Multiple Page/Post

மருந்துப் பொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் உயிரிழப்புக்கள் அதிகமாகக் கூடும்: சூசன் ரைஸ்

susanrice.jpgயுத்த வலயத்தில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்களின் உயிரிழப்புக்கள் உயர்வடையக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அமெரிக்கப் பிரதிநிதி சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்படுவதாக இரண்டு தரப்பினர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி வன்னியில் ஆட்டிலறித் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான குழுவினர் யுத்த வலயத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கூர்ந்து கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்துவதாகவும் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் நம்பகத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென சூசன் ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு நாம் விடுத்த கோரிக்கையை மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அப்பாவி பொதுமக்களை பார்வையிட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் பூரண அனுமதியளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் படுகொலை துரைரட்ணம் கண்டனம்

era_thurairatnam.jpg மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாவற்கொடிசேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரான பாலசிங்கம் ரவீந்திரராஜா கொல்லப்பட்ட சம்பவத்தை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா அமைப்பின் முக்கியஸ்தருமான இரா. துரைரட்ணம் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கஷ்ட பிரதேசங்களில் ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தயக்கம் காட்டுகின்ற போது சேவை நோக்குடன் அங்கு பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையானது கண்டிக்கத்தக்க விடயம். தற்பொழுது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் தினுஷ்சிக்காவின் சம்பவம் குறித்த பீதியடைந்த கல்விச் சமூகம் அதிலிருந்து விடுபடாத நிலையில் இந்த படுகொலை; இடம்பெற்றுள்ளது. ஆயுத வன்முறை செய்யுமளவிற்கு ஆசிரியர்கள் நலிவடைந்தவர்கள் அல்ல. எனவே இந்த படுகொலை சம்மந்தமாக தீவிர விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் புதிய முகாம்

vavuniyatents.jpgவவுனியா பறையனாலங்குளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்கென நிவாரண கிராமம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 1200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கிராமம் அமைக்கப்படுகிறது. வலயம் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிராமத்தில் மக்கள் வரைவில் குடியமர்த்தப்படுவர்.

இதில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்: க.அன்பழகன்

anbazhagan.jpgவிடுதலைப் புலிகள் தமிழர்களை தாக்குவதாலும் அவர்களை கேடயமாக பயன்படுத்துவதாலும் தமிழர்கள் அதிக அளவு இறக்கின்றனர் என திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் கூறியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பண்ருட்டியில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போதே இதை குறிப்பிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமும், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார். போரை நிறுத்த சொல்ல நமக்கு உரிமை கிடையாது, மத்திய அரசுதான் சிங்கள அரசை வலியுறுத்தும். அதற்காக கருணாநிதி முயற்சி எடுத்தார். விடுதலைப் புலிகளை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியாது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் எண்ணிக்கை அதிகமானால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்,  இதனால் இந்தியாவும்,  தமிழகமும் பலன்பெறும். இந்த அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கம்யூனிஸ்டுகள் 3-வது அணி அமைத்து தவறான எண்ணத்தை பரப்புகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறிய வைகோஇ ராமதாஸ் அத்திட்டத்தை தடை செய்ய நினைக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்றார் அன்பழகன்.

சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப சகல சமூகத்தினரும் முன்வரவேண்டும் – பிரதமர்

pmsl.jpgபெளத்த தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்க ளின் பிரகாரம் தமது வாழ்க்கையினை சீர்செய்து கொண்டு சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்பு வதற்கு சகல சமூகத்தினரும் முன்வரவேண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மிகவும் கருணையுடன் சகல உலகவாழ் உயிரினங்களுக்கும் நற்பாதையைக் காட்டிச் சென்ற எமது புத்த பெருமானின் அளவற்ற நற்குணங்களை நினைவுகூர்ந்து உலகவாழ் பெளத்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புனித வெசாக் தினத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்திலே பெளத்த தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்களின் பிரகாரம் தமது வாழ்க்கையினை சீர்செய்துகொண்டு சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புதற்கு உதவுமாறு சகல சமூகத்தினருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

பெளத்த தர்மத்தால் வளர்க்கப்பட்ட மனித சமூகமொன்றும், உயர் கலாசாரமொன்றும் எமக்குள்ளது. குரோதம், வைரம் போன்ற தீய குணங்களற்ற, ஏனையோருக்கு மதிப்பளித்து உயர் மனிதர்களாக வாழ்வதற்குரிய நற்பாதைகளையும், சமூகத்திலே தீயபழக்கவழக்கங்களுடன் வாழ்வதன் மூலம் ஏற்படக்கூடிய கெடுதிகளையும் பெளத்த தர்மமானது சிறந்த முறையில் போதித்துள்ளது.

சகல பேதங்களையும் துறந்து அமைதியானதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல விடயங்களையும் அரசாங்கமானது மேற்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்திலே மீண்டும் நற்பண்புகள் நிறைந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவது உங்களது கட்டாய கடமையாகும்.

வடக்கு பிரதேசத்தில் தீவிரவாத செயற்பாடுகள் காரணமாக மிகவும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து இருப்பிடங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படும். இச்சந்தர்ப்பத்திலே துணையற்றவர்களுக்கு உதவும் உயர் புண்ணிய கருமத்தை நிறைவேற்றுவதற்கு வெசாக் வாரத்தினுள் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இலங்பை வாழ் மக்களுக்கு புனித வெசாக் தினமானது சிறப்புற வாழ்த்துகிறேன். இவ்வாறு பிதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

வவுனியா செல்ல சர்வதேசத்துக்கு அனுமதியுண்டு; எமக்கில்லை : ஐ.தே.க.எம்.பி. ஜயலத்

drjayaalth.jpg“இலங்கை நிலவரத்தை நேரில் வந்து ஆராய்வதற்காக சர்வதேச நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் எமது நாட்டின் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வவுனியா முகாம்களுக்குச் செல்ல பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சர்வதேசத்திற்கு அரசு விடுக்கும் செய்தி என்ன என்றே நாம் அரசிடம் கேள்வி எழுப்புகிறோம்” என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது “எமது பிரச்சினையில் சர்வதேசத்தின் தலையீடு தேவை இல்லை; எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என அன்று சிலர் கூறினர். இன்று இலங்கை நிலைமையை நேரில் வந்து அவதானிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதே போன்று இந்தியாவின் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோருக்கும், இலங்கை நிலைமையை நேரில் வந்து ஆராய அழைப்பு விடுக்கப்பட்டது.இலங்கை நிலையை நேரில் வந்து அவதானிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுக்க ஒரு நாட்டுத் தலைவர் என்ற வகையில் உரிமை உள்ளது. ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று இலங்கை வருகை தந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலைகளை ஆராய்ந்து சில கோரிக்கைகளை முன் வைத்தால், அதை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளதா என நாம் கேட்கிறோம்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசு வவுனியா முகாம்களுக்குச் செல்ல அனுமதி அளித்தது. எமது நாட்டு பிரதான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுனியா முகாம்களுக்கோ மன்னாருக்கோ செல்ல அனுமதி தர பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கின்றது. இது குறித்துக் கேட்டால், பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை எனக் கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையில் செயற்படுகிறது என்றும் சர்வதேசத்திற்கு இலங்கை நிலைகுறித்து பல பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறது என்றும் எம்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. நாம் ஆட்சியில் இருக்கும் போதும் எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் பயங்கரவாதத்தை எதிர்த்தே வந்துள்ளோம்.

யுத்தத்தினால் மட்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியாது. அரசியல் ரீதியான தீர்வே தேவை. அன்று வன்னியில் கட்டளை இடும் தளபதியாக இருந்த டென்சில் கொப்பெகடுவவும் இதனையே தெரிவித்திருந்தார். இன்று அவ்வகையான ஒரு தீர்வைக் கையாளவேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது.யுத்தத்தினால் அல்லலுறும் மக்களுக்கு ஒரு தீர்வினைப் பெற்று கொடுத்து நாட்டில் சமாதானத்தை உருவாக்க அரசியல் தீர்வு ஒன்றினாலேயே முடியும் என அன்றும் ஐ.தே.க. தெரிவித்தது. இன்றும் அதனையே வலியுறுத்துகின்றது.” இவ்வாறு ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

ஈ.வி.கே.எஸ். : மன்னிப்புகேட்க 48 மணி நேர கெடு: இளந்தமிழர் இயக்கத்தினர்

semaan.jpg ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது, ‘’பெரியாரின் உண்மையான பேரன் என்று சீமான் தன்னை சொல்லிவருகிறார். உண்மையில் நான் தான் உண்மையான பேரன். சீமான் அவர் தான் உண்மையான பேரன் என்று அப்படி சொல்வதை பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் செய்த தவறு போலிருக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது’’என்று பேசினார்.

இளங்கோவனின் இத்தகைய பேச்சால் இளந்தமிழர் இயக்கத்தினர் கொந்தளித்து போய்விட்டார்கள். இந்த இயக்கத்தின் அமைப்பாளர் செந்தமிழன், ‘’பெரியாரை கொச்சைப்படுத்திய இளங்கோவன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை யென்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்’’ என்று அறிவித்துள்ளார். இதனால் போலீசார் இளந்தமிழர் இயக்கத்தினரை வலைவீசி தேடி கைதுசெய்துவருகின்றனர். ‘’கைது செய்தாலும் மிச்சம் இருப்போர் முற்றுகையிடுவோம்’’என்று மீண்டும் அறிவித்துள்ளார் செந்தமிழன்.

மனித நேயமிக்க அமைப்பாக திகழும் செஞ்சிலுவை செம்பிறைச் சங்கம்- புன்னியாமீன்

world-red-cross-and-red-crescent-day.jpgஇன்று மே 08ஆம் திகதி. உலக செஞ்சிலுவை – செம்பிறை  (World Red Cross and Red Crescent Day) தினமாகும்.

உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படைவோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன. செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் என்பன பெயரில் ஒரு வித்தியாசத்தைக் காட்டி நின்றாலும் கூட, அடிப்படையில் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்னெடுப்பவைகளே. குறிப்பாக அரபுலக நாடுகளி;ல் சிலுவை எனும் குறியீட்டுக்கும்,  வார்த்தைப்பதத்திற்கும் பதிலாக பிறை எனும் குறியீடும்,  வார்த்தைப்பதமும் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளினூடாக இந்த அமைப்புகள் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக செஞ்சிலுவை – செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருள் யுத்தங்களினாலும் அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன,  மத,  மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும்.

இச்சங்கத்தின் ஸ்தாபகரான ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் திகதி அம்மனிதாபிமான மிக்க மனிதப் புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகத்தோர் அனுஷ்டிக்கின்றனர்.

ஜெனீவாவில் பக்தியும் கருணையும் குடிகொண்டிருந்த குடும்பமொன்றில் 1828ம் ஆண்டு மே மாதம் 08ம் திகதி ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்தார். தனது பெற்றோரிடமிருந்து கற்ற அனுபவங்கள் காரணமாக சிறுபராயத்திலிருந்தே சமூக சேவைகளில் ஆர்வமிக்கவராக விளங்கினார்.  சிறிய பராயத்திலே அயலவர் படும் இன்னல் கண்டு வேதனையுற்றார். சிறைக் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனம் நொந்தார். சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார். பின்னர் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார்.

1859 ஜுன் 25இல் அவர் வட இத்தாலிக்குச் சென்றபோது அங்கு சோல்பரினோ யுத்தம் நடைபெற்றிருந்தது. ஆஸ்திரிய, பிரான்ஸிய,  இத்தாலிய படைகளின் 3 லட்சம் பேர் 16 மணித்தியாலயங்கள் போரிட்டதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். இவ்வாறு குற்றுயிராய்க் கிடந்தவர்களிடத்தே எத்தரப்பினரும் அக்கறை காட்டவில்லை. இந்தக் காட்சி டியூனண்ட்டின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. ஊரவர் உதவியுடன் காயப்பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி  சிகிச்சையளித்தார். பகை நிரம்பிய அச்சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக அமைந்தது.

பின்பு ஜெனீவா திரும்பிய டியூனண்ட் ‘சோல்பரினோ நினைவுகள்|| என்ற நூலை எழுதினார். இந்நூலில் அவர் மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வினையடுத்து நாடு நாடாகச் சென்று யுத்தகளப் பணிகள் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார். பிற்காலத்தில் வறுமையின் பிடியில் அவர் சிக்கினாலும் ஈற்றில் நோபல் பரிசுக்குரியவரானார். 1910 ஒக்டோபர் 30இல் உயிர் நீத்த ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது

1863ல் போர் நிவாரணப் பணிகளில் ஈடுபபட்ட தொண்டர்களை இனங்காட்டுவதற்காக வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவைச் சின்னம் தெரிவு செய்யப்பட்டது. 1864ல் ஐவர் அடங்கிய குழுவொன்றினால் ஜெனிவாவில் மாநாடொன்று இடம் பெற்றது. இம்மகாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களே ஜெனீவா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மனிதனையும் அவரின் பெருந்தன்மைகளையும் கெளரவிக்கவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதில் தரையில் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது கப்பல் உடைந்ததால் பாதிக்கப்பட்ட ஆயுதந்தரித்தோரைக் காப்பாற்றல் யுத்தக் கைதிகளைப் பாதுகாத்தல் பொதுமக்களைக் காத்தல் சர்வதேச ஆயுத மோதல்களினாலும் உள்நாட்டில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டோரை பாதுகாத்தல் என்பன ஜெனீவா சாசனத்தில் காணப்படுகிறது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம்.

1934 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.

செஞ்சிலுவை,  செம்பிறை இயக்கம் உலகிலேயே மிக விரிவாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ சமயத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்துள்ளமையினால் இஸ்லாமிய நாடுகளில் அதன் சின்னம் செம்பிறையாகக் கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் யுத்தங்களினால் காயமுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளன. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு பிரதான கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

01. மனிதாபிமானம்
02. பாரபட்சமின்மை
03. நடுநிலைமை
04. சுதந்திரத் தன்மை
05. தொண்டு புரிதல்
06. ஒற்றுமை
07. சர்வவியாபகத் தன்மை என்பனவே அவை.

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன,  மத, மொழி,  பிரதேச பேதமின்றி இவ்வியக்கம் அன்புக்கரம் நீட்டி உதவுகின்றது. முரண்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் எத்தரப்பினரையும் சாராது,  அரசியல் வேறுபாடுகளில் அக்கறை காட்டாது,  நடுநிலைமையுடனும்,  சுதந்திரத்துடனும் இது செயற்பட்டு வருகின்றது. அதேவேளை அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டே கருமமாற்றுகிறது.

1936ல் இலங்கை மக்களைத் தாக்கிய மலேரியா மற்றும் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்தவென இலங்கை அரசுக்கு உதவிபுரியும் வண்ணம் பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் மத்திய கிளையொன்று இலங்கையில் அமைக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இக்கிளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமென மாறியது. 1952ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் இலங்கை இணைந்து கொண்டது.

ஆரம்பத்தில் இரத்ததானம் முதற்சிகிச்சை முதலுதவிக்கான பயிற்சி வழங்கல்,  நடமாடும் சுகாதார சேவை வழங்கல் விபத்துக்குள்ளானவர்களுக்கு உணவு உடை,  உறையுள் என்பவற்றை வழங்கல். வரட்சி, வெள்ளப் பெருக்கு, யுத்தம் குண்டு வெடிப்பு, வரட்சிக்கு முகம் கொடுப்பதற்கான பயிற்சிகள், போன்ற சேவைகளை வழங்கியது.

இலங்கையில் வடக்குப் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் இது முன்னின்று செயற்படுகின்றது. போரின் நிமித்தம் சிறைபட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடல், தடுப்புக் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்வையிடல்,  எதிர்த்தரப்பினரின் தடுப்புக் காவலிலுள்ள இராணுவத்தினரையும், பொதுமக்களையும் பார்வையிடல்,  காணாமற்போகும் நபர்களைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் அக்கறை காட்டுதல்,   யுத்தப் பிரதேசத்திலுள்ளவர்களை அழைத்து வருதல்,  குடும்பச் செய்திகளைப் பராமாறுதல் போன்றவற்றுடன் இரு தரப்பினரிடையே சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் எடுத்துச் செல்லல்,  நோயாளிகளுக்குப் போக்குவரத்து வசதியளித்தல், தொழில் மீட்சிக்கு உதவுதல்,  மருத்துவ உதவி வழங்கல் தற்காலிக கூடரங்களை அமைத்தல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சம்மேளனம் அதன் அனுபவத்தையும் சர்வதேச அமைப்புகளின் அனுபவமிக்க தொண்டர்களையும் இலங்கையில் நீண்டகால சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. எனினும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் இத் தொண்டர்கள் பாதிப்புக்குள்ளாகியமையும் நோக்கத்தக்கது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் சேவைகள் அண்மைக்காலத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போதைய யுத்த நிலையில் மேற்கொண்டு வரும் சேவைகள் எமக்கு கண்கூடான உதாரணங்களாகும்.

ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும்!!! : பா.நடேசன்

nadesan-10.jpgவிடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘த வீக்’ ஆங்கில இதழுக்கு வழங்கிய பேட்டியில்….

இலங்கையின் தற்போதைய நிலமையில் இந்திய தேர்தலின் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் – ஈழத் தமிழ் மக்கள் இந்திய மக்களின் மிக நெருங்கிய நண்பர்களே. யார் ஆட்சி அமைத்தாலும் இது உறவு  எப்போதுமே இப்படித்தான் இருக்கும்.

ஆனால் தற்போது வன்னியில் எற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை இன்றைய இந்திய மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையானது.

இதற்கிடையில் – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இராணுவ ஒத்துழைப்பு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருணாநிதியின் வாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தான் தமிழீழ மக்களின் நம்பிக்கையும், பலமும். தமிழக மக்கள் இதனை நன்கே அறிவார்கள். காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் தமிழின அழிப்பு போருக்கு உதவி வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எதிர்வரும் மே 13 ஆம் நாள் நடைபெறப்போகும் தேர்தலில் ஈழத்தமிழ் மக்களோடு தாம் சேர்ந்திருக்கும் செய்தியை தமிழக மக்கள் தெளிவாகத் தெரிவிப்பார்கள் என்பது எனது வலுவான நம்பிக்கை. தனி ஈழம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என செல்வி ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உங்களின் பார்வை என்ன?

இதனைத்தான் ஈழத் தமிழ் மக்களும் உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் கேட்பதற்கு வேண்டி நின்றார்கள். தற்போது ஜெயலலிதா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும். அதாவது,  ஈழத் தமிழ் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பதே அந்த தகவல்.

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

ஈழத் தமிழ் மக்கள் சந்தித்துவரும் அழிவுகள் கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகின்றன. தி.மு.க.வும்,  கலைஞர் கருணாநிதியும் தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் தான்.

ஆனால், அறிக்கைகளும், பேச்சுக்களும், தேர்தல் வாக்குறுதிகளும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்துவிடவில்லை. இதுவரை காலத்தில் –  தன்னால் ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்திருக்க முடியும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

யுத்தநிறுத்த அழைப்போ, விசேட தூதுவரை அனுப்பும் சிந்தனையோ பான் கீ மூனுக்கு இப்போதும் இல்லை – இன்னர்சிற்றி பிரஸ்

UN_Logoஐ.நா:  இலங்கையில் ஆயிரக்ககணக்கில் பலியான பொது மக்களை ஐ.நா. எண்ணிக்கொண்டிருக்கும் அதேசமயம், செயலாளர் நாயகம் பான் கீ மூன் இப்போதும் யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்கவோ அல்லது மோதல் தொடர்பாக விசேட தூதுவர் ஒருவரை அனுப்புவதற்கான ஆயத்தத்தில் ஈடுபடவோ இல்லை என்று ஐ.நா. விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் விமர்சித்திருக்கிறது.

உதாரணமாக மோதல் சூன்யப் பகுதியென சொல்லப்படும் இடத்தில் உள்ள குண்டு வீழ்ந்த குழிகள் தொடர்பான செய்மதி புகைப்படங்களையும் இழப்புகளின் எண்ணிக்கையையும் வெளியிட ஐ.நா. ஏன் அனுமதி வழங்காமல் வைத்திருக்கின்றது என்று இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு மூன்று நிமிடங்கள் அளித்த பதிலில்; “நிலுவையாக இருக்கும் சகல விடயங்களையும் உள்ளடக்கிய நீண்ட தொலைபேசி உரையாடல் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இடம்பெற்றது என்று பான் கி மூன் கூறியிருப்பதாக 5 மே 2009 திகதியிடப்பட்ட இன்னர் சிற்றி பிரஸின் செய்தி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் எவையும் யுத்த நிறுத்த அழைப்பை உள்ளடக்கியிருக்கவில்லை. “மனிதாபிமான இடைநிறுத்தம்’ என்ற கோரிக்கையுடன் தனது வேண்டுகோளை பான் கி மூன் மட்டுப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இன்னர் சிற்றி பிரஸுக்கு கசிந்து செல்லும் வரை இழப்புகள் தொகையை வெளியிடாமல் ஐ.நா. வைத்திருந்தது ஏன் என்பது பற்றியோ அல்லது காஸா மோதலின் போது பகிரங்கமாக வெளியிடப்பட்டது போன்ற செய்மதிப் படங்களை யூனோசற்றானது தற்போதும் பகிரங்கமாக வெளியிட மறுப்பது ஏன் என்பது தொடர்பாகவோ, பான் கீ மூன் செவ்வாய்க்கிழமை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இன்னர் சிற்றி பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

அதேவேளை, கடந்த ஏப்ரலின் இறுதிப் பகுதியில், கடந்த மாத ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தலைவரான மெக்சிக்கோ தூதுவர் கிளாடி நெல்லர், இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் கூடிய விசேட தூதுவர் ஒருவரை அனுப்புமாறு பான் கி மூனை கேட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன. மூடிய கதவுக்குள்ளான கூட்டத்தின் போது அவர் இதனை கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது அது தொடர்பாக பான் கி மூன் சிந்திக்கின்றாரா என்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.

“அதனை பின்னர் நாம் கலந்தாராய முடியும்’ என்று பான் கி மூன் பதிலளித்துள்ளார்.

பிறகு என்று அவர் கூறுவதன் அர்த்தமானது மோதல் வலயத்தில் இறுதி “தீர்வு’ என்று சிலர் கூறுவதன் பின்னரா அல்லது ஒரு நாளின் பின்னரா அல்லது ஒரு வாரத்தின் பின்னரா? என்பது குறித்து தெளிவில்லாமல் இருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக அல்லது குறிப்பிட்ட ஒரு தடவையாக தனது தலைமை அதிகாரி விஜே நம்பியாரை தூதுவராக பான் கி மூன் அனுப்பியிருந்தார்.

இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பான் கி மூன் அளித்த பதிலை ஐ.நா. அதற்கு வழங்கியிருந்தது. அவை வருமாறு;

இன்னர் சிற்றி பிரஸ்: செயலாளர் நாயகம் அவர்களே! இலங்கை ஜனாதிபதிக்கு நாங்கள் விடுத்த அழைப்புகளை நான் மெச்சுகிறேன். ஐ.நா.வின் நோக்கம் மற்றும் அங்குள்ள பொது மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக சில கேள்விகள் எழுந்துள்ளன. மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்றால், உதாரணமாக, ஐ.நா.வானது பொது மக்கள் இழப்புகள் தொடர்பான புள்ளி விபரத்தை சேகரித்தது. ஆனால், வெளியிடப்படவில்லை. அண்மையில் யூனோசற் அமைப்பின் செய்மதிமூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் காஸா, சூடான் போன்று அல்லாமல் அவை வெளியிடப்படவில்லை.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் ஐ.நா. ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கு (ஐ.நா.வில்) கேள்வி எழுப்பப்படும்வரை எதுவும் கூறப்படவில்லை. நாட்டின் வட பகுதியிலிருந்து அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகள் வெளியேற்றப்பட்ட போதும் எதுவும் கூறப்படவில்லை. ஏன் யுத்த நிறுத்தத்துக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்றும் மனிதாபிமான இடைநிறுத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டீர்கள் ஏன் என்பதும் குறித்து மக்கள் ஆச்சரியமடைந்தது ஏன் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

நம்பியார் சென்றார், மனிதாபிமான மதிப்பீட்டுக் குழுவை அனுமதிப்பதற்கான உறுதிப்பாடு இருப்பதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். நீண்ட பட்டியலை முன்வைக்கிறேன் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. இந்த மோதல் ஏன் வேறுபடுத்தப்படுகின்றது?

உண்மையில நீங்கள் யுத்த நிறுத்த அழைப்பை விடுக்கிறீர்களா? ஐ.நா. பாதுகாப்பு சபை இதனை விவாதிக்க முடியாவிடில் நீங்கள் சரத்து 99 ஐ பயன்படுத்தக் கூடுமா? அங்குள்ள பொது மக்கள் தொடர்பான உங்கள் கருத்து என்ன? வானத்திலிருந்து குண்டு வீச்சை எதிர்கொண்டுள்ள மக்கள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? மனிதாபிமான அடிப்படையில் நோக்கினால், நிச்சயமாக காஸா மற்றும் டார்பரின் நிலைவரம் தொடர்பாக தாங்கள் வேறுபட்ட முறையில் செயற்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது.

பான் கீ மூன்: இன்று காலை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடினேன். நிலுவையாக உள்ள சகல விடயங்களும் பேசப்பட்டன. சர்வதேச சமூகத்தின் முன்னுரிமைப் பட்டியலில் இலங்கை விவகாரம் உள்ளது. ஜனாதிபதியுடனான உரையாடலில் தற்போது மோதல் வலயத்தில் சிக்கியுள்ள பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பேசினோம்.ஐ.நா. குழு , ஐ.சி.ஆர்.சி.யூடாக மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து முயற்சிக்கிறோம். தற்போது அவர்களுக்கு வழங்கப்படுவது போதாது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐ.நா.ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பு: ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதில் தலைப்புச் செய்தியான “நிலைமையை நேரில் அறிய வருகைதருமாறு ஐ.நா. செயலாளருக்கு ஜனாதிபதி அழைப்பு’ என்ற செய்தியில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இன்னர்சிற்றி பிரஸ்: தூதுவர் ஒருவரை அனுப்புவது பற்றி சிந்தித்துள்ளீர்களா?

பான் கீ மூன்: அதனை பிறகு ஆராய்வோம்.