2021

2021

“ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமையும்.” – வல்லரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரத்தானியா !

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால் பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே, அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபுலை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Afghan President leaves Kabul, may transfer power to Ali Ahmad Jalali -  World News
மேலும் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர்,
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொண்டதன் மூலம் நிலவரம் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் அல்லது அதிகாரப் பகிர்வு ஏற்படும் என்று தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹெய்டி நிலநடுக்கம் – உயிரிழப்பு 1300 ஆக அதிகரிப்பு !

ஹெய்டி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மேலும் இது போர்ட் ஆஃப் பிரின்சில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1297 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் கட்டிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பதவியை இராஜினாமா செய்கிறார் மலேசியாவின் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் !

மலேசியாவின் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் நாளை திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்வார் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றினால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இராஜினாமா செய்தால் மேலும் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள் அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட நிலையில் தனது இராஜினாமா முடிவை கட்சி உறுப்பினர்களிடம் அறிவித்துள்ளார்.

2020 மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று முஹ்யித்தீன் யாசின் பிரதமரானார்.

இந்நிலையில், ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் UMNO கட்சியின் சில உறுப்பினர் ஆதரவை மீளப்பெற்றுள்ள நிலையில் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், செப்டம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக முஹ்யித்தீன் யாசின் கூறினார். இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை, தனக்கு பெரும்பான்மை இல்லை என முஹ்யித்தீன் ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் – பெண்கள், சிறுபான்மையினர் குறித்து கவலை கொள்கிறேன்.” – மலாலா கவலை !

தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கான் அதிபர் பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமைதியான வழியில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூல் நுழைவாயில்கள் காத்திக்க தலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கவலையளிக்கிறது. இதனை அதிர்ச்சியுடன் கவனிக்கிறேன். அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்களை நினைத்து கவலை கொள்கிறேன்.

உள்ளூர் தலைவர்கள், பிராந்திய தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் ஆப்கனில் உனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.

அங்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும். அகதிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்” என்று ட்வீட் மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

காபூலை கைப்பற்றி ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த தலிபான்கள் – பதவி விலகுகிறார் அதிபர் அஷ்ரப் அலி !

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் அந்த நகரை நோக்கி முன்னேறினர். முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. இன்று தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர். நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, சமாதான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், காபூல் நகரை தங்கள் வசமாக்கிய தலிபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றினர். தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் அலி, அரசு ராணுவம் காபூல் நகரில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“ஆப்கன் மக்கள் மீது வன்முறை மற்றும் போர் விழுவதை அனுமதிக்க மாட்டேன்.” – ஆப்கானிஸ்தான் அதிபர்

ஆப்கானிஸ்தான்  மக்கள் மீது போர் தொடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்ஹானி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்ஹானி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். தலிபான்கள் தலைநகர் காபூலை விரைவில் கைபற்றுவார்கள் என்ற கணிப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து ஆப்கான் அதிபர் அஷ்ரப்கானி கூறும்போது,

“ஆப்கன் மக்கள் மீது வன்முறை மற்றும் போர் விழுவதை அனுமதிக்க மாட்டேன். ஸ்திரத்தன்மை நிலை நிறுத்தப்படும். இதனை அதிபராக உறுதியளிக்கிறேன். அதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கடந்த 20 வருடங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு நான் மீண்டும் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்னர், வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள்  ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்  கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

இதே நேரம் , தலிபான்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுமார் 20,000 ஆப்கானியர்களை கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்.” – நியமனம் வழங்கி சாதி ஒழிப்பை முக்கிய கட்டத்துக்கு நகர்த்திய மு.க.ஸ்டாலின்!

தமிழ்நா்டில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த பெரியார், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை அறிவித்தார்.

தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் இந்தப் போராட்டம் நடக்குமென்றும் திருநீறு பூசித்தான் கோயில்களில் நுழையலாம் என்றால் தொண்டர்கள் பூசிக்கொள்ளலாம் என்றும் பெரியார் கூறினார்.

இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.

இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

 

சீனாவை வாட்டியெடுக்கும் கனமழை – 21பேர் இறப்பு !

மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் குறைந்தது 21பேர் உயிரிழந்துள்ளதாக, சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் வரலாறு காணாத மழையால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹூபெய்யில் கனமழையால் மின்வெட்டு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் கிட்டத்தட்ட 6,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

நீர்த்தேக்கங்கள் ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக மாகாணத்தின் அவசர மேலாண்மை பணியகம் தெரிவித்துள்ளது.

ஹூபெய் மாகாணத்தில் கடந்த இரு தினங்களாக 503 மி.மீ. மழை பெய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

வியாழக்கிழமை 480 மில்லிமீட்டர் (சுமார் 19 அங்குலம்) மழை பதிவாகியிருக்கும் யிச்செங்கில் கிட்டத்தட்ட இடுப்பு நிலைக்கு உயர்ந்துள்ள தண்ணீரில், குடும்பங்கள் அலைவதையும் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதையும் சமூகஊடாக புகைப்படங்கள் காட்டின.

’20 அல்லது 30 ஆண்டுகளில் இவ்வளவு மழையை நாங்கள் பார்த்ததில்லை’ என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதியில் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் பெய்த கனமழையால் சுமார் 100,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஷாங்காய் உள்ளிட்ட யாங்சே ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலையில், அடுத்த வாரம் வரை கனமழை நீடிக்கும் என்று சீன வானிலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! – அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 01) (ஒளிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின்  பேச்சுமொழியில்  எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

எனது ஊரும் சுற்றமும்

தேசம்நெற் சார்பாக தோழர் யோகன் கண்ணமுத்து அவர்களுடன் நேரடியான ஒரு உரையாடல். கடந்த கால அரசியலில் 1956ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது இனக்கலவரம் அல்லது ஸ்ரீ எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமானதில் இருந்து அவரின் வரலாறும் கிட்டத்தட்ட தொடங்குகிறது. இலங்கையின் இனவிடுதலை வரலாறும் தோழர் அசோக் யோகன் கண்ணமுத்து உடைய வரலாறும் கிட்டதட்ட ஒரே சமாந்திரமாக பயணித்துள்ளது. அந்தவகையில் அவருடனான நேர்காணலும் இந்தப் பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது என நினைக்கின்றேன். நாங்கள் நேரடியாக இந்த உரையாடலுக்குள் செல்வோம்.

தேசம்: வணக்கம் தோழர் யோகன் கண்ணமுத்து!

அசோக்: வணக்கம் ஜெயபாலன்!

தேசம்: உங்களின் அரசியல் பயணத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை நாங்கள் எவ்வாறு அணுகினோம் என்றுதான் நாங்கள் பார்க்கப் போகின்றோம். பிறந்து, சிறுவனாக, இளைஞனாக வளர்ந்து போராட்டத்தின் முக்கியமான தளத்தில் இருந்திருக்கிறீர்கள். அத்துடன் இந்த புலம்பெயர் தளத்தில் அரசியல் சார்ந்த ஈடுபாட்டாளனாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் தற்போது சுமார் ஒரு 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று உங்களின் மிக இளமைப் பருவத்தில் எந்த விடயத்தை மீள கொண்டு வரக்கூடியதாக உள்ளது. அந்த நேர சூழல், உங்கள் கிராமம், எப்படியான சூழலில் நீங்கள் பிறந்திருந்தீர்கள்? உங்கள் பெற்றோரின் அரசியல் பின்னணி என்ன? எப்படி இந்த அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டீர்கள் என்பதைச் சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும். அந்த அடிப்படையில் உங்களின் மிக இளமைப் பருவத்தில் என்ன ஞாபகம் இருக்கிறது? உங்கள் கிராமம், குடும்பம் சம்மந்தமாக..

அசோக்: மட்டக்களப்பிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற   கடலோர  விவசாயக் கிராமமான களுதாவளைதான் என்  பூர்வீகம்.  எங்கள் குடும்பம் வந்து நிலப்பிரபுத்துவ சமூகம் சார்ந்த குடும்பம்…

அப்பா, அம்மா இருவரின் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். விவசாயத்தையே பின்னணியாகக் கொண்டது. எனது அப்பாதான் எமது கிராமத்தில் படித்த முதலாவது தலைமுறை. களுதாவளையைச் சேர்ந்தவர். படுவான்கரை, எழுவான்கரை என இரண்டில் எமது கிராமம் எழுவான்கரை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது.

அப்பா இராமகிருஸ்ண மிஷனுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். விபுலானந்தர் மீது பற்றுக் கொண்ட விசுவாசியாக இருந்தார்

தேசம்: அதற்கு குறிப்பிடத்தக்க ஏதாவது காரணம்…?

அசோக்: அடிப்படையில் அப்பாவுக்கு   ஆன்மீக ஈடுபாடு இருந்தது.  அத்தோடு  சமூக அக்கறை இருந்தது. அந்தக் காலத்தில் சுவாமி விபுலானந்தரின் சமூக சேவையின் ஊடாகத்தான் பள்ளிக் கூடங்கள்  உருவாகியது.  அபிவிருத்தி நடைபெற்றது. அதில் அப்பாவும் ஆர்வம் கொள்கின்றார். மிஷனரி பாடசாலைக்கு பதிலாக இராமகிருஸ்ணன மிஷன் திருகோணமலை, மட்டக்களப்பு  பிரதேசங்களில்   ஸ்தாபிக்கப்படுகிறது. சிவானந்தா வித்தியாலயம்,  காரைதீவு இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் ஆரம்பிக்கப்படுகிறது. இராமகிருஸ்ண மிஷன் களுதாவளையிலும் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். அப்பா தான் தலைமை ஆசிரியராக இருந்தார்.

அப்பாவுக்கு அரசியல் ஈடுபாடும் இருந்தது. தமிழ்த் தேசியவாதியாகவும் தமிழ் ஆசிரியராகவும் இருந்த படியால் தமிழரசு கட்சியினுடன் அரசியல் உறவும் ஏற்படுகிறது.

தேசம் : அம்மாவின் பின்னணியைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?

அசோக்: அம்மாவின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பம் தான். அம்மா 10 ஆம் வகுப்பு படித்தாவோ தெரியவில்லை எனக்கு. ஆனால் நிறைய வாசிப்பார். நாவல், சிறுகதை, இலக்கியம் என பயங்கர வாசிப்பு. நான் நினைக்கிறேன் அம்மா எட்டு ஒன்பதாம் வகுப்புதான் படித்திருப்பார். அப்பா, அம்மா காதலித்து அதில் நிறைய பிரச்சினைப்பட்டு …

தேசம்: இரண்டு பேரும் ஒரு கிராமமா?

அசோக்: ஆம் ஒரே கிராமம்தான். அம்மாவின் அப்பருக்கு விருப்பமில்லை.

தேசம்: ஏன்? சமூக பின்னணியா?

அசோக்: இரண்டு குடும்பமும் ஒரு சமூக பின்னணியை கொண்டிருந்தாலும் அம்மாவின் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம். அம்மாவின் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. அப்பா வந்து அம்மாவை தூக்கிக்கொண்டு போய் மிஷனரியில் வைத்து திருமணம் செய்து அது பெரும் முரண்பாடு.   காலப்போக்கில் இராமக்குட்டியாரின்  கோபம் தணிந்து உறவு உருவாகிவிட்டது. இராமக்குட்டி என்பது அம்மாவின் அப்பா பெயர்.

தேசம்: இதில் பாரம்பரிய வித்தியாசம் அல்லது குல வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?

அசோக்: என்ன சிக்கல் என்றால் எமது கிராமம்   கிழக்கு மாகாணத்தில் தாய்வழி சமூகம்.  இது இறுக்கமான சமூகமாகும். எங்கள் கிராமத்தில் அம்மாவின் குடிதான் நான்.

தேசம்: குடி வழி சமூகம் என்றால்…?

அசோக்: குடிவழிச்சமுகம் என்றா அம்மாவின்  வம்சத்தை வழியை கொண்டதாக இருக்கும். எங்கட கோயில் மற்ற  சடங்குகள் திருவிழாக்கள் எல்லாம் அம்மாவின்ற குடியைக் கொண்டே நடக்கும். என்னை அழைப்பதென்றால் அம்மாவின் குடியைச் சொல்லித்தான் அழைப்பார்கள்.  அம்மா பெத்தான்குடி. அப்பா  பேனாச்சிகுடி.  அம்மா ஆட்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டார்களோ தெரியல்ல. சில நேரத்தில் திருமணத்திற்கு அதுவும் ஒரு தடங்கலாக இருந்திருக்கும். அம்மாவை கொண்டு போய் அங்குள்ள கொன்வென்டில் தங்க வைத்து அப்பா படிப்பித்துள்ளார்.

தேசம்: அப்பாவின் அரசியல் போக்கு தொடர்பாக மாறுபட்ட கருத்திருந்ததா?

அசோக்: இல்லை. அவ்வாறாக தெரியல்லை.

தேசம்: அப்பாவின் அரசியல் தொடர்பால் அம்மாவின் நிலைப்பாடு என்ன?

அசோக்: அம்மாவின்  ஒத்துழைப்பு நிறையவே இருந்தது. 1956ஆம் ஆண்டு ஸ்ரீ எதிர்ப்பு தனிச் சிங்கள சட்டமூலம் வந்தபோது அப்பா ஆறு மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.   அம்மா 1961ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கும் இமாநாட்டிற்கும் அறப் போரணித்  தலைவர் அரியநாயகம் திருக்கோயில்   அவருடைய தலைமையில் கால்நடையாக யாத்திரைச் சென்றுள்ளார் திருகோணமலைக்கு. பேரணியில் நிறைய பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். இது புரட்சியான விடயம். அந்தக் காலத்தில் பெண்கள் திருக்கோவிலில் இருந்து

திருகோணமலைக்கு கால்நடையாக போவது பெரிய விடயம். அதில் அம்மா கலந்துகொண்டதாக அம்மா சொல்ல அறிந்துள்ளேன்.

தேசம்: உங்கள் பெற்றோரை பொருத்தவரையில் இரண்டு பேரும் அரசியலில் ஈடுபட்டிருந்தனர்?

அசோக்: ஆம்

தேசம்: உங்கள் குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர்?

அசோக்: நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். ஏழு அண்ணா இரண்டு அக்கா. நான் ஒன்பதாவது ஆள்.

தேசம்: நீங்கள் பெரிய குடும்பம். ஒரு அண்ணாவை நீங்கள் வளர்த்தும் உள்ளீர்கள்.

அசோக்: ஓம் ஒரு அண்ணா எங்களுடன் தான் வளர்ந்தார். மொத்தம் பத்து பேர்.

தேசம்: பெரிய குடும்பமாக இருந்து இன்னொருவரை எடுத்து வளர்ப்பது அதற்கான தேவை எப்படி வந்தது?

அசோக்: பொருளாதார ரீதியாக எங்கள் வீடு பிரச்சினைக்குரியது அல்ல. அப்பாவுக்கு தலைமை ஆசிரியர் தொழில் கௌரவ தொழிலேயொளிய, அதுதான் எங்களது பொருளாதாரம் இல்லை. அம்மாவின் பக்கம் நிறைய தென்னங் காணிகளும் விவசாயக் காணிகளும் இருந்தன. விவசாயக் காணிகளை நாம் செய்வதுடன் குத்தகைக்கும் கொடுப்போம். இப்போ  அப்படியில்ல. பொருளாதார ரீதியில் சராசரி  குடும்பம்தான். அன்றைய காலகட்டத்தில் தமிழரசு கட்சியினுடைய பொருளாதார வளங்களை கொடுக்கும் பெரிய பின்புலமாக அப்பா இருந்துள்ளார். அதனால்தான் எனக்கு தமிழரசு கட்சி யில் வெறுப்பு வந்தது. அப்பா் எப்படி பயன்படுத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.

தேசம்: களுதாவளையில் இருந்து ஒரு சராசரி குடும்பத்தையும் பார்க்க நீங்கள் கொஞ்சம் வசதியாக இருந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

அசோக்: அப்படித்தான் நினைக்கிறன். நிலவுடைமைச் சமூகத்திற்குரிய அனைத்து குணாம்சங்களும் எமக்கிருக்கும். தோட்டங்களில் வந்து வேலை செய்வார்கள். நிறைய தொழிலாளர்கள்  எங்களைச் சுற்றியிருப்பார்கள். ஒரு கூட்டு குடும்பத்துக்குரிய எல்லாம் இருக்கும். தொழிலாளர்கள் என்பதை விட ஒரு ஐக்கிய உறவு எங்களுக்குள் இருக்கும். ஏன் என்றால்  நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உறவுக்காரர்கள். யாழ்ப்பாணத்தில் தொழிலாளர்கள் வேறு சமூகம், நிலவுடையமையாளர்கள் வேறு சமூகம். எமது ஊரில் நிலவுடையாளர்களும், தொழிலாளர்களும் ஒரே சமூகம். அதனால் ஒரு கூட்டுறவு இருக்கும்.

தேசம்: களுதாவளைக் கிராமத்தை எடுத்தோமேயானால் ஒட்டுமொத்தமாக களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? அல்லது வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா?

அசோக்: நல்லதொரு கேள்வி.   யாழ்ப்பாண   சமூகத்திற்கும் எமது சமூகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு சாதிகள் இருக்கும். நீங்கள் வந்து கொக்குவில் கிராமத்தை எடுத்தீர்கள் என்றால் பல்வேறு சமூகங்கள் இருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை பொறுத்தவரையில் குறிப்பிட்ட கிராமங்கள்  மட்டும்தான் சாதிய அடிப்படையிலான கிராமங்கள். ஆரம்ப காலத்தில் பண்டைய  குடியேற்றங்கள் நடைப்பெற்ற போது சில கிராமங்களில் குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் எல்லா கிராமங்களிலும் ஒடுக்கப்பட்ட குடிமைச்   சமூகத்தை காண இயலாது. குறிப்பிட்ட சில கிராமங்களிலேயே காண முடியும். ஐந்து கிராமங்கள் என நினைக்கின்றேன். குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். களுதாவளை, கோமாரி, அம்பிளாந்துறை, கல்முனை, வெல்லாவெளி. இவ்வாறு நான்கு ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகமாக பறையர் சமூகம் இருக்கும். கிழக்கு மாகாணத்தில்   பறையர் சமூகத்திற்கு காணிகள் இருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பாலான பறையர் சமூகத்திற்கு நிலங்கள் இல்லை. இங்கு இவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே அவர்கள் பொருளாதார ரீதியாக சுயமாக வாழக்கூடிய சூழல் இருக்கும்.

தேசம்: சாதிய முரண்பாடு இங்கு ஓரளவு குறைவாக இருக்கும்?

அசோக்: ஆம் குறைவாக இருக்கும். சாதிய முரண்பாடு குறைவாக இருக்கும். பொதுத்தளத்தில்  பார்க்கும் போது குறைவாக இருக்கும். ஆனா  குடிமைச் சமுகங்கள் வாழும்  அந்தந்த கிராமங்களில் இருக்கும். அந்த கிராமங்களில் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் தானே. ஒடுக்கப்பட்ட சமூகம் உள்ள கிராமங்களில் அவர்கள் மீதான ஓடுக்குமுறை கடுமையாக இருக்கும். எங்களுடைய கிராமத்தில் பறையர் சமூகம் கோயிலுக்குள் செல்ல முடியாது.  நாங்கள் படிக்கும் பாடசாலையில் படிக்க முடியாது. அவர்களுக்கு தனி பாடசாலை. தனி கோயில்.

நான் பல்வேறு முயற்சிகள் செய்து அவர்களை எங்கள் கோயிலுக்குள் கொண்டுச் செல்ல எடுத்த முயற்சியினால் பல்வேறு சிக்கல்களை அனுபவித்துள்ளேன். அது ஒரு காலம். இப்போதும் அப்படித்தான்  என நினைக்கிறன்.  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று சொல்வதற்கு காரணம்,  ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு ஒரே சாதி. முக்குவராக இருப்பார்கள். அல்லது கரையார் சமூகமாக இருப்பார்கள். அங்கு சாதி ஒடுக்குமுறை இருக்காது. நூற்றுக்கு தொண்ணூறு வீதமான கிராமங்கள் ஒரு சமூகமாகத்தான் இருக்கும்.

தேசம்: இப்படி பார்க்கும் போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் சாதி முறைக்கும் வேலை பிரிவினைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பிருக்கிறது. நீங்கள் சொல்வதை பார்க்கும் போது வேலை பிரிவினை அடிப்படையில் சாதி இருப்பது போல் தெரியவில்லை. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

அசோக்: ஆமாம். அப்படித்தான். உதாரணமாக பார்த்தால் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் யாழ்ப்பாணத்தில்தான் அதிகம். மட்டக்களப்பில் அதன் தோற்றம் இடம்பெறமுடியாமல் போய்விட்டது. ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்களாகவும் நிலஉடமையாளர்களாகவும் இருந்தபடியால் அது கூர்மை அடையல்ல. சாதிய முரண்பாடுகளோ, வர்க்க முரண்பாடுகளோ வருவதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விடுகின்றது கூர்மை அடைந்தாலும் சமாளித்துவிடுவார்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தானே.

சாதியும் வர்க்கமும் வடமாகாணத்தில் தாக்கம் அதிகம். மட்டக்களப்பில் ஒரே சமூகமாக   இருக்கின்ற  படியால் அந்த முரண்பாடுகள் கூர்மையடையாது.

(உரையாடல் தொடரும்…)

 

பாரிஸில் யாழ் உரும்பராயை பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை!

ஓகஸ்ட் 10 இல் பரிஸ் 95 பிரிவில் யாழ் உருப்பரையை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இக்கொலை தொடர்பாக விசாரணைகளை பொத்துசான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஏனைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சம்பவ தினம் அன்று காலை 10 மணிக்கு வேலையால் வந்த கணவர் தனது மனைவியையும் மகளையும் உயிரிழந்த நிலையில் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கி உள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் யாழ் உரும்பராயைச் சேர்ந்தவர்கள் என்றும் உரும்பராய் சந்திரோதயா வித்தியாசலையை ஒட்டிச் செல்லும் வீதியில் வாழ்ந்தவர்கள் என்றும் உரும்பராயைச் சேர்ந்த லண்டனின் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்கள் விஜயசிறி இராசதுரை (51) டிலக்சனா இராசதுரை (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாரிஸில் கடந்த ஆண்டு மனநிலை பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. அச்சம்பவத்திலேயே முதன் முதலாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தமிழ் சூழலில்இ வளர்ந்த ஒருவரையும் கொலை செய்து பிள்ளைகளையும் கொலை செய்திருந்தார்.

ஏனைய சம்பவங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய் தான் தன் குழந்ழதைகளைப் பாதுகாக்கிறேன் என்ற குழுப்பநிலையில் தங்கள் குழந்தைகளைக் கொன்று தாங்களும் தற்கொலை செய்து இருந்தனர். இவ்வாறான ஐந்துவரையான சம்பவங்கள் கனடாஇ லண்டன்இ அவுஸ்திரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்குள் தமிழர்கள் மத்தியில் நடைபெற்றது. லண்டனில் தந்தையொருவர் தன் குழந்தைகளைப் படுகொலை செய்து தானும் தற்கொலை செய்தமை தெரிந்ததே.

விஜயசிறிஇ டிலக்சனாவின் மரணம் படுகொலையாகவே சந்தேகிக்கப்படுகின்றது. ஆனால் எதுவும் இதுவரை உறுத்திப்படுத்தப்படவில்லை.

டிலக்சனா சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ரிக்ரொக் கில் பிரபல்யம் பெற்றிருந்தவர் எனத் தெரியவருகின்றது. மேலும் இவருக்கு நட்பாக இருந்த ஒருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. டிலக்சனாவின் நட்பு தொடர்பாக பிரச்சினைகள் வீட்டில் இருந்ததாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த காலை டிலக்சனாவின் சகோதரரும் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரே கொலை இடம்பெற்றுள்ளது. கொலையாளி(கள்) பலவந்தமாக வீட்டில் நுழையவில்லை கதவு திறக்கப்பட்டே உள்நுழைந்துள்ளனர். இவை எதுவுமே இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அக்குடும்பத்தைச் சேர்ந்த கணவரும் தந்தையுமான இராசதுரையும் மகனும் சகோதரருமானவரும் மருத்துவசேவையினரால் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.