விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையாடுகின்றனர். அவர் நரகத்திற்கு செல்கின்றார் என்றும் சில பதிவுகள் வெளியாகி யுள்ளது. அரசியலற்ற தனிமனித ஆளுமைகளின் கீழ் கட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்கள், அவ்வமைப்பை சுக்குநூறாக சிதறடித்துள்ளது. தனிப்பட்ட நபர்களைத் தவிர இவ்வமைப்புகள் தங்களை ஒருங்கமைப்பதற்கான அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இவர்களில் சற்று அரசியல் விளக்கமுடையவர்கள் முற்றாக மே 18க்குப் பின்னான புலி அமைப்பிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளனர். ஒரு போராளியின் கடைசி மூச்சுக் காற்று கரைந்து செல்வதற்கு முன்னரேயே அவதூறுகள் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. ஒரு போராளி துரோகியானது எப்படி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ‘துரோகத்தின் பரிசு’ பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் அவசியமில்லை. வந்திகளும், தனிப்பட்ட கோபதாபங்களும், போட்டிகளுமே போதுமானது. யுத்தம் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும் ‘தியாகி – துரோகி’ என்ற கருப்பு வெள்ளை பைனரி அரசியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் வரமுடியவில்லை. இன்று பழிசொல்வதற்கு ஆளில்லாமல் தங்களுக்குள்ளேயே தியாகி – துரோகி முத்திரைகளைக் குத்துகின்றனர்.

வவுனியாவில் அன்றைய காலத்தில் நன்கு அறியப்பட்ட கொடுங்கோலன் மாணிக்கதாசன். மாணிக்கதாசனின் மறைவு இன்றும் நினைவுகூரப்படுகின்றது. மாணிக்கதாசன் தமிழ் மக்களுக்காகப் போராட ஆயதமேந்திய போதும் மாணிக்கன்தாசன் இழைத்த அநீதிகள் மிக மிக அதிகம். மாணிக்கன்தாசன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார் என்பதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவரைத் தியாகி ஆக்குவது சரியா என்ற கேள்வி மிக நியாயமானதே.
இந்த வகையில் விநாயகம் துரோகி ஆக்கப்படுவதற்கு வலுவான எந்தக் காரணமும் கிடையாது. வந்திகள், தனிநபர் போட்டி பொறாமை போன்றவையே இந்த அவதூறுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. இதற்கு ஒரு நீண்ட பின்னணியும் உண்டு.

எண்பதுக்களின் பிற்பகுதியில் மேற்குநாடுகளுக்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த ஆரம்பகாலங்களில், விடுதலைப் புலிகள் தங்களுக்கான அமைப்புகளை மேற்குலகில் நிறுவினர். நிதி வசூலிப்புகளையும் மேற்கொண்டனர். மேற்குலகில் தங்களோடு பணியாற்ற விடுதலைப் புலிகளில் இருந்து, மரண தண்டனையில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற பாரிஸில் உள்ள சுக்லா போன்றவர்கள் உட்பட பலர் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டனர். மாற்று இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இக்கட்டமைப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் புலிகளுக்கான நிதி சேகரிப்பு மற்றும் நிதி சேகரிப்பு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது என்று ஆரம்பித்து, மாவீரர் தின நிகழ்வு, பொங்கு தமிழ் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தனர். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல்களைக் குழப்புவது, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றையும் செய்து வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்புப் பற்றி கருத்து வெளியிட்ட இந்திய இராஜதந்திரி ஒருவர் இந்திய நிதி அமைச்சுக்கு தெரியாது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிள் வருமானம் பற்றி. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் வருமானத்தை தெரிந்து வைத்திருந்ததுடன் அவர்களிடம் கணக்குப் பார்த்து வரியையும் அறவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டாயிரத்தின் நடுப்பகுதியில் ஒஸ்லோ உடன்படிக்கையில் கிடைத்த யுத்த இடைவேளையின் போது சர்வதேச கட்டமைப்புகள் கேபி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் பொறுப்பிலிருந்து கஸ்ரோவுக்கு கை மாறியது. கேபி இன் செயற்பாடுகள் முடக்கப்பட்டது. பிற்காலத்தில் கேபி யிடம் இருந்து ஆயுத கொள்முதல், விநியோகம் ஆகியவையும் பறிக்கப்பட்டது. ஆயுத கொள்முதல் விநியோகத்தில் நீண்ட கால அனுபவம் மிக்க கேபி யிடம் இருந்து அது பறிக்கப்பட்டது முதல் ஆயதக் கொள்வனவில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மேற்கு நாடுகளின் உளவுத்துறையினரிடமே ஆயுத பேரம் பேசி மாட்டிக்கொண்டனர். இறுதி யுத்தத்தில் புலிகளுக்கான ஆயுதங்கள் வந்தடையாததற்கு இதுவும் முக்கிய காரணம். அடுத்து இந்தியா செய்மதிகளுடாக சர்வதேச எல்லையையும் கண்காணித்ததால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு சேர்க்கவும் முடியவில்லை. 1993 இல் சர்வதேச எல்லைக்குள் வைத்து கிட்டு பயணித்த கப்பலை இந்திய கடற்படையினர் கைப்பற்றியதும், கிட்டுவை கைது செய்ய முற்பட்டதும், கிட்டு கப்பலோடு எரிந்தது உயிர் மாய்த்ததும் வரலாறு.

கஸ்ரோ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதும், தாயகத்தில் இருந்து சில போராளிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பபட்டு அக்கட்டமைப்புகள் நேரடியாக கஸ்ரோவின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர். அனைத்துலகச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்று இயங்கிய அமைப்புக்களுக்குள் புதிதாக வந்தவர்கள் தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிதி சேகரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பல முதலீடுகளையும் மேற்கொண்டனர். நிதி சேகரிப்பவர்களுக்கு அவர்கள் சேகரிக்கும் நிதித் திரட்சியைப் பொறுத்து சம்பளமும் போனஸ்சும் வழங்கப்பட்டது. இதுவரை தமது நேரத்தை ஒதுக்கி தங்களது கடமை சேவை என்ற அடிப்படையில் பணியாற்றிய சிலர் இவ்வமைப்புகளில் இருந்து தங்களை விலத்திக்கொண்டனர்.

இறுதி யுத்தம் உச்சத்தைத் தொட்டிருந்த 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ மதிப்பிட்டிருந்தது. 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தை ஈட்ட தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் சர்வதேசம் எங்கும் இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த மதிப்பீடு தெரிவிக்கின்னறது.

2009 மே 18க்கு மறுநாளே இச்சொத்துக்களில் பெருமளவு காணாமலாக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் தப்பிய தளபதிகள், போராளிகள் இந்த சர்வதேச வலைப்பின்னல் தொடர்பைக் கொண்டிருந்தால் அவர்கள் அத்தொடர்பைப் பயன்படுத்தி இராணுவ, மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளிநாட்டுக்கு வந்தனர். இது பெரும்பாலும் இங்கு வலைப்பின்னலில் நிதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களின் நெருங்கிய உறவுகள், தளபதிகளின் குடும்பத்தினரை அழைக்கப் பயன்படுத்தப்பட்டது. இங்கும் யாழ் மையவாதம் மிகத் கச்சிதமாக காரியத்தை நகர்த்தியது. மற்றும் சாதராண போராளிகள், போராட்டத்தில் ஊனமுற்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள சொந்தபந்தங்களின் உதவியோடு வெளிநாடு வந்து சேர்ந்தனர். ஏனையவர்கள் கைவிடப்பட்டவர்களாக இன்னமும் இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் நாளாந்த வாழ்வுக்காகப் போராடிக்கொண்டுள்ளனர். கிழக்குப் போராளிகள், வன்னிப் போராளிகள், மலையகப் போராளிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்த வந்த போராளிகள் பெரும்பாலும் கைவிடப்பட்டனர். சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளும் அவர்களை கூலிப்படைகளாகவே கணித்தனர். கைவிட்டனர். தற்போது பதுக்கப்பட்ட நிதியில் தங்களை விடுதலைப் புலிகளாக அறிவித்து இயங்கியவர்கள் அவர்களின் குடும்பங்களின் சாமத்திய வீட்டுக்கு ஹெலிக்கொப்டரில் வந்து இறங்குகின்றனர். பூத்தூவுகின்றனர்.

உள்ளக புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்த விநாயகமும் சிலரும் இறுதி யுத்தத்தில் கடைசிநேரத்தில் மே14ம் திகதி நந்திக் கடல் பிரதேசத்திலிருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறு தப்பித்த அவர் குறுகிய காலம் சில மாதங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றார். அதன் பின் விநாயகம் பாரிஸ் வந்தடைந்தார். 2009க்குப் பின்னான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைத்தளத்திலிருந்த நிதியை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு. அதற்கு அனுமதி வேண்டும் என இறுதி யுத்தத்தின் போது வெளியேறிய விநாயகம் போன்றவர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்கள் ஏற்கனவே அனைத்துலக வலைப்பின்னலிலிருந்து வெளியேறியவர்களையும் இணைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நிறுவினர். இரு மாவீரர் நிகழ்;வுகள் நடைபெற்றதன் பின்னணி இதுவே. இந்த விடயங்களுக்காக விநாயகம் லண்டனுக்கும் வந்திருந்தார். பிரித்தானியாவில் வரலாற்று மையம் அமைக்கப்பட்டதன் பின்னணியிலும் விநாயகம் செயற்பட்டிருந்தார்.

ஆனால் வெகுவிரைவிலேயே விநாயகம் துரோகி ஆக்கப்பட்டார். நந்திக் கடலில் இருந்து துவாரகா, மதிவதனி, பிரபாகரன் மூவரும் தப்பிவந்தார்கள் என்பதை நம்புபவர்கள் அவர்களுக்கு நான்கு நாளுக்கு முன் மே 14இல் விநாயகம் தப்பி வந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பல களமுனைகளைக் கண்ட விநாயகத்திற்கு அங்கிருந்து தப்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என யாரும் முற்றுமுழுதாக மறுக்க முடியாது. அவ்வாறு தப்பி வந்தபடியால் அவர் இலங்கைப் புலனாய்வுத்துறையின் உதவியுடனேயே தப்பி வந்துவிட்டார், அதனால் அவர் துரோகி என ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இறுதி யுத்தத்தில் விநாயகத்தின் மனைவி பிள்ளைகளும் சரணடைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். விநாயகம் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு உதவியதால் தான் அவருடைய மனைவி பிள்ளைகள் விடுவிக்கப்பட்டதாக இன்னொரு தரப்பு விநாயகத்தை துரோகி என்கிறது. இதனால் விநாயகம் தலைமைச் செயலகத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த வந்திகளின் அவதூறுகளின் உண்மைத் தன்மை யாருக்கும் தெரியாது. ஆனால் விநாயகம் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதற்காக இலங்கைப் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்டிருந்தால் கூட அதில் எவ்வித தவறும் இல்லை. அதற்காக அவரைத் துரோகியாக்க முடியாது. விநாயகத்தை துரோகி என்பவர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்வது மிக முக்கியம்.

இவை இவ்வாறிருக்க இலங்கை அரசு விநாயகம் மீது வழக்கைப் பதிவு செய்து அவருக்கு பிடிவிறாந்தை அனுப்பியது. இன்ரபோலில் விநாயகம் தேடுதலுக்குரிய நபரானார். பிரான்ஸ் உள்துறை அமைச்சு அவருக்கு வழங்கிய விசாவை மீளப்பெற்றது. விநாயகம் குறுகிய காலத்திலேயே ஓரம்கட்டப்பட்டார். துரோகியாக்கப்பட்டார். மௌனிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாகவே புற்றுநோய்க் கொடுமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு யூன் 4இல் மரணத்தை தழுவினார். அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாயகத்தில் வறணியில் வாழ்ந்த அவருடைய மனைவி பிள்ளைகளைக் காணவில்லை. மூத்த மகன் கனடா வந்தடைந்துள்ளார். அவருடைய மனைவியும் மற்றைய பிள்ளைகளும் விசிற்றேர்ஸ் விசாவில் அண்மையில் கனடா வந்துள்ளனர். விநாகயத்தின் பூதவுடலை கனடாவில் உள்ள அவருடைய மனைவி பிள்ளைகளிடம் அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை. விமர்சனங்களோடும் மனிதாபிமானத்தோடும் அப்போராளியின் வாழ்வை மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்காக தன்னை தியாகம் செய்ய முன்வந்த போராளியாக அவருக்கு எனது அஞ்சலிகள்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Democracy
    Democracy

    தனிப்பட்ட நபர்களைத் தவிர இவ்வமைப்புகள் தங்களை ஒருங்கமைப்பதற்கான அரசியலைக் கொண்டிருக்கவில்லை.
    யுத்தம் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும் ‘தியாகி – துரோகி’ என்ற கருப்பு வெள்ளை பைனரி அரசியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் வரமுடியவில்லை.

    1980 களில் இந்திய அமைதிப்படை பிரச்சனைகளில் ஓடியவர்கள், சமூகதத்திற்கே அடிப்படையான “முருகப்பெருமானின் கோமணத்தையும் விடாமல் உறிஞ்சும் பண வசூல் திறமையுடையவர்கள் (ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் வருமானத்தை தெரிந்து வைத்திருந்ததுடன் அவர்களிடம் கணக்குப் பார்த்து வரியையும் அறவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்)”,
    ஆகியோரை உள்வாங்கிய LTTE யின் வெளிநாட்டு கட்டமைப்புக்கள். இப்படித்தான் AD 1300 களில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் வீரபல்லாலா, மதுரை சுல்தான்களால் “உயிரோடு தோலுரிக்கப்பட்டபின்பு”, அவனுக்குக் கீழிருந்த “நாயக்கர்கள்” என்கிற அதிகாரிகளின் உறிஞ்சும் திறமையைக் கண்டு, பிறகு வந்த ஆற்காட்டு நவாப்புகளும், நவாப்புகள் தோற்கடிக்கப்பட்டபின்பு ஐரோப்பிய காலனித்துவவாதிகளும், நாயக்கர்களை LTTE யின் வெளிநாட்டு பிரிவு போன்று வசூலுக்கு அமர்த்திக்கொண்டனர்.
    வீரக்கத்தி மணிவண்ணன் (காஸ்ட்ரோ) போன்றோர்களால் இவர்களைக் கட்டுப்படுத்த இயலாது என்று சொல்ல, என்னைவிட இவர்களிடம் நேரடியாக பழகியவர்கள், ஒரு அரசியல் நோக்குடன் ஆராய்ந்தவர்கள் தற்போது கிடையாது.

    இவர்களுக்கு மறுபடியும், தற்போது நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தல் (2024), அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை, “புதிய டெசோ” மற்றும் “என் உயிரினும் மேலான அன்பு பு(ளி)லிப் பயங்கரவாத உடன்பிறப்பே..” போன்றவற்றின் மூலம் கைக்கூடியுள்ளது..!?

    இது பெரும்பாலும் இங்கு வலைப்பின்னலில் நிதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களின் நெருங்கிய உறவுகள், தளபதிகளின் குடும்பத்தினரை அழைக்கப் பயன்படுத்தப்பட்டது.

    அவ்வாறு தப்பி வந்தபடியால் அவர் இலங்கைப் புலனாய்வுத்துறையின் உதவியுடனேயே தப்பி வந்துவிட்டார், அதனால் அவர் துரோகி என ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இறுதி யுத்தத்தில் விநாயகத்தின் மனைவி பிள்ளைகளும் சரணடைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
    விநாயகத்தை துரோகி என்பவர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்வது மிக முக்கியம்.
    விநாகயத்தின் பூதவுடலை கனடாவில் உள்ள அவருடைய மனைவி பிள்ளைகளிடம் அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    தமிழ் மக்களுக்காக தன்னை தியாகம் செய்ய முன்வந்த போராளியாக அவருக்கு எனது அஞ்சலிகள்.

    Reply