Multiple Page/Post

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை டிச.31க்கு முன் மீள்குடியேற்ற முடிவு – செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம

pr-con.jpgவன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பொது மக்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோருடன் இடம் பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேலும் கூறியதாவது:-எனது அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள இரு நாட்டு தூதுவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களுடனும் நீண்ட நேரம் பேச்சு நடத்தப்பட்டது. வட பகுதியில் இடம் பெறும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. எதிர்வரும் காலங்களில் எவ்வாறு மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

வட பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் முன்வந்துள்ளனர். இது குறித்து எமது அரசின் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இடம் பெயர்ந்த மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள், மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் என்பன குறித்தும் எமது சந்திப்பில் ஆராயப் பட்டது.

பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புலிகள் 6 சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதோடு அம் மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளும் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் கடந்த தினங்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை துரிதமாக சொந்த இடங்களில் மீள் குடியேற்ற உள்ளோம்.

டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு மேலதிக வசதிகள் அளிப்பதற்காக 2.5 மில்லியன் பவுண் உதவி வழங்க பிரித்தானிய முன்வந்துள்ளது.மீள்குடியேற்ற நடவடிக்கைகளுடன் இணைந்ததாக சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பிரபாகரன் இன்னும் புதுமாத்தளனிலா இருக்கிறார் அல்லது தப்பி விட்டாரா என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; பிரபாகரன் இன்னும் பாதுகாப்பு வலயத்திலே மறைந்திருக்கிறார். இது தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.

பாதுகாப்பு வலயத்திற்குச் செல்வதற்கு ஐ. நா. தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென சில நாடுகள் கோரியிருப்பது குறித்து வினவியதற்கு பதிலளித்த அமைச்சர்; ஐ. நா. தொண்டு நிறுவனங்கள், 16 அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன வவுனியாவில் இயங்கி வருகின்றன. பல நாடுகள் மருத்துவ உதவிகள் அளித்துள்ளன. பாதுகாப்பு வலயம் அடங்கலான ஏனைய பகுதிகளில் சென்று பணியாற்றுவது தொடர்பில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. இந்த கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

சுவீடன் அமைச்சரின் வருகை

இலங்கைக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் தொடர்பிலான ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க கால அவகாசம் தேவை. அதனாலேயே சுவீடன் வெளியுறவு அமைச்சரின் வருகை தாமதமானது. அடுத்த வாரம் இலங்கை வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சொன்னார்.

கனரக ஆயுதத்தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற வாக்குறுதியினை அரசு மீறியுள்ளது : பிரிட்டன் வெளியுறவு அமைச்சரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு

samthan-2.jpgபாதுகாப்பு வலயப் பகுதி மீது கனரக ஆயுதத்தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற வாக்குறுதியினை அரசாங்கம் மீறியுள்ளது. தமிழ் மக்களை இதுவரை ஏமாற்றிய அரசாங்கம் முழு உலகத்தையும் தற்போது ஏமாற்றி வருகின்றது. இத்தகைய நிலையில் இனியும் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கக்கூடாது. உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் டேவிட் மிலிபான்டை இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின்போது கடந்த ஜனவரி மாதம் முதல் வன்னியில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏராளமானோர் காயமடைந்துமுள்ளனர். இந்த நிலையில் சர்வதேச சமூகம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கின்றது. இலங்கையில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல உறுதிமொழிகளை வழங்கியபோதும் அவற்றைக் காப்பாற்றவில்லை. தற்போது சர்வதேச சமூகத்திற்கு வழங்கும் உறுதிமொழிகளையும் அரசாங்கம் நிறைவேற்றத் தவறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுடன் பிரிட்டிஷ், பிரெஞ்சு அமைச்சர்கள் சந்திப்பு

wanni-visit.jpgஇலங்கைக்கு ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று புதன்கிழமை பிற்பகல் வவுனியா சென்று வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை சந்தித்ததுடன் அவர்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களையும் பார்வையிட்டுள்ளனர். பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் பேர்னாட் குச்னர் ஆகியோர் நேற்றுக் காலை கொழும்பு வந்தனர். அங்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்தபின் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.

பிற்பகல் 2 மணியளவில் விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் செட்டிகுளம் வந்த இவர்களை மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வடக்கு மாகாண ஆளுநர் டிக்ஷன் சரத் சந்திர தேல பண்டா, வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, மாவட்ட அரச அதிபர் திருமதி. சாள்ஸ் மற்றும் சிரேஷ்ட இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.

இருநாட்டு அமைச்சர்களுடன் இலங்கை வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹணவும் வந்திருந்தார். செட்டிகுளம் மெனிக் பாம் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் வன்னியிலிருந்து வருகைதந்த 75,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர்.

இவர்கள் தங்கியிருக்கும் சில முகாம்களுக்குச் சென்ற இரு நாட்டு அமைச்சர்களும் அங்குள்ள வசதிகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது அவர்கள் அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களது நிலைமைகள் குறித்தும் வன்னியில் அவர்கள் பட்ட துன்ப துயரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

இதன்பின் செட்டிகுளத்தில் பிரான்ஸின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கும் சென்ற இருநாட்டு அமைச்சர்களும் அங்குள்ள நிலைமைகளையும் பார்வையிட்டனர். சுமார் இரு மணிநேரம் அங்கு தங்கியிருந்த இவர்கள் மாலை நான்கு மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு திரும்பினர்.

யசூசி அகாசி இன்று இலங்கை விஜயம்

akashi2.jpgஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இரவு இலங்கை வரவுள்ளார். இன்று இரவு இலங்கை வரவுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வவுனியா விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவரண கிராமத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவியவருகிறது.

அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதில் தாமதம் இல்லை: இலங்கை மத்திய வங்கி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை பெறுவதில் எவ்வித தாமதமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

“இது முற்றிலும் தவறு. கடன் தொகையை பெறுவதில் எந்தவித தாமதமும் இல்லை.  இறுதி பேச்சுவார்த்தைகல் முடிவடைந்துள்ளன. அத்துடன் தொழில்நுட்பம் சார்ந்த கணிப்பீடுகளும் முடிவடைந்துள்ளது” என மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்கள பதில் தலைவர் கே.டி.ரணசிங்க ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு குழு தற்போது கொழும்பில் அரச தரப்பின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“கடன் தொடர்பான சகல நடவடிக்கைக்ளையும் பூர்த்தி செய்ய காலம் தேவை.கடனுக்கான சகல கோரிக்கைகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவிற்கு சமப்பிக்கப்படும்” என ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை வழங்க காலம் தாமதித்துள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண உதவியில் கல்வி அமைச்சும் பங்கேற்பு!

donation_food_anandacollage.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் வாழும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க கல்வி அமைச்சும் முன்வந்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவின் வழிகாட்டலுடன் இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் என்பன ஒன்றிணைந்து புதிய ஆடைகள்,  டவல்கள்,  தண்ணீர் போத்தல்கள், உலர்உணவு வகைகள்,  மருந்துப் பொருட்கள்,  பாத்திரங்கள்,  சவர்க்காரம்,  பற்பசை போன்றவற்றை அனுப்பவுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருடன் தொடர்புகொண்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களின் விபரம் பற்றி தெரிவிக்குமாறு அமைச்சு மேல்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சொந்தங்களை இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

front.jpgவவுனியா நலன்புரி நிலையங்கள், இடைத்தங்கல் முகாம்கள், நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் ஆங்காங்கே சிதறி இருக்கும் குடும்ப உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் இரண்டாவது பகுதியில் நேற்றுக் காலை அமைச்சர் ரிஷாத் விசேட கூட்டமொன்றை நடத்தினார். புலிகளின் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்த மக்களுள் அரச உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் போன்றோரும் அடங்குவர். இவர்களது உதவியுடன் குடும்ப அங்கத்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் போது குடும்பத்திலுள்ள சிலர் முதலில் பிள்ளைகளையும், சிலர் பெண்களையும் அனுப்பினர். வந்தவர்கள் வவுனியாவில் ஆங்காங்கேயுள்ள இடைத் தங்கல் முகாம்களில் குடும்ப அங்கத்தவர்கள் கட்டம் கட்டமாக தங்க வைக்கப்பட்டதால் சிதறிக் கிடக்க வேண்டிய நிலை உருவாகியது.

தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. எங்கே இருக்கிறார்கள் என்ற ஏக்கம், தவிப்பு ஏற்படுவது போல பிள்ளைகளும் இதே தவிப்புடன் இருக்கின்றனர். இதனை கருத்திற் கொண்டே அமைச்சர் ரிஷாத் இந்த நடிவடிக்கையை எடுத்துள்ளார்.

வடக்கில் மீள் குடியேற்றப் பணிகள் இன்று ஆரம்பம்!

house_new.jpgமன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றப்பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. முசலி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந 125 குடும்பங்கள்; இன்று முதற்கட்டமாக தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்கின்றன. இவ்வாறு மீளக்குடியேறும் மக்களின்  சேதமடைந்திருக்கும் வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதியினை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளின் காரணமாக தாமதமடைந்து வந்தன.

இப்பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இந்தியா, அவுஸ்திரேலியா, சுவீடன் போன்ற பல்வேறு நாடுகளின் நிதி மற்றும் நிபுனர்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்தே இப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் இன்று முதல் ஆரம்பமாகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையுடனான உறவை துண்டிக்கமாட்டோம் உயிர்ப்பலி வாங்காத ஆயுதமே வழங்கியுள்ளோம் – அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவிப்பு

pranabl.jpg“இந்தியாவின் நிலை என்ன என்பதை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துவிட்டோம்.இதற்கான பதிலை மத்திய அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; இலங்கையில் தற்போது சண்டை வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கான பதிலை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இலங்கை அரசாங்கம் அளிக்கப்போகும் பதிலை வைத்துத்தான் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும்.இலங்கையுடனான உறவுகளை துண்டித்துக்கொள்ளும் திட்டமெல்லாம் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவின் நட்பு நாடுதான் இலங்கை.அந்நாட்டுடன் சுமுக உறவு எப்போதும் இருந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி வாங்காத ஆயுதங்களைத்தான் அந்நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ளது.அங்குள்ள அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்றே இந்தியா வலியுறுத்துகிறது. புலிகள் அமைப்பு என்பது ஒரு தீவிரவாத அமைப்பு.

சர்வகட்சிக் குழுவின் யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் – ரணில் கோரிக்கை

யுத்தம் முடிவடைந்து வரும் நிலையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, புஸ்பதான மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “சுதந்திரத்திற்கான மேடை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கூட்டமொன்றில் பேசும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

இப்போது யுத்தம் முடிவடைந்து வருகிறது இந்த நிலையில் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு யோசனையொன்றை பரிந்துரை செய்வதற்கென அமைச்சரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு சகல கட்சிகளும் தத்தமது அபிப்பிராயங்களையும் யோசனைகளையும் முன்வைத்திருக்கின்றன.

எனவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அது எம்மாதிரியான தீர்வு என்பதை தெளிவுபடுத்தி அரசாங்கம் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்.

எமது நாட்டிலுள்ள பிரச்சினையை பிறர் வந்து தீர்க்க முற்படுவதற்கு முன்னர் நாம் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் சகல கட்சிகளும் தத்தமது அபிப்பிராயங்களை தெரிவித்துள்ள நிலையில் எதற்காக மூடி மறைக்க வேண்டும்?

எனவே தீர்வு யோசனையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் அதை செய்யாததால்தான் பிறர் வந்து கொண்டிருக்கின்றனர். என்றும் கூறியிருக்கிறார்.