“இலங்கை நிலவரத்தை நேரில் வந்து ஆராய்வதற்காக சர்வதேச நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் எமது நாட்டின் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வவுனியா முகாம்களுக்குச் செல்ல பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சர்வதேசத்திற்கு அரசு விடுக்கும் செய்தி என்ன என்றே நாம் அரசிடம் கேள்வி எழுப்புகிறோம்” என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது “எமது பிரச்சினையில் சர்வதேசத்தின் தலையீடு தேவை இல்லை; எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என அன்று சிலர் கூறினர். இன்று இலங்கை நிலைமையை நேரில் வந்து அவதானிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அதே போன்று இந்தியாவின் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்றோருக்கும், இலங்கை நிலைமையை நேரில் வந்து ஆராய அழைப்பு விடுக்கப்பட்டது.இலங்கை நிலையை நேரில் வந்து அவதானிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுக்க ஒரு நாட்டுத் தலைவர் என்ற வகையில் உரிமை உள்ளது. ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று இலங்கை வருகை தந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலைகளை ஆராய்ந்து சில கோரிக்கைகளை முன் வைத்தால், அதை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளதா என நாம் கேட்கிறோம்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசு வவுனியா முகாம்களுக்குச் செல்ல அனுமதி அளித்தது. எமது நாட்டு பிரதான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுனியா முகாம்களுக்கோ மன்னாருக்கோ செல்ல அனுமதி தர பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கின்றது. இது குறித்துக் கேட்டால், பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை எனக் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையில் செயற்படுகிறது என்றும் சர்வதேசத்திற்கு இலங்கை நிலைகுறித்து பல பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறது என்றும் எம்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. நாம் ஆட்சியில் இருக்கும் போதும் எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் பயங்கரவாதத்தை எதிர்த்தே வந்துள்ளோம்.
யுத்தத்தினால் மட்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியாது. அரசியல் ரீதியான தீர்வே தேவை. அன்று வன்னியில் கட்டளை இடும் தளபதியாக இருந்த டென்சில் கொப்பெகடுவவும் இதனையே தெரிவித்திருந்தார். இன்று அவ்வகையான ஒரு தீர்வைக் கையாளவேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது.யுத்தத்தினால் அல்லலுறும் மக்களுக்கு ஒரு தீர்வினைப் பெற்று கொடுத்து நாட்டில் சமாதானத்தை உருவாக்க அரசியல் தீர்வு ஒன்றினாலேயே முடியும் என அன்றும் ஐ.தே.க. தெரிவித்தது. இன்றும் அதனையே வலியுறுத்துகின்றது.” இவ்வாறு ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.
Thambiah Sabarutnam
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதில் ஐக்கிய தேசிய கட்சியே முன்னிக்கின்றது. இலங்கை வரலாற்றில் முக்கிய தீர்வு முயற்சிகளான, 1957ம் ஆண்டு பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம், 1987ல் செய்துகொள்ள்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம், 2000ம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம் கொண்டுவந்த தீர்வுப்பொதி என்பனவற்றை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியே முறியடித்து வந்துள்ளது. சுதந்திர இலங்கையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்து, இந்திய வம்சாவழி மலையக தமிழ்மக்களின் பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பனவற்றை பறித்து, தனிச்சிங்கள சட்ட ஆலோசனையை முன்வைத்து, தமிழர்களுக்கு எதிரான இன வன்செயல்களை முன்னின்று நடாத்திவந்த பிரதான சிங்கள பேரினவாத கட்சி, ஐக்கிய தேசிய கட்சியே. இன்றும் கூட, ஒருபக்கத்தில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என போலியாக சொல்லிக்கொண்டு, மறுபக்கத்தில் அதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சி சீர்குலைத்து வருகின்றது. அதற்கு சிறந்த உதாரணம், இனப்பிரச்சினை தீர்வுக்காக இலங்கை அரசாங்கம் தற்பொழுது கூட்டிவரும் சர்வகட்சி கூட்டங்களிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி ஒதுங்கியிருப்பதாகும்.
ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தொடர்ச்சியாக பேரினவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தபோதும், தமிழர்களின் தலைமைகளாக ஆரம்பம் முதல் இருந்து வந்த கட்சிகளான தமிழ்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, இரண்டும் இணைந்த தமிழர் விடுதலைக்கூட்டணி என்பன மட்டுமல்லாது, இன்றைய புலிகள்வரை அனைவரும் அந்த ஐக்கிய தேசிய கட்சியுடனேயே அரசியல் கூட்டு வைத்து வந்துள்ளன.
இன்றை வரையான நீண்ட அரசியல் வாழ்க்கையில் ரணில் விக்கிரமசிங்க பொதுசன ஐக்கிய மக்கள் முன்னணியினால் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளைப் பிரதிபலிக்கும் வண்ணமாக முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுப்பொதியை (03.08.2000) பாராளுமன்றத்தினுள்ளேயே எரித்த அசிங்கமான அரசியல் வரலாறு அவருக்குண்டு.
அதற்கு மேலாக 1983ம் ஆண்டில் அரசாங்க ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இனக்கலவரத்தில் ரணிலுக்கும் பங்கிருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் ரணில் அரசாங்கத்தின் ஒரு பலமிக்க அமைச்சராக இருந்தது மாத்திரமன்றி, அவரது மாமனார் உறவுக்காரரான ஜே.ஆர்;. ஜயவர்த்தன தான் அன்றைக்கு நாட்டின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருந்தார். அப்படியான கட்டத்தில் ரணில் ஒரு சாதாரண தலையீட்டைச் செய்திருந்தாலே அந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. தமிழ் மக்களின் அவலங்களையும், படுகொலைகளையும் பார்;த்துக் கொண்டு மௌனமாக இருந்தார்.
அதற்கு முன்பு 1981ம் ஆண்டு நடைபெற்ற யாழ். மாவட்ட சபைத்தேர்தலின் போது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கு வேட்டு வைக்கும் விதமான அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டது ரணிலும் அமைச்சராகச் செயற்பட்ட அதே அரசாங்கம் தான். ரணில் போன்றோரின் பலமான ஆதரவுடேனேயே யாழ்ப்பாணப் பொதுநூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது. மேற்கண்ட செயற்பாடுகளில் ரணிலின் பங்களிப்பு இல்லாதிருந்தால் அவற்றைக் கண்டித்து ஒரு வார்த்தை தானும் வெளியிட்டிருப்பார். ஆனால் அப்படிச்செய்யவில்லையே.
ரணில் அமைச்சுப் பதவி வகித்த அரசாங்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்பு கலவரத்தின் பின் சுமார் 11 வருடங்கள் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அப்படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. அதிலும் அந்தக் காலகட்டத்தில் ரணில் இரண்டு வருடங்கள் மட்டில் பிரதமராகவும் இருந்திருக்கின்றார். அந்த வகையில் மனப்பூர்வமான தேவைப்பாடு இருந்திருந்தால் அவரால் அதனைச் செய்திருக்க முடியும்.
அதுமட்டுமன்றி 1977ம் ஆண்டு ரணில் அங்கம்வகித்த ஐ.தே.கட்சியினர் ஆட்சி அமைத்ததன் பின்னரான (1993) வரையான காலத்தில் வரலாற்றில் தமிழ் மக்கள் மறக்கமுடியாதவாறான (1977, 1981, 1983 ) ஆகிய மூன்று பாரிய இனக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களை பயங்கரவாதிகளான ஆயுதக்குழுவினரின் பின்னால் அணிதிரள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்பதனை தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது
இந்நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்ததன் பின்னரேயே இலங்கையில் இனக்கலவரம் என்னும் கொடிய நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்டது என்பதனை தமிழ்மக்கள் மறுக்கமுடியாது
1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைத்ததுமன்றி அதன் போது வீடிழந்த மக்களுக்கென அருணோதய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் சீத்தாவக்கபுர மற்றும் கல்கிஸ்ஸையின் படோவிற்றை பிரதேசங்களில் வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பது வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்கள் மீதான தனது தனிப்பட்ட கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
குருநகரிலுள்ள தேவாலயம் ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சியின்போது (05.04.1993) விமானத் தாக்குதல்மூலம் சேதமாக்கப்பட்டது. பின்னர் பயங்கரவாதிகளின் தூண்டுதலின்பேரில் (04.07.2005) இராணுவத்தினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எவிவிடப்பட்டு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சிக்காலத்தின்போது குருநகரில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் தமிழ் இளைஞர்களுக்கான பாரிய சித்திரவதை முகாமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ரணில் பலமிக்க அமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் வடக்கு-தெற்கின் உறவுப் பாலமாக விளங்கிய யாழ்.தேவி புகையிரதப் பயணத்தை அரசாங்கம் இடைநிறுத்தியது. அதே காலகட்டத்தில் கல்வி அமைச்சராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கென எதுவித சேவையும் ஆற்றியிருக்கவில்லை. குறைந்த பட்சம் தமிழ் மாணவரின் கல்வி நிலை குறித்த கலந்துரையாடல் ஒன்றைக் கூட நடாத்தியிருக்கவில்லை. மேலும் முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்க தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களை மரத்தைச் சுற்றிப்படரும் கொடிக்கு ஒப்பிட்டுப் பேசிய காலகட்டத்தில் ரணில் பிரதமர் பதவியை வகித்துக் கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட அவர் மறுதலித்துப் பேசியதில்லை. அதிலிருந்தே அவரும் அவ்வாறான ஒரு கருத்தை ஆமோதிக்கின்றார் என்பதாகத் தானே அர்த்தப்படுகின்றது?
ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுள் ஒன்றுக்கு தமிழ் இனத்தவர் ஒருவரை நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. ரணில் பதவியேற்கும் காலத்தில் கட்சியின் பொருளாளராகச் செயற்பட்டவர் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் நகரபிதாவான கே.கணேசலிங்கம் ஆவார். ஆனால் ரணில் கட்சித் தலைமையை ஏற்றபின் கணேசலிங்கம் ஒதுக்கப்பட்டார். கடைசியில் அவர் மனம் வெறுத்து,கட்சியை விட்டே விலகி பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டார்.
SUDA
ஐயா ஜயலத்! உம்மை அங்க விட்டால் இருப்பதை இல்லையென்றும் இல்லாததை இருப்பதாகவும் சர்வதேசத்துக்கு சொல்லி வைப்பீர். ஆக அவர்களே நேரடியாக வந்து நிலைமையை பார்த்துச் செல்வது நல்லதுததானே. அதாலதான் இந்த ஏற்பாடு.
ஒரு பக்கம் அரசாங்கம் பாரிய ஆயுதங்களைப் பொதுமக்கள் பகுதிக்குள் பிரயோகிப்பதாக பிரசாரம் செய்யும் நீங்கள் மறுபக்கம் இறுதி வெற்றியை அண்மித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தை சுதந்திரமாக செயற்பட விடாமல் அரசு தடுப்பதாக சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறீர்கள்.
இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிழைப்பு.
Raj
தம்பையா சபாரட்ணம் அவர்களுக்கு பணிவாக தெரிவித்துக்கொள்வது- வெட்டுதல்/ஒட்டுதல் முறையில் கருத்துக்களை இடுவதனால் தேவையற்ற அளவில் இடம் ஒதுக்கப்படுவதுடன் வாசிப்பதிலும் சுவை குறைந்து காணப்படுகிறது. சுருக்கமாக சொந்தக்கருத்துக்கள் வைக்கப்படுவதனை வரவேற்கின்றோம். அனைத்து இணையத்தளங்களையும் நாமும் பார்வையிடுகின்றோம். நன்றி.