மக்களுக்கான இடர்கால உதவிகள்  செய்ய முன்வராத கோடிகள் புரளும் நல்லூர் முருகன் ஆலயம் உள்ளிட்ட வடக்கின் பிரபல ஆலயங்கள் !

மக்களுக்கான இடர்கால உதவிகள்  செய்ய முன்வராத கோடிகள் புரளும் நல்லூர் முருகன் ஆலயம் உள்ளிட்ட வடக்கின் பிரபல ஆலயங்கள்.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.  இப்பகுதிகளில் அதிகப்படியாக வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களே இந்த சீரற்ற காலநிலையால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடங்கி அரச அமைப்புகள் அனைத்தும் முழு நேரமாக களப்பணியில் இறங்கியும் கூட இன்னமும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஒரு சூழல் காணப்படுகின்றது. இந்த நிலையில் ஆலயங்களும் முழுமையான அறப்பணியில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலய நிர்வாகம், மட்டுநகர் மாமேங்கஸ்வர ஆலய அறங்காவலர் குழு, களுதாவனை சுயம்புலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகியன பல லட்சம் ரூபாய்கள் பெறுமதியான நிவாரண திட்டங்களை மக்களுக்கு இரவோடு இரவாக வழங்கி வருகின்றன. இதனை இலங்கை இந்து சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்களம் தன்னுடைய முகநூல் பக்கத்திலும் பதிவு செய்துள்ளது. இந்த நிலையிலேயே வடக்கு மாகாணத்தினுடைய கோடி ரூபாய்கள் புரளும் எந்த ஆலயங்களும் மக்களுடைய இடர்கால நிவாரண பணிகளுக்காக ஒரு ரூபாய் கூட இதுவரை ஒதுக்கவில்லை என்பது வேதனையான விடயம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைபொருளும் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இருந்து இதுவரை எந்த ஒரு இடர்கால நிவாரண அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதுபோல திருக்கேதீஸ்வரம், மன்னார் மடுமாதா தேவாலயம், திருகோணமலையின் திருகோணச்சரம் போன்ற கோயில்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற வழிபாட்டு தலங்களாக உள்ளன. இந்தக் கோயில்களின் இயக்கத்திற்கான அடித்தளமே வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் ஒவ்வொரு திருவிழா காலங்களிலும் செய்கின்ற அர்ச்சனைகள் தொடங்கிக் கொடுக்கின்ற அன்பளிப்புகளின் அடிப்படையிலானதேயாகும். இந்த மக்களினுடைய இடர் தீர்ப்பதற்காக மிக்க நெருக்கடியான இடர்காலங்களில் சிறிய சிறிய கிராமத்து ஆலயங்கள் கூட தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை முன்னெடுக்கின்றன.  இருந்தாலும் கோடிகளில் புரளும் நல்லூர் கந்தன் உள்ளிட்ட பல பிரபல்யமான ஆலயங்கள் ஒரு ரூபாய் கூட நிவாரண நிதிக்காக செலவழிக்கவில்லை எனவும் திருவிழா காலங்களில் கோயில்களை இடித்து பெருப்பிக்கவும் – வர்ணம் அடிப்பதற்காகவும் – ஆடம்பர செலவுகளுக்காகவும் பல லட்சம் ரூபாய்களை செலவழிக்கும் இந்த ஆலயங்கள் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கவில்லை – இதுதான் மதங்கள் கூறும் மனிதாபிமானமா என பலரும் சமூக வலைதளங்களில்   தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *