மீன்களுக் கென பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் தனியான ஆஸ்பத்திரியொன்று அமைக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-
இந்த ஆஸ்பத்திரிக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்களுக்கு ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில் இந்த ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டு வருகிறது. நன்னீர் மீன் பிடித்துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில் இந்த ஆஸ்பத்திரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த வருடம் நன்னீர் மீன் பிடித்துறைக்கென நிரந்தர வாவிகள் அமைக்கப்பட்டதோடு இறால் வளர்ப்பிற்கென 281 வாவிகள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் கடந்த வருடம் 43,390 மெற்றிக் தொன் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் நன்னீர் மீன்பிடி மூலம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.