2021

2021

ஆப்கானிஸ்தான் பயணமாகிறது இங்கிலாந்து இராணுவம் !

ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத சூழலில், அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவில் அதிபர் ஜோ பைடன் உள்ளார். அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன. எஞ்சிய படைகளும் இம்மாத இறுதிக்குள் திரும்ப பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர். சமீப நாட்களில் அவர்கள் கைப்பற்றி உள்ள 6 முக்கிய நகரங்களில் இருக்கும் சிறை கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளனர்.  அவர்களில் பலர் போதை பொருள் கும்பலைச் சேர்ந்தோர், கடத்தல்காரர்கள் மற்றும் ஆயுத கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.
ஆப்கானிஸ்தானில் இத்தகைய சூழல் நிலவி வரும் நிலையில், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து விரைவில் வெளியேறுமாறு கடந்த வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியிருந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த 4,000 பேர் ஆப்கானிஸ்தானில் தற்போது இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் அங்கிருந்து இருந்து பாதுகாப்பாக வெளியேற உதவி செய்யும் வகையில் இங்கிலாந்து படையைச் சேர்ந்த 600 ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் பென் வாலெஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து மக்கள் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் ஆப்கான் அலுவலர்கள் ஆகியோரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது தான் தற்போதைய முதல் கடமை. அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

11 பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – பதவி விலகினார் நியூயோர்க் நகர மேயர் !

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் அண்ட்ரூ குவோமோ மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, விசாரணை நடைபெற்றது. அதில் அவர், 11 பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரியவந்தது.

சுயேச்சைப் புலனாய்வுக் குழு ஒன்று, ஐந்து மாதம் அவர் மீதான புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் முடிவில், அமெரிக்கச் சட்டங்களை மீறிய செயல்களில் அவர் ஈடுபட்டதாக அறிவித்தது.

அதனையடுத்து, அவர் பதவி விலக சட்ட ரீதியான நெருக்குதல் ஏற்பட்டது. ஜனாதிபதி ஜோ பைடனும் மற்றவர்களும் அவரைப் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.

பெண்களுடன் நகைச்சுவையாகவோ, அன்பாகவோ பழக முயன்றதை, அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டதாக அவர் சொன்னார். தொடர்ந்து ஆளுநராகப் பணிபுரிவதும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடுவதும் கடினமாக இருக்கும் என்பதால் தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த குவோமோ, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதிவாய்ந்த வேட்பாளராகக் கருதப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ரொக்கெட் பயணம் தோல்வி !

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப் -10 ராக்கெட்
இதனை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ரொக்கெட்டில் பொருத்தி இன்று (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
திடீரென மூன்றாவது நிலையில் கோளாறு ஏற்பட்டதால் செயற்கைகோளை கொண்டு செல்லும் இலக்கு எட்டப்படவில்லை.
மேலும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன்  கூறினார்.

ஏதென்ஸில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ – மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிரீஸ் பிரதமர் !

காட்டுத் தீ பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் தீவுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ பரவி வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் காட்டுத் தீ கிரீஸ் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து எரியும் காட்டுத் தீ காரணமாகப் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுப் பகுதியில் பரவிய தீ, மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ், கிரீஸ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசும்போது, “நாட்டு மக்களின் வலியை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்றேன். தங்களுடைய இடமும், வீடும் நெருப்புக்கு இரையாவதை யார் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் எங்களால் முயன்றதைச் செய்தோம். ஆனால் அது போதவில்லை. தோல்விகள் கண்டறிந்து விரைவில் சரிசெய்யப்படும். காட்டுத் தீயால் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய 500 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் தெரிவித்தார்.

“பூமியில் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாது போகவுள்ளது.” – ஐபிபிசி அதிர்ச்சி அறிக்கை !

பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை கடக்கும் சூழல் ஏற்பட்டால் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாகிவிடும் என்று ஐபிபிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுகளுக்கு இடையிலான குழு வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால நிலை மாற்றம் என்பது உண்மை என்றும், மனித நடவடிக்கைகளால் பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்பதற்கு சந்தேகமில்லாத ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐபிபிசி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “

பூமியின் வெப்ப நிலை 1.1 டிகி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2040 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும். பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை தாண்டினால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமியில் கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வு அதிகரிக்கும் பட்சத்தில் பூமியின் நில அமைப்பும், கடலும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கும் திறனை இழக்கும். இதனால் கடல், பனிப்பாறைகள், கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தியாவை பொறுத்தவரை கால நிலை மாற்றத்தின் காரணமாக வருகின்ற பத்தாண்டுகளில் வெப்ப அலைகள், வறட்சி, மழை பொழிவு, சூறாவளிகளை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை நிராகரித்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன.

இதனிடையே தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்கள் மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

சமீபத்திய தாக்குதல்களில்  பல தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் தலையீடுக்கு எதிராக எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் 20 ஆண்டுகால இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கிய பின்னர் வன்முறை அதிகரித்துள்ளது.

தலிபான் தீவிரவாதிகள் சமீபத்திய வாரங்களில் வேகமாக முன்னேறி வருகின்றனர். கிராமப்புறங்களின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய அவர்கள் இப்போது முக்கிய நகரங்களையும் குறிவைக்கின்றனர்.

கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா !

கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் பரவ ஆரம்பித்த அதே வேகத்தில் தற்போதும் பரவி வருவதுடன் புதிய திரிபுகளாகவும் பரவ ஆரமப்பித்துள்ளது. அண்மையில் கொரோனா தொற்றின் திரிபுப்பெற்ற டெல்டா, பீட்டா, லாம்ப்டா என்பன கண்டறியப்பட்டன. இதற்கு  மேலதிகமாக புதுவித திரிபுபெற்ற வைரசினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

பி.வன் 621 என்ற இந்த தொற்று தீவிரமாக அந்நாட்டில் பரவுகிறது.

இளம் குடும்பஸ்தர் ஒரு குழந்தையின் தந்தை வீதி விபத்தில் மரணம்! தெற்காசியாவில் இலங்கையின் வீதிகளே ஆபத்து நிறைந்தது – உலகவங்கி

ரமணன் என்றழைக்கப்படும் காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார். அவருக்குப் பின்னால் வந்த டயலக் நிறுவனத்தின் வான் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்தது. அவ்வாகனத்தை ஓட்டி வந்த 21 வயது இளைஞர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இலங்கையின் வீதிகளில் தினமும் எண்மர் மரணிப்பதாகவும் 22 பேர் காயமடைவதாகவும் வீதி போக்குவரத்து விபத்துப் பற்றி உலக வங்கி மேற்கொண்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இவ்விபத்துக்களில் மூன்றில் ஒரு மரணங்கள் பாதசாரிகளிலும் 50 வீத மரணங்கள் இரு அல்லது முச்சக்கர வாகனப் பாவனையாளர்களிலும் நிகழ்வதாகவும் இப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இலங்கையின் வீதிகளில் 2011 – 18 ஆண்டுகளுக்கு இடையே வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 67 வீதத்தால் அதிகரித்து உள்ளது. இந்த அதீத அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படாவிட்டால் வீதிகளின் விபத்து தொடர்ந்தும் அதிகரிக்கும் என உலக வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு, பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தை, வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமை, பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இலங்கையில் ஒரு இலட்சம் மக்களுக்கு ஆண்டுக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் மரணமடைகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகின்றது. கூடுதல் வருமானம் உள்ள நாடுகளைக் காட்டிலும் இது இருமடங்கு அதிகமானதாக உள்ளது. வீதிப் பாதுகாப்பு அதிகமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வீதி விபத்துக்களில் மரணிப்பவர்களின் வீதம் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. தெற்காவியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்து நிறைந்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

வீதி விபத்துக்கள் தொடர்பாக கிழக்கு இலங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 19 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் பெரும்பாலும் நகர்ப்புற வீதிகளில் மரணத்துக்கு காயத்திற்கு உள்ளாவதாக தெரியவருகின்றது. பீதாம்பரம் ஜெபரா, செல்லத்துரை பிரசாத் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வில் 35வீதமான மரணங்கள், காயங்கள் தலைக்கவசம் அணியாததால் அல்லது தலைக்கவசம் அணிந்தும் அதன் பட்டியயை கொழுவி விடாததால் ஏற்படுவதாக தெரியவருகின்றது. காயப்பட்டவர்கள் அல்லது மரணமடைந்தவர்களில் 25 வீதமானவர்கள் மது மற்றும் போதைப் பொருள் பாவனையின் பாதிப்பாலும் 17 வீதமானவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற விபத்துக்களில் 70 வீதத்துக்கும் மேற்பட்டவை மோட்டார் சைக்கிள் விபத்து என்றும் இவர்களில் 70 வீதமானவை தலையில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்படுபவை என்றும் தெரியவருகின்றது. ரமணனின் விபத்தும் தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் ஏற்பட்ட இரத்தக் கசிவே அவருடைய மரணத்திற்கு இட்டுச் சென்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் எமது வீதிகளில் நாளாந்த நிகழ்வாகி வருவதால் பாதசாரிகளும் சைக்கிள் மற்றம் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களும் அவதானமாகச் செயற்படுவது அவசியம் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவரின் மாமி தேசம்நெற்க்கு தகவல் தருகையில் நல்ல எதிர்காலத்தைக் கொண்டிருந்த ரமணனின் திடீர் இழப்பினால் குடும்பமே அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். பாரிஸில் வாழும் இவர் எமது இளம் தலைமுறையின் உயிர்கள் இவ்வாறு வீதிகளில் இழக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தலைக் கவசம் தலைமுறையைக் காப்பாற்றும்!

உண்மைகள் உறங்குவதில்லை: மனம் திறந்து பேசுகின்றார் தோழர் யோகன் கண்ணமுத்து!

ஈழ விடுதலைப் போராட்டம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் – தோழர் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம்

1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட, அதன் பின் பிறந்த தலைமுறையினர் தான் அசோக் யோகன் கண்ணமுத்து. 1957இல் பிறந்த இவர் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தோடு தவழந்து, நடந்து, இளைஞனாகி ஆயதமேந்திப் போராடி அதிஸ்டவசமாக உயிர்தப்பி தற்போது தனது சாட்சியத்தை தேசம்நெற் இணையத்தில் பதிவு செய்ய முன்வந்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருந்த தோழர் யோகன் கண்ணமுத்து: தமிழீழ விடுதலைப் போராட்டச் சூழல், தமிழீழ விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட பிளவு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உருவாக்கம், மட்டக்களப்புச் சிறையுடைப்பு, கழகத்தினுள் இடம்பெற்ற பிளவுகள், தீப்பொறி, ஈஎன்டிஎல்எப் ஆகிய அமைப்புகளின் உருவாக்கம் என பல்வேறு விடயங்கள் பற்றியும் பதிவு செய்கின்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்த தோழர் யோகன் கண்ணமுத்து விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடனும் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர். சகோதரப் படுகொலைகள், பழிவாங்கல் செயற்பாடுகள் என போராட்டத்தின் பல்வேறு அம்சங்ளையும் அவர் இங்கு பதிவு செய்ய முற்பட்டு உள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னணிப் போராளியான இவர் விடுதலைப் போராட்டம் பற்றிய இன்னுமொரு கோணத்தையும் பதிவு செய்கின்றார்.

இது தொடர்பாக வாசகர்களாகிய உங்களுக்கு ஈழப்போராட்ட வரலாறு தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் அவற்றை இங்கு பதிவு செய்தால் அக்கேள்விகளுக்கான பதிலையும் பெற்றுக்கொண்டு இந்த வரலாற்றுத் தொடரை மேலும் காத்திரமானதாக ஆக்க முடியும்.

இப்பதிவு தற்போதைய புதிய தலைமுறையினருக்கு எமது விடுதலைப் போராட்டம் பற்றி மறைக்கப்பட்ட அல்லது அறிந்திராத பக்கங்களை எடுத்துக்காட்டும்.

அடுத்த வாரம் முதல் தேசம்நெற் இணையத் தளத்தில் இவருடைய நேர்காணல் பதிவு தொடராக எழுத்திலும் காணொலியாகவும் வெளிவரும்.

உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் – உதவிக்கரம் நீட்டுகிறது சீனா !

இந்த ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகளுக்கு 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக  சர்வதேச தடுப்பூசி ஒத்துழைப்பு மாநாட்டில் கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், சீனா இதுவரை 770 மில்லியன் டோஸ்களை மற்ற நாடுகளுக்கு விநியோகித்ததனையும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் தடுப்பூசி விநியோகத் திட்டத்திற்கு புதிய 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உறுதிப்பாட்டையும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்  அறிவித்தார்.

சீனா இதுவரை 1.7 பில்லியன் அளவுகளை 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட வயது வந்தோருக்கு நிர்வகித்துள்ளது. ஆண்டு இறுதிக்குள் 70 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்கு.

உலக சுகாதார அமைப்பு. சமீபத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், அதிக நாடுகளில் முதல் கொவிட் அளவுகள் கிடைக்கு முன் பணக்கார நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பூஸ்டர்களை (மூன்றாவது டோஸ்) வழங்குவதை கைவிடுமாறு நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.