June

June

விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையாடுகின்றனர். அவர் நரகத்திற்கு செல்கின்றார் என்றும் சில பதிவுகள் வெளியாகி யுள்ளது. அரசியலற்ற தனிமனித ஆளுமைகளின் கீழ் கட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்கள், அவ்வமைப்பை சுக்குநூறாக சிதறடித்துள்ளது. தனிப்பட்ட நபர்களைத் தவிர இவ்வமைப்புகள் தங்களை ஒருங்கமைப்பதற்கான அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இவர்களில் சற்று அரசியல் விளக்கமுடையவர்கள் முற்றாக மே 18க்குப் பின்னான புலி அமைப்பிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளனர். ஒரு போராளியின் கடைசி மூச்சுக் காற்று கரைந்து செல்வதற்கு முன்னரேயே அவதூறுகள் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. ஒரு போராளி துரோகியானது எப்படி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ‘துரோகத்தின் பரிசு’ பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் அவசியமில்லை. வந்திகளும், தனிப்பட்ட கோபதாபங்களும், போட்டிகளுமே போதுமானது. யுத்தம் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும் ‘தியாகி – துரோகி’ என்ற கருப்பு வெள்ளை பைனரி அரசியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் வரமுடியவில்லை. இன்று பழிசொல்வதற்கு ஆளில்லாமல் தங்களுக்குள்ளேயே தியாகி – துரோகி முத்திரைகளைக் குத்துகின்றனர்.

வவுனியாவில் அன்றைய காலத்தில் நன்கு அறியப்பட்ட கொடுங்கோலன் மாணிக்கதாசன். மாணிக்கதாசனின் மறைவு இன்றும் நினைவுகூரப்படுகின்றது. மாணிக்கதாசன் தமிழ் மக்களுக்காகப் போராட ஆயதமேந்திய போதும் மாணிக்கன்தாசன் இழைத்த அநீதிகள் மிக மிக அதிகம். மாணிக்கன்தாசன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார் என்பதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவரைத் தியாகி ஆக்குவது சரியா என்ற கேள்வி மிக நியாயமானதே.
இந்த வகையில் விநாயகம் துரோகி ஆக்கப்படுவதற்கு வலுவான எந்தக் காரணமும் கிடையாது. வந்திகள், தனிநபர் போட்டி பொறாமை போன்றவையே இந்த அவதூறுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. இதற்கு ஒரு நீண்ட பின்னணியும் உண்டு.

எண்பதுக்களின் பிற்பகுதியில் மேற்குநாடுகளுக்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த ஆரம்பகாலங்களில், விடுதலைப் புலிகள் தங்களுக்கான அமைப்புகளை மேற்குலகில் நிறுவினர். நிதி வசூலிப்புகளையும் மேற்கொண்டனர். மேற்குலகில் தங்களோடு பணியாற்ற விடுதலைப் புலிகளில் இருந்து, மரண தண்டனையில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற பாரிஸில் உள்ள சுக்லா போன்றவர்கள் உட்பட பலர் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டனர். மாற்று இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இக்கட்டமைப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் புலிகளுக்கான நிதி சேகரிப்பு மற்றும் நிதி சேகரிப்பு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது என்று ஆரம்பித்து, மாவீரர் தின நிகழ்வு, பொங்கு தமிழ் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தனர். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல்களைக் குழப்புவது, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றையும் செய்து வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்புப் பற்றி கருத்து வெளியிட்ட இந்திய இராஜதந்திரி ஒருவர் இந்திய நிதி அமைச்சுக்கு தெரியாது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிள் வருமானம் பற்றி. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் வருமானத்தை தெரிந்து வைத்திருந்ததுடன் அவர்களிடம் கணக்குப் பார்த்து வரியையும் அறவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டாயிரத்தின் நடுப்பகுதியில் ஒஸ்லோ உடன்படிக்கையில் கிடைத்த யுத்த இடைவேளையின் போது சர்வதேச கட்டமைப்புகள் கேபி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் பொறுப்பிலிருந்து கஸ்ரோவுக்கு கை மாறியது. கேபி இன் செயற்பாடுகள் முடக்கப்பட்டது. பிற்காலத்தில் கேபி யிடம் இருந்து ஆயுத கொள்முதல், விநியோகம் ஆகியவையும் பறிக்கப்பட்டது. ஆயுத கொள்முதல் விநியோகத்தில் நீண்ட கால அனுபவம் மிக்க கேபி யிடம் இருந்து அது பறிக்கப்பட்டது முதல் ஆயதக் கொள்வனவில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மேற்கு நாடுகளின் உளவுத்துறையினரிடமே ஆயுத பேரம் பேசி மாட்டிக்கொண்டனர். இறுதி யுத்தத்தில் புலிகளுக்கான ஆயுதங்கள் வந்தடையாததற்கு இதுவும் முக்கிய காரணம். அடுத்து இந்தியா செய்மதிகளுடாக சர்வதேச எல்லையையும் கண்காணித்ததால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு சேர்க்கவும் முடியவில்லை. 1993 இல் சர்வதேச எல்லைக்குள் வைத்து கிட்டு பயணித்த கப்பலை இந்திய கடற்படையினர் கைப்பற்றியதும், கிட்டுவை கைது செய்ய முற்பட்டதும், கிட்டு கப்பலோடு எரிந்தது உயிர் மாய்த்ததும் வரலாறு.

கஸ்ரோ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதும், தாயகத்தில் இருந்து சில போராளிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பபட்டு அக்கட்டமைப்புகள் நேரடியாக கஸ்ரோவின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர். அனைத்துலகச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்று இயங்கிய அமைப்புக்களுக்குள் புதிதாக வந்தவர்கள் தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிதி சேகரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பல முதலீடுகளையும் மேற்கொண்டனர். நிதி சேகரிப்பவர்களுக்கு அவர்கள் சேகரிக்கும் நிதித் திரட்சியைப் பொறுத்து சம்பளமும் போனஸ்சும் வழங்கப்பட்டது. இதுவரை தமது நேரத்தை ஒதுக்கி தங்களது கடமை சேவை என்ற அடிப்படையில் பணியாற்றிய சிலர் இவ்வமைப்புகளில் இருந்து தங்களை விலத்திக்கொண்டனர்.

இறுதி யுத்தம் உச்சத்தைத் தொட்டிருந்த 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ மதிப்பிட்டிருந்தது. 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தை ஈட்ட தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் சர்வதேசம் எங்கும் இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த மதிப்பீடு தெரிவிக்கின்னறது.

2009 மே 18க்கு மறுநாளே இச்சொத்துக்களில் பெருமளவு காணாமலாக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் தப்பிய தளபதிகள், போராளிகள் இந்த சர்வதேச வலைப்பின்னல் தொடர்பைக் கொண்டிருந்தால் அவர்கள் அத்தொடர்பைப் பயன்படுத்தி இராணுவ, மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளிநாட்டுக்கு வந்தனர். இது பெரும்பாலும் இங்கு வலைப்பின்னலில் நிதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களின் நெருங்கிய உறவுகள், தளபதிகளின் குடும்பத்தினரை அழைக்கப் பயன்படுத்தப்பட்டது. இங்கும் யாழ் மையவாதம் மிகத் கச்சிதமாக காரியத்தை நகர்த்தியது. மற்றும் சாதராண போராளிகள், போராட்டத்தில் ஊனமுற்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள சொந்தபந்தங்களின் உதவியோடு வெளிநாடு வந்து சேர்ந்தனர். ஏனையவர்கள் கைவிடப்பட்டவர்களாக இன்னமும் இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் நாளாந்த வாழ்வுக்காகப் போராடிக்கொண்டுள்ளனர். கிழக்குப் போராளிகள், வன்னிப் போராளிகள், மலையகப் போராளிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்த வந்த போராளிகள் பெரும்பாலும் கைவிடப்பட்டனர். சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளும் அவர்களை கூலிப்படைகளாகவே கணித்தனர். கைவிட்டனர். தற்போது பதுக்கப்பட்ட நிதியில் தங்களை விடுதலைப் புலிகளாக அறிவித்து இயங்கியவர்கள் அவர்களின் குடும்பங்களின் சாமத்திய வீட்டுக்கு ஹெலிக்கொப்டரில் வந்து இறங்குகின்றனர். பூத்தூவுகின்றனர்.

உள்ளக புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்த விநாயகமும் சிலரும் இறுதி யுத்தத்தில் கடைசிநேரத்தில் மே14ம் திகதி நந்திக் கடல் பிரதேசத்திலிருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறு தப்பித்த அவர் குறுகிய காலம் சில மாதங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றார். அதன் பின் விநாயகம் பாரிஸ் வந்தடைந்தார். 2009க்குப் பின்னான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைத்தளத்திலிருந்த நிதியை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு. அதற்கு அனுமதி வேண்டும் என இறுதி யுத்தத்தின் போது வெளியேறிய விநாயகம் போன்றவர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்கள் ஏற்கனவே அனைத்துலக வலைப்பின்னலிலிருந்து வெளியேறியவர்களையும் இணைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நிறுவினர். இரு மாவீரர் நிகழ்;வுகள் நடைபெற்றதன் பின்னணி இதுவே. இந்த விடயங்களுக்காக விநாயகம் லண்டனுக்கும் வந்திருந்தார். பிரித்தானியாவில் வரலாற்று மையம் அமைக்கப்பட்டதன் பின்னணியிலும் விநாயகம் செயற்பட்டிருந்தார்.

ஆனால் வெகுவிரைவிலேயே விநாயகம் துரோகி ஆக்கப்பட்டார். நந்திக் கடலில் இருந்து துவாரகா, மதிவதனி, பிரபாகரன் மூவரும் தப்பிவந்தார்கள் என்பதை நம்புபவர்கள் அவர்களுக்கு நான்கு நாளுக்கு முன் மே 14இல் விநாயகம் தப்பி வந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பல களமுனைகளைக் கண்ட விநாயகத்திற்கு அங்கிருந்து தப்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என யாரும் முற்றுமுழுதாக மறுக்க முடியாது. அவ்வாறு தப்பி வந்தபடியால் அவர் இலங்கைப் புலனாய்வுத்துறையின் உதவியுடனேயே தப்பி வந்துவிட்டார், அதனால் அவர் துரோகி என ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இறுதி யுத்தத்தில் விநாயகத்தின் மனைவி பிள்ளைகளும் சரணடைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். விநாயகம் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு உதவியதால் தான் அவருடைய மனைவி பிள்ளைகள் விடுவிக்கப்பட்டதாக இன்னொரு தரப்பு விநாயகத்தை துரோகி என்கிறது. இதனால் விநாயகம் தலைமைச் செயலகத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த வந்திகளின் அவதூறுகளின் உண்மைத் தன்மை யாருக்கும் தெரியாது. ஆனால் விநாயகம் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதற்காக இலங்கைப் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்டிருந்தால் கூட அதில் எவ்வித தவறும் இல்லை. அதற்காக அவரைத் துரோகியாக்க முடியாது. விநாயகத்தை துரோகி என்பவர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்வது மிக முக்கியம்.

இவை இவ்வாறிருக்க இலங்கை அரசு விநாயகம் மீது வழக்கைப் பதிவு செய்து அவருக்கு பிடிவிறாந்தை அனுப்பியது. இன்ரபோலில் விநாயகம் தேடுதலுக்குரிய நபரானார். பிரான்ஸ் உள்துறை அமைச்சு அவருக்கு வழங்கிய விசாவை மீளப்பெற்றது. விநாயகம் குறுகிய காலத்திலேயே ஓரம்கட்டப்பட்டார். துரோகியாக்கப்பட்டார். மௌனிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாகவே புற்றுநோய்க் கொடுமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு யூன் 4இல் மரணத்தை தழுவினார். அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாயகத்தில் வறணியில் வாழ்ந்த அவருடைய மனைவி பிள்ளைகளைக் காணவில்லை. மூத்த மகன் கனடா வந்தடைந்துள்ளார். அவருடைய மனைவியும் மற்றைய பிள்ளைகளும் விசிற்றேர்ஸ் விசாவில் அண்மையில் கனடா வந்துள்ளனர். விநாகயத்தின் பூதவுடலை கனடாவில் உள்ள அவருடைய மனைவி பிள்ளைகளிடம் அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை. விமர்சனங்களோடும் மனிதாபிமானத்தோடும் அப்போராளியின் வாழ்வை மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்காக தன்னை தியாகம் செய்ய முன்வந்த போராளியாக அவருக்கு எனது அஞ்சலிகள்.

 

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதியிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி !

இந்தியாவின் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகிறது.

தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 230க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன.

தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் இந்தியா கூட்டணி மெகா அணியாக களம் கண்டது.

எதிர்க்கட்சியான அதிமுகவோ, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம் கண்டது.

பாஜகவோ, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தனி அணி அமைத்து களம் கண்டது.

இதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதியிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதிகளில் மட்டும் முறையே பாமக மற்றும் தேமுதிக கடும் போட்டி கொடுத்தது. இருப்பினும் இறுதியில் திமுக கூட்டணியே 40 தொகுதியிலும் வெற்றி பெற்று ஸ்வீப் செய்துள்ளது.

கடந்த 2019 தேர்தலில் தேனியை தவிர 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இம்முறை விட்ட ஒரு தொகுதியையும் தன்வசம் ஆக்கியுள்ளது.

2004ஆம் ஆண்டில் இதே திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்ற நிலையில், 20 ஆண்டுகள் கழித்து அதே வகையிலான பெரும் வெற்றியை தற்போது பெற்றுள்ளது.

3ஆவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் – மோடி

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.

 

நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தேர்தல் வெற்றி கொடுத்துள்ளது.

 

இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

 

இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள்.

 

இந்தப் புனித நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. மக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன்.

 

ஒடிசா, அருணாசலப் பிரதேசத்தில் பாஜக வென்றுள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. கேரளாவில் பா.ஜ..க காலூன்றி உள்ளது என தெரிவித்தார்.

200 வருட மெக்சிகோ வரலாற்றில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம்!

மெக்சிகோவில், முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவில் நேற்றைய தினம் ஜனாதிபதி, 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி (Morena party) சார்பில், 61 வயதான கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார்.

இவர், குறித்த தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக, அந் நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் கிளாடியா ஷீன்பாம், டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் நகர மேயாராக பணியாற்றிய கிளாடியா ஷீன்பாம், காலநிலை விஞ்ஞானியாகவும், மெக்சிகோ தேச அரசியலில் அனுபவம் கொண்டவராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவில், 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஈழத்தமிழ் ஆண் காடையர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை!

பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு கௌரவம்! பிரபாகரனைக் காதலித்தவளுக்கு நடுத்தெருவில் அறை!! ஈழத்தமிழ் ஆண் காடையர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை!!!

மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கணேசலிங்கம் பேராசிரியர் தமிழ் தேசியத் தூண்! பிரபாகரனை காதலித்த கொழும்புப் பெண் ‘கொழும்பு வேசை’ நடுத்தெருவில் வைத்து புலிப்படை கொண்டு தாக்குவார்கள் அதனை நியாயப்படுத்த மனித உரிமை வீரர்கள் கொடுக்குக் கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்ககள்.

சுஜூகூல் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் பிரபல்யமான ஜூலியட் சுரேஸ், குறுகிய காலம் கிளிநொச்சி பரந்தனில் வாழ்ந்த பெருமாள்சிங்கராயரின் மகளாவார். ஈழத் தமிழ் சமூகம் பேசுகின்ற தமிழ் தேசியத்தின் முதகெலும்பாக இன்னும் இருக்கும் யாழ் மையவாதம், ஏனைய பிரதேசத்தவர் மீதான காழ்ப்புணர்வு, மலையகத் தமிழர் மீதான காழ்ப்புணர்வு, சாதிய வன்மம், பெண்ணடிமைத்தனச் சிந்தனை அனைத்தும் ஒரு புள்ளியில் இணைந்துகொண்டதே ஏப்ரல் 3 இரவு ஏழுமணியளவில் இடம்பெற்ற சுஜூகூல் என்ற இரு குழந்தைகளின் தாயின் மீதான தாக்குதல். தன்னை ஆண்டாளின் பாணியில் பிரபாகரனைத் தன் காதலனாகக் கற்பனை செய்யும் ஒரு பெண் சுஜூகூல்.

அது மட்டுமல்லமால் சுஜூகூலையும் அவரது ஒன்பதே வயதான மகளையும் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று சிஎம் கழுகுவேட்டை என்ற நிக்சன் – அக்காகடை பாலமுரளி தலைமையிலான கும்பல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் இருந்தனர். அவரது ஆடைகளை கழற்றி அவமானப்படுத்தவும் முயன்றுள்ளனர். தனக்கு மாதவிடாய் என்று குறிப்பிட்ட போதும் இந்தக் காமுகர்கள் விடவில்லை.

இராணுவக் காடையர்கள் சிலர் இறுதி யுத்தத்தில் இசைப்பிரியாவை கொடுமைப்படுத்தியதும் புங்குடுதீவில் வித்தியாவை ஈழத்துக் காடையர்கள் காமுகர்களை தொலைபேசியில் கூவி அழைத்து கொடுமைப்படுத்தியதும் அவ்வளவு இலகுவில் மறக்கக் கூடியதல்ல. இதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே பாரிஸில் உள்ள சிஎம் கழுகுவேட்டை நிக்ஸன் – பாலமுரளி கும்பல் சுஜூகூல் பொதுவெளியில் பாலியல் ரீதியில் அவமானப்படுத்துவதற்கு தாக்குதலை நடத்துவதற்கு பாரிஸில் வாழும் காமுகர்களை எல்லாம் ரிக்ரொக் வலைத்தளத்தினூடாகக் கூவி அழைத்தனர். இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமைகளை இராணுவக் காடையர்கள் ஒளிப்பதிவு செய்தது போல் ஒன்பது வரையான லாச்சப்பல் காடையர்கள் இந்தக் காட்சிகளை live stream செய்ய, இன்னும் இருபது பேர்வரையான காடையர்கள் புலிகளின் பெயரில் பிரபாகரனின் பெயரில் சுஜூகூலைத் தாக்கினர். புலிப்பாடல்களைப் போட்டு தாக்குதலைக் கொண்டாடினர்.

இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இதன் பின்னணி என்ன? என்று தெரிந்துகொள்ளவே விரும்பாதவர்கள் இதனை நியாயப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் புலித் தேசியத்தையும் வைத்து வயிறு வளர்ப்பவர்கள், அரசியல் செய்பவர்கள், கானொலி செய்து தங்கள் வியூக்களை கூட்டத் துடிப்பவர்கள், ஐபிசி பாஸ்கரன் அடியான்கள், ஹொட்டலியர்களின் அடியான்கள் எல்லோரும் சேர்ந்து தன்னந்தனியாக நின்ற இரு குழந்தைகளின் தாயை நடுத்தெருவில் வைத்து தாக்கியவர்களுக்கும் அவளின் ஒன்பது வயதுக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்று துடித்தவர்களுக்கும் வக்காலத்து வாங்கி செய்திகளை, நேர்காணல்களை, பதிவுகளை இட்டனர்.
இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் யாழ் சைவ வேளாள ஆண்கள் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் போது கண்டுகொள்வதில்லை. லண்டனில் பல பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற போது பாலியல் துஸ்பிரயோகம் செய்த காமுகர்களுக்கு வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயத் தலைவர் உட்பட 42 பேர் நற்சான்றிதழ் வழங்கினர். மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செய்த தமிழ் தேசியத்தின் தூணாகத் தன்னைக் காட்டும் அரசியல்துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் இன்றும் பேராசிரியர். இவ்வாறான காமுகர்களின் உதவியோடு துறைத் தலைவரான ரகுராம் இன்றும் அந்தப்புரத்துக்கு ஆள் பிடிக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் அவரின் பாசறையில் வளர்ந்தவர்களையும் கேவலப்படுத்தும் யாரையும் யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஆனால் ஒரு அபலைப் பெண் தன்னையும் தன் குடும்பத்தினரையும் தூசண வார்த்தைகளால் திட்டியதற்குப் பதிலடியாக தூசண வார்த்தைகளால் திட்டியதும் யாழ் சைவ வேளாள ஆண்களின் ஆண்மை பீறிட்டுக் கொண்டது. உடனே அவள் பேசிய சொற்களை வெட்டி ஒட்டி அதனை அவள் நேசித்த பிரபாகரனுக்கும் ஈழத்துப் பெண்களுக்கும் எதிரானதாக அவற்றை எடிட் செய்து ஒரு கும்பலே அவளுக்கு எதிராக திரண்டெழுந்து உள்ளது. சிங்களத்தி, கொழும்பு ‘வே’ன்னா, வடக்கத்தையாள் மற்றும் தகாத வார்த்தைகளால் பாலியல் வன்புணர்வு செய்யும் இதே கும்பலும் இவர்களுக்கு ஜால்ரா போட்டு விசிலடிப்பவர்களும் தான் தமிழ் மக்களின் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். பிரபாகரன் குடும்பத்தை உயிர்ப்பித்து எழுப்பி வருகின்றனர், தமிழர்களின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.

இந்த விசிலடிச்சான் கும்பல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிச்சினனத்தையும், புலிக்கொடியையும், பிரபாகரனதும் இறந்த தளபதிகளினது படங்களையும் கார்த்திகைப் பூவையும் ஐடியாக வைத்துக்கொண்டே இவ்வளவு அநியாயங்களையும் ஈனத்தனங்களையும் புரிகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் நாளாந்தம் களங்கப்படுவதற்கும் இவர்களைப்போன்றவர்களே பிரதான காரணமாக உள்ளனர். இந்தக் காமுகர்களும் இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் ஈழஅரசியலில் இருந்து அரசியல் நீக்கம் செய்யப்படும் வரை ஈழத்தமிழர்களுக்கு விடிவே இல்லை.

அன்று உண்மையில் என்ன நடந்தது என்ற பதிவு விரைவில் வெளிவரும்…

காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் – ஜோ பைடன்

காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இதுவெனவும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரானது, பல மாதங்களாக நீடித்து வருகிறது, கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து பயங்கர தாக்குதல்களை நடத்தியதுடன் பலரை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

அதன் பின்னர் அந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இன்றுவரை காசாவில் தாக்குல்களை நடத்திய வருகிறது.

அத்துடன், இந்த போர் காரணமான எண்ணற்ற மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரகணக்கிலான பெண்கள் குழந்தைகள் உட்பட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் முழுமையான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளது.

தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் நாம் அனுமதிக்க மாட்டோம் – சீனா உறுதி !

சீனாவிடம்  இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் தாம் அனுமதிக்க மாட்டோம் என சீன இராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை சீன இராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “தைவானை சீனாவிடம் இருந்து பிரிந்து செல்ல சீன இராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது. தைவானின் சுதந்திரம் என்பது போருக்கு சமம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தைவானின் சுதந்திரத்திற்காக போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகவும், சீனாவுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைவதை ஊக்குவிப்பதற்காகவும், வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதற்காகவும் சீன இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சியுடன் செயல்பட்டு வருகின்றது.

மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது தைவானை சுற்றி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

“அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்” – த.ஜெயபாலன்

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

 

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

 

வண. பிதா. லோங் அடிகளாரின் சிந்தனையில் தோண்றிய நூலக எண்ணக்கருவுக்காக ஆரம்பத்தில் அவருடைய உருவச்சிலையே நூலகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சைவத்தின் எழுச்சியோடு அந்த இடத்தை கல்விக் கடவுளான சரஸ்வதி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1981 மே 31 இரவு முதல் இலங்கைப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாக யாழ்பாணப் பொது நூலகம் உலகறியப்பட்டது. அந்த ஒடுக்குறை அடையாளத்தை புத்தனின் வெண்தாமரையை க் கொண்டு மறைக்க நூலகம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டது.

 

ஆனால் மீளக்கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதுஇ யார் திறந்து வைப்பது என்பதில் சிக்கல்கள் உருவானது. நூலகத்தை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்போதைய யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையன் திறந்து வைக்கக்கூடாது என்பதில் சாதிமான்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனால் கட்சியின் தலைவரான வி ஆனந்தசங்கரியயை வைத்து நூலகத்தைத் திறந்து தங்கள் அரசியல் லாபத்தையீட்ட தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் அது திறக்கப்படுவதை தங்கள் எதிரியான வி ஆனந்தசங்கரியினால் திறக்கப்படுவதை அரசியல் காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. நூலக மீள்திறப்பு பந்தாடப்பட்டது.

அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தமிழ் மக்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் உள்ளது.

 

யாழ்ப்பாணச் சமூகமானது தன்னுடைய செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் இடையே பாரிய இடைவெளியயைக் கொண்ட சமூகமாகவே இன்றும் உள்ளது. சிங்கள சமூகத்தின் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையயை எதிர்த்த யாழ்ப்பாண சமூகம் தான் ஏனைய சமூகங்கள் மீது கட்டற்ற ஒடுக்குமுறையயை மிகத்தீவிரமாகக் கைக்கொண்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பள்ளி, நூலகம் என்பன யாழ் ஆதிக்க சமூகத்தினரால் எரியூட்டப்பட்டு இருந்தது. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை ஏற்றுக்கொள்ளாத அரச பாடசாலைகள் யாழ் மண்ணில் உள்ளது. மனித உரிமைகளைக் கோருகின்ற இன்றைய யாழ்ப்பாண சமூகம் ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற சமூகமாகவே உள்ளது.

 

நாற்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூருகின்ற யாழ்ப்பாண சமூகம் இன்னமும் அந்நூலகம் எந்நாளில் எரிக்கப்பட்டது என்ற விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. வாய்மொழி வந்த செய்திகளிலும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டஇ பேசப்பட்ட விடயங்களையும் கொண்டே இந்தப் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தன்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல் எம்மத்தியில் உள்ள சில கேள்விச் செவியர்கள் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அறிவியல் தேடலே இல்லாமல் கூடத்தின் வரலாற்று நிகழ்வொன்றின் முக்கிய தினத்தையே மாற்றிட முனைகின்றனர். இதுவும் ஒரு முரண்நகையே.

அறிவியலின் அடிப்படையே தேடல் ஆனால் யாழ்ப்பாண சமூகம் ஒரு தேடலற்ற சமூகமாக தேடுபவர்களை அவமதிக்கின்ற சமூகமாக மாறிவிட்டது. அறிவு என்பது பரீட்சையில் சித்தியடைவது என்ற நிலைக்கு யாழ்ப்பாணசமூகம் குறுகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொதுவான விடயங்களைத் தேடுவதுஇ அறிவதுஇ கற்பது வீண் விரயம் என்று பாடப்புத்தகங்களுக்குள்ளேயே தன்னை அடக்கியது. பாடப் புத்தகங்களும் வீண் விரயமாகி தற்போது துரித மீட்டல் புத்தகங்களும் வினாவிடைப் புத்தகங்களும் படித்து குறுக்கு வழியில் அறிவைப் பெற்றுவிடலாம் என்று விழுந்து விழுந்து படித்து இப்போது யாழ்ப்பாணத்தினது மட்டுமல்ல தமிழர்களின் கல்வி நிலையே வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் அங்கு நூலகங்களின் அவசியம் இன்னமும் உணரப்படவில்லை.

 

யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31இல் எரியூட்டப்பட்டது என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நுலகவியலாளராக வாழ்நாள் நூலகவியலாளராக உள்ள என் செல்வராஜா மிகத் தெளிவாக வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ளார். இன்று அவருடைய ஆவணத் தொகுப்புகள் மட்டுமே யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் வரலாற்றை அழிந்து போகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

 

2003இல் என் செல்வராஜாவினால் ‘றைஸிங் ப்ரொம் தி ஆஸஸ்’ என்ற ஆவணம் ஆங்கில மொழியில் 110 பக்கங்களுடன் தேசம் வெளியீடாக வெளிவந்தது. அதனை நான் (த ஜெயபாலன்) வடிவமைத்து இருந்தேன். தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா மேலதிக தகவல்களைத் திரட்டி 200 வரையான பக்கங்களுடன் நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். யாழ் நூலக எரிப்புப் பற்றி ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவாகும். என் செல்வராஜா யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய தமிழ் ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளயிட்டு உள்ளார்.

 

அரச பேரினவாதம் நூலகத்தையும் நூல்களையும் எரித்ததால் நாம் இன்றும் நூலகம் எரித்த நாளை நினைவுகூருகின்றோம். நூலகத்தின் பௌதீகக் கட்டமைப்பை அரசு எரித்து தீக்கிரையாக்கியது. ஆனால் நாம் நூலகச் சிந்தனையையே எமது அடியோடு அழித்துவிட்டோம். எத்தனை நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை பாடசாலைகளில் நூலகங்கள் இயங்குகின்றன. எத்தனை பேர் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கின்றனர். அன்று அரச பேரினவாதம் நூலகத்தை எரித்திராவிட்டால் சிலசமயம் இன்று கறையான் அரித்திருக்கும். எரித்த நாளே எமக்கு தெரியாத போது அரித்தநாள் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.