Multiple Page/Post

இலங்கை அகதிகளின் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு தயாராக இருங்கள் – தமிழக பாடசாலைகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்

world-maps.jpgஇலங்கை அகதிகளின் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு தயாராக இருக்குமாறு தமிழக அரச பாடசாலைகளுக்கு மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனுமதி கோரி பல்வேறு திணைக்களங்களுக்கு பாடசாலைகல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிடின் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் வருகை தரக்கூடும் என்று ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் பொருளாளர் எஸ்.சி.சந்திரகாசனை மேற்கோள்காட்டி , ரைம்ஸ் ஒவ் இன்டியா நேற்று தெரிவித்திருந்தது.

“இலங்கையின் முகாம்களில் சுமார் 3 இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் சொந்தக்கிராமங்களில் அவர்களை மீளக்குடியேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. முகாம்களுக்குள் பாடசாலைகள் இருக்கின்றபோதும் அவை பொருத்தமானவையாக இல்லை. ஒழுங்கானபாடசாலைகளில் தமது பிள்ளை கல்வி கற்பதையே பெற்றோர் விரும்பக்கூடும். அதனால் இங்கு (தமிழகம்) வருவதற்கு அவர்கள் விரும்புவார்கள் என்று சந்திரகாசன் கூறியுள்ளார்.

இதேவேளை 29 ஜூன் 2009 திகதியிடப்பட்ட கடிதமொன்று பாடசாலை கல்விச் செயலாளரால் பாடசாலைக் கல்வி, ஆரம்பக்கல்வி, ஆதிதிராவிடர், பழங்குடிநலன், வருவாய் நிர்வாகம், பின்தங்கிய வர்க்கத்தினர், மிகப்பின்தங்கிய வர்க்கத்தினர், சிறுபான்மையினர் நலன், சமூகநலன், போஷாக்கு உணவு செயல்திட்ட திணைக்களங்கள் ஆகியவற்றின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு வரை இலங்கை அகதிகளின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்குமாறு அக்கடிதத்தில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு சீருடை, பாடசாலைப் புத்தகங்கள், தொப்பிகள், நண்பகல் உணவு என்பனவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம்; தலைமை தாங்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

இலங்கையில் அண்மையில் முடிவடைந்த யுத்தத்தின்போது இடம்பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சர்வதேச ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் 6 முன்னணி மனித உரிமைக்குழுக்கள் கேட்டுள்ளன.

இது தொடர்பாக ஒபாமாவிற்கு இந்த அமைப்புகள் கடிதம் எழுதியிருப்பதாக “ஸீநியூஸ் கொம்’ தெரிவித்திருக்கிறது. யுத்தத்தின் போது இலங்கை அரசபடையினராலும் விடுதலைப்புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் பாரதூரமான முறையில் மீறப்பட்டதை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக ஓபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன சர்வதேச விசாரணைக்குழு ஒன்றுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்குமாறும் அதனை வென்றெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவை ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அத்துடன், இடம்பெயர்ந்த மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுயாதீனமான மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் முகாம்களுக்கும் முன்னர் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கும் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ள இடங்களுக்கும் முழு அளவில் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்த மனித உரிமை அமைப்புகள் ஒபாமாவை கேட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்குவது இப்போது அவசியமானது என்றும் இதன் மூலம் உயிர்தப்பியுள்ள பொதுமக்களை பாதுகாக்கவும் மனிதப் பேரனர்த்தத்துக்கு பொறுப்பானவர்களை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க இது தேவையெனவும் நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதத்தில் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறு செய்வதற்கு தவறுவதானது பெறுபேறுகள் குறித்து அச்சம் இல்லாமல் அரசாங்கங்கள் பாரிய அடாவடித்தனங்களில் ஈடுபடுவதை ஊக்கிவிப்பதாக அமையும். ஆதலாலேயே இந்தத்தருணத்தில் தங்களின் உடனடியான நடவடிக்கை முக்கியமானது என்றும் கடிதத்தில் இந்த மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு; பெற்றோர் விசனம்

schoolgirls-sri-lanka.jpgமத்திய மாகாண கம்பளை கல்வி வலய புப்புரெஸ்ஸ க/கலைவாணி தமிழ் வித்தியாலயத்தில் கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தமது பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். 576 மாணவர்களைக் கொண்டு இயங்கிவரும் இப்பாடசாலையில் கற்பித்தல் பணிகளுக்கு 32 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 13 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர்.

19 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களோடு அடங்கலாக கற்பித்து வந்த நிலையில் 5 ஆசிரியர்கள் பயிற்சியின் பொருட்டு ஆசிரியர் கலாசாலைக்கு சென்றுள்ளனர்.

அண்மையில் 11 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற போதும், பாடசாலையில் ஏற்கனவே இருந்த 11 ஆசிரியர்கள் மாற்றலாகிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலை தோன்றியுள்ளதுடன், ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பிரதான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமையால் இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கை விண்ணப்பித்திருக்கும் கடன் நாணய நிதியத்தின் நோக்கத்திற்கு “பரீட்சை’

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருக்கும் 1.9 பில்லியன் உயர் கடன் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இது அந்த அமைப்பின் நோக்கத்திற்கான பரீட்சையாக அமையும் என்றும் பிரதி நிதியமைச்சரான சரத் அமுனுகம கூறியுள்ளார்.

இக் கடன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருந்த நிலையில் அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கையின் கடன் விண்ணப்பம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அரசியலுக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது. இது பொருளாதார விவகாரம் அல்ல. அடுத்த நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குள் பதில் என்னவென்பது பற்றி எமக்குத் தெரியவரும் என்று கொழும்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

1.9 மில்லியன் டொலரை அவர்கள் வழங்குவார்களா என்பது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நோக்கத்திற்கு இது பாரிய பரீட்சையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக பூர்த்தியடைந்துள்ளதாகவும் கடனை வழங்காவிடின் அவர்கள் தரப்பில் (நாணய நிதியம்) சங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் சரியான விடயத்தை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றும் கப்ரால் கூறியுள்ளார்.

அன்பென்று கொட்டு முரசே!!! – தோழர் சிவம் நினைவு நிகழ்வு : தேடகம்

Comrade_Siva_Meetingதோழர் சிவம் அவர்களின் நினைவு நிகழ்வு ரொறன்ரோவில் நிகழ்கிறது. தேடகம் அமைப்பினரால் யூலை 4ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து சி சிவசேகரம் கலந்துகொள்கிறார். இவரே தோழர் சிவம் பற்றிய நினைவுப் பேருரையை ஆற்றுகிறார். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாய் முழுவதும் மானிடத்திற்காய் உழைத்தவர் தோழர் சிவம் என்ற தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் என தேடகம் அவரை கௌரவித்து உள்ளது. அன்பென்று கொட்டுமுரசே என்ற தலைப்பில் இந்நிகழ்வை தேடகம் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Further Details : Comrade_Siva_Meeting

Related Articles:

கம்யூனிஸ்ட் ஆர்வலர் சிவம் கனடாவில் மரணம்

கொம்யூனிஸ்ட் சிவா காலமானார்! : தேடகம் (செய்திக் குறிப்பு)

கனடாவில் நாளை ‘உயிர்த்தெழுவோம்’: மாபெரும் எழுச்சி நிகழ்வு

kalam-pulam.jpgகனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் ‘உயிர்த்தெழுவோம்’ எழுச்சி நிகழ்வு ரொறன்ரோவில் குயின்ஸ்பாக் – ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றலில் நாளை சனிக்கிழமை 4 ம் திகதி மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இலங்கையரை ஆஸி.க்கு கடத்தியதாக பிரிட்டிஷ் பிரஜை மீது குற்றச்சாட்டு

boat.jpgஅவுஸ்தி ரேலியாவுக்கு இலங்கையரை சட்ட விரோதமாகக் கடத்தி வரும் நடவடிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அவுஸ்திரேலியப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். தனது போர்டிங் அனுமதி அட்டையை இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்திக்கொண்டு கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க 63 வயதுடைய ஒருநபர் இடமளித்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பயணிகளின் போர்டிங் அட்டைகளைப் பயன்படுத்தி மேலும் இரு இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க இந்த நபர் உதவியதாகவும் நம்பப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து டார்வினுக்கு திங்கட்கிழமை விமானம் மூலம் வந்த இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் ஆகக்கூடியது 10 வருடங்கள் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். டார்வின் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த நபர் ஆஜர் செய்யப்படவிருப்பதாக “நெரால்ட் சன்’ பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

யாழ்.தேவி ரயில் சேவை விஸ்தரிப்பு திட்டத்திற்கு கல்வியமைச்சு ஒத்துழைப்பு!

train_.jpgவடக்கின் வசந்தம் யாழ்.தேவி ரயில் சேவை விஸ்தரிப்பு திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

நேசத்தின் தரிப்பிடம என்ற பேரில் கல்வியமைச்சு இதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ஆனையிறவு ரயில் நிலையத்தைப் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

வட மாகாணம் தவிர்ந்த நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவிகளைப் பெற கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பிரகாரம் இம்மாதம் 7ம்திகதி முதல் 17ம் திகதிவரையான இருவார காலத்துள் பாடசாலைகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.

இலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தம்

profrajiwawijesinha.jpgஇலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 30 ஆந் திகதியுடன் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சமாதானச் செயலக நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நொந்த மனங்களை குணப்படுத்த வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது.- ஜனாதிபதி

slprasident.jpgஒருவருக் கொருவர் வேற்றுமை பாராட்டும் காலம் இதுவல்ல. சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும் இனங்களுக்கிடையில் நெருக்கடி மற்றும் விரோதங்களை உண்டு பண்ணும் வேற்றுமை பற்றி ஆராய்வதைவிடுத்து,  சகலரும் நாட்டை நேசிக்கக் கூடிய குழுவாகச் செயற்படும் சுழலை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வகட்சிக்குழு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதல் முறையாகக் கூடியது. ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையினால் பயங்கரவாதத்தினால் சகல உரிமைகளையும் இழந்திருந்த அப்பாவி மக்களை மீட்க முடிந்துள்ளது. அம் மக்களது நொந்த மனங்களை குணப்படுத்தும் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது. அபிவிருத்தியில்லாமல் நல்லிணக்கமில்லை என்பதை நம்புபவன் நான். இந்த வகையில் கடந்த கால கசப்புணர்வுகளைக் களைந்து நல்லுறவு,  சமத்துவமான எதிர்காலத்தை உரிமையாக்கிக் கொள்வதற்காக சகலரும் செயற் பட வேண்டியுள்ளது.

பயங்கரவாதத்தினால் கடந்த காலங்களில் தமது அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயகத்தை இழந்த மக்கள் நம் நாட்டில் இருந்துள்ளனர் என்பதை நான்அறிவேன். மனிதாபிமான நடவடிக்கையினால் அவர்களை நாம் மீட்டுள்ளோம். உலகிலேயே பெருமளவு பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம். அம் மக்களின் நொந்த மனங்களை தேற்றுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். அது ஒரு அரசாங்கம் அல்லது ஒரு கட்சியின் பொறுப்பு மட்டுமல்ல. அதனால் நாம் தற்போது எம் மத்தியில் நிலவும் வேற்றுமைகளை ஆராய்வதை விடுத்து நம் மத்தியிலுள்ள சமத்துவம் எதுவென ஆராய வேண்டும். அதற்கிணங்க ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

வடக்கில் நலன்புரி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் நலன் பற்றியும் அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் கட்சிகள் தத்தமது நிலைப்பாட்டைத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு இந்த மாநாட்டைக் கூட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

நான் முன்னரே தெரிவித்தது போன்று வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதும் அவர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவது அவசியம். அதற்கு விரைவான அபிவிருத்தி அவசியம். நாம் தற்போது ஆரம்பித்த இந்த நடவடிக்கையை மிக ஆக்கபூர்வமாக முன்னெடுப்பது மிகவும் முக்கியமாகும். இப்போது மீள் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 651 குடும்பங்களைச் சேர்ந்த 2409 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர். நாம் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். மக்களை மீளக் குடியமர்த்த முன்னர் நாம் மிதிவெடிகளற்ற பிரதேசத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

எவரையும் முகாம்களில் தங்கவைக்கும் அவசியம் எமக்கில்லை. அவர்களை மிக விரைவாக அவர்களின் பிரதேசங்களில் குடியமர்த்துவதே எமது நோக்கம். மிதிவெடி அகற்றப்பட்டதும் எமது முதல் நடவடிக்கையும் அதுவே. அதேபோன்று அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதும் எமது பொறுப்பாகும். அதற்காக 180 நாள் வேலைத் திட்டத்தை நாம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி அதன் குறைநிறைகளை ஆராய்ந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை. இனவாத அரசியல் கட்சிகள் எம்மத்தியில் இருகின்றன என நான் எண்ணவில்லை. இனவாதம் எப்போதோ கைவிடப்பட்டுவிட்டது. இந்நாட்டிலிருந்து இன வாதத்தை ஒழித்து நாட்டை நேசிக்கும் மக்களை கட்டியெழுப்ப வேண்டியதும் அனைவரதும் பொறுப்பாகும். குறிப்பாக வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய நாம் விரைவில் கூட வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் வெற்றிகரமாக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.