November

November

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்!

1966 இல் நிறுவப்பட்ட சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு, வியன்னாவை தலைமையகமாகக் கொண்டதுடன், சர்வதேச வர்த்தகத் துறையில் முக்கிய சட்ட அமைப்பாகவும் விளங்குகிறது.

வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகச் சட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் அடிப்படைப் பணிகளாகும்.

சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவானது, தனது உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவியையும் வழங்குகிறது.

குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாகும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை ஆசிய பசுபிக் குழுவில் ஆசனமொன்றிற்குப் போட்டியிட்டு மொத்தமாக 177 வாக்குகளைப் பெற்றது.

இது குழுவிற்குள் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பத்தொரு உறுப்பினர்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிக வாக்குகளாகும்.

மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், சீனா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு ஆகியவை ஆசிய பசிபிக் குழுவிலிருந்து, சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பு நாடுகளாகும்.

இதில் இலங்கையானது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஆறு (6) வருட காலத்திற்கு பணியாற்றவுள்ளது.

இலங்கை இதற்கு முன்னர் 2004 – 2007 மற்றும் 2016 – 2022 ஆகிய காலப்பகுதிகளில் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது.

நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை !

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் பெறுமதியான காசோலைகளை வழங்கி இரண்டு கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டக்ளஸ் தேவானந்தா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் மேலதிக நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி, கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து தலா பத்து மில்லியன் ரூபாய் காசோலைகளை கொடுத்து மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரனிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் முதலாவது சாட்சியான தேவானந்தாவுக்கு சாட்சியமளிப்பதற்கான இறுதித் திகதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரன நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த சாட்சி கடந்த அமர்வில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இரு தரப்பினரின் பிரச்சினைகளையும் பரிசீலித்த மேலதிக நீதவான், அவருக்கு பிடியாணை பிறப்பித்து, முறைப்பாடு விசாரணையை ஜனவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பெருந்தோட்டமக்கள் 200 வருட காலம் அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் – பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தனது பிரதியமைச்சுக் கடமைகளை பொறுபேற்றுக் கொண்டார்.

பத்தரமுல்லை செஸ்திரிபாயவிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் இன்று(22.11.2024) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுபேற்றார்.

பெருந்தோட்டமக்கள் 200 வருட காலம் அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும். இந்நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள், பிரதியமைச்சரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சமும் , 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பொலிஸ் அதிகாரிகள் கைது – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சமும், 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார், காணொளியை காண்பித்து மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.

 

இதையடுத்து, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

 

முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்தோடு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாராளுமன்றத்தில் வைத்து ஊசி அர்ச்சுனா வெளியிட்ட நேரலை வீடியோ – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு !

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடரும் கனமழை – யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிப்பு!

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அடை மழை காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும். தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை நீக்கியது என்.பி.பி அரசாங்கம்!

இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என அவர் கூறியுள்ளார்.

மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று நடைபெற்றது.

இதில் 175 புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கடந்த கால அரசாங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிசொகுசு வாகனங்கள் வழங்கப்படுவதுடன், பெருந்தொகை மக்களின் வரிப்பணம் செலவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின்  சொகுசு வாகனங்களுக்காக 2.8 பில்லியன் ரூபாவை வாரி இறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் இந்த தொகை பொருளாதார நெருக்கடி காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்ச காலத்தில் இன்னமும் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாவீரர் தின நிகழ்வுகளுக்காக பாராளுமன்ற குழு கூட்டத்தின் திகதியை மாற்றிய அனுர அரசு – நன்றி கூறிய சிறீதரன் எம்.பி !

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது; பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது.

26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திகதிக்கு அக்கூட்டத்தை மாற்றியமைத்தது.

தமிழர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசு கரிசனை கொள்வது திருப்தி தருகின்றது. அந்தக் கரிசனையுடனேயே இராணுவ முகாம்களாக மாறியுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேற்றினால், அது அரசின் முன்னேற்றகரமான, முன்னுதாரணமான நடவடிக்கையாக அமையும். குறிப்பாக முள்ளியவளை, கோப்பாய், கொடிகாமம், ஏறாவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு, இராணுவத்தினரை வெளியேற்றினால், அது நிச்சயம் மக்கள் மனங்களில் அரசு குறித்த சாதகமான நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். மக்கள் தங்கள் மனக் கவலைகளை ஆற்றுவதற்கான இடமல்லவா அது?

எனவே, இந்தக் காலகட்டங்களில் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றோம். மாவீரர் நினைவேந்தலில் அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவதாகவே உள்ளன. அதுமாத்திரமல்ல சபாநாயகரின் தெரிவின் பின்னர் அவரை வாழ்த்துவதற்கு கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை. நேற்றைய 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகரை வாழ்த்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை.

ஆனால், இதன் பின்னர் எனக்கு அனுமதி கொடுக்கப்படாமைக்கான காரணத்தைக் கூறி அமைச்சர் பிமல் ரணட்நாயக்க எனக்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் முன்னனுதாரமாக உள்ளன.

அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்!

அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அதற்கமைய பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் வருமாறு,

1. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

 

2. நாமல் கருணாரத்ன – விவசாய, கால்நடை பிரதி அமைச்சர்

 

3. வசந்த ஜயதிஸ்ஸ – கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர்

 

4. நலின் ஹேவகே – தொழிற்கல்வி பிரதி அமைச்சர்

 

5. ஆர்.எம். ஜயவர்தன – வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

 

6. கமகெதர திஸாநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்

 

7. டி.பி. சரத் ​​- வீடமைப்பு பிரதி அமைச்சர்

 

8. ரத்ன கமகே – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்

 

9. மஹிந்த ஜயசிங்க – தொழிலாளர் பிரதி அமைச்சர்

 

10. அருண ஜயசேகர – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

 

11. அருண் ஹேமச்சந்திர – வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

 

12. அன்டன் ஜெயக்கொடி – சுற்றாடல் பிரதி அமைச்சர்

 

13. முகமது முனீர் – தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர்

 

14. எரங்க வீரரத்ன – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

 

15. எரங்க குணசேகர – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

 

16. சதுரங்க அபேசிங்க – கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்

 

17. ஜனித் ருவன் கொடித்துவக்கு – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்

 

18. கலாநிதி நாமல் சுதர்சன – மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்

 

19. ருவன் செனரத் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்

 

20. கலாநிதி பிரசன்ன குமார குணசேன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

 

21. டொக்டர் ஹன்சக விஜேமுனி – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

 

22. உபாலி சமரசிங்க – கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

 

23. ருவன் சமிந்த ரணசிங்க – சுற்றுலா பிரதி அமைச்சர்

 

24. சுகத் திலகரத்ன – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

 

25. சுந்தரலிங்கம் பிரதீப் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்

 

26. சட்டத்தரணி சுனில் வதகல – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர்

 

27. கலாநிதி மதுர செனவிரத்ன – கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்

28. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

29. கலாநிதி சுசில் ரணசிங்க – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து முதல்நாளே சர்ச்சையும் அமர்வை ஆரம்பித்தார் ஊசி அர்ஜுனா !

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (21) இடம்பெற்றது.

இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கிருந்த பாதுகாவலர்கள் வேறு ஆசனத்தில் அமரச் சொன்னதைத் தொடர்ந்து, ஒரு சில நிமிடங்கள் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“இங்கு வேறு ஆசனத்தில் அமர வேண்டுமென எங்காவது எழுதி உள்ளதா, எதிர்க்கட்சித் தலைவருக்கு வேண்டுமெனில் அவரைச் சென்று எங்காவது அமரச் சொல்லுங்கள். நான் இங்குதான் இருப்பேன்” என்றார்.

பின்னர், தான் எந்தக் கட்சியிக்கு ஆதரவு வழங்கினாலும், சஜித் பிரேமதாசவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன் எனவும் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டார்.

இவரது இந்த செயல்பாடானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.