2024

2024

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை பற்றி பரிசீலிக்க வேண்டும் – ஐ.நாவில் தீர்மானம் !

ஐக்கியநாடுகள் சபையில்  பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை  வழங்குவது குறித்து  ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

2012 முதல் பாலஸ்தீனத்திற்கு ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து  பாதுகாப்பு சபை மாத்திரமே தீர்மானிக்க முடியும்.

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா சமீபத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது.

எனினும் நேற்றைய தீர்மானம் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்தை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.

ஐக்கியநாடுகள் பயங்கரவாத நாட்டை தனது பக்கத்திற்கு வரவேற்றுள்ளது என ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

புலிகளிடமிருந்து கை மாறும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி – து.சேனனுடனான கலந்துரையாடல்!

மே மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் முள்ளிவாய்க்கால் கண்காட்சி நிகழ்வை பிரித்தானியாவில் இயங்கும் இளைய தலைமுறையினர் அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. நியூமோல்டனில் மோல்டன் றோட்டில் உள்ள மனோர் பார்க் ஹோலில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு தங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பறைசாற்றி வரும் அமைப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டுக்கொண்டுள்ளது. தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக பறைசாற்றுகின்ற உலகின் பல்வேறு பாகங்களிலும் இயங்கும் அமைப்புகள் படிப்படியாக தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கைவிட்டதால் தமிழ் சொலிடாரிட்டி இந்த முள்ளிவாய்க்கால் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினை கட்டியெழுப்பியவர்களில் ஒருவரும் கொமிற்றி போர் வேர்கஸ் இன்ரநஷனலின் (Committee for Workers International) செயலாளருமாகிய சேனன் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தங்களைப் புலிகளின் பிரதிநிதிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான அமைப்புகளிடம் எந்தவிதமான அரசியல் தெளிவோ அரசியல் திட்டமிடலோ இல்லையெனச் சுட்டிக்காட்டும் சேனன் இவர்கள் காலாவதியாக நீண்டகாலம் ஆகிவிட்டது எனத் தெரிவித்தார். அதனால் நினைவு தினங்களாக ஒரு மரண வீடாக நிகழ்வுகளை நடாத்தி காலத்தை விரயமாக்காமல் இந்த நினைவுகளை மக்களை எழுச்சியடையச் செய்யும் வகையிலும் அதனை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுகின்ற வகையிலும் தமிழ் சொலிடாரிட்டி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதாக சேனன் தெரிவித்தார். அவர் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணல் இதோ..!

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது அஸ்ட்ராஜெனெகா !

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம். வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனகா மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கானதடுப்பூசியாக ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்த சூழலில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குக தொடரப்பட்டது. இது அந்த நாட்டில் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது. இது அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இனி அந்நிறுவனம் கோவிட் தடுப்பூசியை தயாரிப்பதையும் விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்கிறது. இதனை பிரிட்டன் நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல். கடந்த மார்ச் மாதம் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணையத்தின் வசம் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்துள்ளது. இது நேற்று (மே 7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளர் அர்த்தமற்றது! இலங்கைக்கான பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் – 2024 தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடாக பொதுவேட்பாளர் என்ற கொள்கையை தமிழ்தேசிய கட்சிகள் முன்மொழிந்து வருகின்றன. இது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பிலும் அதிலுள்ள சாதக – பாதக நிலை தொடர்பிலும் எழுத்தாளரும் அரசியல் ஆர்வலருமான து.சேனன் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்.

தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

ரஃபா எல்லைகளை கைப்பற்றிய இஸ்ரேல் – மனிதாபிமான உதவிகள் முழுமையாக தடைப்பட வாய்ப்பு!

காசா பகுதியில் உள்ள ரஃபாஎல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ரஃபா மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிஎன்பதுடன் எகிப்திலிருந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் வருவதற்கான ஒரேயொரு பாதையாகவும் காணப்படுகின்றது.

ரஃபாவின் காசா பக்கத்தினை நாங்கள் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் எங்களது சிறப்பு படைகள் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரேலின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசா எல்லை அதிகாரசபைக்கான பேச்சாளர் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுவதை உறுதிசெய்துள்ளார்.

அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஹமாஸ் அமைப்பு  மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவிப்பு – மகிழ்ச்சியில் பாலஸ்தீனியர்கள் !

எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஹமாஸ் ஏற்றுக் கொண்ட போர்நிறுத்தப் பிரேரணையை இஸ்ரேல் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதனிடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்த நிலையில் இடம்பெயர்ந்து ரபாவில் தங்கியுள்ள பலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தில் ஈடுபட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

 

 

ரஃபாவில் இராணுவநடவடிக்கைகளை தீவிரமாக்கும் இஸ்ரேல் – ரஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள் !

ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என உத்தரவுபிறப்பித்துள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது  இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்களின் பாதுகாப்பிற்காக  சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

அச்சமடைந்த மக்கள் கால்நடையாகவும் அல்லது கழுதைகளின் மீதும் அல்லது தங்களின் உடமைகளை வாகனங்களில் ஏற்றியபடி வாகனங்களிலும் ரபாவிலிருந்து வெளியேறுகின்றனர்.

நேற்றிரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானக்குண்டுவீச்சுகள் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஃபாவிலிருந்து நகரத்தின் மேற்கு பகுதி உட்பட நகரத்தில் கடும் பதற்றநிலை காணப்படுகின்றது பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர் பலர் ஏற்கனவே வெளியேற ஆரம்பித்துள்ளனர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் என கார்டியன் தெரிவித்துள்ளது. மேலும் ரஃபா மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான பிரதான தளமாகவும் காணப்படுகின்றது.

அவர்கள்ரஃபாவின் கிழக்கில் உள்ளவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்ரஃபா எல்லையில் மேற்கில் உள்ளவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர் எனக்கு என்ன செய்வது என தெரியவில்iலை நான் அறிவிக்கப்பட்ட இடத்தில் இல்லாவிட்டாலும் எனது குடும்பத்தை டெய்ர் எல் பலாவிற்கு கொண்டு செல்லப்போகின்றேன் எனரஃபாவின் வடக்கில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அபுமுகே தெரிவித்துள்ளார்.

தற்போது கடும் மழை பெய்கின்றது எங்கு போவது என எங்களிற்கு தெரியவில்லை இந்த நாள் வரும் என நான் கவலையுடன் இருந்தேன் எனது குடும்பத்தவர்களை எங்கு கொண்டு செல்வது என சிந்திக்கவேண்டும் என ரஃபாவில்  அகதியாக உள்ள அபுரயீட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டம் !

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையமானது திறந்துவைக்கப்பட்டது.

நாங்கள் ரணிலின் பக்கம் பல்டி அடிக்க மாட்டோம் – சாம் ரெலோ தொடரும் பொது வேட்பாளர் சர்ச்சை !

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் – 2024 தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடாக பொதுவேட்பாளர் என்ற கொள்கையை தமிழ்தேசிய கட்சிகள் முன்மொழிந்து வருகின்றன. இது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பிலும் அதிலுள்ள சாதக – பாதக நிலை தொடர்பிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய பிரதிநிதியும் – பேச்சாளருமான நகுலேஸ்வரன் ஞானசம்பந்தனுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்.

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்த துருக்கி நடவடிக்கை !

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்த துருக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை  துருக்கியின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கியது.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி போதுமான அளவு வருவதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் அனுமதிக்கும் வரை துருக்கி இந்த புதிய நடவடிக்கைகளை கண்டிப்பாகவும் தீர்க்கமாகவும் செயல்படுத்தும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே ஏழு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வர்த்தக பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர், துருக்கி ஜனாதிபதி  ரிசெப் தையிப் எர்டோகன் சர்வாதிகாரியாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எர்டோகன் “துருக்கி மக்கள் மற்றும் வணிகர்களின் நலன்களைப் புறக்கணித்து, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை புறக்கணிக்கிறார்” என்று இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்ளூர் உற்பத்தி மற்றும் பிற நாடுகளின் இறக்குமதியை மையமாகக் கொண்டு துருக்கியுடனான வர்த்தகத்திற்கான மாற்று வழிகளைக் கண்டறியுமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.