ஹெரோயின் உள்ளிட்ட எல்லா போதைப்பொருட்களுக்கும் முழுமையான தடை – தலிபான்களின் அதிரடியான 05 அறிவிப்பு !

பெண்கள் உரிமை மற்றும் தூதரகப்  பாதுகாப்பு உட்பட முக்கிய 5 வாக்குறுதிகளைத் தலிபான்கள்  அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் தலிபான்கள் அறிவித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகள்

பெண்களுக்கு உரிமை

பெண்கள் வேலைக்குச் செல்லவும், படிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இஸ்லாம் விதிகளின்படிதான் அது செயல்படுத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

1996 – 2001ஆம் ஆண்டும் தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமை கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பொது மன்னிப்பு

எங்களுக்கு எதிராக இருந்த அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறோம். அரசுப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூதரகங்களுக்குப் பாதுகாப்பு

வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரகங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புகிறது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கன் மண்ணை அந்நியர் பயன்படுத்த அனுமதியோம்

ஆப்கானிஸ்தான் மண்ணை அந்நியர் பயன்படுத்த நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என்றுதலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பில் ஈடுபட்ட ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்கப் படைகள், பின்னர் அங்கு 20 ஆண்டு காலம் நடைபெற்ற தலிபான்களுக்கு எதிரான போரில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருட்களுக்குத் தடை

தலிபான்கள் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *