November

November

இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், உறுதியான திகதி உள்ளிட்ட விடயங்கள் இதுவரையில் இறுதிப்படுத்தப்பட வில்லை. எவ்வாறாயினும், இலங்கையின் பார்வையில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மிகவும் முக்கியமானதாகும்.

இதற்கு பிரதான காரணம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி விஜயத்தை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இலங்கை – இந்திய இணைப்புத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து இருதரப்பு பேச்சுக்களில் முக்கிய விடயமாக கருதப்படும்.

குறிப்பாக, ரணிலின் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஒப்பந்தம், திருமலை பொருளாதார வலயத் திட்டம், மன்னாரில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் பணியை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கியமை உட்பட கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி திட்டமும் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.

மேலும் இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர் இவ்வாறான அறிவிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையானது இருதரப்பு பேச்சுக்களில் இந்திய முதலீடுகள் தொடர்பில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் விடயங்களாக இருக்கும்.

மறுபுறம், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை இந்தியா கடந்த காலத்திலிருந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது.

இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு சீனா அனுமதிப்பதற்கும் இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், சில சந்தர்ப்பங்களில் ஆட்சி மாற்றங்களுக்கு கூட இந்த எதிர்ப்புகள் வழிவகுத்தன.

இதனாலேயே இந்த டிசம்பர் மாதம் வரை சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனவே, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, சீன விவகாரம் மற்றும் இருதரப்பு இணைப்பு திட்டங்களின் எதிர்காலம் போன்ற தலைப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

அதே போன்று சீன – இந்திய நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீண்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்று புலம்பெயர் தமிழர்கள் மரணம்!: ஒரு தற்கொலை! ஒரு கொலை! ஒரு விபத்து!  

மூன்று புலம்பெயர் தமிழர்கள் மரணம்!: ஒரு தற்கொலை! ஒரு கொலை! ஒரு விபத்து!

“வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” வட மாகாண ஆளுநர்

1. தலைநகர் லண்டனின் முக்கிய புகையிரத நிலையங்களில் ஒன்றான இயுஸ்ரன் அன்டர்கிறவுண்ட் ஸ்ரேசனில் 57 வயதான தமிழர் ஒருவர் அண்டர்கிறவுண்ட் ரெயிலில் பாய்ந்து மரணத்தைத் தழுவியுள்ளார். யாழ் இந்துக்கல்லூரியில் 1988 பட்ஜ்ஜில் (batch) கற்ற இவர் லண்டனில் வாழ்ந்தவர். நவம்பர் 19 இரவு 10:30 மணியளவில் லண்டன் இயுஸ்ரன் அண்டகிறவுண்ட் ரெயினில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் அவசர மருத்துவப் பிரிவினரும் விரைந்து வந்த போதும் மரணம் அவ்விடத்திலேயே நிகழ்ந்து விட்டதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். லண்டனில் புகையிரத நிலையங்களில் வீழ்ந்து தற்கொலை செய்கின்ற சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டு லண்டனில் பிரபல ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளரும் புகையிரத நிலையத்தில் மரணித்தது அனைவரும் அறிந்ததே. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தமிழர்களின் தற்கொலை மரணங்கள் லண்டன் புகையிரத நிலையங்களில் நடப்பது வழமை.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்பில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அதிருப்தி!

நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(Caffe) தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கேலிக்குரிய வகையில் நடந்து கொள்வதற்காக மக்கள் உறுப்பினர்களை தெரிவு செய்வதில்லை எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் இருந்து சுயேச்சைக் குழுவின் கீழ் இவ்வருடம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா  முதல் நாளிலேயே சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதற்கு அவர் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பல்வேறு காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதுதான் காரணம் என குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இராமநாதன் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.

 

இதேவேளை, நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதேவேளை, “10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது.

பாரம்பரியமாக புதிய நாடாளுமன்றம் தொடங்கும் வேளையில் நடைபெறும் இந்த மூன்று நாள் செயலமர்வில், நாடாளுமன்ற உறுப்பினரின் பங்கு, நாடாளுமன்ற சிறப்புரிமை, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் செயல்முறை, நாடாளுமன்றக் குழு செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பின் விதிகள், மேலும், மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கான நடைமுறை அமர்வும் நடத்தப்படும்.

தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்“ என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பதுளை – மகியங்கனை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

பதுளை – மகியங்கனை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த முதலாம் திகதி கொழும்பில் இருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருந்தனர். பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், இன்றையதினம் (23-11-2024) அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது என கூட்டுறவுத் திணைக்களத்தால் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை 22.11.2024 இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் புறக்கணிக்கப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்றவேண்டும்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட தேவையுடைய மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கும்போது அவர்களுக்கு காணி இல்லை என்பதைக் காரணம் காட்டி வீடுகளை வழங்காமல் விடவேண்டாம். காணிகளை அவர்களுக்கு கண்டறிவதற்குரிய ஒழுங்குகளை நாங்கள் முன்னெடுப்போம்.

கடந்த காலங்களைப்போன்று பனைசார் உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும். குறிப்பாக சில ஆலயங்களில் பின்பற்றப்படுவதைப்போன்று பனைஓலையிலான அர்ச்சனைப் பெட்டிகளை ஊக்குவிக்கவேண்டும், என்றார்.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன், வடக்கு மாகாண பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்கள் கள்ளை உற்பத்தி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கும், உற்பத்தி வரியாகவும் அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரூபாவைச் செலுத்தியுள்ளன.

அதேபோன்று 2 தனியார் நிறுவனங்கள், பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து போத்தல் கள்ளை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் ஊடாக பல லட்சம் டொலரை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளன.

கூட்டுறவுத் திணைக்களம் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சங்கங்களுக்கு 6 சதவீத வட்டிக்கு கடனை வழங்குகின்றன. அதனை அவர்கள் மக்களுக்கு ஆகக்கூடியது 15 சதவீதம் வரைக்கும் வழங்க முடியும்.

ஆனால் வடக்கில் சில சங்கங்கள் வேறு சமாசங்களிடமிருந்து 15 சதவீத வட்டிக்கு கடனைப் பெற்று அவற்றை மக்களுக்கு 21 சதவீதம் வரைக்கும் வழங்குகின்றன. இது வடக்கு கூட்டுறவுத்துறைக்கு சவாலாக இருக்கின்றது, என்றார்.

இதன்போது வடக்கு ஆளுநர், அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பணித்தார்.

சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா, திணைக்களத்தின் பல்வேறு வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்தார். மேலும் பணிப்பாளர், தம்மிடம் பல்வேறு உதவிகளைக்கோரி மக்கள் வருவதாகவும், ஆனால் தமது எல்லைக்குட்பட்டு அவர்களுக்குரிய உதவிகளைச் செய்ய முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறானவர்களுக்கு நன்கொடையாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்து உதவிகளைச் செய்யமுடியும் எனவும் அவ்வாறு உதவிகோரி வருபவர்களின் விவரங்களை வழங்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், நலனோம்பு மன்றம் (welfare forum) ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்ததுடன் அதற்கு கௌரவ ஆளுநர் அனுமதி வழங்கினார்.

உள்ளூராட்சி தேர்தல் எப்போது..? – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள தகவல் !

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்டது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கல் நிகழ்வும் – யார் எவர் தொகுதி இரண்டு நூல் வெளியீடும்!

லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு 23.11.2024 அன்று காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியில் அமைந்துள்ள லிட்டில் டெக் அக்கடமி வளாகத்தில் இடம்பெற்றது.

May be an image of 4 people, people studying and hospital

நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளரும் லிட்டில் டெக் அக்கடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினருமான

திரு.மு.தமிழ்செல்வன் அவர்கள் தலைமை தாங்க , சிறப்பு விருந்தினர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி திரு.சோ.தேவராஜா அவர்களும், சமத்துவக் கட்சி பொதுச்செயலாளர் திரு.மு.சந்திரகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

நிகழ்வில் ஆசிச்செய்தியை வழங்கிய திருமறைக்கலாமன்ற இயக்குனர் வண.பிதா ஜோசுவா அவர்கள், சிவஜோதி என்கின்ற ஆளுமையை நான்காவது ஆண்டாக நாம் கொண்டாடும் வகையில் ஓர் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு சென்றுள்ளார். இந்த ஆண்டு வெளிவரும் யார் எவர் தொகுதி இரண்டு நூலினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் இத்தனை பெரிய ஆளுமைகள் இருக்கிறார்களா என மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். இந்த நூலாக்க முயற்சிக்கு லிட்டில் டெக் அக்கடமியினருக்கு நன்றிகளையும் பாராட்டினையும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிவஜோதி ஞாபகார்த்த நினைவுப்பேருரையை சிரேஷ்ட சட்டத்தரணியும் மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதியுமான சோ. தேவராஜா அவர்கள் வழங்கினார்.

நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்கட்சி பொதுச் செயலாளருமான திரு முருகேசு சந்திரகுமார் அவர்கள் “கிளிநொச்சி மாவட்டத்தின் சமகால நிலைமைகள் தொடர்பிலும் – படித்த கிளிநொச்சி மாவட்ட இளைஞர்கள் வெளியேறுவது கவலையளிப்பதாகவும், லிட்டில் டெக் அக்கடமி போன்ற இலவச தொழில் கல்வி நிறுவனங்கள் இந்த இளைஞர்களை மேலும் தன்னம்பிக்கையுடன் உருவாக்குவது ஓரளவு திருப்தியளிப்பதாகவும் தெரிவித்திருந்ததுடன் சிவஜோதி போன்ற ஆளுமையான மனிதர்களை கொண்டாடுவதும் – அவர் பெயரினால் இன்னும் பல ஆளுமைகளை ஆவணப்படுத்துவதும் மகிழ்வளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி தொகுதி 2 ” என்ற நூலும் வெளியீடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு 2023 கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய ”யார் எவர் தொகுதி ஒன்று’ எனும் நூல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. யார் எவர் தொகுதி இரண்டினை சிவஜோதி அவர்களின் தந்தை திரு.சி.வயித்தீஸ்வரன் அவர்கள் வெளியீடு செய்ய நூலுக்கான வெளியீட்டுரையை ஆசிரியர் திரு.கைலாயநாதன் துஷ்யந்தன் அவர்கள் வழங்கி வைத்தார். வெளியீட்டுரையில் பேசிய துஷ்யந்தன் அவர்கள், காலத்தின் தேவை உணர்ந்து காத்திரமான ஓர் நூலாக்க முயற்சியை லிட்டில் டெக் அக்கடமியினர் மேற்கொள்வது காத்திரமான பணியாகும். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் என்பதை தாண்டி ஒவ்வொரு ஆளுமையினதும் தொடர்பிலக்கம், முகவரி ஆகியவற்றை பதிவு செய்துள்ளமையானது உலகின் எப்பாகத்திலும் இருந்து கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளுடன் தொடர்பு கொள்ள வசதியை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஓர் சமூக ஆளுமை கௌரவிக்கப்பட்டு அவருக்கான “சிவஜோதி ஞாபகார்த்த விருது” வருடாவருடம் லிட்டில் டெக் அக்கடமியில் வழங்கப்பட்டு வருகிறது.
சிவஜோதி ஞாபகார்த்த விருது 2021இல் யாழ் பல்கலைக்கழக நாடக நெறியாளரும் அரங்காற்றுகை அமைப்பாளருமான எஸ் ரி குமரனுக்கு அவரது கலைப்பணிக்காக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022 விருது நாடகக் கலைஞரும் சினிமாக் கலைஞருமான பார்வதி சிவபாதம் அவர்களுக்கு அவருடைய கலைப் பயணத்தை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 2023 விருது கல்விப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து, தன்னுடைய பாடசாலையை உயர்நிலைக்கு கொண்டுவந்து, இலங்கையின் முன்மாதரியான பாடசாலைகளில் ஒன்றாக்கியமைக்காக, கிளி விவேகானந்த வித்தியாலய அதிபர் ஜெயாலக்ஸ்மி மாணிக்கவாசகனுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை 1,50,000 ரூபாய் பாடசாலையின் இனியத்தை மறுசீரமைக்க வழங்கப்பட்டது. இவ்வாண்டு விருதுக்குரிய மையப்பொருளாக தேசிய நல்லிணக்கம் தேர்வு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் இந்த ஆண்டு 2024க்கான சிவஜோதி ஞாபகார்த்த விருதும், அதனுடன் கூடியதான ரூபா ஒரு லட்சம் பணப்பரிசும் வணக்கத்துக்குரிய சுனேத்த தேரோ அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விருதினை பெற்றுக்கொண்ட வணக்கத்துக்குரிய சுனேத்த தேரோ அவர்கள் பேசிய போது ” லிட்டில் டெக் அக்கடமியின் உருவாக்குனர் திரு.த. ஜெயபாலன் அவர்களுடனான நட்பின் வெளிப்பாடாக இந்த நிகழ்வுக்கு நான் வருகை தந்திருந்தேன். ஆனாலும் விருது வழங்கப்பட்டது மகிழ்வளிப்பதுடன் ஓர் மாற்றமான சமூகத்தை படைக்க லிட்டில் டெக் அக்கடமியினர் இயங்குவதை நிரூபித்துள்ளது. இனப்பிரச்சினைகள் – மதப்பிரச்சினைகள் இல்லாத ஓர் நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வுகளின் இறுதியில் லிட்டில் டெக் அக்கடமியின் உதவிப்பணிப்பாளர் பாலசிங்கம் கஜீபன் ஏற்புரையை வழங்க, திருமதி கம்சகௌரி அவர்கள் நன்றியுரையை வழங்கி நிகழ்வுகளை நிறைவு செய்தார். ஏறத்தாழ நூற்றி ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டு விழாவில் மேடையேற்றப்பட்ட சண் நாடக குழுவினரின் “முட்டை” நாடகம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யூலி சங் உடன் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார் சைக்கிள் கஜா. !

யூலி சங் உடன் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார் சைக்கிள் கஜா.
அத்தானி குமுமத்துக்கு அமெரிக்கா பிடிவிறாந்து… இஸ்ரேல் பிரதமருக்கு ஐசிசி பிடிவிறாந்து…
“இன்றைய தினம் இலங்கைப் பாராளுமன்றத்தின் வரலாற்றில் மிக முக்கியமான தினம்…” என்று 10வது புதிய பாராளுமன்றத்தில் நேற்றுத் தனது உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி அனுரா. குழந்தைகளின் நாளாந்த பட்டினிப் போராட்டம் முதல் நாட்டின் பொருளாதாரத் தீர்வு வரை தனது நீண்ட உரையில் இலங்கையின் ஒவ்வொரு குடிமக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற விடயங்களை அவர் தொட்டுச்சென்றுள்ளார். தேர்தல் மூலம் மக்கள் எங்களோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் அதற்கு உண்மையானவர்களாக நாங்கள் செயற்படுவோம் என ஜனாதிபதி உறுதிஅளித்தார். வெறும் ஆசன எண்ணிக்கை என்றில்லாமல் அனைத்து மாகாண மக்களும் இணைந்து உண்மையான ஆணையை எமக்கு தந்துள்ளார்கள் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, இனவாதம் மதவாதம் இல்லாத நாடாக நாம் உருவாவோம், பாராளுமன்றம் இழந்த நம்பிக்கையை, மக்கள் பாராளுமன்றமாக்கி நாங்கள் அந்த நம்பிக்கையை மீளப்பெறுவோம் எனவும் தெரிவித்தார். சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் யாரும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவோம் குற்றமிழைத்தவர்கள் தப்பிக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம் எனவும் அவ்வுரையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடைய உரையின் பெரும்பகுதி நாட்டைப் பாதித்துள்ள பொருளாதாரம் பற்றியதாகவே இருந்தது. ஐஎம்எப் உடைய உடன்பாடு தாங்கள் ஆட்சிக்கு வருமுன்னரேயே முடிவை நெருங்கியதால் அதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிப்பது சாத்தியமானதாக இருக்கவில்லை என்றும் ஐஎம்எப் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தாங்கள் அமுல்படுத்துவோம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அது மிகவும் சவாலானது எனவும் சுட்டிக்காட்டினார். நாளை ஐஎம்எப் உடன் கொள்கைரீதியான உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் உற்பத்தியை அதிகரித்து நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பது, பொருளாதார வளர்ச்சியை மக்களோடு இணைப்பது அதாவது மேற்கு மாகாணத்தில் மட்டும் தங்கியில்லாமல் ஏனைய மாகாணங்களையும் மக்களையும் பொருளாதார வளர்ச்சியில் பங்காளிகளாக்குவது, அதன் மூலம் செல்வத்தை சிலருடைய கைகளில் இல்லாமல் அனைவரும் அனுபவிக்கச் செய்வதும் என்ற மூன்று பொருளாதாரத் தூண்களை ஜனாதிபதி அனுரா சுட்டிக்காட்டினார். பொருளாதாரக் கொள்கைகள் பற்றிக்குறிப்பிடும் போது தற்சமயம் சந்தைகள் பொருளாதாரத்தை சில நிறுவனங்களின் ஏகபோகமாக்கியுள்ளதால் அரசு அதில் கணிசமான தலையீடுகளை மேற்கொள்வதன் அவசியத்தை ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டினார். இவ்விடத்திலேயே என்பிபிக்கு பின்னாலுள்ள ஜேவிபியின் சிவப்பு நிறத்தில் உள்ள அரிவாளும் சுத்தியலும் வெளிப்பட்டது.
என்பிபி இன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா வெளிவிவகாரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக நேற்று சத்தியப்பிரமாணம் செய்து பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தேசிய மக்கள் சக்திக்குள் வேகமாக வளர்ந்துவருகின்ற ஒரு சமூகப்போராளியாக தேசம்நெற் இவரைக் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே. பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு, சம்பூர் அனல் மின்னிலைய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து சம்பூரைக் காப்பாற்றியவர்களில் அருண் முக்கியமானவர். தன்னை அரசியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வளர்த்துவரும் இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டமை அனைத்து சமூகங்களாலும் வரவேற்கப்படுகின்றது. மும்மொழியையும் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்ட அருண் ஹேமச்சந்திரா ராஜதந்திரிகளுக்குரிய கோட்சூட் அணிந்து தமிழில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மேலும் பெரும் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் தமிழில் பதவிப் பிரமாணம் செய்திருந்தார். தேசிய மக்கள் சக்தியின் இப்பாராளுமன்றத்தில் இரு அமைச்சர்களும் இரு பிரதி அமைச்சர்களும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சமூகப் போராளிகளாகவும் இருந்ததால் அவர்கள் ஜனாதிபதி அனுராவுடனும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளனர்.
10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார். என்.பி.பி அரசு திட்டமிட்டு முஸ்லீம்களை புறக்கணித்தது என பலரும் கூறிவந்த நிலையில் பிரதி சபாநாயகராக ஓர் முஸ்லிம் இனத்தவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். என்.பி.பி முஸ்லீம்களை நிராகரித்ததாக கூறிய இனவாத தரப்பின் பாஷையில் சொல்வதாயின் ஓர் முஸ்லீம் இனத்தவரை முன்மொழிந்தவர் ஓர் சிங்களவர் – அதனை வழிமொழிந்தவர் ஓர் தமிழர் என கூறலாம்.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகளை சர்வதேச மீனவர் தினத்தன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளனர் முல்லைத்தீவு மீனவர்கள். நேற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் அரசுக்கட்சிக்குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. மேலும் இந்தியாவுக்கும் அடிக்கடி பயணம் செய்து தங்களின் இருப்புக்கான அரசியலை செய்யும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் மறந்தும் வடக்கு மீனவர் பிரச்சனை தொடர்பில் இந்தியாவுடன் பேசியது கிடையாது. இவர்கள் செய்யும் தமிழ்தேசிய அரசியல் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே இந்த தேர்தலில் வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்கினர். இதை உணர்ந்து தேசிய மக்கள் சக்தி மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தெற்காசியாவின் இரண்டாவது பெரும் செல்வந்தரான கௌதம் அத்தானி இந்திய அரசுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பொய்யான ஆவணங்களைத் தயாரித்து அமெரிக்க முதலீட்டளார்களை ஏமாற்றினார், மற்றும் அமெரிக்க வங்கிகளிலிருந்து பெரும்தொகை கடன்களைப் பெற்றார் என்று அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. அத்தோடு கௌதம் அத்தானியையும் அவருடைய மருமகனையும் கைது செய்து நீதிமன்றத்துக்குக் கொண்டுவரவும் பிடியானையைப் பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கென்ய அரசு அத்தானி குழுமத்திடம் வழங்கிய விமானநிலைய விஸ்தரிப்புத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இச்செய்தி உலகப்பொருளாதாரச் சந்தைகளில் காட்டுத்தீயாகப் பரவ அத்தானி குழுமத்தின் பங்குகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு அத்தானி குழமம் 265 மில்லியன் அமெரிக்க டொலர்களை லஞ்சமாகக் கொடுத்து 20 வருடங்களில் 2 பில்லியன் லாபத்தை ஈட்டத் திட்டமிட்டிருந்தாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சூரியக் கதிர் மூலம் சக்தியை உருவாக்கும் திட்டத்திலேயே அத்தானி குழமம் தற்போது மாட்டுப்பட்டுள்ளது. அத்தானி குழுமம் இலங்கையிலும் கடந்த கால அரசுகளுக்கு லஞ்சம்ககொடுத்து ஒப்பந்தங்களை எழுதியுள்ளது. இவற்றை அமூல்படுத்துவதற்கு முன் இவை பற்றி தாங்கள்மீள் பார்வை செய்ய வேண்டும் என பிரதமர் ஹருனி அமரசூரிய முன்னர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அனுராவின் இந்திய விஜயத்தின் போது இதுவும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களும் பேசுபொருளாக அமையலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் நாட்டின் ஆட்சியாளர் பென்ஜமின் நெத்தன்யாகுவிற்கும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவவ் கலனற்க்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிவிறாந்து அனுப்பியுள்ளது. சர்வேதேச கிரிமினல் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் உட்பட 124 நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் இவர்கள் நுழைந்தால் சட்டப்படி கைது செய்ய கடமைப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகள் தாங்கள் இந்த உத்தரவை மதிப்பதாக அறிவித்துள்ளன. மாறாக அமெரிக்கா இந்த நீதிமன்ற உத்தரவைக் கண்டு கொதித்தெழுந்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் தனது எல்லைகளை மீறுவதாகவும் இந்நீதிமன்றம் இல்லாமலாக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனத்தில், லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் முஸ்லீம்களைப் படுகொலை செய்வதற்கு முழு ஆயுத மற்றும் அரசியல் போர்வையை வழங்கிவரும் அமெரிக்கா, யுத்த நிறுத்தம், படுகொலை நிறுத்தம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் வருகின்றபோது அவற்றை தனது வீற்ரொ அதிகாரத்தின் மூலம் அவற்றை நிறைவேற்ற முடியாது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய ஆட்சியாளர் ஒரு கிரிமினல் மோசடியாளர் என்று இஸ்ரேலிய நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்க கொண்டுவந்த வழக்கில், இஸ்ரேலிய இராணுவம் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது நெத்தன்யாகுவிற்கு பிடியானையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்தும் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தினமும் பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேலுக்கு உதவி வரும் இந்த அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இலங்கையில் 15 வருடங்களுக்கு முன் நடந்த படுகொலைகளை விசாரிக்க வேண்டும் என யூலி சங் உடன் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார் சைக்கிள் கஜா.
மன்னார் மருத்துவமனையில் மரணத்தை தழுவிய இளம்தாய் வனுஜா என்ற ஜெ ராஜசிறியும் அவருடைய கருவும் மகப்பேற்றின் போது நவம்பர் 19இல் இறந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளுக்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உத்தரவிட்டுள்ளார். இரு உயிர்களதும் உடல்கள் மரண விசாரணைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சிந்துஜா என்ற பட்டதாரி மனைவி மகப்பேற்றின் பின் ஏற்பட்ட இரத்தப் போக்கிற்கு அதே மன்னார் வைத்தியசாலையில் மருத்துவ அசட்டையீனம் காரணமாக உயிரிழந்தார். அவர் இறந்து அடுத்த நான்கு வாரங்களில் ஓகஸ்ட் 24இல் அவருடைய கணவர் எஸ் சுதன் தற்கொலை செய்து கொண்டார். ஊசி அர்ச்சுனா இவ்விடயத்தில் நியாயம் பெற்றுக் கொடுப்பேன் என்று ஸ்ரண்ட் அடித்தாலும் அதன்பின் அந்த விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. அந்த வழக்கு சாதாரண வகைப்பட்ட வழக்காகவே பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இவ்வழக்கை துரிதமாக விசாரிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிந்துஜா சார்பில் சட்டத்தரணி டெனீஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் ஆகியோர் இவ்விடயத்தை துரிதமாக நகர்த்த நீதிமன்றத்தில் கோரியதையடுத்து அடுத்த இரு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரிவிட்டுள்ளார்.
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம், ஏக்கிய ராஜ்ஜிய கொள்கையை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று ழுழங்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்ற சத்தியப் பிரமாணத்தை காணொலியாக வெளியிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். என்பிபி இன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் முன்மாதிரியோடு சேட்டும் வேட்டியும் அணிந்து வடக்கு – கிழக்கு தமிழ் தேசியவாதத்தை முண்டுகொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து அக்கானொலிகளை வாக்களித்த மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
லண்டனில் வருமானம் கூடிய ஈலிங் ஆலயம், தாயகத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் உயர்கல்விக்கு வழங்கி வந்த நிதியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிறுத்தியுள்ளதாக பயன்பெற்று வந்த மாணவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். இதனால் 240 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலயத்திலிருந்து இது தொடர்பில் எவ்வித விளக்கங்களும் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. ஆனால் இந்த மாணவர்களின் உயர்கல்விக்குரிய நிதி சேகரிக்கப்பட்டு வைப்பிலிடப்பட்டுள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆலயத்திற்கு சேருகின்ற வருமானத்தில் செலவீனங்கள் போக மீதியுள்ள நிதியில் மூன்றில் இரண்டு தாயக மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆலயத்தின் செயற்குழுவின் தீர்மானம் குறிப்பிடுகின்றது. ஆனால் அண்மைக்காலமாக தாயக மேம்பாட்டு நடவடிக்கைகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் ஏனைய ஆலயங்களைப் போல் கைவிட்டு வருகின்றது என அம்பாள் அடியார்கள் குற்றம்சாட்டுகின்றனர். உயர்கல்வி மற்றும் மாணவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கான நிதி ஆலயத்தின் நிதியிலிருந்து வருவதில்லை. அவை மக்களிடமிருந்து பிறம்பாக சேகரிக்கப்படுகின்ற நிதி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிதியையும் வழங்காமல் ஆலய செயற்குழு தாயக மக்களின் கல்வி வளர்ச்சியில் தடையைப் போடுகின்றது. இது தொடர்பில் ஆலயத்தின் செயற்குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட போதும் அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இது தொடர்பில் ஆலயத்தின் செயற்குழு விளக்கம் தந்தால் அதனை நிச்சயம் வெளியிடுவோம். வயதான ஆண்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் பெயரளவில் சில விடயங்களைச் செய்துவிட்டு பெருமளவான நிதியை மது, மாது என்றே செலவழிக்கின்றனர். அதற்கு லாக்கூர்னே சிவன் ஆலயம் நல்ல உதாரணம். மக்கள் சாமிக்கு லஞ்சம் கொடுத்து ஆசீர்வாதம் பெறமுடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் பாரிஸில் வாழும் தில்லைநாதன் சிவகுரு.
அரச உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார். என்.பி.பி அரசாங்கம் நாட்டின் அனைத்து இனக்குழுக்களில் இருந்தும் திறமையானவர்களை தெரிவு செய்து அரசின் பொறுப்பான பதவிகளுக்கு நியமித்து வருகின்றது. பனை அபிவிருத்திச்சபைக்கு நியமிக்கப்பட்டவரின் நியமனம் அவருடைய முன்னைய ஊழல்கள் தொடர்பில் சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளது. ஆனாலும் வடக்கு மாகாண ஆளுநராக, பெரும் தெருக்கள் திணைக்களத்தின் அதிகாரியாக, யூனிவேர்சிற்றி கிராண்ட் கொமிஸனின் அதிகாரியாக, அமைச்சர்களாக என்று இதுவரை தமிழர்களுக்கு வழங்கப்படாதிருந்த பொறுப்புக்களில் பிரதான பதவிகளில் தமிழர்களை நியமித்துள்ளது என்.பி.பி அரசு. இதன் மூலம் என்.பி.பி அரசு பற்றி தமிழ்தேசிய கட்சிகள் முன்வைத்த போலிப் பிரச்சாரங்களை ஒவ்வொன்றாக அனுர அரசு தகர்த்து வருகிறது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் துறையில் உள்ள ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகள் முழுமையாக இல்லாதாக்கப்பட்டு, இலங்கை பொலிஸார் பக்கச்சார்பற்ற, நியாயமான மற்றும் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் செயற்படுவதை உறுதி செய்வதில் தனது உறுதியான நிலைப்பாடு இருக்கும் என தெரிவித்தார். வடக்கில் பொலிஸாரின் அசமந்தப் போக்குக் காரணமாக ஆவா போன்ற வன்முறைக் குழக்களின் செயற்பாடுகள் மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும்பாலும் அச்சத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வடக்கில் உள்ள ரவுடிக்கும்பல்களின் தலைவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் இருப்பதாகவும் அவர்கள் பணத்தைப் பெற்றுவிட்டு வடக்கில் உள்ள தங்கள் ஆட்களுக்கு வீட்டை உடைப்பது, கொழுத்துவது, வாகனங்களை அடித்து நொருக்குவது, ஆட்களின் கையைக் காலை முடிறிப்பது, கொலையும் செய்வது என ரேட்பேசி இந்த வன்முறைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக சமத்துவக் கட்சியின் செயலாளர் முருகேசு சந்திரகுமார் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு முதல்நாள் 5 பேர் கொண்ட மண் மாபியாக் கும்பல் கரைச்சி பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தரை கிளிநொச்சி அம்பாள்குளத்தில் கடமையிலிருந்த போது தாக்கியுள்ளது.
34 ஆண்டுகள் மூட்டப்பட்டுக் கிடந்த பலாலி ராஜேஸ்வரி அம்மன் ஆலயம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் பல இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் காணிகளை அவர்களிடமே மீளவும் ஒப்படைக்க தேசிய மக்கள் சக்தி அரசு வேகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அத்தோடு தற்போது பயங்கரவாதத் தடைச்சட்த்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, தேசிய மக்கள் சக்தி அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய பாராளுமன்றம் கூடியதும் இதற்கான நடவடிக்கைகளுக்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தேசிய மக்கள் சக்தியின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்திற்கு அழுத்தம் கொடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அது நிகழுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவே தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நிகழும்பட்சத்தில் நாம் தமிழர் நாம் இலங்கையர் என்ற கோசம் வடக்கு கிழக்கில் இன்னமும் கூடுதலாக ஓங்கி ஒலிக்கும்.
யாழ் விஜயத்தை மேற்கொண்ட சீனத்தூதுவர் கீ சென்ஹொங், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். அவர், மேலும் குறிப்பிடுகையில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். சீனப் பல்கைலைக்கழகத்தில் கற்க யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தமை தெரிந்ததே. இந்திய சார்பு யாழ் ஊடகங்கள் இதற்கெதிராக கிளர்ந்து இந்தியாவுக்கு வாலையாட்டி தங்கள் விசுவாசத்தைக் காட்டி வந்தது. தற்போது சீனா வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலையை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்துள்ளார். தாங்கள் வடமாகாணத்துக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம் எனவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார முன்னெடுப்புகள் நாட்டின் நிதி நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளதுடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனைக் கொள்கை அடிப்படையில் அங்கீகரித்து இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஐஎம்எவ் குழுவினருடன் நவம்பர் 18இல் இடம்பெற்ற உரையாடலில் மக்கள் மீது கடுமையான அழுத்தங்களைக் கொண்டும் வரும் வரிசுமைகள் பொருட்களின் மானியங்களை நீக்குவது, பொதுச்சேவைகளுக்கு வழங்கும் நிதியை கணிசமான அளவுக்கு குறைப்பது போன்ற விடயங்களில் அரசு ஐஎம்எப் க்கு முழுமையாக உடன்பட மறுத்து வருகின்றது. நீங்கள் ஒரு சமநிலையைப் பேண வேண்டும் என ஜனாதிபதி அனுரா ஐஎம்எப் க்குத் தெரிவிதிருந்தார். இந்தப் பின்னணியிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வழங்க முன்வந்திருப்பதுடன், சுற்றுலாத்துறை வருமானத்திலும் அரசு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
முன்னைய ஆட்சிக்காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலம் பற்றிய நம்பிக்கையில்லாததால் முன்னாள் இராணுவவீரர்கள் ஆயுதக் குழக்களாக இஸ்ரேலிய, ரஷ்ய இராணுவத்தில் இணைந்து யுத்தப் பிரதேசங்களில் பணிக்குச் சென்றனர். இவர்களில் சிலர் யுத்தத்தில் கொல்லப்பட்டும் உள்ளனர். தற்போது ரஷ்ய இராணுவத்தோடு போரிட்ட ஒரு சிங்கள இராணுவ வீரர் உக்ரைன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“நானும் சிறிதரனும் கீரியும் பாம்பும் இல்லை. இதெல்லாம் ஜனநாயகத்தின் பண்புகள்” எனத் தெரிவிக்கின்றார் எம் ஏ சுமந்திரன். ஜனாதிபதி அனுரா பாராளுமன்ற உறுப்பினரில்லை. நானும் பாராளுமன்ற உறுப்பினரில்லை என நளினமாகத் தெரிவித்த சுமந்திரன், நாங்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஏற்கனவே இணைந்து செயற்பட்டு இருக்கின்றோம் என்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் நாங்கள் முகம் பார்த்துப் பேசுகின்ற உறவு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதனால் தமிழர்களுக்கான தீர்வுகளை நான் பாராளுமன்றம் செல்லாமலும் முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்தத் தோல்வி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசினார். அதற்கு நான் சொன்னேன் இந்த அனுபவம் உங்களுக்கு நிறையவே இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனாதிபதி அனுரா தேர்தலுக்குப் பிறகு அழைத்து, என்ன நடந்தது? என்று கேட்டார். “நீ தான் சுனாமி மாதிரி வந்து எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போய்விட்டாய். பிறகென்ன கேள்வி” என்று தான் பதிலளித்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டடார்.

சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கல் நிகழ்வும் – யார் எவர் தொகுதி இரண்டு நூல் வெளியீடும் !

லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு நாளைய தினம் (23.11.2024) காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியில் அமைந்துள்ள லிட்டில் டெக் அக்கடமி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஓர் சமூக ஆளுமை கௌரவிக்கப்பட்டு அவருக்கான “சிவஜோதி ஞாபகார்த்த விருது” வழங்கப்பட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கல்விப்பணி மூலம் சமூக மாற்றத்திற்காக இயங்கி வரும் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் பாடசாலை அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசகனுக்கு அவருடைய பாடசாலை சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளுக்காக சிவஜோதி ஞாபகார்த்த விருதுடன் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி தொகுதி 2 ” என்ற நூலும் வெளியீடு செய்யப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 2023 கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய ”யார் எவர் தொகுதி ஒன்று’ எனும் நூல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட மக்களையும் – சமூக செயற்பாட்டாளர்களையும் அன்புடன் லிட்டில் டெக் அக்கடமியின் விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.

ரஷ்யா – உக்ரேன் இடையிலான போரை உலகப்போராக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி – புடின் குற்றச்சாட்டு!

ரஷ்யா – உக்ரேன் இடையிலான போரை உலகப்போராக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கிறது’ என ரஷ்ய ஜனாதிபதி புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யா – உக்ரேன் இடையே இடம்பெற்றுவரும் போரானது 1,000 நாட்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனுக்கு பொருளாதார உதவிகள் மட்டுமின்றி, ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது.

இப்போரில் ரஷ்யாவின் கை ஓங்குவதை தடுக்க, அந்த நாட்டுக்கு எதிராக நீண்ட துாரம் பயணித்து தாக்கும் திறன் உடைய ஏவுகணையை உக்ரேன் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி உக்ரேன் இராணுவமும், அமெரிக்கா மீது நீண்ட தொலைவு செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா முதல்முறையாக பயன்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ”இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப்போராக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கிறது எனவும், ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யாவிற்கு உரிமை உண்டு எனவும், சர்வதேச பாதுகாப்பு அமைப்பை அழிப்பது ரஷ்யா அல்ல, அமெரிக்காதான் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.