November

November

முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார் !

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான சேகு இஸ்ஸதீன் வேதாந்தி என்ற பெயரில் பிரபல கவிஞராக அறியப்பட்டவர். முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் உடன் இணைந்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தாபித்தவர்களில் இவரும் ஒருவர்.

அத்துடன் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இதன் பின்னர் பேரியல் அஷ்ரப் தலைவராக செயற்பட்ட காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் பிரவேசித்த இவர், ஊடகத்துறை பிரதியமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

 

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கையின் அரச ஊடகத்துறையில் தமிழ், முஸ்லிம் பணியாளர்களை கூடுதலான அளவில் நியமித்தல், அரச தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழிக்கான சம அந்தஸ்து போன்றவற்றில் சேகு இஸ்ஸதீன் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை அவர் அக்கரைப்பற்றில் காலமாகியுள்ளார்.

தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் விசேட செயலாளரான சட்டத்தரணி ஹஸானா இஸ்ஸதீன், இவரது புதல்விகளில் ஒருவராவார்.

சட்ட விரோத கட்டங்கள் அனைத்தையும் அகற்றுங்கள் – வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு !

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்ற போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு வந்தனர்.

அனலைதீவு, எழுவைதீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் பகலில் துண்டிக்கப்பட்டு இரவில் மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருப்பதாகவும், கடல் பயணத்துக்கு ஏதுவான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை உடனடியாக கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, அந்தப் பிரதேசங்களிலுள்ள மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை பெற்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது பல வெள்ள வாய்க்கால்களில் வெள்ளம் நிரம்பிய நிலையில் இருப்பதால் அதனுள் குப்பைகளைக் கொட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும், வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு மாணவர்கள் சடலமாக மீட்பு !

அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

காணாம்ல்போனோரை தேடும் பணியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக் முகமது நாஸிக் (வயது 15), சஹ்ரான் (வயது 15), அப்னான் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

 

தஸ்ரிப், யாசீன் ஆகிய மாணவர்களையும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரையும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் (26) செவ்வாய்க்கிழமை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 13 பேருடன் சென்ற உழவு இயந்திரமே காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற 5 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 6 மாணவர்களும், உழவு இயந்திரத்தின் சாரதியும், உதவியாளரும் என 8 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.

சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே காணாமல்போயிருந்த 8 பேரில் நால்வர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் ஏனைய நால்வரையும் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது.

இந்நிலையில் மாணவர்களின் உயிரிழப்பு அம்பாறை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிரிந்து போகும் உரிமையை கோருபவர்கள் யார்..? ஐ.எம்.எப்பிடம் பெற்ற கடனை மீள செலுத்தாமல் விட முடியுமா..?

சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிரிந்து போகும் உரிமையை கோருபவர்கள் யார்..? ஐ.எம்.எப்பிடம் பெற்ற கடனை மீள செலுத்தாமல் விட முடியுமா..?

அரசியல் ஆய்வாளர் – தமிழ் சொலிடாரி முக்கியஸ்தர் சேனனுடனான பரபரப்பான கலந்துரையாடல்..!

 

 

டிசம்பர் 03ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானம் !

இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை அறிக்கைகளுக்கு அமைவாக உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 

அதற்கமைய, டிசம்பர் 04ஆம் திகதி முதல் பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படும்.

 

நவம்பர் 27ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும்

 

நவம்பர் 28ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும்

 

நவம்பர் 29 இற்குரிய பரீட்சை டிசம்பர் மாதம் 27ஆம் திகதியும்

 

நவம்பர் 30ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28ஆம் திகதியும்

 

டிசம்பர் 2ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 30ஆம் திகதியும்

 

டிசம்பர் 3ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 31ஆம் திகதியும் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

 

பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பரீட்சார்த்திகளுக்குரிய புதிய நேர அட்டவணை டிசம்பர் மாதம் 7ஆம் திகதியளவில் அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

நேற்று(27), இன்று(28) மற்றும் நாளைய தினங்களில்(29) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்படும் என பரீட்சை திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள இடர் கால உதவித் திட்டங்களை மேற்கொள்ளாமல் ஏமாற்று அரசியல் செய்யும் தமிழ் அரசியல் தரப்பினர் !

பல வாரங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு தயாராவதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி, நாடாளுமன்றத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்,”

இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கீதாநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில்  ஆயிரக்கணக்கானோர் உட்பட நாடு முழுவதும் 250,000 க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றனர்.

பேரழிவால் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி தேவைப்பாடுள்ளது.

இயற்கை பேரிடர் ஏற்படும் போது, ​​உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் போன்ற உடனடி உதவிகளை வழங்குவது அரசின் கடமை.

 

இருப்பினும், பல நாட்களாக பெய்த கனமழை மற்றும் கடுமையான வெள்ளம் இருந்தபோதிலும், வடக்கிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சேவையை செய்வதை விட புகைப்படங்கள் எடுப்பதை தான் அதிகம் செய்கின்றனர்”என்று அவர் குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளால் உதவிகள் எதுவும் அனுப்பப்படவில்லை என்று காசிலிங்கம் குற்றஞ்சாட்டினார், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளை நம்பியிருக்கிறார்கள்.

“நாங்கள் இரவும் பகலும் களத்தில் இருந்தோம், முன்கூட்டியே திட்டமிட்டுள்ளோம் மற்றும் காலநிலை எச்சரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிப்போம்,” என்று அவர் கூறினார்.

“பொறுப்பான ஆட்சியை எதிர்பார்த்த மக்கள் வடக்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனாலும், சில வாரங்களுக்குள்ளேயே, அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறிவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் துன்பத்துக்குள்ளாகின்றனர். மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிய பின்னரே நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுன தலைவர் பொறுப்பான நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்து முடித்தார், “நாட்டிற்குத் தேவை தங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சட்டமியற்றுபவர்கள் தான், பேரழிவு மற்றும் தேவையின் போது தங்கள் கடமைகளை கைவிடுபவர்கள் அல்ல.” என்றார்.

மக்கள் மிகப்பெரிய வெள்ள இடர் ஒன்றில் சிக்கித்தவிக்கின்ற போதும் கூட தங்களுடைய எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கான எதுவிதமான உதவிகளையும் வழங்கத்தயாரில்லை. மாறாக வழமை போல் மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் சிக்கி பாடசாலைகளில் தஞ்சம் கோரியிருக்கும் நிலையில் கூட மாவீரர் தினத்தை வைத்து அரசியல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இதேவேளை இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட ரீதியான அங்கத்தவர்களும் – பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக களத்தில் இறங்கி கள நிலவரங்களை ஆராய்ந்து தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுத்து வருவதை அறிய முடிகிறது. குறிப்பாக கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு வரும் பணிகளையும் – மக்களுக்கான மூன்று வேளை உணவுகளையும் வழங்கி வருவதாகவும் தேசம்நெட்இன் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பாவனை மரணங்கள்!

நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் 10 பேர் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் 16 மற்றும் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 4 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாடானது உடல் ஆற்றலை அதிகரிப்பதுடன்,

குழப்பம், பதற்றம், விரைவான இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட உடல் நலப்பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றமையால் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை அடைவதில் நாட்டிற்கு உதவ IMF உறுதிபூண்டுள்ளது – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

கடன் மறுசீரமைப்பில் வெற்றியை அடைவதற்கான இலங்கையின் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva), பொருளாதார சீர்திருத்த திட்டத்தில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையும் பாராட்டியுள்ளார்.

இலங்கைக்கும் அதன் வெளிநாட்டுப் பத்திரதாரர்களுக்கும், உள்ளூர் கடனாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கின்றன என்று ஜோர்ஜீவா கூறுகிறார்.

இந்த ஒப்பந்தங்கள் IMF-ஆதரவு திட்டத்துடன் ஒத்துப்போவதாகவும், இது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் மற்றும் பொருளாதார மீட்சியை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சீர்திருத்த முயற்சிகள் வெற்றியடைவதை உறுதிப்படுத்த சர்வதேச நிதி நிறுவனங்கள், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் பத்திரப்பதிவுதாரர்கள் ஆதரவினை இலங்கை தொடர வேண்டும்.

நிலையான வளர்ச்சி மற்றும் கடன் நிலைத்தன்மையை அடைவதில் நாட்டிற்கு உதவ IMF உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசு அனுபவமற்றது என்பது வெளிப்படுகிறது – சாணக்கியன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் தகுந்த ஏற்பாடுகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலை குறித்து மேலும் கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன்,

சூறாவளிக்கான முன்னறிவிப்பு 3 நாட்களுக்கு முன்னரே விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையின் காரணத்தினால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிந்தளவு எம்மால் இயன்ற பணிகளை மேற்கொள்வோம். மேலும் வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மக்களுடன் மக்களாக நின்று மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் படுவான்கரையிலுள்ள தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாது தெவித்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தலையீட்டினால் படகு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்பினை மேற்கொண்டு பேரூந்து சேவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இதன் ஊடாக புதிய அரசாங்கத்தினுடைய அனுபவமற்ற தன்மை இங்கு உறுதியானது.” என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பேரிடர் நேரத்தில் கூட அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காமல் வழமையான எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய தரப்பு மேற்கொள்ள, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் அரசினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் முழுநேர கடமைகளில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப் படையின் 50 பேர் 06 இடங்களில் 6 ஹெலிகொப்டர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கனமழை – இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – ஜனாதிபதி அனுர குமார விடுத்துள்ள உத்தரவு!

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் 59ஆயிரத்து 269 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து ஏழாயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்தெரிவித்துள்ளது. இதில் வடக்கு இகிழக்கில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 17ஆயிரத்து 922 குடும்பங்களைச் சேர்ந்த 62ஆயரத்து 505 பேர் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 36 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

 

அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

அர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை(27) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

 

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைத்து தேவையான உணவு மற்றும் மலசலகூட வசதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

 

அந்த மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

 

அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுதத்தார்.

 

சீரற்ற காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில் உயர்தர பரீட்சையை மேலும் காலம் தாழ்த்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அலோசனை வழங்கினார்.

 

தற்போது மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் தொடர்பில் தேடியறிந்து அவர்களை பாதுகாப்பாக கரை சேர்ப்பதற்கு அவசியமான வசதிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் அறிவுறுத்தினார்.