இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போனவர் கிறிஸ்மோரிஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25(இந்திய ரூபாய்) கோடிக்கு ஏலம் எடுத்தது.
எந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. மற்ற ஆட்டங்களில் அவர் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதேபோல பந்து வீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய ரூ.16 கோடி அதிகம் என நினைக்கிறேன். அந்த தொகைக்கு அவர் தகுதியான வீரர் இல்லை. தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்ததை மோரிஸ் தற்போது உணர்ந்து வருகிறார். அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்க மாட்டார்.
நாம் அவரைப் பற்றி அதிகமாக பேசுகிறோம் என நினைக்கிறேன். 2 போட்டிகளில் ரன் அடிப்பார். சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார். இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.
34 வயதான கிறிஸ் மோரிஸ் 4 ஆட்டத்தில் 48 ரன்களே எடுத்துள்ளார். 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.