பெளத்த தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்க ளின் பிரகாரம் தமது வாழ்க்கையினை சீர்செய்து கொண்டு சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்பு வதற்கு சகல சமூகத்தினரும் முன்வரவேண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மிகவும் கருணையுடன் சகல உலகவாழ் உயிரினங்களுக்கும் நற்பாதையைக் காட்டிச் சென்ற எமது புத்த பெருமானின் அளவற்ற நற்குணங்களை நினைவுகூர்ந்து உலகவாழ் பெளத்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புனித வெசாக் தினத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்திலே பெளத்த தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்களின் பிரகாரம் தமது வாழ்க்கையினை சீர்செய்துகொண்டு சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புதற்கு உதவுமாறு சகல சமூகத்தினருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.
பெளத்த தர்மத்தால் வளர்க்கப்பட்ட மனித சமூகமொன்றும், உயர் கலாசாரமொன்றும் எமக்குள்ளது. குரோதம், வைரம் போன்ற தீய குணங்களற்ற, ஏனையோருக்கு மதிப்பளித்து உயர் மனிதர்களாக வாழ்வதற்குரிய நற்பாதைகளையும், சமூகத்திலே தீயபழக்கவழக்கங்களுடன் வாழ்வதன் மூலம் ஏற்படக்கூடிய கெடுதிகளையும் பெளத்த தர்மமானது சிறந்த முறையில் போதித்துள்ளது.
சகல பேதங்களையும் துறந்து அமைதியானதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல விடயங்களையும் அரசாங்கமானது மேற்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்திலே மீண்டும் நற்பண்புகள் நிறைந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவது உங்களது கட்டாய கடமையாகும்.
வடக்கு பிரதேசத்தில் தீவிரவாத செயற்பாடுகள் காரணமாக மிகவும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து இருப்பிடங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படும். இச்சந்தர்ப்பத்திலே துணையற்றவர்களுக்கு உதவும் உயர் புண்ணிய கருமத்தை நிறைவேற்றுவதற்கு வெசாக் வாரத்தினுள் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இலங்பை வாழ் மக்களுக்கு புனித வெசாக் தினமானது சிறப்புற வாழ்த்துகிறேன். இவ்வாறு பிதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.