இளம் குடும்பஸ்தர் ஒரு குழந்தையின் தந்தை வீதி விபத்தில் மரணம்! தெற்காசியாவில் இலங்கையின் வீதிகளே ஆபத்து நிறைந்தது – உலகவங்கி

ரமணன் என்றழைக்கப்படும் காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார். அவருக்குப் பின்னால் வந்த டயலக் நிறுவனத்தின் வான் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்தது. அவ்வாகனத்தை ஓட்டி வந்த 21 வயது இளைஞர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இலங்கையின் வீதிகளில் தினமும் எண்மர் மரணிப்பதாகவும் 22 பேர் காயமடைவதாகவும் வீதி போக்குவரத்து விபத்துப் பற்றி உலக வங்கி மேற்கொண்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இவ்விபத்துக்களில் மூன்றில் ஒரு மரணங்கள் பாதசாரிகளிலும் 50 வீத மரணங்கள் இரு அல்லது முச்சக்கர வாகனப் பாவனையாளர்களிலும் நிகழ்வதாகவும் இப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இலங்கையின் வீதிகளில் 2011 – 18 ஆண்டுகளுக்கு இடையே வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 67 வீதத்தால் அதிகரித்து உள்ளது. இந்த அதீத அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படாவிட்டால் வீதிகளின் விபத்து தொடர்ந்தும் அதிகரிக்கும் என உலக வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு, பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தை, வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமை, பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இலங்கையில் ஒரு இலட்சம் மக்களுக்கு ஆண்டுக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் மரணமடைகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகின்றது. கூடுதல் வருமானம் உள்ள நாடுகளைக் காட்டிலும் இது இருமடங்கு அதிகமானதாக உள்ளது. வீதிப் பாதுகாப்பு அதிகமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வீதி விபத்துக்களில் மரணிப்பவர்களின் வீதம் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. தெற்காவியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்து நிறைந்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

வீதி விபத்துக்கள் தொடர்பாக கிழக்கு இலங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 19 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் பெரும்பாலும் நகர்ப்புற வீதிகளில் மரணத்துக்கு காயத்திற்கு உள்ளாவதாக தெரியவருகின்றது. பீதாம்பரம் ஜெபரா, செல்லத்துரை பிரசாத் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வில் 35வீதமான மரணங்கள், காயங்கள் தலைக்கவசம் அணியாததால் அல்லது தலைக்கவசம் அணிந்தும் அதன் பட்டியயை கொழுவி விடாததால் ஏற்படுவதாக தெரியவருகின்றது. காயப்பட்டவர்கள் அல்லது மரணமடைந்தவர்களில் 25 வீதமானவர்கள் மது மற்றும் போதைப் பொருள் பாவனையின் பாதிப்பாலும் 17 வீதமானவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற விபத்துக்களில் 70 வீதத்துக்கும் மேற்பட்டவை மோட்டார் சைக்கிள் விபத்து என்றும் இவர்களில் 70 வீதமானவை தலையில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்படுபவை என்றும் தெரியவருகின்றது. ரமணனின் விபத்தும் தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் ஏற்பட்ட இரத்தக் கசிவே அவருடைய மரணத்திற்கு இட்டுச் சென்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் எமது வீதிகளில் நாளாந்த நிகழ்வாகி வருவதால் பாதசாரிகளும் சைக்கிள் மற்றம் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களும் அவதானமாகச் செயற்படுவது அவசியம் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவரின் மாமி தேசம்நெற்க்கு தகவல் தருகையில் நல்ல எதிர்காலத்தைக் கொண்டிருந்த ரமணனின் திடீர் இழப்பினால் குடும்பமே அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். பாரிஸில் வாழும் இவர் எமது இளம் தலைமுறையின் உயிர்கள் இவ்வாறு வீதிகளில் இழக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தலைக் கவசம் தலைமுறையைக் காப்பாற்றும்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *