மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 8 கிராமங்களில் 442 தமிழ் – முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 1898 பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடிய மர்த்தப்பட்டுள்ளனர். முசலியில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் காலை நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின்போது 2007 ஆம் ஆண்டு மோதல்கள் காரணமாக கொக்குபுடையான் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து நானாட்டான் பகுதியில் தங்கியிருந்த 94 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
முசலி பிரதேச செயலகத்தின் வேப்பங்குளம், பண்டார வெளி, பூநொச்சிக்குளம், பெரிய புல்லச்சி, பொற்கேணி, பூலான்குளம், புதுவெளி, மேத்தன்வெளி பகுதிகளிலிருந்து 90 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட 348 குடும்பங்களைச் சேர்ந்த 1551 முஸ்லிம்களும் மீளக் குடியமர்த்தப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட இவர்கள் புத்தளத்தில் அகதிகளாக தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மன்னார் அரச அதிபர் நிக்கலஸ் பிள்ளை, முசலி பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற திட்டத்திற்கமைய முதலாவதாக சிலாபத்துறையிலும், முசலி பிரதேச பிரிவிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றங்கள் நடைபெற்றன. முசலி பிரதேச செயலகத்தின் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தின் பின்னர் முள்ளிக்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் நடைபெறும். தற்போது முள்ளிக்குளம் பகுதியில் நிலக்கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அகற்றும் வேலைகள் நடத்தப்படுகின்றன.
முசலி பிரதேச செயலகத்திலுள்ள எட்டு கிராமசேவகர் பிரிவுகளிலும் நேற்று முன்தினம் மீள்குடியேற்றப்பட்ட மக் களுக்கு, உலர் உணவுகள், சமையல் பாத்திரங்கள், தற்காலிக கூடாரங்கள் போன்றவை நேற்று வழங்கப்பட்டன.யுனிசெப் நிறுவனம், உலக உணவுத் திட்ட நிறுவனம் உட்பட தொண்டர் நிறுவனங்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கின.
வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.