2021

2021

கிழக்கில் பாலம் இல்லாது இறந்து போன பிஞ்சுகள் – தெற்கில் திறக்கப்படும் 40 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாலம் !

கிண்ணியாவில் பாதுகாப்பாக பயணிப்பதற்கான பாலம் இன்மையால் மாணவர்கள் உயிரிழந்ததையும் நாளை கொழும்பில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளதையும் சுட்டிக்காட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஜாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கிண்ணியா படகு விபத்து!- உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு! - Meera தமிழ்

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த ஆறுமாணவர்கள் உரிய பாலம் இன்மையால் இன்று உயிரிழந்தனர். நாட்டின் இன்னொரு பக்கத்தில் 40 பில்லியன் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தங்க கதவு கல்யாணியை நாளை திறந்துவைக்கவுள்ளனர் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட 18 வயது மகளும் அவருடைய தாயும் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம்-  மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியதாக பொலிஸாரின் விசாரணைகளில் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் போதைப்பொருள் கடத்தினார் என கூறிய அமைச்சர் டக்ளசுக்கு சிறீதரன் கொடுத்த பதில் !

நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்ல. பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னைப் பேவிடுங்கள்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலளித்துள்ளார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

பாராளுமன்றத்தில் இன்று சிறிதரன்  உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சிறிதரன் பேசிக்கொண்டிருந்த உரையை குறுக்கீடுஅமைச்சர் செய்த டக்ளஸ்தேவானந்தா, ”மஹிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என சிறிதரன் அவ்வாறு குறிப்பிட்டார்.

கிண்ணியா படகு விபத்து – நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை சரமாரியாக தாக்கிய மக்கள் !

குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த செய்தியறிந்த மக்கள் கிண்ணியா படகு விபத்து – பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்து பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறினார் என குற்றம் சுமத்தியே மக்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ்ராஜ்: மதுவும் மரணமும் – மரணத்தை வெல்ல மது நீக்கம் வேண்டும்!!!

லண்டனில் அரசியல், சமூக, கலை, இலக்கிய, நாடகச் செயற்பாடுகளில் நன்கு அறியப்பட்ட குட்டி என்று எல்லோராலும் வாஞ்சையுடன் அறியப்பட்ட தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இதயத்துடிப்பை, மருத்துவக்குழவினர் இன்று (நவம்பர் 23, 2021) அதிகாலை இரண்டுமணியளவில், அவருக்கு வழங்கப்பட்ட செயற்கை உயிராதரவுக் கருவியை நிறுத்தி, முடிவுக்கு கொண்டு வந்தனர். அவருடைய 52 வயது வாழ்க்கையின் அத்தியாயம் முடிவுக்கு வந்தபோது அவருடைய மனைவியும் குழந்தைகளும் நீண்ட நாள் நண்பனாகிய நானும் உடனிருந்தோம்.

சஞ்சீவ்ராஜ் உடைய வாழ்கையின் ஒரு பக்கத்தை பெரும்பாலும் அனைவரும் அறிவோம். அரசியலில் அதீத ஆர்வமும் ஈடுபாடும் உடையவர். தீப்பொறி குழவினருடன் மூன்று தசாப்தங்களாக புலம்பெயர் மண்ணில் மிக நெருங்கிப் பணியாற்றியவர். தீப்பொறியின் வெளியீடுகளாக வெளிவந்த உயிர்ப்பு, வியூகம் சஞ்சிகைகளின் வெளியீட்டில் முன்நின்று செயற்பட்டவர். தோழர் ரகுமான் ஜானுடைய நூல் வெளியீடுகளிலும் முன்நின்று செயற்பட்டவர்.

லண்டனில் வெளிவந்த ஈழபூமி பத்திரிகையில் இயக்குநர் புதியவன் ராசையா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். அத்தோடு பிற்காலத்தில் வெளியான வெளி பத்திரிகையை வெளியிடுவதில் புதிய திசைகள் அமைப்போடு நெருக்கமாகச் செயற்பட்டவர்.

லண்டனில் தற்போது தனக்கெனத் தடம்பதித் தமிழர் தகவல் என்ற தகவல் தொகுப்புக்கான எண்ணத்தை தமிழில் முதலில் உருவாக்கிய செயற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர். அன்றைய தமிழர் தகவல் மிக வெற்றிகரமாக இயங்கியது.

லண்டனின் தென் கிழக்கில் இசைக்குழவை உருவாக்கி இசை நிகழ்ச்சிகள் மூலம் வருமானத்தைப் பெற்று பொதுச்சேவைகள் பலவற்றைச் செய்த முன்னோடிகளில் இவரும் ஒருவர்.

நாடக இயக்குநர் க பாலேந்திராவின் தமிழவைக்காற்றுக் கழக நாடகக் குழவுடன் சில தசாப்தங்களாகவே இவர் இணைந்து பணியாற்றி வந்திருக்கின்றார். அத்தோடு கலை, இலக்கிய செயற்பாட்டாளர்களுடனும் தன்னை இணைத்துக்கொள்வார். ஆரம்ப காலங்களில் புலம்பெயர் தேசங்களில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புக்கள், பெண்கள் சந்திப்புக்கள், அரசியல் நிகழ்வுகளில் இவர் தன்னையும் இணைத்துக்கொண்டவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விளையாட்டுக்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

யாழ் கொக்குவிலைச் சேர்ந்த இவர் ஆரம்பக் கல்வியை அப்பகுதியிலும் அதன் பின் இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்று இந்துவின் மைந்தனானவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தில் சஞ்சீவ்ராஜ் தன்னை எப்போதும் ஒரு மையப் புள்ளியாக தக்க வைத்துக்கொண்டவர்.

இவருடைய நெருங்கிய வட்டத்தில் இல்லாவிட்டாலும் அரசியல், சமூக, கலை, இலக்கிய, நாடகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவர் நன்மதிப்பொன்றைத் தக்க வைத்தவர். பொதுவாக வீட்டுக்கு வெளியே நல்ல நண்பர். சமூக அக்கறையாளன். தீவிர செயற்பாட்டாளன். ஒரு முற்போக்காளன். ஆனால் இவற்றையெல்லாம் உளப்பூர்வமாக இவர் நம்பினாரா என்பது பற்றி வெவ்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு அபிப்பிராயங்கள் உள்ளது.

தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் எவ்வாறு சமூகத்தின் முன் தன்னை முன்நிறுத்த முயன்றாரோ அதனை அவரால் சாதித்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய இறுதிக்காலங்கள் மிகவும் வேதனையானவை. ஆனால் அவரோடு சேர்ந்து பயணித்தவர்கள், அவருடைய இந்துவின் மைந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் நண்பர்கள், சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள்: சஞ்சீவ்ராஜ் எவ்வாறு சமூகத்தின் முன்தன்னைக் காட்ட முயன்றாரோ அதனை அவருடைய வாழ்வுக்குப் பின் செய்துகாட்ட முன்வருவதே நாங்கள் சஞ்சீவ்ராஜ்க்கு செய்யக்கூடிய அஞ்சலியாக இருக்கும்.

அந்த வகையில் அவருடைய நினைவாக ஏதும் செய்ய விரும்பினால் பணத்தையும் பொருளையும் வீண்விரயம் செய்யாமல், சஞ்சீவ்ராஜ் தனது வாழ்க்கையை எதனால் இழந்தாரோ அந்த மது அடிமைத்தனத்திற்கு எதிராக புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். விழிப்புணர்வுப் பிரசுரங்கள், நூல்கள், தமிழ் சமூகத்தில் மது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுகள், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான செயற்திட்டங்கள் ஆகியவற்றிலேயே கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும்.

சஞ்சீவ்ராஜ் உடைய வாழ்வின் பெரும்பங்கை மதுஉட்கொண்டுவிட்டதால் அவரது மனைவி பிள்ளைகள் மதுபோதைக்கு எதிரான விழ்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு சஞ்சீவ்ராஜ் இன் ஆத்மசாந்தியடையச் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ஆகையால் அவருக்கு அஞ்சலி கையேடுகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக மதுபோதைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசுரங்கள், கையேடுகள், படைப்புகளைக் கொண்டுவந்து இன்னுமொருவர் இன்னுமொரு குடும்பம் இவ்வாறு பாதிப்படையாமல் காப்பாற்றப்பட வேண்டும்.

 

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் ஒரு வருடமாக புனரமைக்கப்படும் பாலம் – அதிகாரிகளின் அசமந்த போக்கால் பறிபோன பள்ளிப்பிஞ்சுகளின் உயிர் !

படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று(23) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வழமை போன்று மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் உள்ளடங்கலாக பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில் நடந்த சோகம் - படகு கவிழ்ந்து மாணவர்கள் பலர் மரணம்சம்பவம் நேரத்தில் குறித்த படகு பாதையில் 17 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 23 பேர் பயணித்துள்ளதுடன் நீரில் மூழ்கிய சிலர் நீந்தி சேர்ந்துள்ளனர் . இப்பகுதியில் பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால் கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வடைந்துள்ளது. 4 மாணவர்கள், பாடசாலை ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் பயணித்த மேலும் 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பேர் தீவிரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் பொலிஸார் ,கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவமானது கிண்ணியா பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாக பதிவாகியுள்ளது. குறித்த படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை ஏற்ட்டுள்ளது. அங்கு கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

திருகோணமலை கிண்ணியா பகுதியில் குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த ஆற்றினை கடப்பதற்கு இழுவவை படகினை பயன்படுத்தி வந்துள்ளனர்.தினமும் இந்த இழுவைபடகின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டுவந்த நிலையில் இன்று காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் கிண்ணியா பகுதி சேர்ந்த ஒருவரை தேசம் நெற் சார்பாக தொடர்பாக கொண்டிருந்த போது அவர் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அவர் குறிப்பிட் போது “அப்பகுதியில் ஏற்கனவு பயணத்துக்காக இருந்த பாலம் சில காலங்களில் நீர் நிரம்பி விடுவதாக கூறப்பட்டு புதிய பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒரு வருடங்களுக்கு மேலாக பாலம் அமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பாலம் அமைப்பு பணி விரைவில் முடிந்திருந்தால் அந்த பிஞ்சுகளின் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். இங்கு சாவுகள் விழுந்தால் மட்டும் தான் மக்கள் பொதுப்பிரச்சினைகள் குறித்து கவலைப்படுகிறார்கள். இல்லாத போது அதை கவனிப்பதே இல்லை. உயிர் போய்விட்டது இப்போது போராடிக்கொண்டிருக்கிறார்கள் ” என அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த பாலம் 750 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்ககது.

மதுபோதையில் மக்களுக்கு இடையூறு – ஆளுங்கட்சி உறுப்பினரை கம்பத்தில் கட்டி வைத்த மக்கள் !

களுது்துறை – கல்பாத்த பிரதேசத்தில், மதுபோதையில் பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் மேலும் சிலருடன் கல்பாத்த பகுதிக்கு வந்து மது அருந்தியுள்ள நிலையில், அங்கிருந்து கல்பாத்த, பஹுருபொல பிரதேசத்துக்கு அவர் தனியாக சென்று பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த பிரதேசவாசிகள், குறித்த பிரதேச சபை உறுப்பினரை மின்கம்பத்தில் கட்டி வைத்து, காவல்துறை அவசர பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

அழைப்பின் பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்து, நாகொட வைத்தியசாலையின் வைத்தியர் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது, அவர் மது அருந்தியிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், சந்தேக நபரை இன்று (22) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“நாட்டில் சாப்பாடு இல்லை. தண்ணீர் இல்லை.வீடு இல்லை. இவற்றைப்பற்றி பார்ப்போம். விடுதலைப்புலிகளை மறந்து விடுங்கள்.” – வவுனியாவில் ஞானசாரதேரர் !

“நாட்டில் சாப்பாடு இல்லை. தண்ணீர் இல்லை.வீடு இல்லை. இவற்றைப்பற்றி பார்ப்போம். விடுதலைப்புலிகளை மறந்து விடுங்கள்.” என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினால் மக்கள் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்றுமுன்தினம்  வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தார்கள். செயலணியின் தலைவர் ஞானசார தேரர் ஒருநாடு ஒருசட்டம் தொடர்பில் இங்கு தெளிவுபடுத்தினார்.

வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் செயணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவிக்கையில்,

இந்தக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கை, பௌத்த விகாரரைகளை அமைப்பது, எமது மத வழிபாடுகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை, மாவீரர் தினம் தொடர்பில் எமது உரிமை  கள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் பேசியிருந்தேன்.

அப்போது அவரிடம் இருந்து வந்த பதிலில் அரசியல் கைதிகள் தொடர்பாக உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பேசியுள்ளார். மிக விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தன்னிடமும் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இருந்துள்ளார்கள். மகாவம்சத்தில் தமிழ் பௌத்த துறவிகள் இருந்தமைக்கான ஆதாரம் உண்டு. தமிழ் மக்களின் வழிபாட்டுக்கான உரிமை மறுக்கப்படும் இடங்களை பார்வையிடுவதாக தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் கதிர்காமம் போன்று இரு மதத்தினரும் வழிபடக் கூடிய நிலை வருவதனை தான் விருப்புவதாக தெரிவித்தார். நாம் இணைந்து வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மாவீரர் தினம் தொடர்பில் கேட்டிருந்தேன். பல்வேறு காலங்களிலும் மரணித்த மாவீரர்களை நினைவு கூர உரிமை உள்ளது எனத் தெரிவித்தேன். இந்த விடயம் தொடர்பில் தான் முழுமையாக பதில் செல்ல முடியாது எனவும், இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மேற்கொண்ட விடயம் தவறு. அதற்கு அனுமதிக்க முடியாது. உங்களுடைய வலிகள், பிரச்சினைகளை புரிந்திருந்தாலும் இதற்கான பதிலை வழங்கக் கூடிய நிலையில் இல்லை. எங்களுடன் சேர்ந்து இவற்றை மறந்து நீங்கள் பயணிக்க வேண்டும் எனக் கூறினார்.

இதைவிட பிரச்சினையான பல விடயங்கள் இருக்கின்றன. சாப்பாடு இல்லை, வீடு இல்லை, தண்ணீர் இல்லை இவை பற்றி நாம் பார்ப்போம் எனத் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வார்த்தை ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய தலைவர் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்யும் பெண்களான மக்கள் பிரதிநிதிகள், அவ்விடத்திலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரு சீரழிவை ஏற்படுத்துவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………..

உலகின் பல நாட்டு பாராளுமன்றங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையின் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்தளவானதாகவே உள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒரு நாட்டின் சட்ட உருவாக்க பீடத்திலேயே பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்காது பெண் அடக்குமுறைகள் தொடருமாயின் சாதாரணமான இடங்களில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தெரிந்து கொள்ளத்தேவையில்லை. இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.

சடுதியாக அதிகரித்துள்ள இலங்கையின் கடன்கள் – சுட்டிக்காட்டியுள்ள உலக வங்கி !

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால், பல பிரச்சினைகளை இலங்கை எதிர்கொண்டுள்ளதென்றும் அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உண்டெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையின் முக்கிய பிரச்சினை, மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் கடனைச் செலுத்தும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பது முக்கிய தேவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.