சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கல் நிகழ்வும் – யார் எவர் தொகுதி இரண்டு நூல் வெளியீடும்!

லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு 23.11.2024 அன்று காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியில் அமைந்துள்ள லிட்டில் டெக் அக்கடமி வளாகத்தில் இடம்பெற்றது.

May be an image of 4 people, people studying and hospital

நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளரும் லிட்டில் டெக் அக்கடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினருமான

திரு.மு.தமிழ்செல்வன் அவர்கள் தலைமை தாங்க , சிறப்பு விருந்தினர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி திரு.சோ.தேவராஜா அவர்களும், சமத்துவக் கட்சி பொதுச்செயலாளர் திரு.மு.சந்திரகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

நிகழ்வில் ஆசிச்செய்தியை வழங்கிய திருமறைக்கலாமன்ற இயக்குனர் வண.பிதா ஜோசுவா அவர்கள், சிவஜோதி என்கின்ற ஆளுமையை நான்காவது ஆண்டாக நாம் கொண்டாடும் வகையில் ஓர் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு சென்றுள்ளார். இந்த ஆண்டு வெளிவரும் யார் எவர் தொகுதி இரண்டு நூலினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் இத்தனை பெரிய ஆளுமைகள் இருக்கிறார்களா என மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். இந்த நூலாக்க முயற்சிக்கு லிட்டில் டெக் அக்கடமியினருக்கு நன்றிகளையும் பாராட்டினையும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிவஜோதி ஞாபகார்த்த நினைவுப்பேருரையை சிரேஷ்ட சட்டத்தரணியும் மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதியுமான சோ. தேவராஜா அவர்கள் வழங்கினார்.

நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்கட்சி பொதுச் செயலாளருமான திரு முருகேசு சந்திரகுமார் அவர்கள் “கிளிநொச்சி மாவட்டத்தின் சமகால நிலைமைகள் தொடர்பிலும் – படித்த கிளிநொச்சி மாவட்ட இளைஞர்கள் வெளியேறுவது கவலையளிப்பதாகவும், லிட்டில் டெக் அக்கடமி போன்ற இலவச தொழில் கல்வி நிறுவனங்கள் இந்த இளைஞர்களை மேலும் தன்னம்பிக்கையுடன் உருவாக்குவது ஓரளவு திருப்தியளிப்பதாகவும் தெரிவித்திருந்ததுடன் சிவஜோதி போன்ற ஆளுமையான மனிதர்களை கொண்டாடுவதும் – அவர் பெயரினால் இன்னும் பல ஆளுமைகளை ஆவணப்படுத்துவதும் மகிழ்வளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி தொகுதி 2 ” என்ற நூலும் வெளியீடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு 2023 கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய ”யார் எவர் தொகுதி ஒன்று’ எனும் நூல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. யார் எவர் தொகுதி இரண்டினை சிவஜோதி அவர்களின் தந்தை திரு.சி.வயித்தீஸ்வரன் அவர்கள் வெளியீடு செய்ய நூலுக்கான வெளியீட்டுரையை ஆசிரியர் திரு.கைலாயநாதன் துஷ்யந்தன் அவர்கள் வழங்கி வைத்தார். வெளியீட்டுரையில் பேசிய துஷ்யந்தன் அவர்கள், காலத்தின் தேவை உணர்ந்து காத்திரமான ஓர் நூலாக்க முயற்சியை லிட்டில் டெக் அக்கடமியினர் மேற்கொள்வது காத்திரமான பணியாகும். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் என்பதை தாண்டி ஒவ்வொரு ஆளுமையினதும் தொடர்பிலக்கம், முகவரி ஆகியவற்றை பதிவு செய்துள்ளமையானது உலகின் எப்பாகத்திலும் இருந்து கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளுடன் தொடர்பு கொள்ள வசதியை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஓர் சமூக ஆளுமை கௌரவிக்கப்பட்டு அவருக்கான “சிவஜோதி ஞாபகார்த்த விருது” வருடாவருடம் லிட்டில் டெக் அக்கடமியில் வழங்கப்பட்டு வருகிறது.
சிவஜோதி ஞாபகார்த்த விருது 2021இல் யாழ் பல்கலைக்கழக நாடக நெறியாளரும் அரங்காற்றுகை அமைப்பாளருமான எஸ் ரி குமரனுக்கு அவரது கலைப்பணிக்காக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022 விருது நாடகக் கலைஞரும் சினிமாக் கலைஞருமான பார்வதி சிவபாதம் அவர்களுக்கு அவருடைய கலைப் பயணத்தை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 2023 விருது கல்விப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து, தன்னுடைய பாடசாலையை உயர்நிலைக்கு கொண்டுவந்து, இலங்கையின் முன்மாதரியான பாடசாலைகளில் ஒன்றாக்கியமைக்காக, கிளி விவேகானந்த வித்தியாலய அதிபர் ஜெயாலக்ஸ்மி மாணிக்கவாசகனுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை 1,50,000 ரூபாய் பாடசாலையின் இனியத்தை மறுசீரமைக்க வழங்கப்பட்டது. இவ்வாண்டு விருதுக்குரிய மையப்பொருளாக தேசிய நல்லிணக்கம் தேர்வு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் இந்த ஆண்டு 2024க்கான சிவஜோதி ஞாபகார்த்த விருதும், அதனுடன் கூடியதான ரூபா ஒரு லட்சம் பணப்பரிசும் வணக்கத்துக்குரிய சுனேத்த தேரோ அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விருதினை பெற்றுக்கொண்ட வணக்கத்துக்குரிய சுனேத்த தேரோ அவர்கள் பேசிய போது ” லிட்டில் டெக் அக்கடமியின் உருவாக்குனர் திரு.த. ஜெயபாலன் அவர்களுடனான நட்பின் வெளிப்பாடாக இந்த நிகழ்வுக்கு நான் வருகை தந்திருந்தேன். ஆனாலும் விருது வழங்கப்பட்டது மகிழ்வளிப்பதுடன் ஓர் மாற்றமான சமூகத்தை படைக்க லிட்டில் டெக் அக்கடமியினர் இயங்குவதை நிரூபித்துள்ளது. இனப்பிரச்சினைகள் – மதப்பிரச்சினைகள் இல்லாத ஓர் நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வுகளின் இறுதியில் லிட்டில் டெக் அக்கடமியின் உதவிப்பணிப்பாளர் பாலசிங்கம் கஜீபன் ஏற்புரையை வழங்க, திருமதி கம்சகௌரி அவர்கள் நன்றியுரையை வழங்கி நிகழ்வுகளை நிறைவு செய்தார். ஏறத்தாழ நூற்றி ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டு விழாவில் மேடையேற்றப்பட்ட சண் நாடக குழுவினரின் “முட்டை” நாடகம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *