2021
2021
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள். இது தொடர்பில் தமிழக அரசு காத்திரமான எந்த நகர்வுகளையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறித்த முகாமிலுள்ள 15க்கும் அதிகமான இலங்கைத்தமிழர்கள் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர். இது தொடர்பில் இலங்கை தமிழ்கட்சி தலைவர்கள் எவருமே வாய் இது வரை பெரிதாக திறக்கவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுநாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன்.
தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் பெரும் மனவேதனையைத் தருகிறது.
ஈழத்தமிழர் எனும் ஒற்றைக்காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் ஆளும் அரசதிகாரத்தின் தொடர் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.
திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் 78 பேரும் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 10 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் அவர்களை அரசு கண்டுகொள்ள மறுக்கவே வேறு வழியற்ற நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் மனவலியைத் தருகிறது.
தமிழ்நாட்டிலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத சூழலில் நிறுத்தியிருக்கும் அதிகாரமற்ற கையறு நிலையும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளி, ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.
ஈழச்சொந்தங்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, வாழவே விடாது நாளும் துன்புறுத்தி அல்லலுக்கு உள்ளாக்கும் இத்தகைய கொடும் முகாம்களை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்கூறுவது கேலிக்கூத்தானது.
சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் இவ்வதைக்கூடங்கள் ஈழச்சொந்தங்களின் அடிப்படை சனநாயக உரிமைகளையே முற்றாக மறுத்து, தினமும் அவர்களைத் துயருக்குள் ஆழ்த்தி பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.
ஈழத்தில் போர் முடிவுற்றப் பிறகு, சிங்களப்பேரினவாத அரசால் வன்னியிலுள்ள முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்ட இழிநிலையே, தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் தொடருமென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? என எழும் கேள்விக்கு என்ன பதிலுண்டு?
இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக, சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை மூடக்கோரிப் பலகட்டமாகப் போராடியும், கருத்துப்பரப்புரை செய்தும், தேர்தல் மேடைகளில் கோரிக்கையாக வைத்தும் அதனை ஆளுகிற அரசுகள் செய்ய மறுத்து வருவது தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணிச் செயல்படும் திராவிடக்கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையையே உணர்த்துகிறது.
தமிழகத்திற்குள் வாழ தஞ்சம் கேட்டு வரும் ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்றைக்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப்பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க மறுத்து இரட்டைவேடமிடுகிறது. ஆகவே, இனிமேலாவது இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூடி, ஈழச்சொந்தங்களுக்கான நலவாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும், பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் உடல் நலிவுற்றிருக்கும் ஈழச்சொந்தங்களின் உயிரைக்காத்து, உடல்நலம் தேற்ற தகுந்த மருத்துவச்சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்யப்படும் என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசு வீழ்த்தப்பட்டு அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அங்கு விரைவில் என்னமாதிரியான அரசு அமைக்கப்படும் என்பதைத் தெரிவிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நிச்சயமாக ஜனநாயக ஆட்சி இருக்காது ஷாரியத் சட்டத்தின்படியே ஆட்சி இருக்கும் என்பதை மட்டும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“ஆப்கன் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரித்தானியா தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் புக மக்கள் காட்டிய பதற்றம் சற்றே தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்புகிறது. இதுவரை ஆப்கனில் இருந்து 1615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள், 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கன் மக்கள்” என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.
பாரிஸில் ஓகஸ்ட் 11 இல் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு உறவுக்கார ஆண் தான் இக்கொலையைப் புரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அமைச்சர் ரிச்சட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் குழந்தை ஷாலினி ஜூட் குமார் யூலை 3இல் தீக்குழித்து தற்கொலைக்கு முயற்சித்து யூலை 15இல் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தார். கனடாவில் சுனில் சுமித்திரா வீட்டில் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் ஏப்ரல் பிற்பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பில் மே 1, சுமித்திராவின் சினேகிதி தனோ பரதன் விரிவான பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். மார்ச் 03 வட்டக்கட்சியில் தாய் ஒருத்தி மூன்று குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். தனது கணவர் குடித்துவிட்டு செய்கின்ற கொடுமைகள் தாங்க முடியாமையினாலேயே அவர் இந்த விபரீத முடிவுக்கு வந்தார். இச்சம்பவத்தில் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இவை கடந்த சில மாதங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள். அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய சம்பவங்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் 2015 ஓகஸ்ட் 09 இல் சஜிந்திகாவைக் காதலித்து அவரைத் திருமணம் செய்வதாகவும் கூறி ஏமாற்றி அவரைத் தாயுமாக்கி சஜிந்திகாவையும் ஆறு மாதக் குழந்தையையும் அடித்துக்கொலை செய்து எரித்த சம்பவம் இவ்வாண்டு ஓகஸ்ட் 07 இல் அம்பலமாகியது. குற்றவாளியான மனோராஜ் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டார்.
இவை நாளாந்தம் உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களுக்கு நிகழும் அநீதிகளில் ஒரு சில மட்டுமே. ஆனால் இந்த அநீதிகளுக்கு எதிராக தமிழ் புலம்பெயர் சூழலில் வாழும் பெண்ணிய முற்போக்கு போராளிகள் குரல்கொடுத்தது என் காதுகளுக்கு எட்டவில்லை. மேற்படி செய்திகள் தேசம்நெற் மற்றும் எனது முகநூலிகளில் பதிவாகி உள்ளது.
லண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக வாழும் நான் குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சவுத்தோல் சிஸ்ரர்ஸ்’, ‘புரோக்கின் அரோ’ போன்ற அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் கிடைப்பதற்கு வழிசெய்துள்ளேன். தொடர்ச்சியாக குடும்ப வன்முறை பற்றிய செய்திகளுக்கு எனது ஊடகங்களில் முன்னுரிமை அளித்து பிரசுரித்துள்ளேன்.
பெண்ணியம் பேசும் முற்போக்கு கோஸ்டியொன்று பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்காக தற்போது முகநூலில் நியாயத்திற்காகப் போராடுவதாக ஒரு அறிக்கைவிட்டுள்ளது. பல்வேறுவ கையிலும் தினம் தினம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்களே. அதே சமயம் பெண்ணிய போர்வை போர்த்திக்கொண்டு பிலிம் காட்டுபவர்களும் தற்போது முகநூலில் பெருகி உள்ளனர். இவர்கள் பெண்கள் மீது நடத்தப்படுகின்ற மோசமான மேற்குறிப்பிட்ட வன்முறைகளை ஓரம்கட்டிவிட்டு, தங்களுடைய சொந்த நலன்களை அடைவதற்கு பெண்ணிய போர்வைக்குள் ஒழிந்துகொள்கின்றனர். இவர்களின் போர்வைகளை களைந்து அவர்களை அடையாளப்படுத்துவது உண்மையான பெண் ஒடுக்குமறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு செயற்பாடுகளுக்கு அவசியமானது. இதன் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கும் பெண்களும் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கவும் போராடவும் முடியும்.
ஆனால் இந்த முற்போக்கு பெண்ணிய போராளிகள் தற்போது கையில் எடுத்திருக்கும் விடயம் மிக அபத்தமானது. தங்களுடைய சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இவர்களுடன் சம்பந்தப்படாத இரு பெண்களைக் கூட அவர்கள் பந்தாட முற்பட்டுள்ளமை அவர்களது முகத்திரையை அவர்களையே அம்பலப்படுத்த வைத்துள்ளது. நான் இந்தப் பதிவை மிகவும் கனத்த உணர்வோடு எழுதுகின்றேன். ‘முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிராக அணி திரள்வோம்’ என்ற இந்த அறிக்கையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட முக்கியமானவர்களை நான் நன்கு அறிவேன். என்னைப் பொறுத்தவரை உண்மைக்கு மட்டுமே முதலிடம். ஏனையவை எல்லாம் இரண்டாம் பட்சம். அது நட்பாக, உறவாக, தோழமையாக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. கடந்த காலங்களிலும் இதையே செய்துள்ளேன்.
Sri Lanka Democracy Foorum SLDF – இலங்கை ஜனநாயக முன்னணி என்ற பெயரில் செயற்பட்ட சின்னத்துரை ராஜேஸ்குமார் – ராகவன் ரிபிசி வானொலி உடைப்பில் சம்பந்தப்பட்ட விடயத்தை அம்பலப்படுத்தியதன் மூலம் அவருக்கும் எனக்கும் இருந்த நட்பு முடிவுக்கு வந்தது. ‘ராகவன் அண்ணை’ என்றே நான் அவரை எப்போதும் அழைத்திருக்கிறேன். ஒரு ஊடகவியலாளனாக மௌனம் காப்பது மிக ஆபத்தானது. சட்ட வல்லுனரான அவர் சட்ட நடவடிக்கையில் இறங்குவார் என்றே எதிர்பார்த்திருந்தேன். மாறாக அவர் கையெழுத்து வேட்டையில் இறங்கி தேசம்நெற்க்கு மூடு விழாச் செய்ய முற்பட்டதெல்லாம் வரலாறு. நட்புக்காக, குடும்ப உறவுக்காக, சட்ட உதவிகளுக்கு நம்பி இருந்ததால் என்று பல்வேறு காரணங்களுக்காக ‘முற்போக்கு வாதிகள்’ என்று சொல்லிக்கொண்டவர்கள் சிலர் கையெழுத்திட்டனர். இன்னும் சிலர் உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே பெயரைக் கொடுத்தனர். இப்படி இந்தக் கையெழுத்து வேட்டையில் பெயரைக் கொடுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தது.
இப்போது வந்துள்ள சுரண்டல்களுக்கு எதிராக அணிதிரண்ட கோஸ்டியலுக்கும் இப்படிக் காரணங்கள் இருக்கும். சிலர் தம்பதி சமேதர்களாகவும் பேரைக் கொடுத்து இருக்கிறார்கள். கட்டியாச்சு உதோட இத்தினை வருசமாய் குப்பை கொட்டுறம். இனி என்ன ஒரு கையெழுத்தையும் போடுவம் என்று பேரைக் கொடுத்தவையும் இருப்பினம். அதனால் உமா ஷனிக்கா வின் முகநூல் போராட்டத்தின் பின்னணி பற்றி ஒரு பதிவு அவசியமாகின்றது.
அதற்கு முன் இப்பதிவு உண்மையில் ‘முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிரான…’ பதிவு அல்ல என்பதை நீங்கள் மேலுள்ள குறிப்பின் மூலமாக அறிந்திருப்பீர்கள். சிலவேளை அவர்கள் தங்கள் செயற்பாடுகளை தாங்களே சுயவிமர்சனம் செய்யும் வகையில் தலைப்பிட்டு இருந்தால் அத்தலைப்பு மிகச் சரியானது.
இந்த அறிக்கை தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் யூலை 17இல் திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையே அல்ல. இந்த அறிக்கையின் பின்னுள்ள உண்மை நோக்கத்திற்கும் அவ்வுறுப்பினரின்ரின் முன்னாள் காதலிக்கும் இந்நாள் மனைவிக்கும் சம்பந்தம் கிடையாது. அவ்வுறுப்பினரும் அவருடன் சம்பந்தப்பட்ட உறவும் ஒரு weakest link என்பதால் அவர்களுடைய strategyக்கு அது வாய்ப்பாக அமைந்தது அவ்வளவுதான். தன்னையும் தாங்கள் சார்ந்தவர்களது பெயர்களையும் அடிபடவிடாமல் பாதுகாத்துக்கொண்டு எவ்வித சம்பந்தமும் இல்லாத தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரையும் அவர் தொடர்புபட்ட உறவுகளையும் வைத்து இப்பந்தாடல் இடம்பெற்றிருக்கின்றது.
தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் நீண்டகாலமாக ஒரு பெண்ணை காதலித்தார். இது உலகறிந்த உண்மை. அந்த உறவைத் தொடர முடியவில்லை. அதனால் அவ்வுறவு முறிந்தது. அதுவும் உலகறிந்த உண்மை. அதற்குப் பின் தனக்கு பிடித்த ஒருவரைச் சந்தித்தார். இரு மனம் இணைந்தது. யூலை 17இல் மணவாழ்க்கையில் அவர்கள் இணைந்தனர். இதுவும் உலகறிந்த உண்மை. அதற்கு மேல் 20 பெண்ணிய போராளிகள் கையெழுத்திட்ட அறிகையில் உள்ள சோடிப்புகள் விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பு சட்டத்தரணிகளும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை உசுப்பிவிட்டு பணம் கறக்கின்ற வேலை. இந்த விவாகரத்துச் சட்டத்தரணிகள் (பெரும்பாலானவர்கள்) போன்ற கேடிகளை வேறெந்த தொழில்துறையிலும் காண முடியாது. அதே போல் தான் இந்த அறிக்கையின் பிதாமகர்கள்.
இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் தங்களைச் சுற்றி நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி அறிந்திருந்தனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தவர்களுடன் நெருங்கிய அரசியல் உறவையும் கொண்டிருந்தனர்.
இலங்கையில் இருந்து கையெழுத்திட்ட மோகனதர்ஷனியின் கட்சியுடன் சம்பந்தப்பட்ட ஒருவரின் மகன் திருமணம் செய்த தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில், தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்தவர். அப்பெண்ணின் சொத்துக்களை எல்லாம் சுரண்டிக் கொண்டவர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து பெற்றுச் செல்ல அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்கின்றான். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.
இவ்வாண்டு ஏப்ரல் சுமித்திரா சுனில் கணவனின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். தீப்பொறி குழவினருக்கு – ரகுமான் ஜான் உட்பட இந்த விடயம் தெரியாதா? சுனில், தீப்பொறிக்கு குழுவின் உறுப்பினர்களுக்கு மிக வேண்டப்பட்டவர். இன்றும் தொடர்பில் உள்ளனர். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.
தீப்பொறிக் குழவினர் சம்பந்தப்பட்ட, கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பற்றி சம்பந்தப்பட்டவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர். அவ்வாறானதொரு சம்பவமே இடம்பெறவில்லை என்று வாதிட்டார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தான் சம்பந்தப்படவில்லை என்று ஒருவர் எழுதி வாங்கியுள்ளார். ‘Men Can Stop Rape’ என்று முகநூல் முகப்பில் பதிவிடும் உமா செனிக்கா இந்த விடயத்திற்கும் ஒரு கையெழுத்துப் போராட்டம் நடத்தவில்லை. இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.
இதற்கு மட்டுமா மௌனமாக இருந்தனர். 13 வயது மலையகச் சிறுமியை பல தடவை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பொங்கு தமிழ் கணேசலிங்கம் இன்றும் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராக உள்ளார். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர். மேலதிக தகவல்கள் தேவைப்படின் இராஜேஸ் பாலா வை கேளுங்கள். சிலவேளை அவர் உங்கள் ‘முற்போக்கு’ வரைவிலக்கணத்தினுள் வரமாட்டார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வரும் விரிவுரையாளர்கள் இளங்குமரன், விசாகரூபன் பற்றி இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர். இது தொடர்பாக மேலதிக விபரங்கள் எனது ‘யாழ் பல்கலைக்காகழகம் ஒரு பார்வை’ என்ற நூலில் உள்ளது. இது பற்றி மேலதிக விபரங்கள் தேவையானால் அல்லது தமிழ் சமூகத்தில் உள்ள ‘womanizers’ பற்றி மேலதிக விபரங்கள் தேவையானள் அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச புலனாய்வுப் புயல் அருண் அம்பலவாணரிடம் கேளுங்கள் முழுவிபரமும் finger tipsஇல் வைத்திருப்பார். மேலும் நீங்கள் moral policing செய்வதாக இருந்தால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு பற்றி அருண் அம்பலவாணரிடம் கேளுங்கள். இதில் கையெழுத்திட்டவர்களுடைய விபரங்களும் கூட அவரிடம் இருக்க வாய்ப்புள்ளது.
மட்டக்களப்பு ஜெயில் உடைக்கும் போது கூட தம்பி பிரபாகரனின் ஆட்கள் வந்தால் தான் வெளியில வருவன் என்று அடம்பிடித்த நிர்மலா ராஜசிங்கம், சொலிடாரிட்டி உறுப்பினரை ஒரு பிடி பிடித்திருக்கின்றா. சொலிடாரிட்டி உறுப்பினர் அயோக்கியனாம். நிர்மலா ராஜசிங்கத்தின் அரசியல் அயோக்கியத்தனங்களை ‘பூரணி பெண்கள் அமைப்பு பற்றிய அவணப்படுத்தலில் இருந்து …’ இன்னொரு சந்தர்ப்பத்தில் பட்டியலிடுவோம்.
இதைவிடவும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த கருணா, பிள்ளையான் குழுவினர் பல்வேறு பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு இருந்தமை சர்வதேச உரிமை நிறுவனங்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.
இப்படியெல்லாம் இருக்கும் போது எவ்வித பாலியல் சுரண்டலும் அற்ற தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரின் உறவு முறிவு மற்றும் புதிய உறவு விடயத்தில் இந்த முற்போக்கு பெண்ணிய வாதிகள் இவ்வளவு முக்க என்ன காரணம்? “பத்து பிள்ளைகள் பெற்றவளுக்கு ஒற்றைப் பிள்ளை பெற்றவள் முக்கிக்காட்டிய கதை போல்” என்பர். இப்பழமொழி ஆணாதிக்கப் பழமொழியா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் தாங்களும் பெண்ணிய வாதிகள் என்று காட்ட முக்குவது நகைச்சுவையாகவே உள்ளது.
இந்த அறிக்கையின் பின்னணி:
என் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் போராட்டங்களின் பின்னரே இந்தப் பின்னியைப் பதிவு செய்கின்றேன். இதில் மீண்டும் உண்மைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்ற முடிவுடனேயே இப்பதிவு. இப்பதிவைத் தொடர்ந்து என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சேறடிப்புகள் இடம்பெறும் என்பதை மிகத் தெளிவாக அறிவேன். இது எதுவும் எனக்கு புதிதும் அல்ல. என் எழுத்துக்களால் அம்பலப்படுத்தப்பட்ட ஈழபதீஸ்வரர் ஆலய தர்மகர்த்தா ஆர் ஜெயதேவன், எஸ்எல்டிஎவ் சட்ட வல்லுனர் ராகவன், இந்திய உளவுநிறுவன முகவர் வெற்றிச்செல்வன், ரில்கோ புரப்பட்டி சேர்விஸ் உரிமையாளர் திலகராஜா, தீபம் தொலைக்காட்சி உரிமையாளர் பத்மநாதன் என இந்தப் பட்டியல் மிக நீளமானது. எனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் குறைவில்லை. த ஜெயபாலன் ஒரு பொய்யன், முட்டாள், பொம்பிளைப் பொறுக்கி, துரோகி, கைக்கூலி, அரசாங்கத்தின் ஏஜென்ட், காட்டிக் கொடுத்தவன், ஏமாற்றுக் காரன், ஆணாதிக்கவாதி, பூஸ்சுவா என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் பொலியப்படும். ஆனால் சேற்றுக்குள் இறங்காமல் நாற்றுநட முடியுமா? ஒரு ஊடகவியலாளனாக களைகளைப் பிடுங்கி நாற்று நட வேண்டியது என்னுடைய பொறுப்பு.
பாவம் அந்த தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர். அவருடைய முன்னாள் காதலி. இவர்களைவிடவும் பாவம் தற்போது அவரை மணந்து கொண்டவர். லேட்டஸ்ட் முற்போக்கு மொழியில் சொல்வதானால் ‘இணையர்’. நாங்கள் செயலில் தெளிவில்லாவிட்டாலும் மொழியில் தெளிவாய் இருப்பம் இல்ல.
பாடசாலைகளில் bullyingஇல் பாதிக்கப்படுவது strong ஆனவர்கள் அல்ல. Weak ஆனவர்கள் தானே. இந்த தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் இந்த ‘முற்போக்கு’ உலகிற்கு புதியவர். ஒரு புலி ஆதரவாளராக இருந்தவர். அவருடைய முறிந்த உறவு இலங்கையில். புதிய உறவும் weakest link. இவர்களை முற்போக்கு பெண்ணிய போராளிகள் தங்கள் strategical taget ஆக்கியுள்ளனர். இதற்கு அவ்வுறுப்பினரின் இணையின் பெயரைக் குறிப்பிட்டு ‘இப்ப இவரை யார் வைத்திருக்கிறார்கள்?’ என்று fake ID இல் வந்து comment அடிக்கிறார் ஒருவர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு தான் இந்த முற்போக்குப் புயல்கள் இரு அப்பாவிப் பெண்களின் தலையை பந்தாடுகின்றனர்.
மீண்டும் விடயத்திற்கு வருவோம். இதில் கையெழுத்திட்டுள்ள ராகுல் சந்திரா வேறு யாருமல்ல. ரகுமான் ஜான். இந்த அறிக்கைக்கும் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளது. சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாவிப் பெண்களின் தலைகள் உருட்டப்படுகிறது. இதனை வெறும் தனிநபர் பிரச்சினையாகவும் பார்த்துவிட முடியாது. ஏனெனில் சம்மந்தப்பட்டவர்கள் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் இயங்கு சக்தியாகவும் இருப்பதால் அறிக்கையின் குற்றச்சாட்டு தமிழ் சொலிடாரிட்டிக்கு எதிராகவும் வைக்கப்பட்டு இருப்பதால் இதனை விரிந்த தளத்தில் நோக்க வேண்டியுள்ளது.
அண்மைக்காலம் வரை ரகுமான் ஜானில் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவர் என்னுடைய நண்பனாகவும் ஏதோ நான் இன்று எழுதுகின்ற இந்த கொஞ்ச அரசியல் விளக்கம் கூட அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டது தான். எனக்கு அரசியல் பூஜ்ஜியம் என்று நீங்கள் முணுமுணுப்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. ஆனால் உண்மையை மறைப்பதில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. ரகுமான் ஜான் திரைமறைவில் இருந்து இதனைச் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இன்னொருவர் மீது குற்றச்சாட்டை பொது வெளியில் வைக்கின்ற போது அக்குற்றச்சாட்டு உண்மையானால் அதனை உங்களுடைய சொந்த அடையாளங்களுடன் வைக்க வேண்டும். இல்லையேல் ‘கம்’ என்று இருக்க வேண்டும்.
இப்பொழுது நீங்கள் பந்தாடுகின்ற இப்பெண்கள், இன்றோ இன்னுமொரு நாளோ மனநிலை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் பொறுப்புடையவர்கள். தீப்பொறி உறுப்பினரொருவரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாகச் சொல்லப்பட்ட பெண், பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிநாடு வந்து திருமணமாகி குழந்தைகளும் பிறந்த பின்னரே மனப்பிறள்வு ஏற்பட்டு மரணமானார். மனநலப் பாதிப்பு என்பது கொரோனா போல் தொற்று ஏற்பட்டு பத்து நாட்களிலோ இரு வாரங்களிலே வந்து ஆட்டிப்படைப்பதில்லை. அது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் விளைவாக எப்போதும் வரலாம். எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உடைந்துபோகும் மனநிலையில் இருக்கும் இரு vulnerable பெண்கள் அவர்களை அறியாமலேயே ஆட்டத்திற்குள் திட்டமிட்டு இழுத்துவிடப்பட்டு உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டால் அந்தப் பழியயையும் பாவம் அவ்வுறுப்பினரின் தலையில் கட்டலாம் என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.
ஊமா செனிகாவின் முகநூலில் நிரோஜன் ஞானசீலன் சுட்டிக்காட்டியது போல் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றம்சாட்டியவர்களுக்கும் இடையே நீண்ட கால பகையும் உறவு இருந்து வந்தது என்பது உண்மையே. குற்றச்சாட்டப்பட்டவர் பல்வேறு அமைப்புகளில் சம்பந்தப்பட்டவராக இருந்தாலும் தமிழ் சொலிடாரிட்டியே தாக்குதல் இலக்காக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் குற்றத்தை முன்வைத்தவர்களுக்கு அவ்வமைப்பு சார்ந்தவர்களுடன் இருந்த தனிப்பட்ட பகைமையே. இதற்கும் பெண்ணியத்திற்கும் முடிச்சுப் போட்டது முளங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போட்டதைப் போன்றது.
தமிழ் சொலிடாரிட்டி அரசியல் பற்றி நான் அதிகம் அக்கறைகொள்வதில்லை. ஏதோ நாலு நல்லது செய்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு அரசியலே இல்லை என்பது அவர்களுடைய கணிப்பு. நான் தத்துவஞானி கோக்கிரட்டீஸ் போல ‘ எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியும்’.
இதற்குள் கொரோனா வந்து லொக்டவுன் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்கிவிட்டது உங்களுக்கே தெரியும். மன உளைச்சல் கூடி பலரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர். அதற்குள் அவ்வுறுப்பினர் பொது அழைப்பு ஒன்றை விடுத்துவிட்டு தனது திருமணத்தை செய்துவிட்டார். இவர் ஐயரைக் கூப்பிடாவிட்டாலும் இது கனன்றுகொண்டு இருந்த ஓமத்தில் ஐயர் நெய்யூற்றியது போல் ஆக்கிவிட்டது. நாள் நட்சத்திரம் பாராமல் ஐயர் இல்லாமல் செய்த திருமணம் எல்லோ அது தான் ஏழரை ஆட்டுது. பாவம் அவர்.
முற்போக்கு ஜீவன்களே உங்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் யாராவது எதையாவது நீட்டினால் வாசித்து தீர விசாரித்து உங்கள் பெயரைக் கொடுங்கள். தேவையில்லாமல் உங்கள் பெயரைக்கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் இணையர்கள் பெயரைக் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீங்களும் உடன்கட்டை ஏறாதீர்கள்.
எவ்வறிக்கை யார் யாரிடம் இருந்து வரினும்
அவ்வறிக்கையின் மெய்ப்பொருள் கண்டு கையெழுத்திடுக.
ஆப்கானிஸ்தான் மக்களுக்காக அண்டை நாடுகள் தங்களின் எல்லையைத் திறந்து வைக்குமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் UNHCR கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுக்குள் வந்தபிறகு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த திங்கள் ஆப்கன் விமான நிலையத்தில் மக்கள் அலைகடலென திரண்டதும் அங்கிருந்து விமானத்தில் தொற்றியவாறு உயிர்பிழைக்க முயற்சித்து தோற்றதும் உலக நாடுகளை உறையவைத்துள்ளது.
அங்கிருந்து இன்னமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முற்படுகின்றனர். ஆனால், விமானநிலையம் செல்ல முடியாது தலிபான்கள் மக்களை விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக தங்களின் எல்லைகளைத் திறந்துவைக்க வேண்டுமென்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபியா மன்டூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “ஆப்கானிஸ்தான் மக்களில் பெரிம்பாலோனார் வழக்கமான பாதைகள் வழியாக நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இன்று அங்கு ஆபத்தான சூழலில் இருப்பவர்களுக்கு முறையாக வெளியேற வாய்ப்பில்லாமல் இருக்கிறது. ஆகையால் நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கும் பதற்றமானன சூழலைக் கருத்தில் கொண்டு அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக எல்லைகளைத் திறந்து வைக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 9000 பேரை அமெரிக்கா மீட்டுள்ளது. இவர்கள் அனைவரும் காபூல் விமானநிலையம் வாயிலாக வெளியேறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தங்களின் ஆட்சி 1996ல் இருந்ததுபோல் இருக்காது. இஸ்லாமிய சட்டத்துக்கு இணங்க பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறினர் தலிபான்கள். ஆனால், அங்கு நிலைமை மாறவில்லை எனக் கூறுகிறது ஐ.நா.,வின் ஆராய்ச்சிக் குழு. தலிபான்கள் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா சார்பாக நார்வேஜியன் சென்டர் ஃபார் குளோபல் அனாலிஸிஸ் இந்த ஆவணத்தை எழுதியுள்ளது.
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 02) (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
தேசம்: தோழர் நீங்கள் உங்கள் கிராமம் பற்றிச் சொல்லவில்லை. உங்களின் கிராமத்தின் சூழலை பற்றி சொல்லுங்கள். அதன் சனத்தொகை போன்ற விபரங்களைக் கூறுங்கள்.
அசோக்: என் களுதாவளைக் கிராமம் இயற்கைச் சூழலும் பசுமைகளையும் குளங்களையும் விவசாய தொழிலையும் கொண்டது. சனத்தொகை கூடிய கிராமங்களில் ஒன்று. வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய கிராமம்.
வெற்றிலை செய்கைக்கு பெயர் போனது. ஒரு கிராமியப்பாட்டு உண்டு ‘களுதாவளை வெற்றிலைக்கும் காலிப் பாக்குக்கும் சிவந்ததுகா உன் உதடு’ என்று.
தேசம்: வழிபாட்டு முறைகள்,..
அசோக்: வழிபாட்டு முறை. பெருங்கோயில் என்றால் களுதாவளை விநாயகர் ஆலயம். முருகன் கோயில் இருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுகள் உண்டு. எழுவான்கரை என்றபடியால் ஒரு பக்கம் வங்காள விரிகுடா கடல். எமது கிராமம் கடலைச் சார்ந்து இருக்கும். கிராமத்தில் மூன்று குளங்கள், நீர்த்தேக்கங்கள் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விவசாய காணிகள் இருக்கிறது. இங்கே நெற் பயிர்ச்செய்கையே மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கு அங்கால மட்டக்களப்பு வாவி. குளங்களைச் சுற்றி மருத மரங்கள் இருக்கின்றன. இயற்கையை தன்னகத்தே கொண்ட ஒரு அழகான கிராமம். கடல் கரையை அண்டிய பகுதியில் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் காடுகளும் பனை மரங்களும் இருக்கும். அதற்கு அங்கால எமது கிராமம். இப்போது அக் காடுகள் அழிக்கப்பட்டு விவசாயத்தை மேற்கொள்கிறார்கள். அங்கு இப்போது வெங்காயம், மிளகாய் போன்ற சிறு பயிர் செய்கையை மேற்கொள்கிறார்கள். விவசாயம் செய்வதற்கான இடமாக அது மாறிவிட்டது. நாட்டுக் கூத்தெல்லாம் என் கிராமத்தில் நடக்கும். இப்போது அருகிவிட்டது.
தேசம்: நீங்கள் சிறுபிள்ளையாக இருந்து வளர்ந்து வரும்போது உங்கள் அனுபவம் என்ன? உங்களின் ஆறு எழு வயதில் நடந்த சில சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகின்றேன். அது தொடர்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
அசோக்: கிராமத்து சிறுவர்களுக்குரிய விளையாட்டுக்கள் அனைத்தையும் நான் விளையாடி இருக்கிறன். நிறைய சுதந்திரம். சிறு வயதில் வெறும் மேலோடு மேல் சட்டை இன்றியே திரிவேன். எங்கள் ஊர் குளங்களில் நீச்சல் அடிக்கிறது. கிட்டிப்புல் அடிப்பது கெற்றப்போல் அடிப்பது. எறி பந்து விளையாடுவது. கோயில் திருவிழாக்கள் என்றால் ஒரே கொண்டாட்டம்தான். சின்னவேட்டி கட்டி பக்திமானாக மாறிவிடுவேன். திருவெண்பாக்காலம் எனக்கு சந்தோசமான காலம். அம்மா கோயிலுக்கு வேறு எங்கு போனாலும் என்னை கூட்டிப் போவா. எனக்கு ஞாபகம் தெரிந்தவரை ஏழு எட்டு வயதுவரை காதில கடுக்கன் தோடு போட்டிருந்தேன். நிறைய ஞாபகங்கள் இருக்கு. நீண்டதாய் போய்விடும்.
தேசம்: உங்கள் கிராமத்திற்கே உரிய விளையாட்டு ஒன்றைப்பற்றி சொல்லியிருந்தீர்கள்.
அசோக்: ஆம் அதனை கொம்புமுறி விளையாட்டு என அழைப்பார்கள். இது கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையது. சிறுவர்களுக்குரியதல்ல. குடிகளுக்கு இடையிலான போட்டி விளையாட்டு. ஒரு காலத்தில எங்க கிராமத்தில பிரபலமாக விளையாடப்பட்டது. பெரிய விழாவாக சடங்காக கொண்டாடுவாங்க. கொம்புச்சந்தி என்ற இடமே உண்டு எங்க ஊரில.
தேசம்: உங்களின் இளமைக்கால கல்வியைப் பற்றி கூறுங்கள்.
அசோக்: அப்பாவின் பாடசாலையான இராமகிருஸ்ணன மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். நான் கொஞ்சம் சுட்டித்தனம் கொண்டவனாக இருந்தபடியால் ஆரம்பக்காலத்தில் கல்வியில் பெரிய நாட்டம் இருக்கவில்லை. அப்பாவும் தலைமை ஆசிரியராக இருந்தபடியால் எனக்கு அழுத்தங்கள் கூடுதலாக இருக்கவில்லை. இரண்டாம் வகுப்பிற்கு பிறகே எழுத வாசிக்க தொடங்கினேன்.
தேசம்: இன்றைக்கு இருக்கும் ஒரு அரசியல் சூழல் அன்றைக்கு ஏற்பட்ட தாக்கத்தினால் உண்டானதா என்று சொல்ல ஏதாவது ஒரு விடயம் உண்டா?
அசோக்: தமிழரசு கட்சியுடன் அப்பாவுக்கு இருந்த அரசியல் சூழல்தான். நான் நிறைய வாசிப்பேன். எனது வீடு ஒரு நூலகம். நிறைய நூல்கள் இருந்தன. எனது அண்ணாமார்களும் அக்காக்களும் வாசிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். ஒரு அண்ணா இருந்தவர் தியாகராஜா என்று. பெரியாரின் கொள்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அண்ணாவும் அவர் நண்பர்களும் அந்தக்காலத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றை எழுதி கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டாங்க. பெரியார் தொடர்புடைய எல்லா புத்தகங்களும் இந்தியாவில் இருந்து வரும். இந்தியாவில் இருந்து வரும் நிறைய சஞ்சிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும். அப்பா பெரியார் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர். அப்பா வித்தியாசமானவர். எல்லாவற்றையும் வாசிப்பார்.
நல்லதொரு உதாரணம் அப்பாவின்ர பாடசாலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமையாற்றினார். அவர் இடதுசாரிக்கட்சியில் இருந்தார். அவர் தேசாபிமானி என்ற பத்திரிகையை கொண்டு விற்பார். எங்கள் பாடசாலையிலேயே அதனை கொண்டு வந்து விற்பனை செய்வார். அதனையும் அப்பா வாசிப்பார்.
தேசம்: அந்த நேரம் உங்களின் பொழுது போக்குகள் எவை? வீட்டில் நிறையபேர் இருந்தாலும் வெளியில் போய் விளையாடுவதற்கான சூழல் மற்றும் நட்பு வட்டங்கள் எவ்வாறு இருந்தது?
அசோக்: நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே எங்கள் கிராமத்தில் படித்தேன். பின்னர் சிவானந்தா வித்தியாலயத்தில் படித்தேன். சிவானந்தா பாடசாலை மிகவும் கட்டுப்பாடான பாடசாலை. அங்கு நாங்க நினைத்த மாதிரி பெரிசா விளையாட முடியாது. லீவுநாட்களில் வீட்டுக்கு வருவேன். ஓரே விளையாட்டுத்தான். பொழுதுபோக்காக முத்திரை சேகரிக்கும் பழக்கம் இருந்தது.
தேசம்: உங்கள் ஊரில் இருந்து அப்பாடசாலை எவ்வளவு தூரம்?
அசோக்: ஊரில் இருந்து 16, 17 கிலோ மீற்றர் இருக்கும். விடுதியில் இருந்தே படித்தேன். இங்கு ஒருவருடம் கல்வி கற்றேன். விடுதியிலும் பாடசாலையிலும் மிகவும் கட்டுபாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாடு எனக்கு கஸ்டமாகஇருந்தது. பிறகு வீட்டிலிருந்து போய் வந்தேன்.
இப்பாடசாலையில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக இருந்தது. படிப்பும் ஒழுங்குகளும் முக்கியம் . ஒரு வருடத்தின் பின் அந்தப் பாடசாலைக்குச் செல்ல முடியாதெனத் தெரிவித்துவிட்டேன். ஆறாம் வகுப்பு மட்டும்தான் சிவானந்தா பாடசாலையில் கற்றேன். பின்னர் வந்தாறு மூலை மத்தியக் கல்லூரியில் கற்றேன். அந்தப் பாடசாலை எங்க ஊரிலிருந்து இருந்து 30 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்.அங்கேயும் விடுதியில் இருந்தே கல்வி கற்றேன்.
தேசம்: உங்கள் பகுதியில் அப்போது உயர்தரப் பாடசாலைகள் இல்லையா?
அசோக்: பாடசாலைகள் இருந்தன. என்றாலும் அப்பா விபுலானந்தரின் மேல் இருந்த அபிமானத்தில் சிவானந்தா வித்தியாலயத்தில் அந்தப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு கட்டுப்பாடு இறுக்கம் எனக்கு பிடிக்கவில்லை. அதற்குப்பிறகுதான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் சேர்ந்தேன். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு வருவேன். எங்கள் ஊரில் கிராம சபையால் உருவாக்கப்பட்ட நூலகம் ஒன்று இருந்தது. அதில் இளந்தளிர் வாசகர் வட்டத்தை நா ங்க உருவாக்கினோம்.
தேசம்: உங்களுக்கு எத்தனை வயது?
அசோக்: அப்போது எனக்கு சுமார் 15, 16 வயதிருக்கும். அந்த வாசகர் வட்டத்தின் ஊடாக சிறியசிறிய கருத்தரங்குகள் நடத்துவோம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கியமைக்கு காரணம் நாங்கள் விரும்பிய புத்தகங்களை வாசகர் வட்டத்தின் ஊடாக சிபாரிசு செய்யலாம். அதனூடாக நிறைய எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. பாரதி நூற்றாண்டு விழாவை முதல் முதலாக இலங்கையில் செய்தவர்கள் நாங்கள் தான்.
இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாக்க காரணமாக இருந்தவர் வெல்லவூர் கோபால் அண்ணர். அதற்கு போஷகராக இருந்தவர். அவர்தான் எங்கள் ஆலோசகர். வழிகாட்டி. மிக அருமையானவர். இன்று குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளராக இலங்கையில் இருக்கிறார். அவர் மட்டக்களப்பு வரலாறு தொடர்பாக பல ஆய்வுகளை செய்துள்ளார். அவர் எங்கட கிராம ஆட்சி சபையின் காரியாலயத்தில பிரதம லிகிதராக இருந்தார். அவர் ஒரு கவிஞராக, எழுத்தாளராக இருந்தபடியால் அவரின் ஊக்கத்தினால இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாகியது.
தேசம்: அந்தக் காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
அசோக்: அவர்களை ஞாபகம் இருக்கிறது. பிற்காலத்தில் அவர்களில் பலர் என்னோடு இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.
தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டத்துடன் பயணித்தவர்களுடனான ஞாபகங்கள்?
அசோக்: ரவி, பேரின்பம், சீவரெத்தினம். இப்போ கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஜெயவரதன். செல்வரெத்தினம் காலமாகி விட்டார். ஜெயரெத்தினம். திருநா. மனோ- தவராஜா, பணிக்ஸ், நல்லிஸ் தயா, சிவஞானம், குணம் சந்திரன் இப்படி நிறையப் பேர்களை சொல்லலாம். இவர்களில் பலர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள். சிறைக்குச் சென்று நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்கினாங்க.. எனது கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனேகர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள்தான். என் நண்பன் ரவி பொலிசாரினால் கடும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டான். இன்றும் அதன் பாதிப்பிலிருந்து அவன் மீளமுடியவில்லை.
தேசம்: இந்த நீண்ட அரசியல் பயணத்தில் கலை இலக்கிய பயணத்திலும் இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்துள்ளது.
அசோக்: ஆம் இளந்தளிர் வாசகர் வட்டம் எமக்கு வாசகர் வட்டம் மாத்திரமல்ல. கிராம அபிவிருத்தி, சிரமதானங்கள் விழாக்கள் கருத்தரங்குகள் செய்வதுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்துவோம். கிராமத்தில் நாங்கள் ஒரு வித்தியாசமான முன்னுதாரணங்களாக இருந்தோம். வெறும் படிப்புடன் இருக்காமல் சமூக சேவையிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது.
தேசம்: பதின்ம பருவத்திற்குரிய எல்லா விடயங்களிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்?
அசோக்: ஆம் பதின்ம பருவத்திற்குரிய எல்லாச் சேட்டைகளும் எங்களுக்கு இருந்தது. என்றாலும் அதற்குள் முழுமையாக அகப்படாமல் தப்பித்துக் கொண்டோம். நம்பலாம்! எங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இருந்தது. அந்த சமூக அக்கறையினால நாங்கள் காலப் போக்கில் அரசியலுக்குள்ளும் வந்தோம். பல்வேறு சஞ்சிகைகள், புத்தகங்கள் படித்தோம். இவைகள் எல்லாம் சேர்ந்து நாங்கள் அரசியல் மயப்படுவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது.
தேசம்: அந்தச் சூழல் பெற்றோரால் ஊக்குவிக்கப்பட்டதா? உங்கள் பார்வை என்ன?
அசோக்: எனது குடும்பத்தில் சுதந்திரம் இருந்தது. படி, படி என்று பெரிதாக கட்டாயப்படுத்தவில்லை.
தேசம்: இந்த சுதந்திரம் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இருந்ததா?
அசோக்: அப்படி சொல்லமுடியாது.
தேசம்: உங்கள் கிராமத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களோடு உங்கள் உறவு எப்படி இருந்தது ?
அசோக்: எமக்கும் ஒடுக்கப்பட்ட சமூகம் எனச் சொல்லப்படுகின்ற மக்களுக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. இயல்பாகவே ஒரு நட்பு இருந்தது. ஆனால் எமது கிராமத்திற்குள் பழைய தலைமுறையினருக்கு முரண்பாடு இருந்தது. பாரதி நூற்றாண்டு விழாவில் அவங்கட நாடகம் ஒன்றை போடுவதற்கு இருந்த வேளையில் எமது கிராமத்தில் ஒரு சிலரால் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையும் மீறி சித்திரைப் புத்தாண்டு விழாவில் மேடையேற்றினோம்.
நாடங்களில் அவங்க மிகத் திறமையானவங்க. என்ர நண்பன் ஆனைக்குட்டி சிவலிங்கம் அண்ணா கலைமன்றம் வைத்திருந்தார். நிறைய நல்ல நாடகங்கள் போடுவாங்க. நான் சனி, ஞாயிறு போனால் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பேன்.
எங்கு ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறதோ, அங்கு சாதிய முரண்பாடு நிச்சயமாக இருக்கும். எங்க கிராமத்திலும் இந்த முரண்பாடு காணப்பட்டது. கோயிலுக்குள் போக முடியாது. எங்க பாடசாலையில் படிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்க கிராமத்தில் சைக்கிளில் ஓட முடியாது. அவ்வாறு சைக்கிளில் வந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து உருட்டிக்கொண்டு போகவேண்டும். நான் அவர்களை சைக்கிளில் ஏற்றிச் செல்வேன். இப்படி என்ன செய்தாலும் எங்க கிராமத்தில் என்னை எதிர்ப்பவர்கள் குறைவு. அதற்கு எனது குடும்ப பின்னணியும் ஒரு காரணமாக அன்று இருந்திருக்கலாம். அவ்வாறான ஒரு சூழல்தான் நான் இருந்த போது இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.
அவங்க செய்யும் விழாக்கள் விசேடங்கள் எல்லாவற்றிக்கும் செல்வோம்.. நாடகம் போடுவார்கள். என் நண்பர்கள் அவங்கட நாடகங்களில் சேர்ந்து நடிப்பார்கள். என் அண்ணர் ஒருவர் தன் பிள்ளைகளை அவர்களிங்ர ஆரம்ப பாடசாலையில் சேர்த்தார். எனக்கு பல நண்பர்கள் அங்க இருந்தாங்க . அந்த நண்பர்களில் சில பேர் என்னோடு இயக்கத்திற்கு வந்தாங்க.
தேசம்: உங்களுக்கு இயல்பாகவே சாதி எதிர்ப்பு மனநிலை இருந்தது.
அசோக்: எனக்கு மாத்திரம் அல்ல என் நண்பர்களுக்கும் இருந்தது.
– தொடரும் –
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன.
புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.
புதிய அரசின் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக (islamic emirate of afghanistan) தலிபான்கள்பிரகடனம் செய்தனர். இதை தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முகைது தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கடுமையான பண தட்டுப்பாடு, அதிகார வர்க்கத்தின் பற்றாக்குறை மற்றும் ஆயுதக்குழு ஒன்றின் எழுச்சி அச்சுறுத்தல் போன்றவை தலிபான்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
நாடு முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணமின்றி வறண்டுள்ளன. இறக்குமதியையே சார்ந்திருக்கும் ஆப்கானில் உணவு தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றால் சுமார் 3.8 கோடி மக்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அங்கு ஏற்கனவே இருந்த அரசுகள் எதிர்கொண்ட அதே சவால்களை தலிபான்களும் எதிர்கொள்ள நேரிட்டு உள்ளது.
பெண்கள் உரிமை மற்றும் தூதரகப் பாதுகாப்பு உட்பட முக்கிய 5 வாக்குறுதிகளைத் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் தலிபான்கள் அறிவித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகள்
பெண்களுக்கு உரிமை
பெண்கள் வேலைக்குச் செல்லவும், படிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இஸ்லாம் விதிகளின்படிதான் அது செயல்படுத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
1996 – 2001ஆம் ஆண்டும் தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமை கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் பொது மன்னிப்பு
எங்களுக்கு எதிராக இருந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறோம். அரசுப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூதரகங்களுக்குப் பாதுகாப்பு
வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரகங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.
தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புகிறது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கன் மண்ணை அந்நியர் பயன்படுத்த அனுமதியோம்
ஆப்கானிஸ்தான் மண்ணை அந்நியர் பயன்படுத்த நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என்றுதலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பில் ஈடுபட்ட ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்கப் படைகள், பின்னர் அங்கு 20 ஆண்டு காலம் நடைபெற்ற தலிபான்களுக்கு எதிரான போரில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருட்களுக்குத் தடை
தலிபான்கள் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர்.
ஹெய்டியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2,189 ஆக அதிகரித்துள்ளது.
ஹெய்டியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரிலிருந்து மேற்கே 125 கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி திடீரென ரிக்டர் அளவில் 7.2 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தினால் ஏராளமான கட்டிடகள்,வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலையில் இந்த நில நடுக்கத்தினால் பலியானவர்கள் எண்ணிக்கை 2, 189 ஆக அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 300-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நான்கு மாகாணங்களில் அவசர நிலையை அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் ஹெய்டி அடிக்கடி இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கான மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் உள்ளபோது, பூஸ்டர் டோஸ்களை வழங்க பணக்கார நாடுகள் அவசரப்படுவதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.
வளர்ச்சியடையாத நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசிகள் ஒரு டோஸ் கூட செலுத்த முடியாத நிலையில், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் , பிரிட்டன் ஆகிய நாடுகள் பூஸ்டர் டோஸ்களுக்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் இதனை உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
“ஏற்கனவே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வைத்திருக்கும் மக்களுக்கு கூடுதல் லைஃப் ஜாக்கெட்டுகளை வழங்க திட்டமிட்டு வருகிறோம்.
அதே வேளையில் ஒரு லைஃப் ஜாக்கெட் கூட இல்லாமல் மக்களை தவிக்க விட்டுள்ளோம். லட்சக்கணக்கான மக்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை கூட போடவில்லை. ஆனால் பணக்காரநாடுகள் பூஸ்டர் டோஸ்களுக்கு அவசரப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.











