நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

கல்வியின் புதிய ஆயுதமாக நவீன தொழில்நுட்ப அறிவும் மாற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

 

“கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையாமல் தடுக்க முடிந்துள்ளது. ஆனால் இது போதுமான நடவடிக்கை அல்ல.

 

இன்றும் 10 ஆண்டுகளுக்கு இந்த பயணத்தை நாம் தொடர வேண்டியுள்ளது. நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

 

 

நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் வேகமாக வளரும் சமுதாயத்தில் இணைந்து கொள்ளவேண்டும். அதற்காக உங்களை தயார்ப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

 

இன்றைய பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகள் மூலம் நவீன உலகத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இது கல்வியின் புதிய ஆயுதம். அதற்கு அறிவும் தொழில்நுட்பமும் தேவை. வேகமாக மாறிவரும் இந்த உலகில் அறிவை வளர்ப்பது மிகவும் அவசியம்.

 

உங்கள் அறிவைப் புதுப்பிக்காமல் உலகத்துடன் முன்னேற முடியாது. எனவே, அறிவைப் புதுப்பித்தல் கல்வியின் முக்கியப் பணியாகிறது.

 

 

இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

நாட்டின் கல்வி முறையில் புதிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே அடுத்த 75 ஆண்டுகளில் இந்த நாடு முன்னேறும். அதைச் செய்யாமல் நீங்கள் முன்னேற முடியாது.

 

எவ்வளவுதான் பொருளாதாரத்தை பலப்படுத்தினாலும், உலகத்துடன் முன்னேறாவிடில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *