மத்திய மாகாண கம்பளை கல்வி வலய புப்புரெஸ்ஸ க/கலைவாணி தமிழ் வித்தியாலயத்தில் கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தமது பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். 576 மாணவர்களைக் கொண்டு இயங்கிவரும் இப்பாடசாலையில் கற்பித்தல் பணிகளுக்கு 32 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 13 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர்.
19 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களோடு அடங்கலாக கற்பித்து வந்த நிலையில் 5 ஆசிரியர்கள் பயிற்சியின் பொருட்டு ஆசிரியர் கலாசாலைக்கு சென்றுள்ளனர்.
அண்மையில் 11 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற போதும், பாடசாலையில் ஏற்கனவே இருந்த 11 ஆசிரியர்கள் மாற்றலாகிச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலை தோன்றியுள்ளதுடன், ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
பிரதான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமையால் இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.