முல்லைத்தீவு விஸ்வமடு வடக்கு சுந்தரபுரம் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் இன்று முற்பகல் 11. 30 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
தாக்குதலில் 20 படையினரும் 10 பொதுமக்களுமாக 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 24 படையினரும், 40 பொதுமக்களுமாக 64 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்கொலைக் குண்டு தாக்குதலினையடுத்து குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொள்வதாகவும் தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவிக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுள் பெரும்பாலும் சிறுவர்களும், பெண்களும் அடங்குகின்றனர்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகத் தெரியவருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள முதல் பெரிய மனித வெடிகுண்டுத் தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர்
சிவிலியன்களை இலக்குவைத்து புலிகளால் நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று(09) பிற்பகல் பெளத்தாலோக மாவத்தையிலுள்ள இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதியும், அரசாங்கமும் விடுத்த அறிவித்தலையடுத்து சிவிலியன்கள் வேகமாக வரத் தொடங்கினர். கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்த வண்ணமிருந்தனர். இந்த அடிப்படையில் நேற்றுக் காலையும், முல்லைத்தீவு சுதந்திரபுர பிரதேசத்தை நோக்கி சுமார் ஐயாயிரம் பொதுமக்கள் வருகை தந்தனர்.
இவ்வாறு வருபவர்களை வரவேற்கவென சுதந்திரபுரத்தில் பாதுகாப்புப் படையினரால் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சகலரையும் சோதனையிடுவதற்கும், பதிவு செய்துகொள்வதற்கும் என இரு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும் சின்னஞ் சிறார்களுக்கும் என தனியான வரிசை ஒன்றும், ஆண்களுக்கு தனியான வரிசை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களை வரவேற்க காத்திருக்கும் படையினர் நிராயுத பாணிகளாகவே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பலர் பல நாட்களாக உண்ணாதவர்களாகவும், சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் கூட குடித்திருக்காதவர்களுமாகவே உள்ளனர். எனவே அவர்களை வரவேற்று சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான ஆகாரங்கள் கொடுக்கப்படும். அதன் பின்னர் அவர்களின் தகவல் பதிவுசெய்த பிறகு பஸ் வண்டிகள் மூலம் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
இந்த அடிப்படையில் நேற்றுக்காலை 5000 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து தஞ்சமடையும் சிவிலியன் போன்றே பெண் தற்கொலை குண்டுதாரியும் வருகை தந்துள்ளார். பெண்களை சோதனையிடும் வரிசையில் வந்த அவரை இராணுவத்தின் பெண் வீரர் ஒருவர் சோதனையிட முற்பட்டபோதே தற்கொலை குண்டுதாரி தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்றார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அப்பாவி தமிழர்கள் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக கொண்டு வரப்பட்டு அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.