06

06

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் !

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

 

அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த நடுத்தர வருமானம் பெறும் மற்றும் ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு இலட்சமாகவும், அடுத்த ஆண்டு மூன்று இலட்சமாகவும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

 

இதேவேளை இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – பொலிஸ் மா அதிபர் தேசபந்து

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமான்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

 

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கரலியத்த மற்றும் மாயாதுன்னே, கோரையா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

 

இதேவேளை வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, மகாவீரர் கொண்டாட்டங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் நேற்று வாக்குமூலமொன்றையும் வழங்கியிருந்தார்.

 

வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இடம்பெறுகின்ற நினைவு நாளுக்கு எதிராக சட்டத்தை சிறந்த முறையில் அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

 

இவ்வாறான சட்டவிரோத நிகழ்வுகள் தொடர்பில் அதிகபட்சமாக சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தவுள்ளதாக நீதிமன்றில் அரசாங்கம் சார்மாக முன்னிலையான சட்டத்தரணியும் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த சட்டவிரோத செயல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியிருப்பதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

இதன்படி, குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

 

இதனைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

கல்வியின் புதிய ஆயுதமாக நவீன தொழில்நுட்ப அறிவும் மாற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

 

“கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையாமல் தடுக்க முடிந்துள்ளது. ஆனால் இது போதுமான நடவடிக்கை அல்ல.

 

இன்றும் 10 ஆண்டுகளுக்கு இந்த பயணத்தை நாம் தொடர வேண்டியுள்ளது. நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

 

 

நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் வேகமாக வளரும் சமுதாயத்தில் இணைந்து கொள்ளவேண்டும். அதற்காக உங்களை தயார்ப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

 

இன்றைய பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகள் மூலம் நவீன உலகத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இது கல்வியின் புதிய ஆயுதம். அதற்கு அறிவும் தொழில்நுட்பமும் தேவை. வேகமாக மாறிவரும் இந்த உலகில் அறிவை வளர்ப்பது மிகவும் அவசியம்.

 

உங்கள் அறிவைப் புதுப்பிக்காமல் உலகத்துடன் முன்னேற முடியாது. எனவே, அறிவைப் புதுப்பித்தல் கல்வியின் முக்கியப் பணியாகிறது.

 

 

இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

நாட்டின் கல்வி முறையில் புதிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே அடுத்த 75 ஆண்டுகளில் இந்த நாடு முன்னேறும். அதைச் செய்யாமல் நீங்கள் முன்னேற முடியாது.

 

எவ்வளவுதான் பொருளாதாரத்தை பலப்படுத்தினாலும், உலகத்துடன் முன்னேறாவிடில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் இலங்கை!

இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதிபேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது.

 

கடன்வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கை கடன்களை 15 வருடங்களிற்குள் மீள செலுத்தவேண்டியிருக்கும் 2028 முதல் 2043ம் ஆண்டிக்குள் என தெரிவித்துள்ள அவர் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் கடன்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்

 

இலங்கை 2022 ஏப்பிரலில் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது.இதன் மூலம் இலங்கை தன்னை வங்குரோத்து நிலைக்குஉட்படுத்தியது.

 

2023 ஏப்பிரலில் கூட்டத்தில் இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகள் குழு ஏற்படுத்தப்பட்டது சீனாவிற்கு பின்னர் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடான ஜப்பான் இந்தியா பிரான்சுடன் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது.

 

இலங்கை கடன்களை மீள செலுத்துவதை இடைநிறுத்திவைப்பது தொடர்பிலும் வட்டியை செலுத்துவது தொடர்பிலும் கடன்வழங்கிய நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

 

சீனா இந்த கூட்டத்தில் பார்வையாளராக மாத்திரம் கலந்துகொண்டுள்ளது

 

எனினும் சீனாவுடனான கடன்மறுசீரமைப்பு நாடுகள் ஏனைய நாடுகளுடனான கடன்மறுசீரமைப்பை ஒத்ததாகவே காணப்படும் என தெரிவித்துள்ள இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

 

2023ம் ஆண்டின் இறுதியில் இலங்கை செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் 37.3 பில்லியன் டொலராக காணப்பட்டது இதில் சீனாவிற்கு 4.7 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டும்.

 

2017 இல் இலங்கை தனது தென்பகுதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியது .

 

இது கடன்களை வழங்குவது தாமதமானால் உட்கட்டமைப்பு திட்டங்களை கைப்பற்றும் கடன்பொறிக்கான உதாரணமாக கருதப்பட்டது.

 

இலங்கையை தளமாக கொண்டு இந்தோ பசுபிக்கில் சீனா அகலக்கால்பதிப்பது குறித்து இந்தியா ஜப்பான் உட்பட இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் சில கவலை கொண்டுள்ளன.

 

எனினும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை முற்றிலும் வர்த்தக நோக்கங்களை கொண்டது என தெரிவித்த சாகலரத்நாயக்க இதில் இராணுவ நோக்கம் எதுவுமில்லை இலங்கை வெளிநாட்டு முதலீட்டுக்கு தயாராக உள்ளது நாங்கள் எந்த நாடு என்ற அடிப்படையில் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதில்லை தேசிய பாதுகாப்பிற்கு பாதுகாப்பு ஏற்படுத்தினால் மாத்திரம் அது குறித்து கரிசனை கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

 

எனினும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுதக்கூடிய நாட்டின் வடபகுதி குறித்து நாங்கள் கவனத்துடன் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் நானோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்க வேலைதிட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சியில் குறித்த இரு இடங்களிலும் நீர் வழங்கல் சமூக அடிப்படை நிலையத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள நனோ நீர் சுத்திகரிப்பு மையம் வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

 

நிகழ்வில் வீடமைப்பு நகரபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க, கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.