தனியார் பஸ் கட்டணங்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 5.3 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஆரம்பக் கட்டணமான ஆறு ரூபா அதிகரிக்கப் படாதெனவும் ஏனைய கட்டணங்களே 5.3 வீதத்தினால் அதிகரிக்கப்படுமெனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் உரிமையாளர் சங்கம் நாரஹன்பிட்டியிலுள்ள அதனது தலைமையலு வலகத்தில் நேற்று திங்கட் கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் தலைவர் கெமுனு விஜயரட்ண உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது; பஸ் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு மற்றும் எரிபொருள் கட்டணம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு 7 வீத பஸ் கட்டண உயர்வைக் கோரினோம். எனினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 5.3% அதிகரிப்பையே அனுமதித்தது. ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் அரசுக்கு காலக்கெடு வழங்கினோம்.
நாம் 45 நாள் காலக்கெடு வழங்கி கடந்த சனிக்கிழமை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மக்களின் நலன்கருதி 5.3 வீத அதிகரிப்புக்கு இணங்குகின்றோம். இந்நிலையில், இக்கட்டண அதிகரிப்பை அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.
இவ்விலையதிகரிப்பின் படி ஆரம்பக் கட்டணமான 6 ரூபா அதிகரிக்கப்படமாட்டாது. எனினும், ஏனைய கட்டணங்கள் அதிகரிப்பு வீதத்திற்கு ஏற்ற வகையில் அதிகரிக்கப்படும். பஸ் கட்டண அதிகரிப்பை அரசியல் கட்சிகள் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. நாம் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துமாறு கோருகின்றோம். குறிப்பாக ஒன்றிணைக்கப்பட்ட நேர அட்டவணை இதுவரை முழுமையாக அமுல்படுத்தாத வகையில் இதனை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம். இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முதலில் 7 வீத கட்டண உயர்வைக் கோரியது. தற்போது 5.3% உயர்வுக்கு இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள போதும் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையெனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய பஸ் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் பேசவுள்ளதாகத் தெரியவருகின்றது.