18

18

இலங்கையில் தனிநபரின் வாழ்க்கை செலவிற்கு 16,975 ரூபாய் போதுமானது !

நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

 

மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டயானா கமகே

எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் களுத்துறை மற்றும் அளுத்கடை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை மோசமாக நடத்துவது மற்றும் உணவுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற இரண்டு சம்பவங்கள் குறித்து சமீபத்தில் வெளியான இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

 

சில நபர்கள் இதுபோன்ற அநாகரீகமான நடத்தையில் ஈடுபடுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

 

அத்துடன் இவர்களின் செயற்பாடுகள் நாட்டின் நற்பெயருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் – வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ்

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இதேவேளை, வட மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வட மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

 

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன” இவ்வாறு வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவினால் நான் ஏமாற்றப்பட்டேன் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;வினால் நான் ஏமாற்றப்பட்டேன் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

2019 ஜனாதிபதிதேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவளிக்குமளவிற்கு நிலைமை காணப்பட்டபோதிலும் பின்னர் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தான்அதிகாரத்திற்கு வந்ததும் 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார் எனினும் அது இடம்பெறவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ச விசாரணைகளை காலவரையறையின்றி பிற்போட்டார் என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி என்னை ஏமாற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பாரதூரதன்மையை அனைத்து கட்சிகளும் தலைமைகளும் உணர்ந்து இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.