17

17

ஈஷி கேஷ் மூலம் போதைப்பொருள் விநியோகம் – பெண் கைது !

சிலாபத்திலிருந்து பல பிரதேசங்களுக்கு ஈஷி கேஷ் மற்றும் வேறு பல முறைகளைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ஏ.ரி.எம் அட்டைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

முந்தல அகுணவில பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய வயம்ப குமாரி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு பயணிக்கு 1800 ரூபாய்க்கு கொத்து விற்பனை செய்ய முயற்சி – உணவக உரிமையாளருக்கு பிணை!

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள Eat Street உணவகத்துக்குச் சென்ற வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

 

இதன்படி சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த சந்தேக நபர் இன்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

வெளிநாட்டுப் பயணி ஒருவருக்குச் சந்தேக நபர் கொத்து ரொட்டி ஒன்றை 1,900 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த போது அதனை ஏற்றுக்கொள்ள வெளிநாட்டுப் பிரஜை மறுத்ததையடுத்து சந்தேக நபர் அவரை அச்சுறுத்தியதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பு 12 யைச் சேர்ந்த 51 வயதான நபரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாடு 1.8 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடிந்தது என்றும் அவர் கூறினார்.

 

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், முதலீடுகள் கணிசமான அளவில் நாட்டிற்குள் வருவதாகவும் அவர் கூறினார்.

 

கடந்த போராட்டத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளால், கடந்த ஆண்டு முதல் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் வரவில்லை எனவும் ஆனால், பிற்பகுதியில், எதிர்பார்த்த அளவை விட முதலீடுகள் நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.