2021
2021
கரீபியன் தீவு நாடான ஹெய்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் (வயது 53) கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவி மார்டின் மோயிஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் ஹெய்டிஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. ஜனாதிபதி ஜோவனல் மோயிசை படுகொலை செய்த கூலிப்படையினர் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கூலிப்படையினர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர்.
பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இறுதியாக கூலிப்படையினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களில் 15 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்பதும் 2 பேர், ஹெய்டி-அமெரிக்கர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் ஜனாதிபதி படுகொலையில் கொலம்பியாவை சேர்ந்த 26 பேர் மற்றும் 2ஹெய்டி -அமெரிக்கர்கள் என மொத்தம் 28 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்களில் 8 பேர் தற்போது தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஹெய்டி ஜனாதிபதி கொலையில் தொடர்புடைய கொலம்பியாவை சேர்ந்த 26 பேரில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் இன்று (09) முதல் ஓகஸ்ட் 08 வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனாத் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் காலவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான வீசாக்கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன், அதற்காக எவ்வித தண்டப்பணமும் அறிவிடப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் இராணுவ மயமாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என உயர் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் நாட்டில் இருக்கும் ஏனைய பல்கலைக்கழகங்கள் போன்றது அல்ல. இதற்கு விசேட தனித்துவமாக அம்சங்கள் இருக்கவேண்டும். அதற்காகத்தான் இதற்கு விசேட சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தாதியர்களுக்கு பட்டம் வழங்கும் தாதியர் கல்லூரி. இவையும் பல்கலைக்கழம். இவற்றுக்கு விசேட தனித்துவம் இருக்கவேண்டும். சாதாரண பல்கலைக்கழங்களில் மேற்கொள்வதை இங்கே மேற்கொள்ள முடியாது. இவற்றுக்கிடையில் பெரும் வித்தியாசம் உள்ளது.
மேலும் எமது அரசாங்கம் 10 நகர பல்கலைக்கழகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவை சாதாரண பல்கலைக்கழங்களுக்கு மாற்றமானவை. நாட்டில் இருக்கும் பெளத்த பாலி பல்கலைக்கழகம், தொழிநுட்ப பல்கலைக்கழகம் என பல இருக்கின்றன. இவை அனைத்தும் விசேட நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையாகும். இதன் மூலம் இந்த பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படுவதில்லை என அர்த்தப்படுவதில்லை. அனைத்து பல்கலைக்கழங்களும் மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு கீழே செயற்படுகின்றன. அந்த விடயங்கள் அவ்வாறே இருக்கின்றன.
அத்துடன் கொத்தாலாவலை பல்கலைக்கழக நிர்வாக சபை உறுப்பினர்களில் மானியங்கள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரும் இருக்க வேண்டும். ஆணைக்குழுவின் தலைவர் நிர்வாக உறுப்பினராக இருக்கின்றார். அதேபோன்று பேராசிரியர்களை நியமிக்கும் குழுவில் மானியங்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அங்கு கற்பிக்கப்படும் பாடநெறிகள் தொடர்பாகவும் நிதி தொடர்பாகவம் பல்கலைக்கழக ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுகின்றது.
எனவே கொத்தலாவலை பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படும் பல்கலைக்கழகமாகும். அவ்வாறு இல்லாமல் சுயாதீனமாக செயற்படக்கூடியதல்ல. அதேபோன்று இது இராணுவ மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் திட்டம் என தெரிவிப்பதாக இருந்தால், அது பொய்யாகும். அவ்வாறான எந்த தீர்மானமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினால் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு 6 மாத சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளில் நேற்று (வியாழக்கிழமை) காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 48,542 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து அவர், அவர்களில் 41,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். இதற்கமைய நிதி அமைச்சராக அவர் பதவி ஏற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்றுள்ள பஷில்ராஜபக்ஷவை பெருமைப்படுத்தி யாழ்.நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் வெகுவாக புகழ்து முகநூல் தளத்தில் பதிவையொன்றையிட்டுள்ளார். வடக்கிற்கு வசந்தத்தை கொண்டுவந்தவர் – பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவித்த உன்னத தலைவர் என்றெல்லாம் குறித்த பதிவில் புகழ்ந்துள்ளார் அங்கஜன் இராமநாதன்.
இவ்வாறு புகழ்ந்து தள்ளியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தான் 2018 தேர்தல் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஒன்றின் போது விடுதலைப்புலிகளின் பாடலை ஒலிபரப்பி பெரிய சர்ச்சையில் மாட்டிக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் பெரும்பூகம்பமாகியிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் 2018ல் பேசியிருந்த சீ.வி.கே சிவஞானம் போராட்டத்தில் தொடர்புபடாதவர்கள் அதனை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் எனக்குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த அங்கஜன் இராமநாதன் “அது எங்களுக்கான போராட்டம். உணரவுப்போராட்டம். உரிமைப்போராட்டம். அதில் தமிழர்களாக எங்களுக்கெல்லாம் பங்கு இருக்கிறது எனக்கூறியிருந்த அதே அங்கஜன் இராமநாதன் தான் பஷில்ராஜபக்ஷவை பெருமைப்படுத்தி பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவித்த உன்னத தலைவர் என பாராட்டியுள்ளார்.
இரட்டை வேடம் போடுவது போன்றது தான் இதுவும். ஒன்று கோட்டுக்கு அந்தப்பக்கம் நில்லுங்கள் நேரடியாக – வலிமையாக ஆயுதப்போராட்டத்தை எதிருங்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போல. தவறு என்றால் தவறு தான். ஆயுதப்போராட்டம் தவறு என்றால் அது பற்றி புகழும் பாடலும் தவறே.
ஓட்டுக்காக யாழில் ஒரு அரசியல் முகம் – தென்னிலங்கையில் ஒரு அரசியல் முகம் என்றெல்லாம் காட்டாதீர்கள். இல்லாது விடின் கோட்டிற்கு இந்தப்பக்கம் நில்லுங்கள் வழமையான சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல போலித்தேசியம் பேசிக்கொண்டு நில்லுங்கள். நடுநிலமை என்ற பெயரில் ஏதோ போல செயற்படாதீர்கள்.
குறித்த பாடலில் ஆயுதக்கலாச்சாரத்தயோ புலிகளயோ ஊக்குவிப்பது போல இல்லை எனவும் அது தமிழர்களின் உணர்ச்சிப்பாடல் இல்லை எனவும் அவர் அன்று சப்பைக்கட்டு கட்டியிருந்தார். அந்தப்பாடலின் வரிகள் வருமாறு
“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா .இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா. தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன். தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு . வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம் .அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடாஅடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா. இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா. அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா . அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா . இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா . இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா .புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா . புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறட. தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா.”
என்றதாக அந்தப்பாடல் அமைந்திருக்கும்.
இது சிந்தனைக்கு மட்டுமே . மற்றும் படி கட்டுரையானது தனிப்பட்ட எந்த அரசியல் நோக்கமும் கொண்டதல்ல. ஒரு அரசியல் கொள்கை இருக்குமாயின் அதில் தெளிவாக நடை போடுங்கள். அபிவிருத்தியே உங்களை மக்கள் தெரிவு செய்தமைக்கான காரணம். அதற்கான நகர்வுகளை ஆரோக்கியமான தளத்தில் மேற்கொள்ளுங்கள்.
வெளியேறிக்கொண்டிருக்கும் அமெரிக்கப்படைகள் – உயிரை காக்க அயல்நாடுகளில் தஞ்சமடையும் ஆப்கான் வீரர்கள் !
அமெரிக்காவில் ‘செப்டம்பர் 11’ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயற்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.
ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.
முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் கொய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் இயக்கத்தினர் அளித்த உறுதிமொழியின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.
ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
இந்நிலையில், தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கான் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவது கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.
அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன.
அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் பத்தில் மூன்று பங்கு இடத்தை கட்டுப்படுத்திவரும் தலிபான்கள், குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.
எனினும், ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.
எம்.பி பதவியிலிருந்து ஜயந்த கெட்டகொடவின் விலகியதையடுத்து வெற்றிடமாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
பட்டியல் இடத்தை நிரப்புவதற்கு பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது பதவி விலகல்
கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள நிலையிலேயே காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது






