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துகொள்ளுமாறும் அங்கு வருகை தந்த அனைவரும் வேண்டிக்கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நன் முயற்சி தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அனைவரும் வேண்டிக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல்; அனைவரையும் வாக்களிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி உலக வங்கியின் முன்னாள் உறுப்பினர் அஷ்ரஃப் கானி மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாவர்.

ஜனாதிபதியையும் 34 மாகாண சபைகளின் 420 உறுப்பினர்களையும் தெரிவு செய்யும் இத் தேர்தலில் 17 இலட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.  ஆறாயிரம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. தேர்தலைக் கண்காணிக்கவென இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தயாராகவுள்ளனர்.

மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டே இவ்வளவு தொகையான கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோல் வன்முறைகள் கலகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வீதிகள் பிரதான சந்திகளில் பாதுகாப்புப் படை யினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வாக்களி ப்பு நிலையங்களிலும் இராணுவம் குவிக்க ப்பட்டுள்ளது.

ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்ய ஆப்கான் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென ஐ. நா. செயலாளர் பான் கி மூன் கேட்டுள்ளார். காலை தொடங்கும் வாக்களிப்பு மாலையில் முடிவடையவுள்ளது. வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆரூடம் கூற முடியாதுள்ள நிலையில் ஹமித் அல் கார்ஸா யியும் அஷ்ரஃப்கானியும் உள்ளனர். முன்னாள் நிதியமைச்சரின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.

அஷ்ரஃப் கானியின் உரை கவர்ச்சிகரமாக அமைந்தது. உணவையும், குடி நீரையும்தான் ஹமீத் அல் கார்ஸாயியால் தரமுடியும் பல தொழில்களையும் இலட்சக்கணக்கான வீடுகளையும் பாதுகாப்பையும் தன்னால் தரமுடியும் என அஷ்ரஃப் கானி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.  வெளிநாட்டுப் படைகளின் பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் பெண்கள், சிறுவர்கள் உயிரிழந்தமை தற்போதைய ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயியின் செல்வாக்கைப் பாதித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலிபான்கள் தேர்தலைக் குழப்பும் நோக்குடன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன் வாக்களிப்போரின் கரங்கள் துண்டிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை ஜனாதிபதியின் மாளிகை மீது தலிபான்கள் ரொக்கட் தாக்குதல்களை நடத்தினர். மற்றும் தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்கதல்களில் குறைந்தது 15 பேர் வரை கொல்லப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்குச் செல்லத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் உயர்பாதுகாப்பு வலயங்களில் விரைவில் மீள் குடியேற்றம்!

north-governor.jpgயாழ் மாவட்ட உயர்பாதுகாப்பு வலயங்களில் விரைவில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ் மாவட்டத்தில் மக்களை மீள் குடியேற்றுவதற்காக இனம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்களை உடனடியாக யாழ் அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி யாழ் படை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படிப்படியாக மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கடந்த 13 ஆம் திகதி படை அதிகாரிகளுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி கலந்துரையாடினார்.

இதேவேளை,  மணற்காடு உட்பட உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பிரதேசங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விபரங்களை இன்னும்சில தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக யாழ் செயலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றப்படும் மக்களின் வதிவிடங்கள் அடையாளம் காணப்பட்டு,  கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான உத்தரவாதப் பத்திரம் யாழ் மாவட்ட செயலகத்தின் கண்ணிவெடி அகற்றல் பிரிவினரால் வழங்கப்பட்ட பின்னரே மீள் குடியேற்றத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென யாழ் மாவட்ட செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை – பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு

26parliament.jpgமாலபே மற்றும் அங்குலாணப் பகுதில் அன்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்;படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக பாதுகாப்பு படையினரையும் பொலிஸாரையும் மக்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் மாலபே மற்றும் அங்குலாணப் பகுதில் அன்மையில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து பொலிஸார் தமது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை,  வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

செப்டெம்பர் முதல் தனியார் பஸ் கட்டணம் 5.3% அதிகரிப்பு – 6 ரூபாவில் மாற்றம் இல்லை

bus_luxury.jpgதனியார் பஸ் கட்டணங்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 5.3 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.  ஆரம்பக் கட்டணமான ஆறு ரூபா அதிகரிக்கப் படாதெனவும் ஏனைய கட்டணங்களே 5.3 வீதத்தினால் அதிகரிக்கப்படுமெனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் உரிமையாளர் சங்கம் நாரஹன்பிட்டியிலுள்ள அதனது தலைமையலு வலகத்தில் நேற்று திங்கட் கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் தலைவர் கெமுனு விஜயரட்ண உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது;  பஸ் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு மற்றும் எரிபொருள் கட்டணம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு 7 வீத பஸ் கட்டண உயர்வைக் கோரினோம். எனினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 5.3% அதிகரிப்பையே அனுமதித்தது. ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் அரசுக்கு காலக்கெடு வழங்கினோம்.

நாம் 45 நாள் காலக்கெடு வழங்கி கடந்த சனிக்கிழமை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மக்களின் நலன்கருதி 5.3 வீத அதிகரிப்புக்கு இணங்குகின்றோம். இந்நிலையில், இக்கட்டண அதிகரிப்பை அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.

இவ்விலையதிகரிப்பின் படி ஆரம்பக் கட்டணமான 6 ரூபா அதிகரிக்கப்படமாட்டாது. எனினும், ஏனைய கட்டணங்கள் அதிகரிப்பு வீதத்திற்கு ஏற்ற வகையில் அதிகரிக்கப்படும். பஸ் கட்டண அதிகரிப்பை அரசியல் கட்சிகள் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.  நாம் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துமாறு கோருகின்றோம். குறிப்பாக ஒன்றிணைக்கப்பட்ட நேர அட்டவணை இதுவரை முழுமையாக அமுல்படுத்தாத வகையில் இதனை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.  இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முதலில் 7 வீத கட்டண உயர்வைக் கோரியது. தற்போது 5.3% உயர்வுக்கு இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள போதும் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையெனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய பஸ் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் பேசவுள்ளதாகத் தெரியவருகின்றது.