2021

2021

“இலங்கையின் ஏனைய சமுதாயத்தவர்களுக்கு வழிகாட்டியாக முன்மாதிரியான சமுதாயமாக இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும்.” – ஏ.எல்.எம் .அதாஉல்லா

“இலங்கையின் ஏனைய சமுதாயத்தவர்களுக்கு வழிகாட்டியாக முன்மாதிரியான சமுதாயமாக இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும்.” என தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் .அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் கே.எல் . உபைதுள்ளா தலைமையில் நேற்று முன்தினம் பாலமுனை ஹிறா நகர் கிராமத்திலுள்ள பரிமேட்டு சோலையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார் .

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நமது அரசியல் பயணம் என்பது மிக புனிதமானதாக இருக்க வேண்டும் . நமது மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தொடர்பான இலக்கை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும் . நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில் வாழுகின்ற மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் .

நாட்டையும், நாட்டில் வாழும் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் வேறாக தள்ளிவைத்து விட்டு முஸ்லிம் சமூகம் மாத்திரம் வாழ வேண்டும் என்று நினைப்பதென்பதும் இவ்வாறே ஏனையவர்கள் நினைப்பதும் இயற்கைக்கு முறணானது .  இறைவன் உதவியால் யாருக்கும் எதற்கும் அச்சமடைய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை . யாருக்கும் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை . யாருக்கும் நாம் பதில் கூறவேண்டிய அவசியமும் இல்லை. நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில் வாழுகின்ற மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.

நமது சமூதாயம் தொடர்பாக நாடு தொடர்பாக எம்மைப் பொறுத்தவரையில் நமது சமுதாயம் என்று மாத்திரம் பேசுவதை பிழையாக பார்க்கிறேன் . சமுதாயம் சமுதாயம் என்று சொல்கின்ற எல்லாமே இறைவனால் படைக்கப்பட்ட மனித குலம்தான் . ஏனைய சமுதாயத்தவர்களுக்கு வழிகாட்டியாக முன்மாதிரியான சமுதாயமாக இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் . வாழ்ந்து காட்டவேண்டும் . அது அரசியலாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி இன்று தேசிய காங்கிரஸ் அதனை செய்து வருகின்றது .

அதனால் தான் அச்சமில்லாமல் இருக்கின்றோம் . இன்று முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதும் சிறைக்குச் செல்வதும் விசாரணை என்பதும் என்கின்ற சூழ்நிலையிலே தேசிய காங்கிரஸ் கவனமாக இருக்கின்றது .

ஒன்றை மாத்திரம் அவர்களுக்கு சொல்ல இருக்கின்றோம் . நீங்கள் தனிப்பட்ட முறையில் பிழைகள் செய்திருந்தால் அதனை தனிப்பட்ட முறையில் எதிர் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ள முடியாமைக்காக மக்களை சூடாக்குவதிலிருந்து தவிர்க்க வேண்டும் . சுயநல அரசியலிலிருந்து விடுபட வேண்டும் . ஆண்டாண்டு காலம் எமது மக்கள் அரசியலுக்காக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் . எத்தனையோ தேர்தல்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றார் .

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சகலதுறை வீரர் திசாரா பெரேரா!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் , சகலதுறை வீரரருமான திசாரா பெரேரா (32 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திடவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெரேரா உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தவர். 11 வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338 ஓட்டங்களும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் 1204 ரன்களும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஆறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

15.26 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு – 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.26 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.88 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

மே தினம் – உழைக்கும் கரங்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள் !

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம். உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாறின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றும் கூறினார் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் கார்ல் மார்க்ஸ்.

 

மே தினம்: உழைப்பாளர்களின் சிறப்பைப் பற்றி சனைச்சர பகவான் கூறும் ஜோதிட  ரகசியங்கள்!- Dinamani

கார்ள்ல்மார்க்ஸ் யுகம முடிந்து  42 ஆண்டுகள் முடிவதற்குள் , உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது. தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை உணர்ந்தனர். தாம், விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காககப் போராடினர்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கைத்தொழில் துறை அசுர வேகமடைய ஆரமப்ித்த காலம் அது. தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. நாடுகளை தேடிய பயணம் சந்தைகளை தேடிய பயணமாக மாறியிருந்த காலம் அது. ஒரு பக்கமாக பொருள் விற்கும் சந்தைகளாக மாற்றப்பட்ட நாட்டு மக்கள் அடிமைப்பட்டு போக அதற்கான பொருட்களை உற்பத்தி செய்த மேலை நாட்டு தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் அடிமைப்பட்டு போயினர். பல நாடுகளுக்கான உற்பத்தி செய்ய வேண்டி அவர்கள் மிருகங்கள் போல நடத்தப்பட்டனர். இந்நிலையிலேயே தொழிலாளர் எண்ணிக்கை கடுகதியில் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. தொழிலாளர் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற கோஷமும் வலுப்பெற ஆரம்பித்திருந்த காலம் இதுவாகும்..!

இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும். பிரான்சில் தொழிலாளர் இயக்கம் 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இவ்வாறாக ஆரம்ப கால தொழிலாளர் உரிமை சார் போராட்டங்கள் யாவுமே முதலாளிவர்க்கத்தினால் அடக்கப்பட்டது. எனினும் அடக்குமுறைக்குள்ளாகவும் கோராட்டம் வெடித்தது.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம் தொழிலாளர் போராட்டத்தின் முக்கியமான மைல்கல் ஆகும். ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. இதனை முன்மாதிரியாக கொண்டு உலகின் அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் வேலை நேரக்குறைப்பை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தீராத பக்கங்கள்: ருஷ்யபுரட்சிக்கு நாம் காட்டும் நன்றி : எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன்

தொழிலாளர் புரட்சிகளின் மகுடம் எனப்படும் ரஷ்யாவின் ஒக்டோபர்புரட்சி தொழிலாளர் உரிமைகளினை அரண் செய்த மிகப்பெரும் புரட்சி எனலாம். காலாதிகாலமாக ரஷ்யாவை ஆண்டு வந்த  சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கார்ள்மார்க்ஷின் வாதங்களை பின்பற்றி மிகச்சிறப்பாக தன்னை கட்டமைத்துக்கொண்ட புரட்சிதான் இந்த ரஷ்யப்புரட்சி.

ரஷ்யப்புரட்சியின் போது தொழிலாளர்கள் லெனின், ட்ரொஸ்கி ஆகிய கொமினியுச தலைவர்களால் இணைக்கப்பட்டு ஆயுதமேந்தி போராடி தங்களுடைய உரிமைகளை பெற்றுக்கொண்டனர். புரட்சி முடிவில் தொழிலாளர்களை மையப்படுத்திய சோவியத்ரஷ்யா உருவாக்கப்பட்டது. முதலாளிகளின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. முதலாளிகளிடம் இருந்து தொளிலாளர்களை பாதுகாக்கும் பொறுப்பை கொமினியுசம் என்ற போராட்டத்தின் பெயரில் ஆரம்பித்த பெருமை ரஷ்ய புரட்சியையே சாரும். மேலும் கொமினியுசம் கைத்தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கானது மட்டுமல்ல. விவசாயிகள்  உள்ளிட்ட எல்லா உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிலாளர்கள் தான் எனக்கூறிய புரட்சியும் இதுவே. இன்று வரை தொழிலாளர் உரிமைகளை மையப்படுத்திய கொமினியுச நாடுகளுக்கான தலைமைத்துவத்தை ரஷ்யா வகிப்பதற்கான பின்னணியை இந்தப்புரட்சியே வழங்கியது.

அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் வளர்சியடைந்த தன்மையானது பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு சிவனை கழுத்தையே அழுத்தியது போன்றதாகும். சுதந்திரமடைந்ததை தொடர்ந்து கைத்தொழில்துறை தொடர்பாக அதீத கவனம் செலுத்திய அமெரிக்கா முதலாளித்துவ கொள்கைகளை பின்பற்றும் நாடாக மாறியது.  மிக வேகமாக முன்னேற்றமடந்த அமெரிக்கா ஒரு கட்டத்துடன் முதலாளிகளுக்கான அரசாக மாறியது. தொழிலாளர்கள் அடக்கப்பட்டனர். அடக்குமுறைக்குள்ளாகினர். கறுப்பினத்தவர்கள் தொடர்பான அடக்குமுறைகள் தொழிலாளர் உரிமை மறுப்பு மூலமாக முன்னெடுக்கப்பட்டது.

மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். “அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது.” எனக் குறிப்பிடுகின்றார்.

1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது. இவ்வாறாக நாம் கொண்டாடும் தொழிளார் தினம் பிறந்தது.

இந்த மேதினத்தின் நோக்கம் இன்றைய நாளில் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டதாகவும் ஒரு நாள் விடுமுறை நாளாகவும் மட்டுமே மாற்றம் கண்டுள்ளமை வருத்தத்துக்குரியது. இந்த நாள் மனத்தினின்று நினைவு கொள்ளப்பட வேண்டியுது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தின் மேல் நின்று தான் இந்த தினத்தையும் தொழிலாளர்கள் இந்த சலுகைகளையும் அனுபவிக்கின்றனர்  என்பதையும் மறந்து விடக்கூடாது.

இன்று வரை உலகின் ஏதோவொரு பகுதியில் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏதோவொரு வகையில் அந்த போராட்டங்களும் முதலாளித்துவத்தினால் அடக்கப்படும் போக்கு  தொடர்கிறது. அதற்காக எல்லாம் உழைக்கும் கரங்கள் அடங்கிப்போக கூடாது – அடக்கு முறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே இந்த மேதினம் நினைவு கொள்ப்படுகின்றது. ஏற்றத்தாழ்வுகள் எவையும் அற்ற சமவுலகு ஒன்று தோன்றும் வரை தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

Celebrate the 125th Anniversary of Labor Day – A Brief Look at its History

உதிரத்தை உழைப்பாக்கி – உலகத்தை உயர்த்திடும் – உண்மை உழைப்பாளிகளுக்கு தேசத்தின் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

 

“உங்கள் குடும்பத்தில் ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது விளையாடிக்கொண்டிருப்பீர்களா..?” – ஐ.பி.எல் தொடலிருந்து விலகிய அவுஸ்ரேலிய கிரிக்கெட்வீரர் !

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தார். அவர் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். உடனடியான ஆஸ்திரேலியா சென்றார்.
நேற்று  சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘‘நாங்கள் சில விதிமுறைகளுக்குள்  கட்டுப்ப்டிருந்தோம். அது மிகவும் பாதிக்கக்கூடியதாக நான் உணர்ந்தேன். இப்படி உணர்ந்ததற்கு, போட்டி இந்தியாவில் நடப்பதுதான் காரணம். நான் எப்போதுமே இந்தியாவின் சுகாதாரம் மற்றும் கூடுதல் கவனம் குறித்து பேசுகிறேன். அதனால் இது மிகவும் பாதிக்கக்கூடியதாக உணர்ந்தேன்.
ஐபிஎல் போட்டி ஆறு மாதத்திற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது நான் இதுபோன்று உணர்ந்ததில்லை. மிகவும் பாதுகாப்பானதாக உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில், இந்த ஐ.பி.எல் போட்டியை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும் என உணர்கிறேன். ஆனால் உண்மையிலேயே, ஏராளமான அரசியல் உள்ளன.
இந்த வருடத்தின் கடைசியில் ஐ.பி.எல் போட்டியில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் உலகத்தில் இது அடுத்த விவாதமாக இருக்கும். ஆறு மாதம் என்பது நீண்ட நாட்களை கொண்டது. கொரோனா சூழ்நிலை மிகவும் மோசமான உள்ளது. நான் அணியில் விளையாடவில்லை. பயிற்சி மேற்கொண்டேன். அதனால் உத்வேகத்தை நான் காணவில்லை. கட்டுப்பாடுகளிலுள்ள கடினம், சொந்த நாட்டிற்கு  செல்லும் வாய்ப்பு, விமானத்தடை என பலவிதமான பேச்சுக்கள் எழுகின்றன. அதனால் இது சிறந்த நேரம் என்று நினைத்தேன்.
ஏராளமான வீரர்கள், பயிற்சியாளர்கள், இக்கட்டான இந்த நிலையில் கிரிக்கெட் ஒரு நிவாரணமாக இருக்கும் என்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மரண படுக்கையில் இருக்கும்போது கிரிக்கெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள்’’ என்றார்.

“குட் மோர்னிங்” சொல்லவில்லை என ஆசிரியர் அடித்ததில் மாணவனின் கண் பாதிப்பு – யாழில் சம்பவம் !

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் தனக்கு “குட் மோர்னிங்” சொல்லவில்லை என ஆங்கில ஆசிரியை தடியினால் அடித்ததால் , மாணவனின் கண் பாதிப்படைந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கணவர் பிரிந்து சென்ற நிலையில் இரு பிள்ளைகளுடன் ஊர்காவற்றுறையில் வசிக்கும் பெண் தனது பிள்ளையை ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலையில் சேர்ந்து , அங்குள்ள மாணவர் விடுதியிலும் (ஹொஸ்டல்) சேர்த்துள்ளார்.

படிப்பில் கெட்டிக்காரனான மாணவன் விடுதியில் தங்கி தனது கல்வியை தொடர்ந்து வந்துள்ளான். தரம் 09 கல்வி கற்கும் குறித்த மாணவனே வகுப்பு தலைவரும் (மொனிட்டர்) ஆவான்.

கடந்த 18 ஆம் திகதி வகுப்பிற்கு ஆங்கில ஆசிரியை வந்த போது மாணவன் எழுந்து “குட் மோர்னிங் மிஸ்” என கூறி விட்டு அமர்ந்துள்ளான். அதனை அவதானிக்காத ஆசிரியை தான் வகுப்பு வரும் போது எழுந்து குட் மோர்னிங் சொல்லவில்லை என கூறி தடியினால் மாணவனை அடித்துள்ளார்.

அதன் போது தடி கண்ணில் பட்டுள்ளது. அதனால் வேதனையில் மாணவன் அழுத்த போது தான் கற்பிக்கும் போது, அழுது தொந்தரவு செய்ய வேண்டாம் என மிரட்டியுள்ளார்.

அவரது பாடம் முடிந்த பின்னர் வகுப்பு மாணவர்கள் தமது வகுப்பாசிரியரிடம், மாணவனை ஆசிரியை அடித்து கண்ணில் தடி பட்டு அழுது கொண்டு இருக்கிறான் என கூறியுள்ளனர். வகுப்பாசிரியர் மாணவனை அழைத்து சென்று தண்ணீரினால் கண்களை கழுவி விட்டுள்ளார்.

இருந்த போதிலும் கண் வலி மாணவனுக்கு குறையவில்லை. பாடசாலை முடிந்து விடுதிக்கு சென்ற பின்னரும் மாணவன் வலியினால் துடித்து அழுத்துள்ளான்.அது தொடர்பில் சக மாணவர்கள் விடுதி பொறுப்பாளரும் , பாடசாலை அதிபருமான பாதிரியாரிடம் கூறியுள்ளனர்.

அவர் மாணவனை அழைத்து அருகில் உள்ள ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும், அங்கு வைத்தியர்கள் கேட்டால் விளையாடும் போது கண்ணில் தடி பட்டு விட்டதாக கூறுமாறும், கூறி சக மாணவனுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வைத்தியசாலையில் கண்ணுக்குள் இருந்து சிறு தடி துண்டினை வைத்தியர்கள் எடுத்துள்ளனர். வைத்தியர் கேட்ட போது, விளையாடும் போது தடி பட்டதாகவே கூறியுள்ளனர்.

இது தொடர்பில் அறிந்த மாணவனின் தாயார் மறுநாள் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையில் மகனை சந்தித்து அது தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டு பாடசாலை அதிபரை சந்திக்க காத்திருந்துள்ளார்.

பாடசாலை அதிபர் அறைக்கு அருகில் பல மணிநேரம் காத்திருந்த போது அவ்வழியே சென்ற ஆசிரியர்கள் விசாரித்து விட்டு சென்றார்களே தவிர யாரும் அதிபரிடம் கூட்டி செல்லவில்லை.

மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஆண் ஆசிரியர்கள் அதிபர் அறைக்கு பக்கத்தில் உள்ள அறைக்குள் தாயாரை அழைத்து சமாதானம் பேசியுள்ளனர். அத்துடன் மகனை வேறு பாடசாலையில் அனுமதிக்க மாட்டீர்கள். என்ன நடந்தாலும் இங்கே தான் கல்வி கற்கவேண்டும் என மிரட்டும் தொனியிலும் கதைத்துள்ளனர்.

அதற்கு தாயார் தனது பிள்ளைக்கு ஆசிரியை அடித்தது தொடர்பில் ஏன் எனக்கு அறிவிக்கவில்லை? பிள்ளை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று இருக்கிறான். அது தொடர்பில் கூட எனக்கு அறிவிக்கவில்லை. இது தொடர்பில் நான் விடுதி பொறுப்பாளரும், அதிபருமான பாதிரியாரை சந்தித்து கேட்டு விட்டே செல்வேன் என கூறியுள்ளார். ஆசிரியர்கள் இருங்கள் அதிபரை அழைத்து வருகின்றோம் என போனவர்கள் , அதிபரை அழைத்து வரவே இல்லை .

பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் 2.30 மணியளவில பாதிரியார் தாயாரை சந்தித்துள்ளார்.

தான் ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும், ஆசிரியை தொடர்பில் உரிய தரப்புக்களும் அறிவித்து விட்டதாகவும் , இனி அவ்வாறு நடக்காது என தாயாருக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டு மாணவனை விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

தாயார் சென்றதும், விடுதியில் வைத்து,சக மாணவர்கள் முன்னால் சகட்டு மேனிக்குள் மாணவனை திட்டி அடித்துள்ளார்.

அதனால் மாணவனின் உடல் முழுக்க தழும்பு வரும் வரையில் அடித்துள்ளார். அத்துடன் மாணவன் மறுநாள் பாடசாலைக்கு தாயார் வந்து கதைத்து விட்டு சென்ற ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோருமாறும் கூறியுள்ளார். மறுநாள் மாணவன் ஆசிரியர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

தற்போது மாணவன் அடி காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு மேலதிக விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.-

“16 கோடிக்கு தகுதியானவர் இல்லை கிறிஸ்மோரிஸ்.” – கெவின் பீட்டர்சன்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போனவர் கிறிஸ்மோரிஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25(இந்திய ரூபாய்)  கோடிக்கு ஏலம் எடுத்தது.

எந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது.

இந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. மற்ற ஆட்டங்களில் அவர் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதேபோல பந்து வீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய ரூ.16 கோடி அதிகம் என நினைக்கிறேன். அந்த தொகைக்கு அவர் தகுதியான வீரர் இல்லை. தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்ததை மோரிஸ் தற்போது உணர்ந்து வருகிறார். அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்க மாட்டார்.

நாம் அவரைப் பற்றி அதிகமாக பேசுகிறோம் என நினைக்கிறேன். 2 போட்டிகளில் ரன் அடிப்பார். சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார். இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.

34 வயதான கிறிஸ் மோரிஸ் 4 ஆட்டத்தில் 48 ரன்களே எடுத்துள்ளார். 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இலங்கை அணித்தலைவர் கருணாரட்ண இரட்டைச்சதம் !

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது கன்னி இரட்டைச் சதத்தை இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரட்ண பதிவு செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த 11 ஆவது இலங்கையர் என்ற சிறப்பை திமுத் கருணாரட்ண பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னதாக பிரெண்டன் குருப்பு, அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொஷான் மஹாநாம, மார்வன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, ஹஷான் திலகரட்ண, குமார் சங்கக்கார, திலான் சமரவீர, அஞ்சலோ மெத்தியூஸ் ஆகிய 10 வீரர்கள் இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசியவர்களாவர்.

இலங்கை சார்பாக குவிக்கப்பட்ட இரட்டைச் சதங்களில் குமார் சங்கக்கார 12 இரட்டைச் சதங்களையும் மஹேல ஜயவர்தன 7 இரட்டைச் சதங்களையும் மார்வன் அத்தப்பத்து 6 இரட்டைச் சதங்களையும் சனத் ஜயசூரிய 3 இரட்டைச் சதங்களையும் பெற்றுள்ளனர்.

மேலும், அரவிந்த டி சில்வா, திலான் சமரவீர இருவரும் தலா 2 இரட்டைச் சதங்களை பெற்றுள்ளனர்.

ஏனையோரில் பிரெண்டன் குருப்பு, ரொஷான் மஹாநாம, அஞ்சலோ மெத்தியூஸ், திமுத் கருணாரட்ண ஆகியோர் தலா ஒரு முறை இரட்டைச் சதங்களை விளாசியுள்ளனர்.

இந்நிலையில் பங்களாஷே் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று போதிய வெளிச்சமின்மை காரணமாக 4.50 மணியளவில் இடைநிறுத்தப்பட்டது.

பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் திமுத்து கருணாரத்தன 234 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 154 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

இந்நிலையில், நாளை 5 ஆவதும் இறுதியும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோழி முட்டையிடவில்லை – பொலிஸில் முறைப்பாடு செய்த விவசாயி !

தனது கோழிகள் முட்டையிடவில்லை என விவசாயியொருவர் பொலிஸாரிடம் புகார் அளித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

புனேவைச் சேர்ந்த விவசாயியொருவர் கோழிப்பண்ணையொன்றை நடத்தி வந்துள்ளதோடு அப் பண்ணையிலுள்ள கோழிகளுக்கு புதிய கோழித்தீன் ஒன்றினை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருவாரம் கடந்த நிலையிலும் கோழிகள் முட்டை இடவில்லை என்பதால் குறித்த தீவன நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
எனினும் , அந் நிறுவனத்திடமிருந்து திருப்திகரமான பதில் அளிக்கப்படாமையால் இச் சம்பவம் குறித்து அவர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில் கோழித்தீவனத்தை உண்ட பின் எனது கோழிகள் முட்டையிடவில்லை எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து விவசாயி தனது வேதனையை நூதன முறையில் வெளிப்படுத்தியதை உணர்ந்த பொலிஸார் அப்புகாரினை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விராட் கோஹ்லியை பின்தள்ளி ஐ.சி.சி. தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்த பாபர் அசாம் – இருபதுக்கு 20 ல் மட்டும் இலங்கை வீரர்கள் இருவர் முதல் 10 இடங்களில் !

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐ.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லியை பின்தள்ளிய பாபர் அசாம் 865 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.

முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லி 856 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டதுடன், ரோஹித் ஷர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்த தரப்படுத்தலின் முதல் 10 வீரர்களில் இலங்கையர் எவரும் இல்லை. இந்த தரப்படுத்தலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அஞ்சலோ மெத்தியூஸ் 575 புள்ளிகளுடன் 39 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிப் பிரிவில் மாத்திரம் இலங்கையர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்த பங்களாதேஷ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மையில் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிகளின் வீரர்கள்கூட இலங்கையர்களைக் காட்டிலும் சிறப்பான தரவரிசைகளில் உள்ளனர்.

இதில் சர்வதேச இருபதுக்கு 20 தனிநபர் தரப்படுத்தல்களில் லக்சான் சந்தகன், வனிந்து ஹசரங்க மற்றும் சமரி அத்தபத்து ஆகிய மூவரைத் தவிர எவரும் முதல் 10 இடங்களில் இல்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

இதில் சந்தகன் 639 புள்ளிகளுடனும் ஹசரங்க 625 புள்ளிகளுடனும் ஆண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் பந்துவீச்சாளர்களுக்கான தனிநபர் தரப்படுத்தலில் முறையே 9 ஆம் மற்றும் 10 ஆம் இடங்களை வகிக்கின்றனர்.

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவியான சமரி அத்தப்பத்து பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் சகலதுறை தரப்படுத்தலில் 265 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தை வகிக்கிறார்.