18

18

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் !

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் என்ற வகையில் இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

 

பலப்பிட்டிய, கொடகெதர பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி பிறந்த இவருக்கு தற்போது 57 வயதாகும்.

 

ஐந்தாம் வகுப்பில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அவர் கண்ணில் பந்து பட்டதால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.

 

இந்த விபத்தின் பின்னர் சுகத் முற்றிலும் பார்வையற்றவராகி, அதன் பின்னர் மேலதிக கல்விக்காக இரத்மலானை பார்வையற்றோர் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

 

அதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் சித்தியடைந்த சுகத் வசந்த டி சில்வா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் வழிகாட்டி அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.

 

பின்னர், சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரியாக 25 வருடங்கள் நீண்ட சேவையாற்றிய சுகத் வசந்த டி சில்வா பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

 

உயர்தர கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே மக்கள் விடுதலை முன்னணியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த சுகத் வசந்த, தனது அரசியல் வாழ்க்கையில் தற்போது 40 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.

பொதுத்தேர்தலில் 3357 வேட்பாளர்கள் போட்டியிட்டு 1.04 வீத வாக்குகளையே பெற்றனர்!

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3357 வேட்பாளர்கள் போட்டியிட்டு 1.04 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டனர்.

 

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சுயேச்சைக்குழு 17 மாத்திரம் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில் ஏனைய அனைத்து சுயேச்சைக் குழுக்களும் 13 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டிருந்தன.

 

வெற்றி பெற்ற சுயேச்சைக்குழு 17 மாத்திரம் 27,855 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. போட்டியிட்ட ஏனைய 284 சுயேச்சை குழுக்களில் 282 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரம் ஒரு வாக்குகளையேனும் பெற்றுக்கொண்டிருந்தன.

 

அதனடிப்படையில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3357 வேட்பாளர்கள் போட்டியிட்டு 115,966 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதில் ஒரு சுயேச்சைக்குழு 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 70 சுயேச்சைக் குழுக்கள் 1000 – 7500 வரையான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தன.

 

40 சுயேச்சைக் குழுக்கள் 500 – 1000 வரையான வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் 139 சுயேச்சைக் குழுக்கள் 100 – 500 வரையான வாக்குகளையும் 31 சுயேச்சைக் குழுக்கள் 100 க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டிருந்தன.

 

இதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 11,148,006 மொத்தம் செல்லுபடியான வாக்குகளில் 1.04 வீத வாக்குகளை மாத்திரம் சுயேச்சைக் குழுக்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம்- டக்ளஸ் தேவானந்தா

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ், தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தலுக்கு முன்னர் ஈ.பி.டி.பி. க்கு எதிராக முனனெடுக்கப்பட்ட பிரசாரங்களுக்கு அப்பால், தேர்தலுக்கு பின்னரும் வெளியாகின்ற காழ்ப்புணர்வு மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்த உண்மைகளை, நாடளாவிய ரீதியில் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாய கடமை கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை – அனுர குமார திசாநாயக்க

இலங்கையின் வரலாற்றில் அரசியல் வரைபடம் மாற்றமடைந்துள்ளது. பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. இதனையடுத்து புதிய அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு பலமான ஆணையை வழங்கிய அனைத்து மக்களுக்கும் எமது நன்றிகள். பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும். மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடைத்தது. அதிகாரத்தின் ஊடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது. மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. எந்தவொரு அதிகாரம் வழங்கப்பட்டாலும் அதில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.

வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் சமமானவை. பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது.

இலங்கையின் அரசியல் கலாசாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது.

 

இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்க முயற்சித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய மக்கள் சக்தியின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் தேவை.

இதன்பின்னர் நாம் வெற்றிகரமான முறையில் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பேற்றது புதிய அமைச்சரவை – இராமலிங்கம் சந்திரசேகருக்கு கடற்றொழில் அமைச்சு!

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

 

பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் விஸ்வரூப அவையில் சிக்குண்டு காணாமல் போன 150 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 92 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளதுடன் 58 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.

 

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 77 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்த நிலையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் இத்தொகை 94 ஆக அதிகரித்துள்ளது.

 

இதில் 70 க்கும் மேற்பட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனையோர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தனர்.

 

மஹிந்த அமரவீர, அஜித் ராஜபக்ச, நிபுன ரணவக்க, கஞ்சன விஜேசேகர, கலாநிதி மனுச நாணயக்கார, கலாநிதி ரமேஷ் பத்திரன, சம்பத் அத்துகோரள, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, சசீந்திர ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, ரொஷான் ரணசிங்க, திலும் அமுனுகம, ஜனக வக்கும்புர, விதுர விக்ரமநாயக்க, இந்திக்க அநுருத்த, பிரசன்ன ரணவீர, மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த, ஜகத் குமார சுமித்ராராச்சி, பியல் நிஷாந்த, கலாநிதி சன்ன ஜயசுமன, துமிந்த திஸாநாயக்க, வீரசுமண வீரசிங்க, சஞ்சீவ எதிரிமான்ன, ஹரின் பெர்னாண்டோ, கோகிலா ஹர்சனி, டி.பி.ஹேரத், அனுப பெஸ்குவல் ஆகியோரும் இந்தத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்.

 

டிலான் பெரேரா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரமித்த பண்டார தென்னக்கோன், பந்துலால் பண்டாரிகொட, சரித ஹேரத், சிசிர ஜயக்கொடி, சந்திம வீரக்கொடி, டீ.வீரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, அசங்க நவரத்ன, சாந்த பண்டார, மஞ்சுளா திசாநாயக்க, ருவன் விஜயவர்தன, நிமல் லன்சா, அசோக்க பிரியந்த, சிந்தக்க மாயாதுன்னே, லசந்த அழகியவன்ன, வசந்த யாப்பா பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, ஹேர்ல் குணசேகர, ரஞ்சன் ராமநாயக்க, வடிவேல் சுரேஸ், நளின் பெர்னாண்டோ, உபுல் மஹேந்திர, டிலான் ஜயதிலக்க, சரத் வீரசேகர, சுசில் பிரேமஜயந்த, இசுரு தொடங்கொட, மொஹான் பிரியதர்சன டி சில்வா, பிரேமலால் ஜயசேகர, சந்திரசிறி முத்துகுமாரன, ராஜிக்கா விக்ரமசிங்க ஆகியோரும் தோல்வியுற்றுள்ளனர்.

 

தாரக்க பாலசூரிய, நாலக்க பண்டார, முதித்தா பிரியதர்சினி, ஜகத் பிரியங்கர, சுமித் உடுகும்புர, அருந்திக்க பெர்னாண்டோ, விஜித்த பேருகொட, ராஜித்த சேனாரத்ன, சிவநேசத்துரை சந்திரகாந்தன், நிமல் சிறிபால டி சில்வா, புத்திக்க பத்திரன, ஹெரான் விக்ரமரத்ன, மனோ கணேசன், ஹிருணிக்கா பிரேமசந்திர, அசோக்க அபேசிங்க, துசார இந்துனில், லலித் எல்லாவெல, லலித் வர்ணகுமார, விஜித் விஜித்தமுனி, நியோமல் பெரேரா, பியசேன கமகே, லசந்த சேனாநாயக்க, ஜயரத்ன ஹேரத், எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, வேலு குமார், மயில்வாகனம் உதயகுமார், மருதபாண்டி ராமேஸ்வரன், கோவிந்தம் கருணாகரன் ஆகியோரும் தோல்வி பட்டியலில் உள்ளடங்குவர்.