November

November

மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவி மீது முட்டைகள் வீச்சு !

பிரித்தானியாவின் யோர்க் பகுதியில் இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவியரான ராணி கமீலா மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தால் மன்னர் அதிர்ச்சியடைவில்லையென்றாலும் அவருக்கு மிக அருகில் இந்த முட்டைகள் வீழ்ந்துள்ளன. முட்டைகளை வீசிய நபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

இன்று யோர்க்ப்குதியில் அண்மையில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியான தனது தாயின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்தபின்னர் அங்குள்ள மக்களை சந்தித்தபோது இந்தசம்பவம் இடம்பெற்றிருந்தது.

பிரித்தானியாவின் யோர்க் பகுதியில் இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவியரான ராணி கமீலா மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தால் மன்னர் அதிர்ச்சியடைவில்லையென்றாலும் அவருக்கு மிக அருகில் இந்த முட்டைகள் வீழ்ந்துள்ளன. முட்டைகளை வீசிய நபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

இன்று யோர்க்ப்குதியில் அண்மையில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியான தனது தாயின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்தபின்னர் அங்குள்ள மக்களை சந்தித்தபோது இந்தசம்பவம் இடம்பெற்றிருந்தது.

அபிவிருத்தியடைந்த நாடுகளே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் – கோப் 27 மாநாட்டில் ரணில் !

அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும், இதன் விளைவுகளையே வறிய நாடுகள் அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் 27 மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நிறைவான உயிர்ப் பல்வகைமையைக் கொண்டுள்ள இலங்கை, காலநிலை மாற்றத்தின் சவால்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

 

2030 ஆம் ஆண்டளவில் காபன் வெளியேற்றத்தை  14.5 சதவீதமாக குறைக்கும் செயன்முறையை இலங்கை ஆரம்பித்துள்ளது. கடல் சார்ந்த பிரதேசங்களில் திட்டமிடலை ஆரம்பித்துள்ளதோடு காலநிலை அலுவலகம் ஒன்றை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்தது.

மார்ச் 1 ஆம் திகதியை உலக கடல் புல் தினம் எனும் ஐ.நா பிரகடனத்தை தலைமை தாங்கியமை, சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலைபேண்தகு பயன்பாட்டிற்கான தேசியக் கொள்கையை அமுல்படுத்துதல்,காலநிலை மற்றும் சமுத்திரங்களில் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் பாதிப்புக்கான பொதுநலவாயத்தின் முன்னோடி திட்டத்தை செயல்படுத்துதல்,சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய பொதுநலவாயத்தின் Blue Charter Action Groupஐ வழிநடத்துதல், நிலக்கரி சக்தி மூலமான ஆற்றல் திறனை மேலும் அதிகரிக்காதிருத்தல், படிம எரிபொருள் மானியங்களை படிப்படியாக நீக்குதல்,2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்திக்காக 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இலக்காகக் கொள்ளுதல்,

வொஷிங்டனில் அண்மையில் வழங்கப்பட்ட உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் இணைதல் என்பன அதில் அடங்கும்.

இருந்தாலும், காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு UNFCC மற்றும் பரிஸ் உடன்படிக்கையை பூர்த்தி செய்வதற்கான பரந்த அளவிலான நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில்  ஆற்றலின்மை மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே ஆற்றல்களை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

இப்பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக நாம், பல்கலைக்கழக மாதிரியில் இதுவே முதல் வகை எனக் குறிப்பிட்டுக் கூறும் வகையில், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவ வேண்டும்.

அதன் துணை நிறுவனம் மாலைதீவில் அமைக்கப்பட வேண்டும். இப்பல்கலைக்கழகமானது, விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள்,ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்போர், அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவோர்  மற்றும் உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கும் தமது எல்லைகளைத் தாண்டி  கற்கைகளை மேற்கொள்ளும் உலகளாவிய மையமாக  செயற்படும்.

உத்தேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகமானது காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் மற்றும் அதனுடன் ஒத்திசைவாக்கும் ஆற்றல்களை உருவாக்கும் வகையிலான  குறுகிய கால கற்கைநெறிகள் மற்றும் பட்ட பின்படிப்புக்களை தொடரும் வாய்ப்புகளை வழங்கும்.

இப்பல்கலைக்கழகமானது காலநிலை மாற்றத்தில் இருந்து உலகைப் பாதுகாப்பதற்கு தேவையான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் டிஜிட்டல் மாற்றங்களை வழங்குவதற்காக புதிய தலைமுறையினரின் ஆற்றல்களை மேம்படுத்தும், காலநிலை மாற்ற சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பில் உள்நாட்டில் அறிவூட்டும் வாகனமாக இது செயற்படும்.

ஸ்தாபிக்கப்படும் உயர்கல்வி நிறுவனமானது – பல பங்குதாரர் கூட்டுமுயற்சியாகவும்  தேசிய எல்லைகளை தாண்டிய ஒரு நிறுவனமாகவும் திகழ்வதற்காக பொதுநலவாய அமைப்பு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்தரப்பு நிறவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும்.இலங்கையின் பிரேரணைக்கு சர்வதேச சமூகத்தின் விரிவான ஆதரவும் ஒப்புதலும்  கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகள் உலகளாவிய களத்தில் முன்வைக்கப்பட வேண்டியிருப்பதனால், அதிக நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்.இருப்பினும், COP 26 உட்பட முந்தைய முடிவுகளின் முன்னெடுப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகள் உலகளாவிய களத்தில் வழங்கப்பட வேண்டியிருப்பதால், அதிக நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்.இருப்பினும், COP 26 உட்பட முந்தைய முடிவுகளின் சரிபார்ப்புச் செயலாக்கம் மிகவும் வருத்தமளிக்கிறது.

படிம எரிபொருள் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த  G7 மற்றும் G20 அமைப்புக்கள் பசுமை ஹைட்ரஜனின் முக்கிய ஊக்குவிப்பாளர்களாக இருந்தபோதும் நாளடைவில் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கி படிம எரிபொருளை பயன்படுத்துவதே வருத்தமளிக்கும் அடிப்படை உண்மையாகும். இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதை விட காலநிலை மாற்றத்திலிருந்து மீள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.காலநிலை நிதியுதவியானது தனது இலக்கை தவறவிட்டது என்பது இரகசியமல்ல.

காலநிலை சவால்களுக்கு  நிதியளிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 100 பில்லியன் டொலர்கள்  பெட்டகத்தில் இல்லை என்பது நகைப்புக்குரியது. பல அபிவிருத்தியடைந்த நாடுகள் காலநிலை சவால்களுக்காக தாம் முன்னெடுக்க வேண்டிய பங்களிப்பை புறக்கணிப்பதே பொருத்தமானதென நினைக்கின்றனர்.பாதுகாப்பு நலன்களுக்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும்  உக்ரைன் போரின் இரு தரப்பிலும் இருக்கும்  நாடுகள்,350 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட  அதிக தொகையை  போருக்காக செலவழிப்பதில் எந்த கவலையும் கொள்ளவில்லை.

எனினும் தற்போது பாதுகாப்பு தேடவேண்டிய ஆபத்தில் உணவுப் பாதுகாப்பின்மை விடயம் காணப்படுகிறது.  இது போருக்கு முன்பு அனுபவித்திராத அளவுக்கு அதிகரித்துள்ளது.  அபிவிருத்தியடைந்த மற்றும்  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்த பலர்   மூன்று வேளை உணவுக்கே வழியில்லாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவில் 30 முதல் 40 மில்லியன் மக்கள் பட்டினியில் இருப்பதாக  மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த யுத்தமானது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகங்களின் தட்டுப்பாட்டுக்கும் காரணமாக அமைந்ததுடன் இது பசிக்கு எதிரான போராட்டமாக நம் வீடுகளுக்கு வந்துள்ளது.

 

எதிர்பார்த்தபடி, இதே நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட மிகவும் அவசியமான காலநிலை நிதியைக் குறைக்க வழிவகுத்தது.போருக்குப் பொறுப்பான தரப்பைக் கண்டுபிடிப்பது அல்ல, போரை முடிவுக்குக் கொண்டுவரும் தரப்பைக் கண்டுபிடிப்பதே எமக்குள்ள பிரச்சினையாகவுள்ளது.

 

எங்களுக்கு இந்த நிதி ஏன் தேவை? காலனித்துவ ஆட்சிகளின் போது  ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பெறுமதியான வளங்களை ஐரோப்பாவிற்கு மாற்றியதுடன் அவர்களின் நாடுகளை தொழில்மயமாக்க இவை  பயன்படுத்தப்பட்டன  . இந்தக் கொள்ளையின் காரணமாகவே நாங்கள் ஏழைகள் ஆனோம்.

 

அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாக்கலும் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தன. இதன் விளைவுகள் காரணமாகவே ஏழை நாடுகளாகி    பாதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.போதிய நிதி இல்லாததால் எங்களின் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. எனவே, தெற்கில் உள்ளவர்கள் இரட்டை ஆபத்தை எதிர்கொள்கின்றனர். நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க போராடும் அதே வேளையில் பொருளாதார ரீதியாக முன்னேறவும் போராடவேண்டியுள்ளது.

 

எனவே அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்களின் நிதியுதவியை இரட்டிப்பாக்குவதாக கிளாஸ்கோவில் வழங்கிய  உறுதிமொழியை நிறைவேற்றுவது கட்டாயமாகும். காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில் காலநிலை மாற்றங்களும் தீவிரமாக அதிகரித்து வருகின்றன.மேலும் அவற்றின் தாக்கங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. தொழில்மயமான உலகில் இருந்து வெளியேறும் உமிழ்வின் அதிகரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகள் எதிர்நோக்கியிருக்கும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு   வழங்கப்பட வேண்டும்.

இழப்புக்களும் சேதங்களும் பற்றிய பிரச்சினை இப்போது எங்கள் முறையான நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான தரப்பினர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிப்பதை  உறுதி செய்தாக வேண்டும்.

காலநிலை தொடர்பான பாதிப்புகளை அடையாளப்படுத்தும் பேரவையால் முன்மொழியப்பட்டபடி, எதிர்கால சவால்களுக்கு பதில் வழங்கக் கூடியவாறு சர்வதேச விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில்  ஒரு விசேட  அறிக்கையை உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கும்.

உறுதியளித்த வகையில் நிவாரணங்களை வழங்குவதில்  அபிவிருத்தியடைந்த நாடுகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இதனைக் கருத்திற் கொண்டாயினும் COP 28 இற்காக நாம் டுபாய் செல்வதற்கு முன், காலநிலை நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் மட்ட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்ட சாமிக்க கருணாரத்ன – இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் குவியும் முறை்ப்பாடுகள் !

20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

கெசினோ சூதாட்ட நிலையத்தில் இருந்த ஒருவரை சாமிக்க கருணாரத்ன தாக்கியுள்ளதாகவும் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் ஷானுக ராஜபக்ச ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை துடுப்பாட்ட அணிக்கு விருந்துகளில் கலந்துக்கொள்ளுமாறு சுமார் 20 அழைப்புகள் கிடைத்துள்ளது.

எனினும் அணியின் முகாமைத்துவம் 5 விருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் சில துடுப்பாட்ட வீரர்கள், அணியின் முகாமையாளரை ஏமாற்றி வரம்பு மீறி நடந்துக்கொண்டதாகவும் சில வீரர்கள் வரையறுக்கப்பட்ட நேரத்தை கடந்தே தங்கியிருந்த விடுதி அறைகளுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தனுஷ்க குணதிலக்கவின் சம்பவத்தின் பின்னர், துடுப்பாட்ட வீரர்களின் ஒழுக்க விரோத நடத்தைகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் விளையாட்டுத்துறை அமைச்சு கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள அறிவிப்பு !

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட இலங்கையர்கள் குழு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும், சர்வதேச குடியேற்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் கடலில் 300 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஜப்பானிய கப்பலினால் மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்ததைக் கண்டறிந்த பின்னர், குழு மீட்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது

 

வியட்நாம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மியான்மர் கொடியுடன் 303 இலங்கையர்களுடன் கனடா நோக்கிச் செல்வதாக சந்தேகிக்கப்படும் லேடி R3 ரக கப்பல் சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் வுங் டவுவிலிருந்து 258 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ​​அதன் இயந்திர அறை வெள்ளத்தில் மூழ்கியது அப்போது கடல் சீற்றமாக இருந்தது.

கப்பல் அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு அவசர சமிக்ஞைகளை ஒளிபரப்பியது.

இதனையடுத்து ஜப்பானிய கப்பலால் பாதிக்கப்பட்ட படகை அடைய முடிந்தது, பின்னர் பயணிகளை மீட்டதுடன், தேவையானவர்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தது.

264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வங்குரோத்தை மறைக்க பிரித்தானிய அரசு அகதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது! முன்னணி சட்டத்தரணி கணநாதன், லண்டன் வட்டுக்கோட்டை ஒன்றிய ஒன்று கூடலில்

பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.

ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.

ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.

300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம்

 

உலகத் தமிழ் பல்கலைக்கழகதெ்தால் நாளை 6ஆம் திகதி நடாத்தப்படவிருந்த கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கும் நிகழ்வு தேசம் இணையத்தளத்தில் வெளியாகிய செய்தியையடுத்துப் பிற்போடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களோ மாணவர்களோ இல்லாமல் இவ்வாறு கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்குவது என்பது தமிழையும் தமிழ் புலமையையும் கொச்சைப்படுத்தும் என்பதையும் இதை நிராகரிப்பது சமூகக் கடமையெனவும் தேசம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதையடுத்து பல தரப்பினரிடமிருந்தும் கௌரவப்பட்டம் வழங்குவது தொடர்பில் விமர்சனங்களும் அதிருப்திகளும் வெளியிடப்பட்ட நிலையிலேயே இந்த நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது என அறியக் கிடைக்கின்றது.

நிகழ்வு பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை உலகத் தமிழ் பல்கலைக்கழகம் குறிப்பிடாத நிலையில் சர்வதேச அங்கீகாரம் உள்ள பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் இதை வழங்குவதற்கு கடும் பிரயத்தனங்கள் எடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.

நான் மீண்டும் வருவேன் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டிரம்ப். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள்  டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது: நான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டேன். 2 முறையும் வெற்றி பெற்றேன். 2016-ம் ஆண்டு பெற்றதை விட 2020-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன். அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருந்த ஜனாதிபதி அதிக வாக்குகள் பெற்றது அதுவே முதல்முறை. நமது நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாக நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். விரைவில் போட்டியிடுவேன். தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

உலகக்கிண்ண தொடர் தோல்வி – ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி ராஜினாமா !

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அணி நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளும் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் கலாச்சாரம் கெட்டுப்போய்விடாது – மகாசங்கத்தினருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பதில் !

பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிக விலை கொடுத்து சேலைகளை வாங்குவதில் சிக்கல் நிலவி வருவதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, போக்குவரத்து சிரமம் காரணமாக ஆசிரியர்கள் பலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பாடசாலைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, புடவை அல்லது ஒசரியைவிட எளிதான எளிய உடையை அணிவதன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களை கையாள்வதில் திறமையாக செயற்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாசாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஜோசப் ஸ்டாலின் , ஆசிரியர்களின் உடையை மாற்றலாம், ஆனால் துறவறம் பூண்டவர்கள் தங்களது ஆடைகளை மாற்ற முடியாது என்பதால், இந்த கோரிக்கையை அந்நியப்படுத்த வேண்டாம் என்றுகேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் மகாசங்கத்தினர் குறிப்பிடுவது போன்று கலாசாரம் எந்த வகையிலும் அழிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தது.