2021
2021
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் திகதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது.
இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ளது.
இந்த ஹெலிகாப்டர், பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து இறங்கி செவ்வாய் கிரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ளது. இரவு நேரங்களில் இங்கு கடும் குளிர் நிலவுகிறது.
இதனால் அங்கு ஹெலிகாப்டரில் பாகங்கள் உறைந்து பழுது ஆவதை தடுக்க இதில் வெப்பம் உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தை உருவாக்கி பேட்டரி மூலம் இந்த ஹெலிகாப்டரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தயாராக நிற்கும் இந்த ஹெலிகாப்டர் விரைவில் செவ்வாய் கிரகத்தில் பறக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
“ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டமை மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (03.04.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் மத்திய மாகாணத்தில் 522 தமிழ் பாடசாலைகளும் ஊவா மாகாணத்தில் 222 தமிழ் பாடசாலைகளும் உள்ளன. இவ்விரு மாகாணங்களிலும் தமிழ்மொழி மூல கல்வி மேம்பாட்டுக்காக தமிழ்க் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டிருந்தன. 1988 இல் தான் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மலையக மக்களுக்கானதொரு உரிமையாக இவை கிடைக்கப்பெற்றுவந்தன.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு இல்லாது செய்யப்பட்டது. தற்போது ஊவா மாகாணத்திலும் தமிழ்க் கல்வி அமைச்சும் பறிக்கப்பட்டுள்ளது. இது பெருந்தோட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகம்.
தமிழ்க் கல்வி அமைச்சு இருந்தால் கல்விப்பணிப்பாளர் நியமனம், ஆசிரியர் நியமனம் என பல விடயங்களை செய்யலாம். தமிழ்மொழிமூல கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். தற்போது அந்த அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டமையானது கல்வி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேவேளை, நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என தோட்ட துரைமார் இன்று வலியுறுத்தி வருகின்றனர். பல நெருக்கடிகளை நிர்வாகம் கொடுத்து வருகின்றது. எனவே, ஆயிரம் ரூபாவை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் திகதி சென்னையில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். பெங்களூர் அணி தலைவர் விராட்கோலி நேற்று சென்னை வந்தார். தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே வந்த பெங்களூர் அணி வீரர்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் விராட்கோலி பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-
நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வேறுபட்ட அமைப்பில் இருந்தாலும், வேறு வழியில் இருந்தாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஒரு நல்ல உணர்வு இருக்கிறது.
இது ஒரு நீண்ட பயணம் – பெங்களூர் அணிக்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை நேற்றுதான் நாங்கள் முடித்தது போல் உணர்கிறோம். கடந்த போட்டியின் உத்வேகத்தை நாங்கள் பெற்றுள்ளோம். அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். பழைய வீரர் பெயர்களும் உள்ளன. அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிந்து இருக்கிறேன்.
டேனியல் கிறிஸ்டியன் இதற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்திருக்கிறார். மேக்ஸ்வெல், முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரை நாம் அனைவரும் அடிக்கடி ஐ.பி.எல். போட்டியில் பார்த்து இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து நிறைய ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களுக்கு 280 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் பிராத்வெயிட் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதன்படி, இலங்கை அணிக்கு 377 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஆவது நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது2 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 75 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகனாக பிராத்வெயிட் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தொடராட்ட நாயகனாக சுரங்க லக்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (3.4.2021) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம்.
இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையிடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.
தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.
அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை காத்திருக்கின்றோம்.
சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.” என்றார்.
இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர்தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்தைய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 36-38 காலி வீதி, கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம், இல. 31, ரஜபிகில்ல மாவத்தை, கண்டி ஆகிய இடங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ எண் 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு இம் மாதம் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலக்கு காப்பாளரான இளம் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளது.
இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசிய போது ,
ரிஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரிஷப்பண்ட் சிறந்தவர். தலைவர் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.
ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சீசனுக்கு டெல்லி அணியின் தலைவராகக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ஸ்கேன் மற்றும் ஆலோசகர் மதிப்பாய்வைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.
ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சற்று முன்பு தனது வீட்டில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சருக்கு கையில் வெட்டு ஏற்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
குறித்த காயம் இந்தியா அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க தடையாக இருந்த நிலையில் ஆர்ச்சர் குணமடைய இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக Apophis எனும் விண்கல் பூமியை அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த விண்கல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
Apophis எனும் விண்கல் பூமிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என நாசா விஞ்ஞானிகள் கருதியிருந்தனர்.
2029 மற்றும் 2036 ஆம் ஆண்டுகளில் இரண்டு விண்கற்கள் பூமியைத் தாக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவை தடம் மாறிச் சென்றதால், அவற்றினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
எனினும், Apophis எனும் விண்கல் 2068 ஆம் ஆண்டிற்குள் பூமியை நோக்கி நெருங்கி வரும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 340 மீட்டர் விட்டம் கொண்ட Apophis எனும் விண்கல்லின் திசை மாறும் நிலையிலுள்ளதால், அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.









