November

November

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில் காலநிலை எதிர்ப்பு போராட்டம் – 109 பேர் பொலிஸாரால் கைது !

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில், இரண்டு நாட்கள் காலநிலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியை முற்றுகையிட்ட 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் நியூகேஸில் துறைமுகத்தின் கப்பல் பாதையை ஆக்கிரமித்து, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆர்வலர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

அரை மில்லியன் டன் நிலக்கரி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்ததாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அவுஸ்ரேலியா முழுவதிலும் இருந்து சுமார் 3,000 பேர் அதன் கப்பல் பாதையின் 30 மணி நேர வார இறுதி முற்றுகையில் பங்கேற்றனர், இந்தப் போராட்டம் பொலிஸாரால் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும், டசன் கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்ட எல்லையை மீறி தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதனால், 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட ஐந்து சிறார்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

திங்களன்று, நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் அறிக்கையின்படி, துறைமுக கால்வாயை விட்டு வெளியேற மறுத்ததற்காக 104 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவுஸ்ரேலியா உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளராக உள்ளது மற்றும் அதன் சொந்த மின்சார தேவைகளுக்கு புதைபடிவ எரிபொருளை நம்பியுள்ளது.

சிட்னியிலிருந்து சுமார் 170 கிமீ (105 மைல்) தொலைவில் அமைந்துள்ள நியூகேஸில் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதிக்கான நாட்டின் மிக முக்கியமான முனையமாகும்.

 

அமெரிக்காவில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் !

அமெரிக்காவின் வேர்மன்டில் உள்ள பல்கலைகழகமொன்றிற்கு அருகில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

வேர்மன்ட் பல்கலைகழக வளாகத்தில் நபர் ஒருவர் பாலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராபிமொழியில் உரையாடிக்கொண்டிருந்தவேளை அராபிய ஸ்கார்வ் அணிந்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஒருவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளார் சந்தேகநபரை தேடிவருகின்றோம் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெறுப்புணர்வின் காரணமாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்ள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் !

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் வந்ததாக விசாரணையில் தஞ்சமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் காவல்துறையினர் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் அழிக்க புலி ஆதரவாளர்கள் முயற்சித்தனர்.” – நாமல் ராஜபக்‌ஷ

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் அழிக்க புலி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முயற்சித்ததாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர் என்றார்.

அரகலயவின் போது மஹிந்த ராஜபக்‌ஷவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்வதாகவும், இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் எனவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களில் 2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் –

கணக்காய்வாளர் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 3 வருடங்களில் 2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜோஸப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2020 ஜனவரி 1 முதல் 2022 மே 31 வரையிலான காலப்பகுதியில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட அறிக்கையில் மூலம் சட்ட வரையறைக்கு அப்பாற்பட்ட வகையில் பிள்ளைகளை அனுமதிப்பதற்காக 3,308 கடிதங்களை கல்விச் செயலாளர் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது என்றார்.

அவற்றில் 72 சதவீத கடிதங்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார பாவனைக்கான 16 மில்லியன் ரூபா பணம் செலுத்தத் தவறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சார விநியோகத்திற்காக கடந்த வருட இறுதிக்குள் அறவிடப்பட வேண்டிய 16 மில்லியன் ரூபா பணம் செலுத்தத் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம்,

“74 மின் இணைப்புகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தத் தவறியுள்ளது.அவற்றில் 29 இணைப்புகள் தொடர்பான 05 மில்லியன் ரூபா பணம், 06 வருடங்களாக அறவிடப்படவில்லை.

மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 03 மில்லியன் ரூபா பணம் ஒரு வருடத்திற்கும் மேலாக அறவிடப்படவில்லை.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பம்!

12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டுமென பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இந்த வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் யோசனை முன்வைத்தார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதான கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த வருடம் முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

 

அதனடிப்படையில் 03 இலட்சம் பாடசாலை மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் படிப்படியாக அதிகரித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு !

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரில் காசாவில் 14,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், சுமார் 6 ஆயிரம் பேரை காணவில்லை என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 33 குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தனர். இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர். சாலைகளில் கூடிய ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவர்களை உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 39 பேர் விடுவிக்கப்பட்ட அதே நாளில் 17 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனம் (The Palestinian Prisoners’ Club advocacy group) தெரிவித்துள்ளது.

முன்னதாக போர் நிறுத்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 24 பெண்கள், 15 சிறுவர்கள் என மொத்தம் 39 பேரை இஸ்ரேல் விடுவித்தது. இதற்கு ஈடாக 8 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்த 24 பேரில் 13 இஸ்ரேலியர்கள் தவிர தாய்லாந்தை சேர்ந்த 10 பேர் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று கத்தார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

“வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது.” -முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நடராஜா ரவிக்குமார்

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது என புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் மிலேச்சத்தனமான, கோழைத்தனமான செயலை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

அந்த சம்பவத்தை புதிய ஜனநாயக மக்கள் முன்னனி முழுமையாக கண்டிக்கின்றது. இந்த காட்டுமிராண்டிப் பொலிசாரை உடனடியாக வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அல்லாவிட்டால் பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மாறாக பொலிசார் செயற்பட்ட விதம் தவறானது. ஒரு சில பொலிசார் மேற்கொள்ளும் செயற்பாடு மிக மோசமானதாக இருக்கின்றது.

குறித்த இளைஞர் திருட்டு சம்பவத்தில் உண்மையாக ஈடுபட்டிருந்தாலும் கூட, அவரை விசாரிப்பதற்கான பல விதிமுறைகள் இருக்கின்றன.
ஆனால் அவற்றை மீறி துன்புறுத்தி வற்புறுத்தப்பட்டு பெற்றோல் ஊற்றப்பட்டு சித்திரவதை செய்து அவரை கொலை செய்துள்ளார்கள்.

இந்த செயலை நிறுத்தியிருக்க வேண்டும். அச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரை கைது செய்யாது அவர்களை வேறு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுவது என்பது மக்களை ஏமாற்றும் செயல்.

சட்டத்தரணி சிறிகாந்தா ஊடாக யாழ் நீதிமன்றில் இளைஞருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரப்ப்பட்டது.

இவர்கள் மாபெரும் திருடர்கள். அவர்கள் அதனை திசை திருப்ப முயல்கிறார். இ

இவ்வாறான சம்பவங்கள் வடக்கு – கிழக்கில் நடைபெறும் நிலையில் இங்குள்ள தமிழ் கட்சிகள் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் மக்களது பிரச்சனைக்கு குரல் கொடுக்க தயங்குவதில்லை. இந்த விடயம் சம்மந்தமாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் அவர்கள் உடனடியாக செயற்பட வேண்டும்.

பருத்தித்துறை வாள் வெட்டு சம்பவம் – இளைஞர் ஒருவர் படுகாயம் !

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை, கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர், இளைஞரை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.