November

November

‘இது தாண்டா அரசாங்கம்’ அனுர அலையில் அகப்பட்ட தமிழ் தேசியத் தலைமைகளை சந்திரசேகர் அலை அடித்துச் செல்கிறது:  தேசம் செய்தி தினச்செய்தி தொகுப்பு!

‘இது தாண்டா அரசாங்கம்’ அனுர அலையில் அகப்பட்ட தமிழ் தேசியத் தலைமைகளை சந்திரசேகர் அலை அடித்துச் செல்கிறது:

தமிழ் தேசியவாதத்திற்கு கிலுகிலுப்பில்லாமல் போன மாவீரர்நாள்:

 

1. ‘இது தாண்டா அரசாங்கம்’ அனுர அலையில் அகப்பட்ட தமிழ் தேசியத் தலைமைகளை சந்திரசேகர் அலை அடித்துச் செல்கிறது: வல்வெட்டித்துறையில் புயலால் படகுகள் சேதமடைந்தது தொடர்பில் கடற்தொழில் அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டு காணொலியும் பதிவிடப்பட்டது. அறிவிக்கப்ட்ட 30 நிமிடங்களில் நடந்தவை:

 

வல்வெட்டித்துறை மீனவர்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தங்களில் ஒருவராகக் கண்டு குதூகலித்தனர். இரத்த உறவுகளிலும் பார்க்க வர்க்க உறவு வலியது என்பதை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று வல்வெட்டித்துறையில் வைத்து நிரூபித்துள்ளார். ஆனால் இராமலிங்கம் சந்திரசேகர் ஒரு மலையகத் தமிழன் என்பதை குதர்க்கமாகக் காட்ட அவருக்கு தோட்டக்காட்டு வேலைகள் தான் பொருத்தமானது என அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் கீதபொன்கலன் ஐபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். தமிழ் தேசியத்தின் அடுத்த தலைவராக வரத்துடிக்கும் ஐபிசி பாஸ்கரனின் ஊடகம் தீவிர தமிழ் தேசிய ஊதுகுழலாக இயங்குகின்றது. இவர்கள் இராமலிங்கம் சந்திரசேகரை கடற்தொழில் அமைச்சராக நியமித்தது பற்றி இப்படிக் கூறுகின்றனர்:

 

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்தேசிய அரசியல் தலைவர்கள் மக்கள் மிகப்பெரிய வெள்ள இடர் ஒன்றில் சிக்கித்தவிக்கின்ற போதும் கூட தங்களுடைய எதிர்ப்பு அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். மாவீரர் தினத்தை வைத்து அரசியல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர்களைத் தற்போது எங்கும் காண முடிவதில்லை. வெள்ளம் வந்து அனர்த்தம் நடந்த இடங்களில் எல்லாம் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட ரீதியான அங்கத்தவர்களும் – பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், பிரதி அமைச்சர் அருண்; ஹேமச்சந்திரவுமே நேரடியாக களத்தில் இறங்கி கள நிலவரங்களை ஆராய்ந்து தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

2. தமிழ் தேசியவாதத்திற்கு கிலுகிலுப்பில்லாமல் போன மாவீரர்நாள்: வழமையாக ஒவ்வொரு மாவீரர் தின நினைவேந்தல் காலங்களிலும் தமிழ் தேசியவாதத்திற்கு ஒரு அரசியல் கிலு கிலுப்புக் கிடைக்கும். புலனாய்வு பிரிவினர் – ஆயுதப் படையினர் படம் எடுத்தார்கள், முறைத்தார்கள், கைது செய்தார்கள், மிரட்டினார்கள், நினைவு கூறல்களை தடுத்தார்கள், நினைவு கூறல்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளை பெற்றார்கள், சமூகவலைத்தளங்களை பின் தொடர்ந்தார்கள், சமூக வலைத்தள கணக்குகளை முடக்கினார்கள், மாவீரர்களை சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்தவர்களை, கைது செய்தார்கள், விசாரணைகளுக்கு அழைத்தார்கள் என்ற செய்திகளை தமிழர் பகுதிகளில் உள்ள அத்தனை ஊடகங்களிலும் – சமூக வலைத்தள கணக்குகளிலும் காண முடியும். இந்த ஆண்டு குறித்த அத்தனை கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதால் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மிகவும் விரக்தியடைந்த நிலையில் உள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் தங்களுடைய தேசியவாத அரசியல் முடிவுக்கு வந்துவிடும் என அஞ்சுகின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை. மாவீரர் தினத்தன்று போஸ்டருக்கு கேக் வெட்டி ஊட்டிய எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு நடந்தது:

 

மக்களுக்கான நினைவேந்தல் எனும் அடிப்படை உரிமையை என்.பி.பி அரசாங்கம் வழங்கிவிட்டது. “இதைவிட எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கின்றார்” மாவீரர் நிகழ்வுகளில் கலந்துகொண்டு மனம் விட்டு அழுது வந்த தாயார். “எதிர்காலத்தில் இந்த ஜேவிபி அரசாங்கம் தான் அவர்களைப் போல் போராடி பாதிக்கப்பட்ட எங்கள் குடும்பங்களின் எதிர்காலத்தையும் முன்னேற்ற உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

ஆனால் சுவிஸில் முன்னாள் புலி உறுப்பினர் அப்துல்லா, துவாரகா வருகின்றார் என்று தொடங்கி வைத்ததை, தற்போது ரகுபதி, தான் பிரபாகரனையும் பொட்டமானையும் சென்று சந்தித்து வந்ததாக சுவிஸில் நடந்த மாவீரர் தின உரையில் கூறியுள்ளார். தலைவரையும் பொட்டம்மானையும் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி வரும் இவர்கள், இப்போதும் வசூல் செய்வதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார். இவர்களுக்கு லண்டனில் இருந்து செயற்படும் சேரமான் என்பவர் துணை நிற்கின்றார்.

 

3. பேசிக்கொண்டிராமல் வெள்ளம் பாயும் வாய்க்கால்களை ஆக்கிரமிக்கும் கட்டிடங்களை அகற்ற யாழ் ஆளுநர் உத்தரவு: வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடற்பரப்பைக் கொண்டுள்ளன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் கடலுடன் நேரடியாக தொடர்புபட்ட நிலமாக காணப்படுகின்ற போதிலும் கூட மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளம் தொடர்பான அச்சுறுத்தலை இன்று வரை தீர்க்க முடியாத ஓர் நிலை தொடர்கிறது. கடந்த கால அரசாங்கங்களும் – நிர்வாகத்தில் இருந்த உயர் அதிகாரிகளிடமும் இருந்த ஊழல் மற்றும் சூழல் நேயத்தன்மை இல்லாத கட்டுமான திட்டங்கள் என்பவையே இந்த நிலைக்கு காரணம் என நீர் முகாமைத்துவ அறிஞர் மயில்வாகனம் சூரியசேகரம் தேசம்நெற்க்குத் nரிவித்தார்.

 

 

இந்த விடயத்தில் மாநகரசகைப உறுப்பினராக இருந்த வரதராஜன் பார்த்தீபனும், மாநகர முதல்வராக இருந்த மணிவண்ணனும் குளங்களைத் தூர்வார்வது வெள்ளம் பாயும் வாய்க்கால்களை சிரமதானம் மூலம் துப்பரவாக்கியமை என்பன குறிப்பிடத்தக்கவை.

 

வடக்கு மாகாண வெள்ள அனர்த்த நிலை தொடர்பான இணைய வழி கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளம் பாயும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையே காரணம் எனச் சுட்டிக்காட்டினார். மேலும் அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

வெள்ளத்தால் 12 மரணங்கள் நான்கு லட்சம் பேர் இடப்பெயர்வு: நாட்டின் 24 மாவட்டங்களிலும் உள்ள 227 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது, ஒரு லட்சத்தி இருபதினாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நாடளாவிய ரீதியில் 345 பாதுகாப்பான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,330 பேர் அங்கு தங்கியிருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 12 பேர் இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளதுடன் 08 மரணங்கள் அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

 

4. உள்ளுராட்சித் தேர்தல் ஜனவரி 2025 இல் – அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளுராட்சியின் பொறுப்பில்: இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை உள்ளுராட்சிகளினூடாக மக்களுடைய கலந்தாலோசணையுடன் மேற்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசு தீர்மானித்துள்ளதாக தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. அபிவிருத்தியை ஜனநாயக்கப்படுத்துவதன் ஒரு அம்சமாக அதனை உள்ளுர் மக்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே உள்ளுராட்சி மன்றங்களோடு அபிவிருத்தி இணைக்கப்பட உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களும் தற்போதும் தங்கள் தேன்நிலவுக் காலத்தில் இருப்பதால் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி மன்றங்களையும் அனுர அலை அள்ளிச் செல்லும் என்றால் அது மிகையாகாது. 2024 ஜனாதிபதி தேர்தலை அடுத்து நடாத்தப்பட்ட எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் சுமார் 15 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இதில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் இறுதியாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 2023 இல் உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதும் தேர்தல்கள் பின்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அடுத்த சில வாரங்களில் தேர்தல் ஆணைக்குழு கூடி தேர்தல் திகதியை அறிவிக்கும்.

 

1994 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெண்களின் பங்குபற்றலானது 25 வீதமாக இருக்க வேண்டும் என்ற சட்டத் திருத்தமானது கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தேர்தலிலாவது தமிழரசுக்கட்சி காடு மேடு பள்ளம் எல்லாம் பெண் வேட்பாளர்களை தேடாது தமது கட்சிக்குள்ளேயே தேடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் பங்கேற்று அரசியலில் தங்கள் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என பெண்ணியவாதிகள் தெரிவிக்கின்றனர்.

 

5. சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரான சேகு இஸ்ஸதீன் காலமானார்: முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் உடன் இணைந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் நேற்று அக்கரைப்பற்றில் காலமானார். அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான சேகு இஸ்ஸதீன் வேதாந்தி என்ற பெயரில் பிரபல கவிஞராக அறியப்பட்டவர். அத்துடன் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

 

இதன் பின்னர் பேரியல் அஷ்ரப் தலைவராக செயற்பட்ட காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் பிரவேசித்த இவர், ஊடகத்துறை பிரதியமைச்சராகவும் செயற்பட்டுள்ளார். இலங்கையின் அரச ஊடகத்துறையில் தமிழ், முஸ்லிம் பணியாளர்களை கூடுதலான அளவில் நியமித்தல், அரச தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழிக்கான சம அந்தஸ்து போன்றவற்றில் சேகு இஸ்ஸதீன் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பிரதமர் ஹருணி அமரசூரியவின் விசேட செயலாளரான சட்டத்தரணி ஹஸனா இஸ்ஸதீன் இவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

6. அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களில் முஸ்லீகள் நியமனம்: ஜனாதிபதி அநுராவின் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தின் பிரதிசபாநாயகராக, பிரதி அமைச்சராக அமைச்சின் செயலாளர்களாக தொடர்ந்து முஸ்லீம்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி முஸ்லிம்களை திட்டமிட்டு புறக்கணிப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலகுவாக கடந்துள்ளது.

 

7. அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை: அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டத்தை மீறி, சமூக ஊடகங்கங்கள் செயற்பட்டால் அவற்றுக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவையும் முக்கிய கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அதன்படி இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது

வெள்ளை யானைத்திட்டங்களை செயற்படுத்திய சீனா..? – சீனத் தூதுவர் அளித்துள்ள பதில்!

சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவையாகும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

 

ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் நேற்று (28) பிற்பகல் ஊடகப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

 

இதன்போது, இலங்கை தரப்பு மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என தூதுவர் தெரிவித்தார்.

 

உதாரணமாக தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள தாமரை கோபுரத் திட்டம் தற்போது இலாபம் ஈட்ட ஆரம்பித்துள்ளதுடன், அது இலங்கையின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சீனா முதலீடு செய்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் இலங்கை அரசாங்கத்திற்கு பெருமளவு வருமானத்தை கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முழுக்க முழுக்க சீனாவின் முதலீடு என்று சுட்டிக்காட்டிய தூதுவர், இலங்கையினால் எந்தப் பணமும் செலவிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

 

சிலர் சீனக் கடன்கள் மற்றும் முதலீடுகளை, கடன் பொறி என்று கூறினாலும், அந்த முதலீடுகள் இலங்கையுடனான வலுவான நட்புறவின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திர நாடாக எழுந்து நிற்க இலங்கைக்கு சீனா நிதியுதவி வழங்கியதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் சீன-இலங்கை உறவுகள் புதிய அத்தியாயத்தில் பிரவேசிக்கும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சீனா – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 7 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இதுவரையில் ஏன் கைச்சாத்திடப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளித்த அவர், சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக இலங்கை சந்தையை சீனா ஆக்கிரமிக்கும் என்ற தவறான அச்சம் நிலவுவதாக தெரிவித்தார். .

 

சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால், ஒரு வருடத்தின் பின்னர் பாதகமான விடயங்கள் இருப்பின் அதனைத் திருத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சீனத் தூதுவர் சி ஜான்ஹொங் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் , கொவிட் தொற்றுநோய் மற்றும் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது எவ்வாறு இலங்கைக்கு ஆதரவளித்ததோ அதேபோன்று எதிர்காலத்திலும் சீனா இலங்கைக்கு உண்மையான நண்பனாக ஆதரிக்கும் என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளை வேன் சம்பவம் – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகள் விடுதலை !

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ‘வெள்ளை வேன்’ ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜிதவுடன் மற்றும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரபட்சம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மக்களுக்கான இடர்கால உதவிகள்  செய்ய முன்வராத கோடிகள் புரளும் நல்லூர் முருகன் ஆலயம் உள்ளிட்ட வடக்கின் பிரபல ஆலயங்கள் !

மக்களுக்கான இடர்கால உதவிகள்  செய்ய முன்வராத கோடிகள் புரளும் நல்லூர் முருகன் ஆலயம் உள்ளிட்ட வடக்கின் பிரபல ஆலயங்கள்.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.  இப்பகுதிகளில் அதிகப்படியாக வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களே இந்த சீரற்ற காலநிலையால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடங்கி அரச அமைப்புகள் அனைத்தும் முழு நேரமாக களப்பணியில் இறங்கியும் கூட இன்னமும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஒரு சூழல் காணப்படுகின்றது. இந்த நிலையில் ஆலயங்களும் முழுமையான அறப்பணியில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலய நிர்வாகம், மட்டுநகர் மாமேங்கஸ்வர ஆலய அறங்காவலர் குழு, களுதாவனை சுயம்புலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகியன பல லட்சம் ரூபாய்கள் பெறுமதியான நிவாரண திட்டங்களை மக்களுக்கு இரவோடு இரவாக வழங்கி வருகின்றன. இதனை இலங்கை இந்து சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்களம் தன்னுடைய முகநூல் பக்கத்திலும் பதிவு செய்துள்ளது. இந்த நிலையிலேயே வடக்கு மாகாணத்தினுடைய கோடி ரூபாய்கள் புரளும் எந்த ஆலயங்களும் மக்களுடைய இடர்கால நிவாரண பணிகளுக்காக ஒரு ரூபாய் கூட இதுவரை ஒதுக்கவில்லை என்பது வேதனையான விடயம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைபொருளும் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இருந்து இதுவரை எந்த ஒரு இடர்கால நிவாரண அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதுபோல திருக்கேதீஸ்வரம், மன்னார் மடுமாதா தேவாலயம், திருகோணமலையின் திருகோணச்சரம் போன்ற கோயில்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற வழிபாட்டு தலங்களாக உள்ளன. இந்தக் கோயில்களின் இயக்கத்திற்கான அடித்தளமே வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் ஒவ்வொரு திருவிழா காலங்களிலும் செய்கின்ற அர்ச்சனைகள் தொடங்கிக் கொடுக்கின்ற அன்பளிப்புகளின் அடிப்படையிலானதேயாகும். இந்த மக்களினுடைய இடர் தீர்ப்பதற்காக மிக்க நெருக்கடியான இடர்காலங்களில் சிறிய சிறிய கிராமத்து ஆலயங்கள் கூட தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை முன்னெடுக்கின்றன.  இருந்தாலும் கோடிகளில் புரளும் நல்லூர் கந்தன் உள்ளிட்ட பல பிரபல்யமான ஆலயங்கள் ஒரு ரூபாய் கூட நிவாரண நிதிக்காக செலவழிக்கவில்லை எனவும் திருவிழா காலங்களில் கோயில்களை இடித்து பெருப்பிக்கவும் – வர்ணம் அடிப்பதற்காகவும் – ஆடம்பர செலவுகளுக்காகவும் பல லட்சம் ரூபாய்களை செலவழிக்கும் இந்த ஆலயங்கள் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கவில்லை – இதுதான் மதங்கள் கூறும் மனிதாபிமானமா என பலரும் சமூக வலைதளங்களில்   தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தை கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை போற்றுவது முன்னோக்கி பயணிக்க வழிசெய்யாது – முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அறிவுரை!

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தை கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது, நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மாவீரர் தினத்தை முன்னிட்டு கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

 

இந்நிலையில் நினைவுகூரல் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

 

நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும்.

 

அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும்.

 

இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகால காயங்களை ஆற்றுவதற்குரிய மிக முக்கிய நகர்வாகும்.

 

இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது.

 

மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன.

 

வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது.

 

மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும். என தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப் பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சீரற்ற காலநிலையால் 120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிப்பு !

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சீரற்ற வானிலையால் நாட்டின் 24 மாவட்டங்களிலும் உள்ள 227 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 345 பாதுகாப்பான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,330 பேர் அங்கு தங்கியிருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 28,324 குடும்பங்களைச் சேர்ந்த 94,134 பேர் உறவினர் வீடுகளில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான அனர்த்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 8 பேர் அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும் 1,952 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் உலக வங்கி கவனம்!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று புதன்கிழமை (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றது.

 

இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

பொருளாதார கொள்கைகள், நிதி, போட்டித்தன்மை, முதலீடு,நிறுவன மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் தற்போதும் உலக வங்கி இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்து, நீர் முகாமைத்துவம்,பாதுகாப்பு,சுற்றாடல் நிலைத்தன்மை, சமூக மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கும் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக, கிராமிய பகுதிகளில் வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி துறையின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும், சுற்றுலாத் துறை, கடல்சார் தொழில்துறை, அரச நிறுவனங்கள் மற்றும் வலுசக்தி துறைகளை பலப்படுத்தி அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தல், குறிப்பாக கல்வி, சுகாதாரம், மனிதவள அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, இந்த பகுதிகளில் காணப்படும் தொழிற்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கல்வி மற்றும் தொழில் கல்வித் துறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

2025 ஜூலை 25 ஆம் திகதி திறக்கப்படவிருக்கும் 20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கையும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கூறிய உலக வங்கியின் தலைவர் உலக வங்கிக் குழுமத்தின் கீழ் காணப்படும் மீள் கட்டியெழுப்பல் மற்றும் அவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD), சர்வதேச அபிவிருத்தி வங்கி (IDA), சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) மற்றும் பலதரப்பு முதலீட்டு பிணைகளுக்கான முகவர் நிறுவனம் (MIGA) உள்ளிட்ட நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் மேற்படி அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை !

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

 

இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இச்சூழலில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டத்தை மீறி, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவையும் முக்கிய கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.